Go to full page →

அத்தியாயம் 32 - அந்த அதிர்வு GCt 91

உறுதியான விசுவாசத்தோடும், வேதனைமிகு கதறலோடும் தேவனிடத்தில் மன்றாடுகிற சிலரை நான் கண்டேன். அவர்களுடைய முகக்குறி வெளிரிப்போயும், வியாகூலம் நிறைந்ததாயும் காணப்பட்டது. இந்நிலைஅவர்களுடைய உட்போராட்டங்களை உணர்த்தியது. அவர்களுடைய முகச் சாயலில் திடமான எதிர்பார்ப்பு தெரிந்தது. அவர்களுடைய நெற்றிகளில் வியர்வைத் துளிகள் உதித்து, தரையில் விழுந்தன. இடையிடையே, தேவ ஆதரவின் சின்னங்களாக, பிரகாச ஒளி அவர்களுடைய முகத்தில் தோன்றி மறைந்தன. GCt 91.1

இயேசுவை அவர்களுடைய பார்வையிலிருந்து மறைத்து, அதினிமித்தமாக தேவனை அவிசுவாசித்து, அவருக்கு விரோதமாக முறுமுறுக்கும்படியாக சாத்தானின் தூதர்கள் தங்களுடைய இருளைக் கொண்டு அவர்களை சூழ்ந்துக் கொண்டார்கள். மேல் நோக்கி தங்களுடைய கண்களை ஏறெடுப்பது மட்டுமே அவர்களுக்கு இருந்த பாதுகாவல். தேவ ஜனங்களின் மீது தேவதூதர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. தீய தூதர்களின் இருளை, தங்களுடைய பிரகாசத்தினால், பரம தூதர்கள் விரட்டியடித்தார்கள். GCt 91.2

வேறு சிலர் இத்தகைய மன்றநாட்டில் கலந்துக்கொள்ளாமல், அலட்சியமாகவும், கவலை யற்றவர்களாகவும் இருந்ததை நான் கண்டேன். அவர்களை சூழ்ந்திருந்த அந்தகாரத்தை அவர்கள் எதிர்க்காததால், அஃது ஒரு கார்மேகம்போல் அவர்களை மறைத்துக்கொண்டது. தேவ தூதர்கள் இவர்களை விட்டு, ஜெபத்தில் தரித்திருந்திருந்த விசுவாசிகளுக்கு ஒத்தாசை செய்யும்படி சென்றுவிட்டார்கள். தங்களுடைய முழுபெலனையும் கொண்டு, தேவனிடத்தில் ஊக்கமாக வேண்டிக்கொண்டிருந்த நபர்களுக்கு தூதர்களின் அனுக்கிரகம் கிடைத்தது. இவ்வித முயற்சிகளை மேற்கொள்ளாத நபர்களை, தூதர்கள், விட்டகன்றார்கள். அவர்கள் என் தரிசனத்திலிருந்தும் மறைக்கப்பட்டார்கள். GCt 92.1

நான் கண்ட இத்தகைய அதிர்வின் விளக்கத்தை நான் கேட்டேன். அதற்கு, உண்மையும் சத்தியமும் உள்ள சாட்சியின் நிமித்தமாக, லவோதிக்கேயா சபைக்கு அருளப்படும் நீதியின் நற்சாட்சியினால் ஏற்படும் அதிர்வுதான் இது என்கிற விளக்கம் எனக்கருளப்பட்டது. இச்சாட்சியை ஏற்றுக்கொள்ளும் இருதயங்களில் பாதிப்புண்டாகி, சத்தியத்தைப் பேசி, அதனையே உயர்த்தவும் வாஞ்சை உண்டாகும். சிலர் இந்த சத்திய சாட்சியத்தை ஏற்கமாட்டார்கள். ஏற்காதவர்கள் அதற்கு விரோதமாக எழும்புவதால், தேவ ஜனங்களிடையே உண்டாகும் அதிர்வு தான் இஃது. GCt 92.2

சத்திய சாட்சியின் நற்சாட்சியானது ஐம்பது சதவீதம் கூட ஏற்கப்படவில்லை. திருச்சபையின் முடிவையே தாங்கி நிற்கும் இந்த நற்சாட்சியை முற்றிலுமாக புறக்கணிக்காதபோதும், அதனை மிக இலேசாக மதிப்பிட்டிருந்தார்கள். இந்த நற்சாட்சியை, உண்மையாக பெற்றிருந்தவர்கள், உறுதியாக கீழ்ப்படிந்து, சுத்திகரிக்கப்பட்டு, ஆழமான மனந்திரும்புதலையும் பெறுவார்கள். GCt 92.3

தேவதூதன், “இதை கவனி” என்று சொன்ன மாத்திரத்தில், அநேக வாத்தியங்கள் மிக ரம்மியமாக இசைக்கப்படுவதைப்போல் ஒரு இசை வெள்ளம் பெருகுவதை நான் கேட்டேன். இதுவரை இத்தகைய இனிமையான இசையை நான் கேட்டதில்லை. இந்த இசை, கிருபையும், அன்பும், பரிசுத்த சந்தோஷமும் நிறைந்ததாய் இருந்தது. அப்பொழுது தூதன் என்னிடம், “கவனி!” என்று கூறினான். சற்று நேரத்திற்கு முன் நான் கண்டிருந்த அதே கூட்டத்தை நான் கண்டேன். அவர்கள் மிகவும் அசைக்கப்பட்டிருந்தார்கள். கண்ணீரோடும், ஜெபத்தோடும் இருந்த அந்தக் கூட்டத்தையே மறுபடியும் நான் கண்டேன். இக்கூட்டத்தை பாதுகாக்கும் தூதர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாயிருந்ததை நான் கண்டேன். அவர்கள் தலையிலிருந்து பாதம் வரை கவசம் அணிந்திருந்தார்கள். சேவகர்களைப் போல கட்டுப்பாட்டுடன் அவர்கள் நடந்ததைக் கண்டேன். அவர்கள் கடந்து வந்திருந்த பாடுகளின் பாதிப்பு அவர்கள் முகத்தில் தெரிந்தது. ஆகிலும், அவர்களுடைய முகத்தில் பரலோகத்தின் ஒளியும் மகிமையும் படர்ந்திருந்தது. அவர்கள் வெற்றியடைந்திருந்தார்கள். GCt 92.4

இக்கூட்டத்தின் எண்ணிக்கை குறைந்திருந்தது. சிலர், வழியில் தவறியிருந்தார்கள். சத்திய நற்சாட்சியை அஜாக்கிரதையாக பார்த்தவர்கள், இக்கூட்டத்தில் சேராததால், இருளில் விடப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு பதிலாக, புதிதாக சத்தியத்தில் இணைந்தவர்கள் இக்கூட்டத்தில் இருந்தார்கள். இப்பொழுதும் தீய தூதர்கள் அவர்களை சூழ்ந்தார்கள். ஆகிலும், அவர்கள் மீது இத்தூதர்களுக்கு வல்லமையில்லாமற் போனது. GCt 93.1

கவசங்கள் அணிந்திருந்தவர்கள் சத்தியத்தைமிகுந்த வல்லமையோடு பேசுவதை நான் கேட்டேன். அதன் விளைவுகளையும் கண்டேன். சிலர் கட்டுண்டதையும் கண்டேன்; சில மனைவிமார் தங்கள் கணவன்மாராலும், சில பிள்ளைகள் தங்கள் பெற்றோராலும் கட்டுண்டதையும் கண்டேன். சத்தியத்தை கேட்க இயலாமல் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள், இப்பொழுது, தடைகளை மீறி அதனை ஏற்றுக்கொண்டார்கள். உறவினர்களை சார்ந்த பயம் இல்லாதிருந்தது. சத்தியம் மட்டுமே உயர்வாக தெரிந்தது. ஜீவனை காட்டிலும் அஃது மிகவும் விலையுயர்ந்ததாகக் கருதப்பட்டது. அவர்கள் சத்தியத்தின் மேல் பசிதாகமுள்ளவர்களாக இருந்தார்கள். “இத்தகைய மாறுதலை ஏற்படுத்தியது என்ன?” என நான் வினவினேன். அதற்கு ஒரு தேவதூதன், “இஃது மூன்றாம் தூதனின் உரத்த சத்தத்தின் நிமித்தமாக உண்டான பின்மாரியாகும். கர்த்தரின் சமூகத்தினின்று புறப்படும் புத்துணர்ச்சியாகும்” என்று விளக்கினான். GCt 93.2

தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களிடம் பெரும் வல்லமை உண்டாயிருந்தது. அப்பொழுது தூதன், “பாருங்கள்” எனக் கூற, என் கவனம் முழுவதும் அவிசுவாசிகளும் துன்மார்க்கரும் நிறைந்த இடத்திற்கு திரும்பிற்று. அவர்களிடையே பெரிய குழப்பம் நிலவியது. தேவ ஜனங்களின் உற்சாகமும் வல்லமையும் அவர்களுடைய சினத்தை தூண்டிவிட்டிருந்தது. எங்கும் குழம்பிய நிலை இருந்தது. தேவ ஒளியைப் பெற்றிருந்த கூட்டத்தாரின் மீது அநேக எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதை நான் கண்டேன். அவர்களை இருள் சூழ்ந்துக் கொண்டது. ஆகிலும், தேவ வல்லமையில் சாய்ந்து, அவர்கள் உறுதியாக நின்று கொண்டிருந்தார்கள். தேவனிடத்தில் ஊக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். இரவும் பகலுமாக ஜெபித்துக் கொண்டே இருந்தார்கள். “உம் சித்தம் தேவா, நடப்பியும். உமது நாமத்திற்கு மகிமையுண்டானால் உமது பிள்ளைகளுக்கு ஒரு விடுதலையை கட்டளையிடும். எங்களை சூழ்ந்திருக்கும் அந்நியர்களிடமிருந்து எங்களை விடுவியும். அவர்கள் எங்களை மரணத்திற்கு ஒப்பு கொடுத்தார்கள். ஆகிலும் தேவரீர் எங்களை இரட்சிக்க உமக்கு திராணியுண்டு” என்கிற வார்த்தைகளை கேட்டது மாத்திரம்தான் என் நினைவிற்கு வருகிறது. அவர்கள் தங்களுடைய உதவியற்ற நிலையை உணர்ந்து, முற்றிலுமாய் தேவனிடத்தில் தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாக இருந்தார்கள். அங்கிருந்த அனைவரும், யாக்கோபைப் போல, விடுதலைக்காக ஊக்கமாக ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள். GCt 93.3

இவர்களுடைய ஊக்கமான வேண்டுதலைக் கேட்ட தூதர்கள், உடனடியாக அவர்களுக்கு உதவ முன் வந்தார்கள். ஆகிலும், வளர்ந்த அதிகாரத் தூதன் ஒருவன் அவர்களை தடுத்தான். “தேவ சித்தம் இன்னமும் நிறைவேறவில்லை. அவர்கள் பாத்திரத்திலிருந்து குடிக்கவும், ஞானஸ்நானம் பெறவும் அவசியமாயிருந்தது” என்று குறிப்பிட்டான். GCt 93.4

வானத்தையும் பூமியையும் உலுக்கிய தேவ சத்தத்தை நான் கேட்டேன். பூமியில் பயங்கரமான அதிர்ச்சி உண்டாயிற்று. கட்டிடங்கள் இடிந்து தரையில் விழுந்தன. அதற்கு பின், தெளிவான, இனிமையான, பெரிய வெற்றியின் தொணியை நான் கேட்டேன். சற்று நேரத்திற்கு முன், மிகுந்த வேதனையோடு நின்று கொண்டிருந்த கூட்டத்தை இப்பொழுதும் பார்த்தேன். அவர்களுடைய அடிமைத்தனம் மாற்றப்படிருந்தது. அவர்கள் மீது பிரகாசமான ஒரு ஒளி ஜொலித்தது. எவ்வளவு அழகாக இருந்தார்கள்! அனைத்து சோர்வுகளும், பாரங்களும் நீங்கியிருந்தது. அனைத்து முகங்களிலும் ஆரோக்கியமும் அழகும் நிரம்பியிருந்தது. அவர்களுடைய எதிராளிகளான புறஜாதியார், மரித்தவர்கள் போல கீழே விழுந்தார்கள். மீட்கப்பட்ட பரிசுத்தவான்களின் மீது வீசிய ஒளியை அவர்களால் தாங்க முடியவில்லை. சோதனையை வென்றிருந்த இக்கூட்டத்தினரின் பிரகாசம், இயேசு வானத்தில் வெளிப்பட்ட வரை இருந்தது. மேகத்தின்மேல் அவர் வந்தபோது இவர்கள் எல்லாரும் ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, மறுரூபமாக்கப்பட்டார்கள். கல்லறைகள் திறக்கப்பட்டு, அழியாமையை தரித்துக்கொண்ட பரிசுத்தவான்கள் எழுப்பப்பட்டார்கள். மரணத்தின் மீதும், பாதாளத்தின் மீதும் கண்ட ஜெயத்தை உச்சரித்து, உயிருடன் மீட்கப்பட்ருந்த இக்கூட்டத்தினருடன் இணைந்து, வானத்தில் கர்த்தரை சந்திக்க கிளம்பினார்கள். GCt 94.1

பார்க்க : சங்கீதம் 86: 1 - 17
ஓசியா 6 : 3
ஆகாய் 2 : 21-23
மத்தேயு 10 : 35-39, 20 : 23
எபேசியர் 6 : 10-18
I தெசலோனிக்கேயர் 4 : 14-18
வெளிப்படுத்தல் 3 : 14-22