Go to full page →

பரலோகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் குணம்!, மார்ச் 16 Mar 149

“உன் இளமையைக்குறித்து ஒருவனை உன்னை அசட்டை பண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.” - 1 தீமோத்தேயு 4:12. Mar 149.1

பரலோகத்தின் இராஜரீகத்தை உடையவரான இயேசு வாலிபருக்கு ஒரு முன்மாதிரியை வைத்துப்போயிருக்கிறார். அவர் தமது அன்றாட அப்பத்திற்காக நாசரேத்திலுள்ள தச்சுப்பட்டறையில் வேலைசெய்தார். அவர் தமது பெற்றோருக்கு கிழ்ப்படிந்திருந்தார். அவர் தமது சொந்த நேரத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கவோ, அல்லது தமது சுயசித்தத்தைப் பின்பற்றவோ விரும்பவில்லை. கவலையற்றவிதத்தில் இன்பத்தோய்வுகளில் திளைத்து வாழும் வாழ்க்கையின்முலமாக, ஒரு வாலிபன் ஒரு மனிதனாக அல்லது ஒரு கிறிஸ்துவனாக, உண்மையான மேன்மையை ஒரு போதும் அடையமுடியாது. தேவன் தனது சேவையிலே நமக்கு ஒரு சிக்கலற்ற நிலையையோ, மேன்மையையோ, செல்வத்தையோ வாக்குப்பண்ணவில்லை; ஆனால், “உபத்திரவங்களோடு” தேவையான எல்லா ஆசிர்வாதங்களும் வரப்போகின்ற உலகிலே நித்தியஜீவனும் நமக்கு கிடைக்குமென உறுதியளிக்கின்றார். அவரது சேவைக்கு கொஞ்சமும் குறையாத முழுமையான அர்ப்பணிப்பை மாத்திரமே கிறிஸ்து ஏற்றுக்கொள்கிறார். நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இதுவே... Mar 149.2

திடமான மார்க்க சம்பந்தமான-கொள்கைகளை தாங்கிப்பிடிக்கும் வல்லமையைப்பற்றிய சில குறிப்பான எடுத்துக்காட்டுகள் நமக்கு இருக்கின்றன… வாய்பிளந்திருந்த சிங்கங்களின் குகைகள் தானியேலின் அன்றாட ஜெபங்களைத் தடுத்துநிறுத்த முடியவில்லை. நேபுகாத் நேச்சார் நிறுத்திவைத்த சிலைக்கு முன்பாக சாத்ராக்கும் அவனது தோழர்களும் விழுந்து பணியத்தக்கதாக அந்த எரிகிற அக்கினிச் சூளை அவர்களை தூண்டவுமில்லை. திடமான கொள்கைகளை உடைய வாலிபர்கள், களியாட்டுக்களைத் தவிர்ப்பார்கள். வேதனைகளைச் சகித்து, தைரியமாக எதிர்த்து நிற்பார்கள். தேவனுக்கு உண்மையற்றவர்களாகக் காணப்படுவதைவிட, சிங்கங்களின் குகைக்கும், சூடாக்கப்பட்ட அக்கினிச் சூளைக்கும் எதிராக தைரியமாகப் போராடுவார்கள். யோசேப்பின் குணத்தைக் கூர்ந்து கவனியுங்கள். அவனது ஒழுக்கம் கடுமையாகச் சோதிக்கப்பட்டது; ஆனால் அதன் வெற்றி முழுமையாக இருந்தது. ஒவ்வொரு வகையிலும் அந்த மேன்மையான வாலிபன் சோதனையைச் சகித்தான். ஒவ்வொரு உபத்திரவத்தின்போதும், அதேபோன்ற மிகவும் உயர்ந்த-வளைந்துகொடுக்காத-கொள்கை காணப்பட்டது. தேவன் அவனோடிருந்தார்; அவரது வசனம் பிரமாணமாக இருந்தது. Mar 149.3

வேதாகமத்தைப் படிப்பவர்கள், தேவனோடு ஆலோசனை கொள்பவர்கள், கிறிஸ்துவின்மீது சார்ந்திருப்பவர்கள் எல்லா சமயங்களிலும், அனைத்துச் சூழ்நிலையிலும் ஞானமாக நடந்து கொள்ள முடியும். நடைமுறை வாழ்க்கையிலே நல்ல கொள்கைகள் தெளிவாகத் தெரியும். இந்தக் காலத்திற்குரிய சத்தியம்மாத்திரம் இதயக்கனிவோடு ஏற்றுக்கொள்ளப்பட்டு, குணத்திற்கான அடித்தளமாக மாறட்டும்; அதனால், நோக்கத்தில் ஒரு உறுதி ஏற்படும். சிற்றின்பங்களின் கவர்ச்சிகளும், நிலையற்ற பழக்கங்களும், உலகப்பற்றுடையவர்களது இகழ்ச்சியும், சுயமாக இன்பத்தில் திளைப்பவர்களது வற்புறுத்தல்களும், செல்வாக்கைப் பயன்படுத்த முடியாதபடி சக்தியற்றுப்போய்விடும். முதலாவது மனசாட்சி ஒளியூட்டப்பட வேண்டும். சித்தமானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும். சத்தியத்தின்மேலும் நீதியின்மீதும் கொண்டுள்ள வாஞ்சை ஆத்துமாவில் ஆளுகைசெய்ய வேண்டும். பரலோகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் குணம் காணப்பட வேண்டும்.⋆ Mar 150.1

வாக்குத்தத்த வசனம்: Mar 150.2

“ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.” - ஏசாயா 48:18. Mar 150.3