Go to full page →

எதிர்காலக் கணவனிடம் எதிர்பார்க்க வேண்டிய நற்குணங்கள் CCh 346

எந்தப் பெண்பிள்ளையும் ஒரு வாலிபனைக் கைபிடிக்குமுன்னே, தன் வாழ்க்கை நலத்துடனே இணைகப்படப் போகிறவன் தனக்குத் தகுதியுடையவன் தானோ என்பதை விசாரித்தறிய வேண்டும். அவள் கடந்தகால ஒழுக்கம் எத்தன்மையது? அவன் வாழ்க்கை தூய்மையுள்ளதோ? அவன் வெளியிடுகின்ற அன்பு பெருந்தகைமையும் உயர்ந்த பண்பும் உடையதோ? அல்லது வெறும் உணர்ச்சி வேட்கைதானோ? அவன் தனக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய சிறப்புக் குணம் உடையவனோ? தான் அவன் அன்பில் சமாதானமும் சந்தோஷமும் காணக்கூடுமோ? தான் தன் தனித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்ள இடம் கிடைக்குமோ? அல்லது தன் நிதானம், மனச்சாட்சி எல்லாம், தன் கணவனால் அடக்கி ஆளப்படுமோ? உடல், ஆத்துமா, நினைவு, நோக்கம் எல்லாம் தூய்மையும் பரிசுத்தமுமாய்ப் பாதுகாத்துக் கொள்ளக் கூடுமோ? திருமண உறவிற்குள் பிரவேசிக்கிற பெண் ஒவ்வொருத்தியின் நல் வாழ்க்கைக்கு இவ்வினாக்கள் இன்றியமையாதவை. CCh 346.2

பிற்காலத்தில் உண்டாகும் இடுக்கணுக்கும் துன்பத்திற்கும் தப்பிச் சமாதானமும் மகிழ்ச்சியுமாய் வாழ விரும்புகின்ற பெண்பிள்ளை தான் அன்பு பாராட்டத் தொடங்கு முன்னமே, தன் அன்பனுக்கு அன்னையார் இருக்கின்றாரோ என்று விசாரிக்க வேண்டும். மாமியாரின் இயற்கை குணநலம் எத்தகையது? அன்பன் தன் அன்னைக்குரிய தன் கடமைகளை உணர்ந்திருக்கின்றானோ? தாயின் விருப்பத்தையும் மகிழ்ச்சியையும் மதித்து நடக்கின்றவனோ? அவன் தன் அன்னையை நன்கு மதித்து கனம் பண்ணுவனானால், தன் மனைவிக்கு மதிப்பும் அன்பும், பட்சமும், கவனமும் பாராட்டுவனோ? கல்யாணப் புதுமை மறைந்த பின்பு, அவன் அன்பு நிலைபெற்றிருக்குமோ? அவன் என் தவறுகளைப் பொறுமையாய் சகித்துக் கொள்வானோ? அல்லது என் மேல் குறைகூரி வீறாப்புக் காட்டிச் சர்வாதிகாரம் செலுத்துவானோ? மெய்நேசம் பல தவறுகளைப் பாராட்டாது; அன்பு தவறுகளை வகையறுத்துப் பேசாது. CCh 347.1

இளம் பெண்ணானவள் தூய்மையும், சிறந்த ஆண்மைக் குணமும், முயற்சியும், முன்னேற்ற ஆர்வமும், உண்மையும், கடவுளிடத்தில் அன்புகூர்ந்து அவருக்குப் பயந்து நடக் கிற பண்பும் உடைய வாலிபனையே தனக்கு வாழ்க்கைத் துணைவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மையும், சுயம்பும் பற்றுறுதியும், தூய்மையுள்ள அன்பு கிடைப்பது அருமை. இவ்வரிய பொருள் கிட்டுவது மிகவும் அரிது. காம இச்சையை அன்பு என்பாரும் உண்டு. CCh 347.2

பக்தி இல்லாதவனை அகற்றி விடு. சோம்பற் பிரியனைத் தள்ளி விடு. பரிசுத்தமான பொருட்களை இகழுகிறவனை ஒதுக்கித் தள்ளு, கெட்ட வார்த்தை பேசிகிறவனையும், ஒரு கிண்ணம் மதுபானம் தானும் பருகுகின்றவனையும் விலக்கிவிடு. கடவுளுக்குரிய தன் பொறுப்பை உள்ளவாறு உணராத மனுஷனுடைய மணப் பேச்சுகளுக்குச் செவி கொடாதே. ஆத்துமாவைத் தூய்மைப் படுத்துகின்ற சுத்தமுள்ள சத்தியமானது, கடவுளிடத்தில் அன்பு கூர்ந்து அவருக்குப் பயந்து நடவாதவனும், மெய்யான நீதியின் கோட்பாடுகளைச் சிறிதும் அறியாதவனும் ஆகிய ஒருவன், உன் மகிழ்ச்சிக்குரிய அறிமுகமுள்ளவனாய் இருந்தாலும் தொடர்பை அறுத்து, அவனை ஒதுக்கித் தள்ளிவிட உனக்கு ஊக்கம் அளிக்கும். நாம் எப்பொழுதும் ஒரு நண்பனுடைய பலவீனங்களையும், அறியாமையையும் பொறுத்துக்கொள்ளலாம்; அவனுடைய நேர்மைக் கேடுகளையோ ஒருபொழுதும் பொறுத்து கொள்ளலாகாது. CCh 348.1