Go to full page →

உள்ளத்தை ஊடுருவி ஆராய்கிற கேள்விகள்!, பிப்ரவரி 11 Mar 83

“யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கெடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.” - சங்கீதம் 24:3,4. Mar 83.1

கிறிஸ்துவுடன் இணக்கப்பட்டிருக்கின்ற ஆத்துமா.....ஒவ்வொரு மீறுதலிற்கும், பாவத்தின் அணுகுமுறைக்கும் எதிராகப் போராடும். அவன் ஒவ்வொரு நாளும் அதிகமாகப் பிரகாசிக்கிற ஒளியைப் போலவும், அதிகமாக வெற்றிபெறுகிறவனாகவும் இருப்பான். அவன் பெலத்தினின்று பெலத்திற்கே செல்வானேயன்றி பெலவீனத்தினின்று பெலவீனத்திற்கு அல்ல. Mar 83.2

இந்த காரியத்தில் தன் ஆத்துமாவை ஒருவரும் வஞ்சித்து வீண் பகட்டு, பரிசுத்தமில்லாத குறிக்கோள், முறுமுறுப்பு, திருப்தி இன்மை, கசப்பு, தீமையைப் பேசுதல், பொய், வஞ்சகம், அவதூறு ஆகியவைகளைக் நீங்கள் கொண்டிருக்கும்போது, கிறிஸ்து உங்கள் இருதயத்தில் வசிக்கமுடியாது... நீங்கள் உறுதியான கிறிஸ்தவ குணத்தைப் பெற்றிருக்க வேண்டும்.... Mar 83.3

சத்தியத்தை நம்புகிறோமென்று உரிமைகோருபவர்கள் மத்தியில் முழுமையான மனந்திரும்புதல் காணப்பட வேண்டும்; அல்லது அவர்கள் சோதனைக் காலத்தில் விழுந்துபோவார்கள். தேவ மக்கள் ஒரு உயர்ந்த நிலையை அடைய வேண்டும். அவர்கள் பரிசுத்த ஜாதியாகவும், அவருக்குச் சொந்தமான ஜனமாகவும், தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாகவும் இருக்க வேண்டும். நீங்கள் இவ்வுலக மக்களின் ஆசை, நாட்டம், குணம் ஆகியவைகளைக் கொண்டிருக்கும்படி கிறிஸ்து உங்களுக்காக மரிக்கவில்லை. Mar 83.4

மகிமையின் வாசலை நோக்கி, தன் இதயத்தை வைக்கிறவனேயன்றி, வேறொருவனும் அதற்குள் பிரவேசிப்பதில்லை; அப்படியானால் பின்வரும் கேள்விகளைக் கேட்டுப்பார்ப்போம், நீங்கள் உலகக் காரியங்களுக்காக அக்கறை செலுத்துகிறீர்களா? உங்கள் சிந்தனைகள் தூய்மையாக இருக்கின்றனவா? நீங்கள் பரலோகத்தின் காற்றை சுவாசிக்கிறீர்களா? மாசுபட்ட நச்சுப்புகையை நீங்கள் உங்களுடன் கொண்டுசெல்கிறீர்களா?... நீங்கள் ஊக்கமுள்ளவர்களாகவும், ஒப்புக்கொடுத்தவர்களாகவும் தூய்மையுடனும் பரிசுத்தத்தின் அழகுடனும் தேவனை சேவிக்கிறவர்களாகவும் இருக்கிறீர்களா? “நான் தேவனுடைய பிள்ளையாக இருக்கிறேனா இல்லையா?” என்று உண்மையாக உங்களையே நீங்கள் கேட்டுப்பாருங்கள். Mar 84.1

நம்முடைய அனைத்து சபைகளிலும் முழுமையான சீர்திருத்தம் தேவைப்படுகிறது. மனதை மாற்றும் தேவனுடய வல்லமை நமது சபைக்குள் வரவேண்டும்... ஆயத்தப்படவேண்டிய நாளைத்தள்ளி வைக்காதீர்கள். விளக்கில் எண்ணெயின்றி, ஆயத்தமில்லாத நிலையில், தூக்கங்கொள்ளாதிருங்கள்... ஆபத்தான நிலையில் ஐயமுடன் தரித்திருக்க வேண்டாம். “நான் இரட்சிக்கப்பட்ட கூட்டத்தில் இருக்கிறேனா-இல்லையா?” என்று உங்களை நீங்களே உண்மையுடன் கேட்டுப்பாருங்கள். “நான் உறுதியாக நிற்பேனா — அல்லது மாட்டேனா?” என வினவுங்கள். சுத்தமான கைகளையும் தூய இருதயத்தையும் உடையவனே அந்த நாளில் நிலைத்து நிற்க முடியும். Mar 84.2

ஒவ்வொரு கணமும் மெய்கிறிஸ்தவனாக இருப்பது ஒவ்வொரு தேவ பிள்ளைக்கும் கிடைக்கும் பாக்கியமாகும்; அப்பொழுது, பரலோகம் முழுவதுமே அவன் பக்கத்திலிருக்கும்.⋆ Mar 84.3

வாக்குத்தத்த வசனம்: Mar 84.4

“நீதிமான்கள் கூப்பிடும்போது, கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறார்.” - சங்கீதம் 34:17. Mar 84.5