Go to full page →

அத்தியாயம் 15 - யூதர்கள் பவுலை கொல்ல தீர்மானித்தார்கள் GCt 43

பவுலின் புதிய வாழ்க்கை அநேகரை இயேசுவண்டை கவர்ந்திழுத்தது. இதனைக் கண்ட பிரதான ஆசாரியர்களும் அதிகாரிகளும் அவன் மீது வெகுவாக வெறுப்புக் கொண்டார்கள். பவுல், இயேசுவைப் பற்றி தைரியமாக உபதேசிப்பதையும், அவருடைய நாமத்தினால் அற்புதங்களை நடப்பிப்பதையும், இதினிமித்தமாக அநேகர் மனந்திரும்பி சம்பிரதாய பழக்கங்களை விட்டு விலகியதையும் உணர்ந்த மனிதர்கள் பலரும் ஆசாரியர்களை கொலை பாதகர்களாக பார்த்தனர். இதனைக் கண்ட பிரதான ஆசாரியர்களும் வேதபாரகர்களும், பவுலை அதிகமாக வெறுத்தார்கள். கோபமூண்ட அவர்கள், திரண்டு, அடுத்ததாக என்ன செய்யவேண்டுமென ஆலோசிக்க ஆரம்பித்தார்கள். முடிவில், பவுலை கொலை செய்வதே இப்பிரச்சனையின் தீர்வு என்று தீர்மானித்தார்கள். ஆகிலும், இவர்களுடைய உள்நோக்கங்களை அறிந்த தேவன், பவுலை காக்கவும், ஊழியத்தை முழுமையாக செய்து முடிக்கவும், இரட்சகருக்கென்று பாடுபடவும், சில தூதர்களை நியமித்து, அவனை காக்க ஏற்பாடு செய்தார். GCt 43.1

யூதர்கள் தன்னை கொலை செய்ய நாடுவதை யாரோ பவுலுக்கு தெரிவித்தார்கள். விசுவாசியாத யூதர்களைக் கொண்டு, தமஸ்குவின் வாசல்களில் இராப்பகலாக பவுலின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்த சாத்தான், வாசல்களுக்கு வெளியே பவுல் வர நேரிட்டால், அவனை கொன்று போட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். ஆனால், நடு இரவிலே, சீடர்கள் அவனை ஒரு கூடையில் வைத்து மதிற்சுவருக்கு அப்பால் இறக்கிவிட்டார்கள். இங்கும், யூதர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. இதன்பின், பவுல், மற்ற சீடர்களோடு இணைவதற்காக எருசலேம் வந்தடைந்தான்; சீடர்களோ அவனைக் கண்டு பயந்தார்கள். பவுல் ஒரு சீடனாக மாறிவிட்டான் என்பதை அவர்களால் நம்பமுடியவில்லை. தமஸ்குவிலே, யூதர்களால் தேடப்பட்டும், சொந்த ஜனத்தாரால் ஏற்றுக்கொள்ளப்படாமலும் தவித்த பவுலை, பர்னபா என்பவன், அப்போஸ்தலரிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினான். தமஸ்குவிற்கு போகும் வழியில் இயேசுவை பவுல் சந்தித்ததையும், அதன்பின் இயேசுவைப் பற்றி மிக தைரியமாக தமஸ்குவிலே அவன் பிரசங்கித்ததையும் பர்னபா எடுத்துரைத்தான். GCt 43.2

பவுலை அழிக்கும்பொருட்டாக சாத்தான் யூதர்களை ஏவி விட்டான். எனவே, உடனடியாக பவுலை, எருசலேமை விட்டு வெளியேறும்படி கர்த்தர் கட்டளையிட்டார். அவ்விதமாக, அநேக பட்டணங்களில் பவுல் வல்லமையாக பிரசங்கித்தான், அற்புதங்களை செய்தான். பவுல் பிறவிச் சப்பாணியை சுகப்படுத்தியதினால், விக்கிரகங்களை சேவித்து வந்த அநேகர், அப்போஸ்தலருக்கு பலியை செலுத்த விரும்பினார்கள். பவுல் மிகவும் விசனமடைந்து, “மனுஷரே, ஏன் இப்படி செய்கிறீர்கள்? நாங்களும், உங்களைப்போல பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களை விட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்” என்று தேவனை உயர்த்திப் பேசினான். அப்படியிருந்தும், அவர்களுக்கு ஜனங்கள் பலியிடாதபடிக்கு அவர்களை அமர்த்துகிறது அரிதாயிருந்தது. உண்மையான தேவனின் மீது விசுவாசத்தை வைக்கவும், அவருக்குரிய கணத்தையும், ஸ்தோத்திரத்தையும் அவருக்கே செலுத்தவும், முதன்முறையாக இம்மக்கள் தங்களது இருதயங்களில் சிந்தித்துக் கொண்டே இருந்தார்கள். இவ்வேளையில், அவிசுவாச யுதர்கள் பலரை வெவ்வேறு பட்டணங்களிலிருந்து திரட்டி, பவுலின் செம்மையான ஊழியத்தை தகர்த்து விட சாத்தான் அவர்களை ஏவி விட்டான். இந்த யூதர்கள் எழும்பி, அந்த விக்கிரகக்காரர்களின் மனதை (பவுலைக் குறித்து பொய்யான தகவல்களைக் கொடுத்து) பவுலுக்கு விரோதமாக எழுப்பினார்கள். சற்று நேரத்திற்கு முன், பவுலை நன்றியோடும் பிரமிப்போடும் பார்த்த அந்த மனிதர்கள், திடீரென்று பவுல் மீது கல்லெறிந்து, அந்த பட்டணத்தை விட்டே விரட்டியடித்தார்கள். பவுல் மரித்ததுபோல் மூர்ச்சையானான். சீடர்கள் துக்கித்துக் கொண்டிருந்த சமயத்தில், பவுல் எழுந்து, அவர்களுடன் பட்டணத்துக்குள் பிரவேசித்தான். சீடர்கள் மகிழ்ந்தார்கள். GCt 44.1

பவுல் பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, ஒரு குறி சொல்லி ஏவுகிற ஆவியைக் கொண்டிருந்த ஸ்திரீ, அங்கு வந்து, “இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர்; இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள்” என்று உரக்கச் சொன்னாள். இப்படியாக அவள், அநேக நாட்களாக அப்போஸ்தலர்களை தொடர்ந்துக் கொண்டிருந்தாள். ஆனால், பவுல் வருத்தம்கொண்டான். ஏனெனில், அவளின் சத்தம் அநேகரை சத்தியத்திலிருந்து திசை திருப்பியது. இப்பெண்ணை இவ்விதமாக சாத்தான் ஏவியதன் நோக்கம் : மக்களின் கவனத்தையும் ஈடுபாட்டையும் தளர்த்துவதுதான். ஆனால், பவுல் தனக்குள்ளே ஆவியினால் நிரப்பப்பட்டவனாய், அந்த ஸ்திரீயை திரும்பிப்பார்த்து, அவளில் வசித்து வந்த தீய ஆவியை நோக்கி, “நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்கு கட்டளையிடுகிறேன்” என்று சொன்னான். உடனே அந்த ஆவி புறப்பட்டுப் போயிற்று. GCt 44.2

அவளுடைய எஜமான்கள், தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப் போயிற்றென்று கண்டு, மூர்க்கங்கொண்டார்கள். குறி சொல்லும் திறனை வைத்து, அதிகமாய் சம்பாதித்து வந்த அவர்களுக்கு, இது ஒரு பேரிழப்பாக இருந்தது. சாத்தானின் நோக்கம் முறியடிக்கப் பட்டிருந்தது; ஆகிலும், அவனுடைய சகாக்களாகிய அந்த எஜமான்கள் சேர்ந்து, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு போனார்கள். அவர்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களிடம், “யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்திலே கலகம்பண்ணி, ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும், அனுசரிக்கவும்தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்கள். இதனை கேட்ட ஜனங்கள் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அவர்களுடைய வஸ்திரங்களை கிழித்துப்போடவும், அவர்களை அநேக அடிகள் அடித்த பின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களை பத்திரமாய் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்கு கட்டளையிட்டார்கள். அவன் இக்கட்டளையைப் பெற்றவுடன், அவர்களை உட்காவலறையிலே வைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டி வைத்தான். எனினும், தேவ தூதர்கள் பவுலோடும் சீலாவோடும் சிறையினுள் இருந்தார்கள். அவர்களுடைய சிறையிருப்பு தேவனின் மகிமையை வெளிப்படுத்தியது. தெரிந்துக்கொள்ளப்பட்ட ஊழியக்காரர்களோடும், அவர்கள் செய்து வரும் ஊழியங்களோடும் தேவன் இருக்கிறார் என்பதை உலகம் அறிந்துக்கொள்ளும் பொருட்டாக இந்த அனுபவம் நிகழ்ந்தது. தேவனால் சிறையின் சுவர்கள் அசைக்கப்படக் கூடுமென்றும், வலிமையான இரும்புக் கம்பிகள் உடைக்கப்படக்கூடுமென்றும் நிரூபிக்கப்படவேண்டும்!! GCt 45.1

நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது. தேவதூதன் எல்லாருடைய கட்டுகளையும் அவிழ்த்துப்போட்டான். சிறைச்சாலைக்காரன் நித்திரை தெளிந்து, சிறையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்துக்கொள்ளப்போனான். அப்பொழுது பவுல் சத்தமிட்டு, “நீ உனக்கு கெடுதி ஒன்றுஞ் செய்துக் கொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம்,” என்றான். தேவ வல்லமையினால் தனது குறையை அந்த சிறைச்சாலைக்காரன் உணர்ந்தான். அவன் தீபங்களை கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்து வந்து, அவர்களிடம், “ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என வினவினான். அதற்கு அவர்கள், “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று சொன்னார்கள். சிறைச்சாலைக்காரன் உடனடியாக, தன் வீட்டிலிருந்த அனைவரையும் அழைத்துவந்தான். அவனுக்கும் அவன் குடும்பத்தாருக்கும், பவுல், இயேசுவைக் குறித்து போதித்தான். அவன், அந்நேரத்திலேயே அவர்களை அழைத்துக்கொண்டுப் போய், அவர்களுடைய காயங்களை கழுவினான். அவனும், அவனுடைய வீட்டாரும் அந்த இரவிலேயே ஞானஸ்நானம் பெற்றார்கள். அதன்பின், அவர்களுக்கு உணவு அளித்து, தன் வீட்டாரோடு தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான். GCt 45.2

சிறைச்சாலைக் கதவுகள் திறக்கப்பட்டதும், காவலரின் குடும்பம் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றதும் விசாலமாக பரவியது. தேவனின் மகிமை பிரஸ்தாபமடைந்தது. அதிகாரிகள் இவைகளைக் கேட்டு, கலங்கி, சிறைச்சாலைக்காரனை வரவழைத்து, பவுலையும் சீலாவையும் விடுதலையாக்கி விடும்படி கட்டளையிட்டார்கள். சிறைச்சாலைக்காரன் அவர்களை விடுவித்தபோது, பவுல் அவனிடம், “ரோமராகிய எங்களை நியாயம் விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பிவிடட்டும்” என்றான். சேவகர்கள் அதிகாரிகளிடம் இவ்வார்த்தைகளை அறிவித்தார்கள். ரோமராயிருக்கிறார்களென்று அவர்கள் அறிந்தபோது மிகவும் பயந்தார்கள். அவர்கள் வந்து, தயவாய் பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டு போய், பட்டணத்தை விட்டுப் புறப்பட்டுப் போகும்படி கேட்டுக்கொண்டார்கள். GCt 46.1

பார்க்க : அப்போஸ்தலர் 14 : 1-28
அப்போஸ்தலர் 16 : 1-40