Go to full page →

அத்தியாயம் 28 - மூன்றாம் துதனின் துது GCt 79

பரிசுத்த ஸ்தலத்தில் இயேசுவின் ஊழியங்கள் நிறைவடைந்து, மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் அவர் பிரவேசித்து, கர்த்தருடைய கற்பனைகளைக் கொண்ட சாட்சிப் பெட்டியினருகே அவர் நின்ற பொழுது, ஒரு மகத்தான தூதனை மூன்றாம் செய்தியோடு பூமிக்கு அனுப்பினார். தனது கையில் கொடுக்கப்பட்டிருந்த தோல் காகிதத்தை எடுத்து கொண்டு, அத்தூதன் பூமியிலிறங்கியபோதே, மனுஷருக்கு இது வரை கொடுக்கப்படாதிருந்த பயங்கரமான எச்சரிப்பு கொடுக்கப்பட்டது. தேவனுடைய பிள்ளைகள் விழித்தெழும்பி, தங்களுக்கு நேரிடவிருக்கும் சோதனைகளையும் வேதனைகளையும் எதிர்கொள்ள ஆயத்தமாகும்படியாக இச்செய்தி அளிக்கப்பட்டது. மிருகத்தோடும் அதின் சொரூபத்தோடும் கடுமையாக போராட வேண்டுமென்றும், நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்வதற்கு இப்போராட்டத்தில் அவர்கள் ஊறுதியாக இருப்பதே ஒரே வழி என்றும் அத்தூதன் விளக்கினான். அவர்களுடைய ஜீவன் ஆபத்தில் இருந்தாலும், சத்தியத்தில் உறுதியாக இருந்தாக வேண்டும். மூன்றாம் தூதன் : “தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக் கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும்” எனக் கூறி, தனது செய்தியை முடித்தான். இவ்வார்த்தைகளை அவன் மீண்டும் மீண்டும் கூறியபடியே பரலோகக் கூடாரத்தை காட்டினான். இச்செய்தியை ஏற்றுக்கொள்ளும் யாவருடைய இருதயமும் மகாபரிசுத்த ஸ்தலத்தில் சாட்சிப் பெட்டியின் அருகே நின்று கொண்டிருக்கும் இயேசுவினிடத்திற்குச் சென்றது. அவர், தேவ கற்பனைகளை உடைத்தவர்களுக்காக இன்னமும் வேண்டுதல் செய்துக்கொண்டிருக்கிறார். மரித்திருந்த நீதிமான்களுக்கும், ஜீவிக்கும் நீதிமான்களுக்கும் இப்பரிகாரம் செய்யப்பட்டது. தேவ கற்பனைகளைப் பற்றிய ஒளியை பெறாதபடியால், அறியாமையினால் பாவம் செய்தவர்களுக்கும் இப்பரிகாரம் தேடப்பட்டது. GCt 79.2

மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசலை இயேசு திறந்த பின், ஓய்வுநாளின் ஒளியும் தென்பட்டது. ஆதியிலே இஸ்ரவேலர்கள் சோதிக்கப்பட்டபடியே, இப்பொழுதும், தேவ ஜனங்கள் கற்பனைகளை கைக்கொள்வார்களா என்று சோதித்தறியப்படும். ஏமாற்றமடைந்தவர்களுக்கு பரலோகக் கூடாரத்தின் மகாபரிசுத்த ஸ்தலத்திற்கு செல்லக்கூடிய வழியை மூன்றாம் தூதன் மேல்நோக்கி காட்டினான். அவர்கள் விசுவாசத்துடன் இயேசுவை பின்பற்றியதால், மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசித்தார்கள். அவர்கள் மீண்டும் இயேசுவை கண்டபடியால், மகிழ்ச்சியும் நம்பிக்கையும் புதிதாக துளிர்விட்டது. அவர்கள் கடந்து வந்த காலங்களை அவர்கள் பின்னோக்கிப் பார்த்தார்கள். இயேசுவின் இரண்டாம் வருகையின் செய்தி கிடைத்ததிலிருந்து, 1844ஆம் ஆண்டு அவர்கள் அடைந்த மிகப்பெரிய ஏமாற்றம் வரை யாவையும் சிந்தித்தார்கள். இப்பொழுது, தங்களுடைய ஏமாற்றம் விளக்கப்பட்டபடியால், மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அவர்களை உயிரடையச் செய்தது. அவர்களுடைய கடந்த காலத்தையம், நிகழ் காலத்தையும், வருங்காலத்தையும் மூன்றாம் தூதன் விளக்கியபடியால், தேவன் தங்களை நடத்தி வந்த இரகசிய கிருபையை உணர்ந்துக்கொண்டார்கள். GCt 80.1

இயேசுவுடன் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்த மீதமானவர்கள், அங்கிருந்த சாட்சிப் பெட்டியையும், கிருபாசனத்தையும் கண்டு பிரமித்ததை நான் கண்டேன். இயேசு சாட்சிப் பெட்டியின் மூடியை திறந்தார். தேவனுடைய கற்பனைகள் எழுதப்பட்டிருந்த பலகைகள் உள்ளே இருந்தன. கற்பனைகளை வாசித்த அவர்கள், நான்காம் கற்பனையின் மீது படர்ந்திருந்த சிறப்பு ஒளியையும் மகிமையையும் கண்டபோது நடுங்கினார்கள். ஓய்வுநாள் அழிக்கப்பட்டதாகவோ, வாரத்தின் முதல் நாளுக்கு மாற்றப்பட்டதாகவோ எந்த விளக்கமும் அங்கு இல்லாததை அவர்கள் கண்டார்கள். இடி முழக்கங்களின் மத்தியிலும், மின்னல்களின் மத்தியிலும் சீனாய் மலையின் மீது தேவனே தமது பரிசுத்த விரல்களால் கற்பலகையின் மீது எழுதிய படியே இப்பொழுதும் இருந்ததை அவர்கள் உணர்ந்தார்கள். “ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்”. பத்து கற்பனைகள் பாதுகாக்கப்பட்டிருந்த விதம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. யேகோவாவின் அருகில் வைக்கப்பட்டிருந்ததையும், அதனை அவருடைய பரிசுத்தம் காத்துக்கொண்டிருந்ததையும் அவர்கள் கண்டார்கள். யேகோவா பரிசுத்தப்படுத்திய நாளுக்குப்பதிலாக, போப் மார்க்கத்தாரும் அந்நியருமாக இணைந்து அருளிய வேறொரு நாளை அவர்கள் அனுசரித்து வந்தபடியால், பத்து கற்பனைகளில் நான்காம் கற்பனையை எவ்வளவாக சிதைத்திருந்தார்கள் என்பதை கவனித்தார்கள். உடனே, தங்களுடைய கடந்த கால மீறுதல்களை உணர்ந்தவர்களாக தேவனுடைய சமூகத்தில் தங்களை தாழ்த்தி, புலம்பினார்கள். GCt 80.2

பரிசுத்தவான்களின் அறிக்கைகளையும் ஜெபங்களையும் பிதாவினிடத்தில் இயேசு கொடுத்தபோது, கலசத்திலிருந்த தூபம் புகைந்ததை நான் பார்த்தேன். இத்தூபம் மேலேறியபோது, இயேசுவின் மீதும், கிருபாசனத்தின் மீதும் பிரகாசமான வெளிச்சம் படர்ந்ததை நான் கண்டேன். கற்பனைகளை மீறியபடியால் வருந்தி, ஜெபித்துக்கொண்டிருந்த பரிசுத்தவான்களின் முகங்கள் இப்பொழுது நம்பிக்கையினாலும் மகிழ்ச்சியினாலும் நிறைந்தது. மூன்றாம் தூதனின் பணியோடு இவர்களும் இணைந்து, இறுதி எச்சரிப்பை அறிவித்தார்கள். ஆரம்பத்தில் வெகு சிலரே இதனை ஏற்றுக்கொண்டபோதிலும், எச்சரிப்பை கொடுப்பதில் அவர்கள் தளர்ந்து விடவில்லை. அதன்பின், அநேகர் இச்செய்தியை ஏற்றுக்கொண்டு, தூதனோடு இணைந்து, யேகோவாவின் பரிசுத்த நாளை ஆசரிப்பதின் மூலமாக தேவனை மகிமைப்படுத்தினார்கள். GCt 81.1

மூன்றாம் தூதனின் எச்சரிப்பை ஏற்றுக்கொண்டவர்களில் அநேகர், முதல் இரண்டு செய்திகளை அனுபவிக்காதிருந்தனர். சாத்தான் இதை புரிந்துக்கொண்டு, அப்படிப்பட்டவர்களை மேற்கொள்ளும் நோக்கத்தோடு பார்த்தான். ஆகிலும், மூன்றாம் தூதன் அவர்களுக்கு பரலோக கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தை காட்டிக் கொண்டே இருந்தான். அப்படியே, முதல் இரண்டு தூதுகளின் அனுபவங்களை பெற்றிருந்தவர்களும் அவர்களை பரம கூடாரத்திற்கு நேராக திருப்பினார்கள். முத்தூதுகளில் காணப்பட்ட பூரணமான சத்தியத்தொடர்ச்சியை கண்ட அநேகர், மகிழ்வுடன் அவைகளை எற்றுக்கொண்டார்கள். முத்தூதுகளையும் வரிசையாக ஏற்றுக்கொண்ட அவர்கள், விசுவாசத்துடன் இயேசுவோடு பரமக் கூடாரத்திற்குள் பிரவேசித்தார்கள். இத்தூதுகள், சரீரத்தை நிலை நிறுத்தக்கூடிய நங்கூரங்களாக திகழ்ந்தன என்று எனக்கு அறிவிக்கப்பட்டது. தனி மனிதர்கள் இவைகளை ஏற்றுக்கொள்ளும்போது, சாத்தானின் அநேக சூழ்ச்சிகளிலிருந்து அவர்கள் காக்கப் படுகிறார்கள். GCt 81.2

1844 ஆம் ஆண்டு நிகழ்ந்த மாபெரும் ஏமாற்றத்திற்கு பின், சத்திய அமைப்பின் விசுவாசம் உறுதிப்படுவதை சிதைக்க சாத்தானும் அவனுடைய தூதர்களும் அயராது முயற்சித்தார்கள். இவைகளில் அனுபவமடைந்திருந்த தனி மனிதர்களின் மனதை, சாத்தான் பாதித்தான். அதினிமித்தமாக, இம்மனிதர்கள் முதல் இரண்டு தூதுகளையும் மாற்றி, அவைகளின் நிறைவேறுதல் வருங்காலத்தில் இருக்கும் என கூறினார்கள். வேறு சிலரோ, இவைகள் யாவும் அநேக ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறைவேறிவிட்டது என அறிவித்தார்கள். அனுபவமில்லாதவர்கள் விசுவாசத்தில் உறுதிப்படாமல் இருப்பதற்கு இது வழிவகுத்தது. சிலர், வட்டமைப்பிலிருந்து விலகி, சுயமாக விசுவாசத்தை பலப்படுத்துவதற்காக வேதத்தை அதிக ஆர்வத்துடன் படிக்கத் துவங்கினார்கள். இவை எல்லாவற்றிலும் சாத்தான் குதூகலித்தான். நங்கூரத்திலிருந்து விலகியவர்களை எளிதாக மேற்கொண்டு விடலாம் என்பது அவன் கணிப்பாக இருந்தது. முதல் இரண்டு தூதுகளையும் முன் நின்று எடுத்துரைத்தவர்கள், இப்பொழுது அவைகளை மறுதலித்தார்கள். எனவே, சபைகளில் பிரிவுகளும் சிதறல்களும் உண்டாயிற்று. பின்பு நான் வில்லியம் மில்லரை கண்டேன். அவர் மிகுந்த குழப்பத்தில் இருந்தார். சக மனிதர்களை பற்றி கவலையும், வேதனையும் கொண்டிருந்தார். 1844ஆம் ஆண்டு வரை அன்புடனும், ஒற்றுமையுடனும் இருந்த கூட்டத்தினர் இப்பொழுது, அன்பிழந்து, ஒருவரை ஒருவர் எதிர்த்துக்கொண்டிருந்ததை கண்டார். துக்கம் அவருடைய பெலனை குறைத்தது. அநேக தலைவர்கள் அவரை கவனித்துக்கொண்டே இருந்தார்கள். வில்லியம் மில்லர், மூன்றாம் தூதனின் செய்தியை ஏற்று, தேவனுடைய கற்பனைகளையும் கைகொள்வாரோ என்று கவனித்தார்கள். பரலோகத்திலிருந்து வந்த வெளிச்சத்தை நோக்கி மில்லர் சாயும்போது, அவருடைய கவனத்தை திருப்பிவிடும்படியாக ஏதாவது ஒரு திட்டத்தை செயல்படுத்தினார்கள். அவருடைய செல்வாக்கை தங்களுடனே வைத்துக் கொள்ளவும், அவருடைய மனதை இருளில் வைத்திருக்கவும் ஒரு கூட்டத்தினர் அயராது உழைத்தனர். இறுதியாக, பரலோக ஒளிக்கு எதிராக தனது குரலை வில்லியம் மில்லர் உயர்த்தினார். வடிந்துபோன சக்தியை திரும்ப பெற்று, இழந்த நம்பிக்கையை துளிர்விடச் செய்து, தேவனை மகிமை படுத்தும் அனுபவத்தை பெற்றுக்கொள்வதற்கு மில்லர் தவறினார். அவருடைய ஏமாற்றத்தின் விளக்கங்களை அவர் முழுமையாக பரத்திலிருந்து பெற்றிருக்கக் கூடும். ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. ஆகிலும், தனது ஏஜமானாகிய இயேசுவுக்கென அவர் பட்ட பாடுகளும், அவருடைய முதிர் வயதும் அவரை தளர்த்தியது. அவரை இத்தகைய நிலைக்கு இழுத்த மனிதர்களையே தேவன் அதிகமாக கணக்கு கேட்பார். இப்பாவம் அவர்கள் மீது விழுந்தது. வில்லியம் மில்லர் மூன்றாம் தூதின் ஒளியை கவனித்திருந்தால், அநேக தெளிவான விளக்கங்கள் கிடைத்திருக்கும். ஆகிலும், தனது சகோதரர்கள் தன் மீது வைத்திருந்த மதிப்பையும் மரியாதையையும் அவரால் தகர்த்தெறிய இயலவில்லை. சத்தியத்தை தன் இருதயம் நாடும்; ஆனால் அவருடைய சகோதரர்கள் அதனை எதிர்த்தார்கள். இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்து தன்னுடன் இத்தனை ஆண்டுகளாக இணைந்து பிரசங்கித்த அவர்கள், தன்னை ஒருபோதும் வழி விலகச் செய்ய மாட்டார்கள் என்று நம்பினார். GCt 81.3

தேவன் அவரை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனை விட்டு அவரை இழுத்துக்கொண்டிருந்த மனிதர்களின் பார்வையிலிருந்து அவருடைய கல்லறையில் அவரை மறைத்து வைத்தார். வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தினுள் நுழையும் முன் மோசே பாவம் செய்தான். அப்படியே, தனது போராட்டத்தின் முடிவு நிலைக்கு வந்திருந்த மில்லரும், பரம காணானுக்குள் நுழையுமுன் பாவம் செய்தார். பிறர் அவரை இப்படி இடறலடையச் செய்தார்கள். அவர்கள் அதற்கு கணக்கொப்புவிக்க வேண்டும். ஆகிலும், இந்த தேவ ஊழியக்காரனின் புழுதியை தேவதூதர்கள் காத்து வருகிறார்கள். கடைசி எக்காளம் தொனிக்கும்போது, அவரும் எழுந்து வருவார். GCt 82.1

பார்க்க : யாத்திராகமம் 20 : 1-17
யாத்திரகமம் 31 : 18
I தெசலோனிக்கேயர் 4 : 16
வெளிப்படுத்தல் 14 : 9 -12