Go to full page →

அத்தியாயம் 34 - உரத்த தேறல் GCt 97

பரலோகத்தில், தேவதூதர்கள் துரிதமாக மேலும் கீழும் சென்று கொண்டிருந்ததை நான் கண்டேன். ஒரு முக்கியமான சம்பவத்தின் நிறைவேறுதலுக்காக ஆயத்தங்களை மேகொள்ளும்படி அவர்கள் பூமிக்கு இறங்குவதும், பரத்திற்கு ஏறுவதுமாக இருந்தார்கள். மூன்றாம் தூதனோடு இணைந்து, அவனுடைய தூதினை வலிமையாக்கும்படியாக வேறொரு தூதனை தேவன் நியமித்தார். இத்தூதனுக்கு அருளப்பட்ட மகிமையினிமித்தமாக, அவன் பூமியிறங்கியபோது, உலகமே பிரகாசமடைந்தது. இத்தூதனுக்கு முன்னும் பின்னுமாக சென்ற ஒளி அனைத்து இடகளிலும் ஊடுருவியது. அவன் மிகுந்த சத்தமிட்டு, “பாபிலோன் மகாநகரம் விழுந்தது! விழுந்தது!” என்றான். அசுத்தமும் அருவருப்புமான பறவைகள் வந்தடையக்கூடிய கூண்டாக பாபிலோன் திகழ்ந்தது. 1844ஆம் ஆண்டுமுதல் திருச்சபைகளுக்குள் நுழைந்திருந்த நேர்மையற்ற நிலைகளோடுக் கூட, இந்த இரண்டாம் தூதனின் தூதும் நுழைத்தது. இந்த இரண்டாம் தூதனின் ஊழியம் சரியான சமயத்தில் தோன்றி, மிகுந்த சத்தத்தோடு எழும்பிய மூன்றாம் தூதனின் செய்தியோடு கலந்துவிட்டது. தேவ ஜனங்கள், விரைவில் எதிர்கொள்ளவேண்டிய சோதனைகளை எதிர்கொள்ள தகுதியாக்கப்பட்டார்கள். அவர்கள் மீது இறங்கிய ஒளியையும், மூன்றாம் தூதனின் செய்தியோடு இணைந்து அவர்கள் பயமில்லாமல் அச்செய்தியை அறிவிப்பதையும் நான் கண்டேன். GCt 97.1

பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட மூன்றாம் தூதனுக்கு உதவும்படி அநேக தூதர்கள் வந்தார்கள். பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன் அது : “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்” என்றது. 1844ஆம் ஆண்டு நள்ளிரவில் தோன்றிய உரத்தச் சத்தத்தில் இச்செய்தியும், அஃதோடு மூன்றாம் தூதனின் செய்தியும் இணைக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன். பொறுமையுடன் காத்துக்கொண்டிருந்த பரிசுத்தவான்களின் மீது தேவ மகிமை தங்கியது. எனவே, பாபிலோன் நகரம் விழுந்ததையும், அவளுக்கு நேரிடவிருக்கும் அழிவிலிருந்து தப்பித்துக்கொள்ளும்படியும், தேவனுடைய ஜனங்களுக்கு எச்சரிப்பின் செய்தியை இந்த பரிசுத்தவான்கள் தைரியமாக எடுத்துரைத்தார்கள். GCt 97.2

காத்துக்கொண்டிருப்பவர்களின் மீது விழுந்த ஒளி அனைத்து இடங்களிலும் பரவியது. அப்பொழுது, மூத்தூதை கேள்விப்படாதவர்களும், சத்திய ஒளியை பெற்றிருந்தவர்களும், விழுந்துப்போன சபைகளிலிருந்து வெளியேறினர். இந்த தூதினை கேட்டபடியால், அநேகர் தங்கள் ஜீவியகாலத்தின் பதில் சொல்லும் பொறுப்புடைமையை உணர்ந்தார்கள். அவர்கள் மீதும் சத்திய ஒளி விழுந்ததால், ஜீவனையோ மரணத்தையோ தெரிந்துக்கொள்ளும் பாக்கியத்தை அவர்கள் பெற்றார்கள். சிலர் ஜீவனை தெரிந்துகொண்டு, தேவனுடைய கற்பனைகளை கைகொண்டு, கர்த்தருக்காக காத்திருக்கும் கூட்டத்தோடு நின்றார்கள். மூன்றாம் தூது தனது கிரியையை செய்யவேண்டியிருந்தது. அதினிமித்தமாக, யாவரும் சோதிக்கப்பட்டு, மத அமைப்புகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். தேவ ஆவியானவரின் கிரியையை உணர்ந்திருந்த சத்தியவான்களை ஒரு வல்லமை அசைத்துக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் அவர்களின் தீர்மானங்களுக்கு தடையாக நிற்க இயலாமல், அவர்களுடைய குடும்பத்தினரும் நண்பர்களும், தேவனின் வல்லமையினால் பிடிக்கப்பட்டிருந்தார்கள். இந்த கடைசி அழைப்பு, எளிமையான அடிமைகளையும் சென்றடைந்தது. இவர்களில் பக்தியுள்ளவர்கள், இச்செய்தியை மகிழ்ச்சியுடன் ஏற்று, தங்களது விடுதலையை எண்ணி மகிழ்ந்தார்கள். அவர்களுடைய எஜமான்களால் அவர்களை தடுக்க முடியவில்லை. ஒருவகையான பயமும், பிரமிப்பும் அவர்களை பிடித்திருந்தது. அற்புதங்கள் செய்யப்பட்டன; நோயாளிகள் சுகம் பெற்றார்கள்; ஆச்சரியங்களும் அடையாளங்களும் விசுவாசிகளை தொடர்ந்தது. தேவன் கிரியை செய்தபடியால், விசுவாசிகள் தயக்கமில்லாமல் தங்களுடைய மனச்சாட்சியின் மீது திட நம்பிக்கை வைத்து, கற்பனைகளை முழுமையாக கைகொள்கிறவர்களோடு இணைந்துக்கொண்டார்கள். மேலும், மூன்றாம் தூதினை வல்லமையாக பிரசங்கித்தார்கள். நள்ளிரவு கூக்குரலைக் காட்டிலும் அதிக வல்லமையோடு இம்மூன்றாம் தூது நிறைவுபெறும் என நான் கண்டேன். GCt 98.1

மேலிருந்து வல்லமையைப் பெற்று, முகங்களில் பிரகாசத்துடன், தேவனின் ஊழியக்காரர்கள் இந்தச் செய்தியை எடுத்துச் சென்றார்கள். பலதரப்பட்ட மத அமைப்புகளில் சிதறிக் கிடந்தவர்களில் அநேகர், இச்செய்தியைக் கேட்டு, அத்தகைய அழிவின் சபைகளிலிருந்து வெளியேறினார்கள். இஃது, அழிவிற்கு முன் சோதோம் பட்டணத்திலிருந்து வெளியேறிய லோத்தின் அனுபவத்திற்கு ஒத்ததாய் இருந்தது. அவர்கள் மீது விழுந்த மகிமையினிமித்தமாக, தேவ ஜனங்கள், வர இருக்கும் சோதனைகளை மேற்கொள்வதற்கு ஆயத்தமானார்கள். பின்பு ஒரு சத்தம் உண்டாகி, “பரிசுத்தவான்களின் பொறுமை இதுவே; தேவனுடைய கற்பனைகளையும், இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களும் இவர்களே,” என்றுரைத்தது. GCt 98.2

பார்க்க : ஆதியாகமம் 19:1-38 , வெளிப்படுத்தல் 14 : 12; 18:2-5