Go to full page →

நமது மீட்பு மிகவும் சமீபமாயிருக்கிறது!, அக்டோபர் 30 Mar 605

“இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால். நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்...” - லூக்கா 21:28. Mar 605.1

நாம் முன்னர் நம்பியிருந்ததைப் பார்க்கிலும் கிறிஸ்துவின் வருகை சமீபமாயிற்று. மாபெரும் போராட்டம் அதின் முடிவை நெருங்குகிறது. தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் (தண்டனைகள்) பூமியின்மேல் விழுகின்றன. “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்கள் ஆயத்தமாக இருங்கள்” (மத்தேயு 24:44) என்கிற பக்திவிநயமான எச்சரிப்பை அவைகள் நமக்குக் கொடுக்கின்றன. Mar 605.2

இவ்வுலக சரித்திரத்தின் முடிவுகால காட்சிகளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தீர்க்கதரிசனங்கள் வெகுவேகமாக நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. கிருபையின் காலம் வேகமாக முடிந்து கொண்டிருக்கிறது. இழந்துபோகக்காலமில்லை; ஒரு நொடி கூட இல்லை. காவலிலிருக்கிற நாம் தூங்குகிறவர்களாக காணப்படாதிருப்போமாக. “என் ஆண்டவன் வரத் தாமதமாகும்” என்று ஒருவரும் வார்த்தையினாலாவது, செய்கையினாலாவது வெளிப்படுத்தாமலிருப்போமாக. கிறிஸ்துவினுடைய அதிசீக்கிர வருகையைக் குறித்த செய்தி உண்மையான எச்சரிப்பின் வார்த்தைகளோடு முழங்கப்படவேண்டும். ஆண்களும் பெண்களும் மனந்திரும்பி, வரப்போகும் உக்கிர கோபத்திற்குத் தப்பித்துக் கொள்ளும்படியாக, அவர்களுக்கு அறிவுறுத்தி இணங்கச்செய்வோம்... Mar 605.3

நம் ஆண்டவர் வெகுசீக்கிரம் வரவிருக்கிறார். அவரை சமாதானத்துடன் சந்திக்க நாம் ஆயத்தமாக வேண்டும். நம்மைச் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு வெளிச்சத்தைக்கொடுக்க, நமது எல்லா சக்திகளையும் பயன்படுத்த நாம் தீர்மானிக்க வேண்டும். நாம் வருத்தத்தோடிருக்கத் தேவையில்லை. நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும். கர்த்தராகிய இயேசுவை நாம் எப்பொழுதும் நம்முன் வைத்திருக்கவேண்டும். அவர் வெகுசீக்கிரம் வருகிறார். நாம் அவரைச் சந்திக்க ஆயத்தத்தோடு காத்திருக்க வேண்டும். ஆ! அவரைப் பார்த்து, அவரால் மீட்கப்பட்டவர்களாக நாம் வரவேற்கப்படுவதைக் காண்பது எவ்வளவு மகிமையானதாகயிருக்கும். நீண்ட காலமாக நாம் காத்துக்கொண்டிருந்துவிட்டோம்; என்றாலும் நமது நம்பிக்கை மங்கிப்போகக்கூடாது. இராஜாவை அவரது அழகிலே காண்போமானால், நாம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்போம். “வீடு நோக்கிப்போய்க்கொண்டிருக்கிறோம்” என்று உரத்த சத்தமாகச் சொல்லவேண்டும் என்பது போல, நான் உணருகிறேன். கிறிஸ்து தமது வல்லமையிலும் மகத்துவ மகிமையிலும் வந்து, தமது மீட்கப்பட்டவர்களை நித்திய வீட்டிற்க்கு அழைத்துச்செல்லும் காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்... Mar 605.4

நமது இரட்சகருடைய வருகைக்காக வெகுகாலமாக நாம் காத்திருந்துவிட்டோம் எனினும் அவருடைய வாக்குத்தத்தம் உறுதியானது. வெகு சீக்கிரத்தில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட வீடுகளில் நாம் இருப்போம். அங்கே தேவனுடைய சிங்காசனத்திலிருந்து பாய்கிற ஜீவதண்ணீர்களண்டையில் இயேசு நம்மை நடத்துவார். நமது குணங்கள் பரிபூரணமடைவதற்காக, நம்மை அவர் நடத்திவந்த இருண்ட பாதைகளைக்குறித்து அவர் விவரிப்பார். மீண்டும் ஸ்தாபிக்கப்படுகிற ஏதேனின் அழகை, அதின் முழு மகிமையிலே நாம் பார்ப்போம். நமது தலைகள் மீது அவர் அன்பாக வைத்த கிரீடங்களை, நமது மீட்பருடைய பாதபடியிலே நாம் வைத்து, நம்முடைய பொற்சுரமண்டலங்களை மீட்டி, சிங்காசனத்தின் மீது வீற்றிருக்கிறவருக்கு துதியின் கீதங்களைப் பாடுவோம்; அது பரலோகம் முழுவதையும் நிரப்பும்.⋆ Mar 606.1

வாக்குத்தத்த வசனம்: Mar 606.2

“உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படி இல்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். - யோவான் 14:1. Mar 606.3