Go to full page →

உயிர்த்தெழுதலுக்குப்பின், நாம் ஒருவரையொருவர் அடையாளங்கண்டுகொள்வோம்!, அக்டோபர் 22 Mar 589

“இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.” - 1 கொரிந்தியர் 13:12. Mar 589.1

சீடர்கள் இயேசுவை அறிந்துகொண்டதுபோல, நாமும் நம் நண்பர்களை அறிந்துகொள்வோம். அழிந்துபோகிற இந்த வாழ்க்கையிலே அவர்கள் ஊனமடைந்து, உருமாறி, வியாதிப்பட்டு இருந்திருக்கலாம்; எனினும் அவர்கள் பூரண சுகத்தோடும் ஒத்திசைவான உடலோடும் எழுந்திருப்பார்கள். என்றாலும் மகிமையடைந்த அந்த சரீரத்திலும் அவர்களது தனித்தன்மை பூரணமாக காக்கப்பட்டிருக்கும்...இயேசுவின் முகத்தின் ஒளியால் பிரகாசமடைந்த அந்த முகங்களில், நாங்கள் நேசித்தவர்களின் சாயலை நாங்கள் கண்டுகொள்வோம். Mar 589.2

மீட்கப்பட்டவர்கள், யார் யாரையெல்லாம் உயர்த்தப்பட்ட இரட்சகரண்டைக்குத் திருப்பினார்களோ, அவர்களையெல்லாம் சந்தித்து இன்னாரென்று அறிந்துகொள்வார்கள். அவர்கள் எப்படிப்பட்ட உரையாடலை நிகழ்த்தியிருப்பார்கள். சிலர், “நான் பாவியாயிருந்தேன். உலகிலே தேவனற்றவனாகவும், நம்பிக்கையற்றவனாகவும் இருந்தேன். நீங்கள் என்னிடம் வந்து, எனது ஒரே நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக என்னுடைய கவனத்தை அருமையான இரட்சகரிடம் திருப்பினீர்கள்” என்பார்கள்... வேறு சிலர், நான் அன்னிய தேசத்திலே ஒரு அஞ்ஞானியாயிருந்தேன். நீங்கள் உங்களுடைய நண்பர்களையும், வசதியான உங்கள் வீட்டையும் விட்டுவிட்டு என்னிடம் வந்து, எப்படி இயேசுவைக் கண்டுகொள்வதென்றும், ஒன்றான மெய்த்தேவனாக அவரை எப்படி நம்புவதென்றும் கற்றுக்கொடுத்தீர்கள். நான் எனது வக்கிரங்களை உடைத்துப்போட்டு, தேவனை ஆராதித்தேன்; இப்பொழுது, அவரை முகமுகமாகப் பார்க்கிறேன். நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன்; நான் நேசிக்கிறவரை என்றும் பார்த்துக்கொண்டிருக்கத்தக்கதாக, நான் நித்தியமாக இரட்சிக்கப்பட்டிருக்கிறேன்...” என்பார்கள். Mar 589.3

வேறு சிலர், பசியாயிருந்தவர்களைப் போஷித்த மக்களையும் வஸ்திரமில்லாதிருந்தவர்களுக்கு வஸ்த்திரங்கொடுத்தவர்களையும் பார்த்து, அவர்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்வார்கள். அவிசுவாசத்தினால் நம்பிக்கையற்ற நிலையில், எனது ஆத்துமா தத்தளித்துக்கொண்டிருந்தபோது, நம்பிக்கையின்-ஆறுதலின் வார்த்தையைப் பேசுவதற்காக, ஆண்டவர் உங்களை என்னிடத்தில் அனுப்பினார் என்பார்கள். எனது சரீரத் தேவைகளுக்கு நீங்கள் ஆகாரம் கொண்டுவந்தீர்கள்; வேதவாக்கியங்களை எனக்கு விவரித்துக்காட்டினீர்கள்; எனது ஆவிக்குரிய தேவைகளைக்குறித்து எனக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினீர்கள். என்னை உங்கள் சகோதரனைப்போல் நடத்தினீர்கள்; என் வேதனைகளிலே பரிவு காட்டினீர்கள். என்னை இரட்சிப்பதற்காக, நீட்டப்பட்ட கிறிஸ்துவின் கரத்தை நான் பற்றிப்பிடித்துக்கொள்ளத்தக்கதாக, காயப்பட்ட-நொறுக்கப்பட்ட எனது ஆத்துமாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்தீர்கள். நான் அறியாமையில் மூழ்கியிருக்கும்போது என்னைப் பராமரிக்கின்ற ஒரு பிதா பரலோகத்தில் எனக்கு உண்டு என்பதை பொறுமையோடு கற்றுக்கொடுத்தீர்கள். வேதவார்த்தைகளிலிருந்து அருமையான வாக்குத்தத்தங்களை எனக்கு வாசித்துக்காட்டினீர்கள். என்னை அவர் இரட்சிப்பார் என்ற விசுவாசத்தை என்னிலே உருவாக்கினீர்கள். கிறிஸ்து எனக்காகச் செய்த தியாகத்தைப் பற்றி நான் தியானிக்கும்போது, எனது இதயமானது மென்மையடைந்து அடங்கி நொருங்கியது. நான் இரட்சிக்கப்பட்டவனாக, நித்தியமாக இரட்சிக்கப்பட்டவனாக, எனக்காக ஜீவனைக் கொடுத்த அவரைத் துதிப்பதற்காக, எப்பொழுதும் அவர் பிரசன்னத்தில் வாழத்தக்கதாக, நான் இப்பொழுது பரலோகத்தில் இருக்கிறேன், Mar 590.1

தங்களுக்காகப் பாரங்கொண்டிருந்தவர்களைச் சந்தித்து, மீட்க்கப்பட்டவர்கள் அவர்களை வாழ்த்தும்போது, எத்தகைய பேரானந்தம் அங்கு உண்டாயிருக்கும்! தங்களுக்காக வாழாமல், வெகு சொற்ப ஆசீர்வாதங்களே பெற்றிருந்த மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக வாழ்ந்தவர்களைக் கண்டுகொள்ளும்பொழுது, எப்படிப்பட்ட திருப்த்தியோடு அவர்களுடைய மனங்கள் பரவசம் அடைந்திருக்கும்! ⋆ Mar 590.2

வாக்குத்தத்த வசனம்: Mar 590.3

“சோர்ந்துபோகின்றவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவம் இல்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.” - ஏசாயா 40:29 Mar 590.4