Go to full page →

நோக்கத்திலும் செயலிலும் மதிப்பிற்குரிய நிலை!, ஆகஸ்டு 8 Mar 439

“ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” - எபேசியர் 4:32. Mar 439.1

கொள்கை, சரியான காரியங்கள், நேர்மை ஆகியவை என்றும் நெஞ்சார நேசிக்கப்பட வேண்டும். தந்திரத்திற்குப் புகலிடங்கொடுக்கப்பட்டிருக்கும் இடத்திலே, நேர்மை தங்கித்தரித்திருக்காது. அவை இரண்டும் ஒருபோதும் ஒத்துப்போவது இல்லை; ஒன்று பாகாலிடத்திலுள்ளது; அடுத்தது தேவனிடத்திலுள்ளது. நமது எஜமானர் தமது ஊழியர்கள் நோக்கத்திலும் செயலிலும் மிகவும் மேன்மையுடைவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்…நேர்மையை தனது தோழனாகத் தெரிவு செய்து வைத்திருப்பவர்கள், தங்களது அத்தனை செயல்களிலும் வெளிப்படுத்திக் காட்டுவார்கள். பெரும்பாலான மக்களுக்கு இப்படிப்பட்டவர்கள் திருப்தியளிக்கக் கூடியவர்களாக இருக்கமாட்டார்கள்; ஆனால், தேவனுக்கு இவர்களே அழகான மனிதர்கள். Mar 439.2

சாத்தான் தன்னைச் சுற்றிலும் திரள்கூட்டத்தை நெருக்கமாக வைத்துக்கொள்ள கிரியை செய்கிறான். மிகவும் நெருக்கமான நண்பர்களைப் பிரித்துவிடுவான். எப்பொழுதும் பேசிக்கொண்டு, வீணாக வம்பளந்துகொண்டு, பொய்சாட்சி சொல்லிக் கொண்டும் இருக்கிற மனிதர்கள் உண்டு. இவர்கள் முரண்பாடுகளையும் சச்சரவுகளையும் உண்டாக்கும் விதைகளை விதைக்கிறார்கள். இந்த வகுப்பினரை பரலோகம் சாத்தானின் மிகவும் திறமையான ஊழியர்களென்று நோக்கிப் பார்க்கின்றது. ஒரு நபரிடத்தில் இச்சகமாகப் பேசி, வெற்றிபோன்று காணப்படுகிற அவர்களது ஒரு சில முயற்சிகளைப் புகழ்ந்துபேசுவதைவிட, பிறரால் புண்படத்தக்கதாக பேசப்பட்ட மனிதன் குறைந்த ஆபத்தான நிலையில் இருக்கிறான். தோற்றத்தில் நண்பர்களைப்போன்று காணப்படுபவர்களால் கூறப்படும் புகழுரைகள், பிறரால் கூறப்படும் நிந்தனையான சொற்களைவிட மிகவும் ஆபத்தானவை. Mar 439.3

தன்னையே புகழ்ந்துகொள்ளுகிற ஒவ்வொரு மனிதனும், அவனது மிகச் சிறந்த முயற்சிகளில் காணப்படும் பொலிவான தோற்றத்தை துடைத்துப்போடுகிறான். மேன்மையான குணத்தை உடைய நபர், விரோதிகளின் பொய்யான குற்றச்சாட்டுகளைக்குறித்து சீற்றங்கொள்ளும் அளவிற்கு, தன்னைத் தாழ்த்திக்கொள்ளமாட்டார். பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் தீங்கின்றி கீழே விழுகிறது; ஏனென்றால், அது தன்னால் விழத்தள்ள முடியாததைப் பலப்படுத்திவிடுகிறது. அன்பின்—பொறுமையின்—தேவனாகிய அவர் தமது மக்கள் தம்மோடு நெருக்கமாக இணைந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார். அனைவரும் தங்களது வாழ்க்கையிலே கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்த வேண்டும். எவரும் மற்றவரது பதவியை அல்லது நிலையை அல்லது புகழை சிறுமைப்படுத்திப் பேசும் முயற்சியில் இறங்கக்கூடாது; அது தற்பெருமையே யாகும். Mar 439.4

எவரையும் ஒருபோதும் இழிவாகப் பேசாதீர்கள்; ஏனெனில், அவன் ஆண்டவர் பார்வையில் மிகப் பெரியவனாக இருக்கலாம். தங்களைப்பற்றி மிகப் பெருமையாக நினைத்துக்கொண்டிருக்கிறவர்கள், அவர்களது இதயங்களின் முறைகேடான நிலையினால், தேவனால் மிகவும் அற்பமாக மதிப்பீடு செய்யப்படலாம். சிலுவையின் பாதத்தில் தாழவிழுந்துகிடப்பதும், நமது கண்களில் நாம் அற்பமாகத் தெரிவதும், தேவனில் உறுதியாக நம்பிக்கை வைப்பதுந்தான், நம்முடைய ஒரே பாதுகாப்பாக இருக்கிறது. நம்மை மிகப் பெரியவர்களாக ஆக்குவதற்கு, அவருக்கு மாத்திரமே வல்லமை இருக்கிறது. Mar 440.1

அனைவரது மதிப்பீடுசெய்யும் திறனும் திறமையும் இப்பொழுது அவசியமாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வேலையும் கவனத்தோடும், விசுவாசத்தோடும் செய்யப்படவேண்டுமென்று எதிர்பார்க்கும் காரியமானது, அது போதுமான அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று காட்டுகிறது. அனைவருடைய வேலையையும் ஒரே மனிதன் செய்ய முடியாது. ஒவ்வொருவருக்கும் அவரது நிலைமைக்கேற்ற இடமும், அவருக்கான சிறப்பான வேலையுமுண்டு. நியாயத்தீர்ப்பின் சோதனையில் நிற்கத்தக்கதாக, ஒவ்வொருவரும் தனது வேலையை எத்தகைய முறையில் செய்ய வேண்டுமென்று நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.⋆ Mar 440.2

வாக்குத்தத்த வசனம்: Mar 440.3

“ஒருவனை அவன் தாய் தேற்றுவதைப்போல நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.” - ஏசாயா 66:13. Mar 440.4