Go to full page →

சிறு காரியங்களில் தேவனுடைய கவனம் CCh 319

ஜெபமாகிய அருஞ் சிலாக்கியத்தை சரிவர பாராட்டி அதைப் பிரயோஜனப்படுத்திக் கொள்பவர் வெகு சிலரேயாவர். நாம் நம்முடைய தேவைகளைப்பற்றி இயேசுவினிடம் சொல்ல வேண்டும். நம்முடைய சிறிய கவலைகளையும், மலைப்புகளையும், மற்றும் பெருந் தொல்லைகளையும், நாம் அவரிடம் கொண்டு வரலாம். நமக்குக் கலக்கமும் துன்பமும் உண்டாக்குகிற எதுவானாலும், அதைக் குறித்து நாம் கர்த்தரிடம் ஜெபிக்க வேண்டும். நாம் அடி எடுத்து வைக்கும் போதெல்லாம் நமக்கு அவருடைய பிரசன்னமானது தேவையென்று நாம் உணர்ந்தால் சாத்தானுடைய சோதனைகள் வருவதற்கு சந்தர்ப்பமிராது. நமது பேரில் மிகுந்த அனுதாபமுடையவரான நமது உத்தம நண்பரை விட்டு நம்மைப் பிரிப்பதே சாத்தானுடைய திட்டமான முயற்சி. இயேசுவையன்றி நாம் வேறெவரையும் நமது அந்தரங்க நண்பனாகக் கொள்ளக்கூடாது. நம் உள்ளத்திலுள்ள யாவற்றையும் பற்றி நாம் அவரிடத்தில் அச்சமின்று உரையாடலாம். CCh 319.1

சகோதரரே, சகோதரிகளே நீங்கள் பொதுவான ஆராதனைக்கென்று கூடி வரும்பொழுது கிறிஸ்து உங்களைச் சந்திக்கிறார் என்றும் அவர் உங்களை ஆசீர்வதிக்க விருப்பமுள்ளவராயிருக்கிறார் என்றும் நம்புங்கள். உங்கள் கண்களை உங்களை விட்டு திருப்பி, இயேசுவை நோக்கிப் பார்த்து அவருடைய ஒப்பற்ற நோக்கிப் பார்ப்பதால் அவருடைய சாயலாகவே மறு ரூபமடைவீர்கள். நீங்கள் ஜெபம் பண்ணும்போது சுருக்கமான சில வார்த்தைகளில் உங்கள் விசேஷித்த கருத்தைத் தெரிவியுங்கள். உங்களுடைய நீண்ட ஜெபத்தின் மூலம் ஆண்டவருக்கே ஒரு பிரசங்கம் செய்து விடவேண்டாம். தன் தந்தையிடம் குழந்தை அப்பத்தைக் கேட்கிறது போலவே ஜீவ அப்பத்திற்காக மன்றாடுங்கள். நாம் எளிய முறையிலும் விசுவாசத்துடனும் கேட்டால் நமக்குத் தேவையான ஆசீர்வாதங்கள் அனைத்தையும் கடவுள் அருளுவார். CCh 319.2

பிரார்த்தனை ஆத்துமாவின் மிக பரிசுத்தப் பயிற்சியாகும். ஜெபம் நேர்மையும், தாழ்மையும் ஊக்கமும் பொருந்தி, புதிதாக்கப்பட்ட இருதயத்தின் வாஞ்சைகளைப் பரிசுத்தமான தெய்வத்தின் சமுகத்தில் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். தெய்வ சமுகத்தில் தான் இருப்பதாக ஜெபிக்கிறவன் உணருகிறபோது தன்னலம் மறக்கப் பட்டுப் போகும். மானிடத் திறமையை அவ்விடத்தில் வெளிப்படுத்துவதற்கு அவன் ஆவல் கொள்ளமாட்டான். மனிதர் பிரியப்பட, அவன் தன் வார்த்தைகளை உபயோகிக்க முயலாமல், தன் ஆத்துமா வாஞ்சிக்கிற ஆசீர்வாதத்தைப் பெற வகை தேடுவான். CCh 320.1

பகிரங்கமான பிரார்த்தனையின் போதும் தனி ஜெபத்திலும் நம்முடைய விண்ணப்பங்களை ஏறெடுக்கும்பொழுது பணிந்து குனிந்து முழங்கால் படியிடுவது நமது சிலாக்கியம். நம்முடைய முன் மாதிரியாகிய கிறிஸ்து முழங்கால் படியிட்டு ஜெபம் பண்ணினார். (லூக். 22:41) அவருடைய சீஷர்கள் முழங்கால் படியிட்டு ஜெபம் பண்ணினார்கள். (அப். 9:40, 20:36, 21:5.) பவுல் அப்போஸ்தலன் நம்முடைய கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால் படியிட்டு எபே. 3:14 என்று கூறினார். இஸ்ரவேலரின் பாவங்களை தெய்வத்திற்கு முன்பாக அறிக்கை செய்தபோது என்றா முழங்கால் படியிட்டார். (எஸ்றா. 9:5) தானியேல் தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற் படியிட்டு ஜெபம் பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினார். (தானி. 6:10). CCh 320.2