Go to full page →

தெய்வ பயமுள்ள பெற்றோருக்கு அறிவுரை CCh 352

விவாகத்தில் இவ்வளவு தொல்லைகள் விளைகின்ற பொழுது, வாலிபர் ஞானமடையாதிருப்பதேன்? தங்களுக்கு முதியோர், அனுபவம் மிக்கோர் ஆலோசனை அவசிய மில்லை என்னும் உணர்ச்சி, அவர்கள் உள்ளத்தில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதென்? தொழில் துறையில், ஆண்களும் பெண்களும் மகா எச்சரிக்கையாயிருகின்றார்கள். புதிதாய் முக்கிய தொழில் எதிலும் ஈடுபடும் முன்னே, அத்தொழிலுக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுகிறார்கள். நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு, அத்தொழிலைக்குறித்துக் கவனமாய் ஆராய்ந்து பார்க்கின்றார்கள். இல்லாவிட்டால் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி ஈடேறாமல் தவறிப் போகும். CCh 352.3

விவாக சம்பந்தத்தில், எதிர்கால சந்ததிகளையும் எதிர்கால வாழ்வையும் பற்றியுள்ள சம்பந்தத்தில் பிரவேசிக்கும் பொழுது, அவற்றைவிட எவ்வளவு பெரிய எச்சரிக்கை இருக்க வேண்டும்? இதைவிட்டு அடிக்கடி வேடிக்கையாகவும், சிறிதும் கவலை இல்லாமலும், உணர்ச்சிவசப்பட்டும், காம வெறிகொண்டும், குருட்டுத்தனமாயும், அமர்ந்திருந்து கருத்தாய் ஆலோசனை பண்ணாமலும், அதில் பிரவேசிக்கின்றார்கள். இதற்குக் காரணமாகச் சொல்லக் கூடிய ஒரே விளக்கம் யாதெனில், சாத்தான் உலகில் தொல்லைகளும் அழிவுகளும் தோன்றுவதைக் காண ஆசைப் பட்டு, ஆத்துமாக்களை அவற்றில் சிக்கும்படி வைக்க இந்த வலையைப் பின்னிக் கொண்டிருக்கின்றான். அறிவும் ஆராய்ச்சியும் இல்லாத இந்த வாலிபர்கள், இம்மையில் தாங்கள் அனுபவிக்கக் கூடிய இல்லற இன்பத்தையும், மறுமையில் தங்கள் வாசஸ்தலத்தையும் இழந்து போவதைக் கண்டு, ஆனந்தக் களிப்படைகின்றான். CCh 353.1

பிள்ளைகள் எவ்வகையிலும் தங்கள் பெற்றோர் ஆலோசனையையும் தீர்மானத்தையும் கவனியாமல், தங்கள் சொந்த விருப்பங்காளையும் ஆசைகளையும் மாத்திரமே ஆலோசிப்பது தகுமோ? சிலர் தங்கள் பெற்றோருடைய விருப்பத்தையும், மேலான எண்ணத்தையும் ஒருபோதும் நினைத்துப்பார்ப்பதே இல்லை; அவர்களது முதிர்ந்த தீர்மானத்தை நன்கு மதிப்பதும் இல்லை. தன்னலம் என்பது பிள்ளைகளுக்குரிய அன்பு அவர்கள் இருதயத்தில் வராதபடி கதவை அடைத்துவிடுகின்றது. வாலிபர் இந்தக் காரியத்தைக் குறித்து நினைத்துப் பார்க்கும்படி அவர்கள் சிந்தனையை எழுப்பிவிட வேண்டும். கற்பனைகளில் ஐந்தாம் கற்பனை ஒன்றே வாக்குத்தத்தத்துடன் கூடியது. ஆனாலும் அதற்கு மதிப்பும் குறைந்து போயிற்று; காதலர் உரிமை அதை முற்றிலும் புறக்கணித்து விட்டது என்பது தெளிவு. அன்னையின் அன்பை எளிதாக நினைப்பதும், தந்தையின் கரிசனையை அவமதிப்பது, வாலிபர் பலருக்கு விரோதமாகப் பரலோகத்திலே பதிவு செய்யப் பெற்று நிலைத்திருக்கின்ற பாவங்கள். CCh 353.2

இதனோடு தொடர்புடைய மகா பெரிய குற்றங்களில் ஒன்று என்ன வென்றால், வாலிபர் அனுபவமில்லாதவர்கள். இவர்களுடைய அன்புப் பற்றைக்குலைத்துப் போடக் கூடாதென்றும், இவர்கள் காதல் அனுபவத்தில் பிறர் தலையிடக்கூடாதென்றும் சொல்லுவதே. எப்பொழுதும் எல்லாவகையான நோக்கு நிலையினின்றும் பார்வையிட வேண்டிய ஒரு பொருள் உண்டானால், அது இதுவே. பிறர் அனுபவத்தின் உதவியும், காரியத்தை அமர்ந்திருந்து கவனித்துச் சீர்தூக்கிப் பார்த்தலும், இருதிறத்தினர்க்கும் இன்றியமையாத செயல் என்பதற்கு ஐயம் இல்லை. மிகப்பெரும்பான்மையான மக்கள் முற்றிலும் அற்பமாக நினைத்து நடத்துகிற காரியம் இதுவே. வாலிபரே, நண்பரே, கடவுளையும், கடவுளுக்குப் பயந்து நடக்கிற உங்கள் பெற்றோரையும், உங்கள் ஆலோசனைக்கு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் காரியத்துக்காக ஜெபம் பண்ணுங்கள். CCh 354.1

“மகன் அல்லது மகள் மனத்தையும், உணர்ச்சியையும் மதியாமல் பெற்றோர் அவர்களுக்கு வாழ்க்கைத்துணைவரைத் தெரிந்தெடுக்கலாமோ?” என்று நீங்கள் கேட்கின்றீர்கள். இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டிய முறையாய் நான் உங்களிடத்தில் கேட்கின்றேன்:--- “மகனாவது மகளாவது முதன் முதல் தம் பெற்றோரைக் கலந்து ஆலோசியாமல் தமக்குத் துணைவரைத் தெரிந் தெடுக்கும் பொழுது, பெற்றோருக்குப் பிள்ளைகளிடத்தில் யாதேனும் அன்புண்டானால், அந்த நடைமுறை முக்கியமாய் பெற்றோருடைய நலத்தைக் கெடுக்கும் பட்சத்தில், அந்தப்பிள்ளை தன் பெற்றோர் ஆலோசனையும் சாதித்துக் கொண்டிருகலாமோ?” இதற்கு நான் தீர்மானமாய் மறுமொழி கூறுகின்றேன்:---- அங்ஙனம் சாதித்துக்கொண்டிருக்கக்கூடாது; தான் மணஞ்செய்யாமலே இருக்க நேர்ந்தாலும், அது செய்யக் கூடாது. ஐந்தாம் கற்பனை அவ்வகையான போக்கை விலக்குகின்றது. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக இது வாக்குத்தத்தத்துடன் கூடிய கற்பனை. இதற்கு கீழ்ப்படிந்து நடக்கிறவர்களுக்கு ஆண்டவர் அந்த வாக்குத்தத்தத்தை நிச்சயமாய் நிறைவேற்றுவார். ஞானமுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகள் விருப்பத்தை மதியாமல் அவர்களுக்குத் துணைவரைத் தெரிந்தெடுக்கவே மாட்டார்கள். CCh 354.2

தந்தையும் தாயும் வாலிபர் தமக்குப் பொருத்தமுள்ள துணைவர் மேல் அன்பு வைக்குபடி அவர்களுக்கு வழிகாட்டி நடத்துவது தங்கள் மேல் விழுந்த கடமை என்பதை உணரவேண்டும். அவர்கள் தங்களுக்கு உதவிசெய்கின்ற தெய்வ கிருபையால் தங்கள் பிள்ளைக சிறுபருவம் முதல் தூய்மையும் மேன்மையுமுள்ளவர்களாய், நல்லவர்களையும் உண்மையுள்ளவர்களையும் விரும்பும் வண்ணம், தங்கள் போதனையினாலும் மாதிரியினாலும் அவர்கள் குண நலத்தை உருவாக்குவது தங்கள் கடமை என்று உணரவேண்டும். கவர்ச்சிக்குரியோர் தம்மைப் போன்றவரையே கவர்ந்து கொள்வர்; நல்ல மதிப்பிற்குரியோர் தம்மைப் போன்றவரையே நன்கு மதிப்பர். உண்மையையும் தூய்மையையும் நன்மையை யும் நாடுகிற நாட்டத்தை இளம் பருவத்திலேயே அவர்கள் ஆத்துமாவில் நாட்டவேண்டும், அங்ஙனம் நாட்டப் பெற்ற வாலிபர் அக்குண நலமுடையோர் கூட்டுறையே நாடுவர். CCh 355.1