Go to full page →

விவேகமற்ற ஒப்பந்தத்தை முறித்து விடுதலே மேலானது CCh 369

மண வாழ்க்கை உறவு கிறிஸ்துவுக்குள் மட்டுமே பத்திரமாய் அமைதல் கூடும். மானுட அன்பு மிகவும் நெருங்கிய தன் கட்டுப்பாட்டைத் தெய்வ அன்பிலிருந்து பெறுதல் வேண்டும். கிறிஸ்து எங்கே ஆட்சி செய்கின்றாரோ அங்கே தான் ஆழ்ந்த மெய்யான தன்னல மற்ற அன்பு தங்கி இருக்கக்கூடும். CCh 369.2

நீ மணவுறவு செய்து கொள்ளும்படி நினைத்தவர் ஒருவரது நடக்கையைக் குறித்து முற்றிலும் அறிந்துகொள்ளாமல் அவருடன் ஒப்பந்தம் செய்திருந்தாலும் அந்த ஒப்பந்தத்தினால் நீ நேசித்து நன்கு மதிக்கக்கூடாத ஒருவருக்கு மணவாழ்க்கை உறுதி மொழி கொடுத்து உன் வாழ்நாள் முழுவதும் அவரோடு உன்னை பிணைத்துக்கொள்வது அவசியமென்று நினைத்துக்கொள்ளாதே, நீ எவ்வாறு நிபந்தனையுள்ள ஒப்பந்தத்தில் பிரவேசிக்கின்றாய் என்பதைக் குறித்து மிகவும் கவனமாயிரு. பலர் செய்கிறது போல் விவாகத்திற்குப் பின்னே பிரிந்து போவதைக் காட்டிலும், அதற்கு முன்னே ஒப்பந்தத்தை முறித்து விடுவது எவ்வளவோ மேலான செயல். CCh 370.1

நான் வாக்குக் கொடுத்து விட்டேனே, இப்பொழுது பின் வாங்கலாமோ? என்று நீ சொல்லுவாய். அதற்கு நான் பதில் கூறுகிறேன்:---- நீ வேத வசனத்திற்கு விரோதமாக வாக்குக் கொடுத்திருந்தால், எவ்வகையிலும் காலதாமதமின்றி உடனே பின்வாங்கிவிடு; கடவுளுக்கு முன்னே மிகுந்த தாழ்மையுடன், முன் பின் பாராமல் பிணைப்பிடும்படி உன்னை வழி நடத்திய மதிமயக்கத்திற்காக மனஸ்தாபப்படு. அந்த வாக்கை நிறைவேற்றி உன்னை உண்டாக்கிய கடவுளை அவமதிப்பதைக் காட்டிலும், அவருக்குப் பயப்படுகிற பயத்தினால் அதை நிறைவேற்றாமல் பின் வாங்கிக் கொள்ளுதலே மேன்மை. CCh 370.2

திருமண உறவிற்காகப் படிப்படியாகச் செய்யும் ஒவ்வொரு முயற்சியிலும் அடக்கமும், எளிமையும், உண்மையும், கடவுளுக்குப் பிரியமாய் நடந்து அவரைக் கனம் பண்ண வேண்டுமென்னும் ஊக்கமான நோக்கமும் கலந்திருக்க வேண்டும். விவாகமானது இம்மை மறுமை இரண்டிலும் பிற்கால வாழ்க்கையைப் பாதிக்கும். உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் கடவுள் ஒப்புக்கொள்ளாத திட்டம் எதுவும் வகுக்க மாட்டார்கள். CCh 370.3

இருதயம் மனித அன்பிற்காக ஏங்குகின்றது. அந்த அன்போ இயேசுவின் அன்பிக்குப் பதிலாக வைத்துக்கொள்ளக்கூடிய அவ்வளவு போதிய உறுதியும், போதிய தூய்மையும், போதிய அருமையும் உடையது அன்று. மனைவி தன் வாழ்க்கையின் கவலைகளையும், பொறுப்புகளையும், துன்பங்களையும் தாங்கிக்கொள்வதற்கு இரட்சகரிலேயே ஞானத்தையும், பெலத்தையும், கிருபையையும் கண்டடைதல் கூடும். அவன் அவரையே தனக்கு வலிமையும் வழி காட்டியும் ஆக்கிக் கொள்ளவேண்டும். பெண் மகள் தன்னை உலக நண்பர் எவருக்கும் ஒப்புக்கொடுக்கும் முன்னமே தன்னைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து, அதற்கு மாறுபடாத வருகின்ற எவ்வகை உறவிலும் பிரவேசிக்கக்கூடாது. மெய்யான இன்பத்தைக் கண்டடைய விரும்புவோர் தங்கள் உடைமைகள் அனைத்திலும், தங்கள் செயல்கள் அனைத்திலும் பரலோக ஆசீர்வாதம் பெற்றவர்களாய் இருக்க வேண்டும். கீழ்ப்படியாமையே பலர் உள்ளங்களையும் இல்லங்களையும் நிர்ப்பாக்கியத்தினால் நிரப்புகின்றது. என் சகோதரியே, எக்காலத்திலும் இருள் அகலாத இல்லத்தை நீ விரும்பினால் அல்லாமல், கடவுளுக்குப் பகைஞனாய் இருக்கின்றவன் எவனோடும் உன்னைப் பிணைத்துக் கொள்ளாதே. CCh 371.1