Go to full page →

அன்பு இயேசு தந்தருளுகின்ற அருமையான வரம் CCh 348

அன்பு இயேசுவினிடத்திலிருந்து நாம் பெற்றுக் கொள்ளுகின்ற அருமையான வரம். தூய்மையும் பரிசுத்தமுமான வாஞ்சை ஓர் உணர்ச்சி அல்ல; அது ஒரு இலட்சியம். மெய்யன்பினால் செயலாற்றுவோர் பகுத்தறிவு இல்லாதவர் அல்ல. குருடரும் அல்ல. மெய்யான சுத்த தூயப் பற்றுள்ள அன்பு காண்பது அரிது. இந்த அபூர்வப் பொருள் கிடைப்பது அரிது, சிற்றின்ப வேட்கை அன்பாகக் கருதப்படுகிறது. CCh 348.2

மெய்யன்பு உயர்ந்த தூய கொள்கை. அது மனவுணர்ச்சியினால் எழுந்து கடுஞ்சோதனையினால் திடீரென்று அவிந்து போகின்ற அன்பைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்ட தன்மையுடையது. CCh 349.1

அன்பு பரலோக முறையில் வளருகின்ற செடி. அதனை அந்த முறையில் ஆதரித்துப் போஷித்து வளர்க்க வேண்டும். ஆர்வமுள்ள உள்ளமும், உண்மையும் அன்புமுள்ள பேச்சும் குடும்பத்திற்கு மகிழ்ச்சி யுண்டாக்கி, தன் எல்லைக்குள் வருகின்றவர் எவரையும் தன் செல்வாக்கினால் உயர்த்துகின்றது. CCh 349.2

தூய அன்பு தன் திட்டங்களுக்குள் எல்லாம் கடவுளைக் கொண்டு வந்து, தேவ ஆவியுடனே பரிபூரணமாய் இசைந்து செல்லும். காம இச்சையோ முரட்டுப் பிடிவாதமும், முன்பின் பாராத ஆத்திரமும், பகுத்தறிவற்ற தன்மையும், எல்லா வகையான கட்டுப்பாட்டிற்கும் எதிர்த்து நிற்கும் இயல்பும் உடையதாய், தான் தெரிந்து கொண்ட பொருளைத் தனக்கு விக்கிரமாக்கிவிடும். மெய்யன்புடையவர் ஒழுக்கம் அனைத்திலும் கடவுள் திருவருள் தோன்றும். அடக்கம், எளிமை, உண்மை, ஒழுக்கக், தெய்வபக்தி இவைகள் மணவுறவின் தன்மையைப் படிப்படியாய்த் தனிச்சிறப்புடையதாக்கி விடும். இவ்வகைக் கட்டுப் பாட்டிற்குட்பட்டவர்கள், ஜெபக்கூட்டத்திலும், தேவாராதனையிலும் ஆர்வம் இழந்து, ஒருவர் மற்றவர் கூட்டுறவில் அமிழ்ந்து போக மாட்டார்கள். அவர்கள் சத்தியத்தின் மீது கொண்டுள்ள ஆர்வ அனல் கடவுள் தங்களுக்குத் தந்தருளிய வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் இகழ்ந்து நடக்கும் வண்ணம் அவிந்து போக மாட்டாது. CCh 349.3

ஐம்புல இன்பத்தினால் திருப்தி அடைவதைக் காட்டிலும் வேறு சிறப்புள்ள அஸ்திபாரம் இல்லாத அந்த அன்பு, முரட்டுப் பிடிவாதமும் குருட்டுத்தன்மையும், அடக்க மற்ற இயல்பும் உடையது. கண்ணியம், உண்மை, எல்லா வகையான பெருந்தன்மை என்னும் மனத்தின் உயர்ந்த வல்லமை எல்லாம், காம இச்சை என்னும் அடிமைத்தனத்திற்கு உட்பட்டுவிடுகின்றன. அறிவை மயக்கும் அந்த இச்சை ஆகிய சங்கிலியினால் கட்டுண்ட மனிதன், மிகப் பெரும் பாலும் பகுத்தறிவு மனச்சாட்சி இவற்றின் குரல்களைக் கேட்கமாட்டாத செவிடன் ஆகிவிடுகின்றான். நியாயவாதமாவது, கெஞ்சும் வேண்டு கோளாவது, தன் போக்கின் மடமையைக் கண்டுணரும்படி அவனுக்கு வழிகாட்டமாட்டா. CCh 349.4

மெய்யன்பு பலவந்தமும், கொடுமையும், தீவிரவேகமும் உள்ள இலச்சை அல்ல, அதற்கு மாறாக அது தன் தன்மையில் அமைதியும் ஆழமும் உள்ளது. அது வெறும் வெளிக்கோலத்தை நோக்காது; பண்பு நலங்களிலேயே ஈடுபடும் இயல்புடையது. அது ஞானமும் விவேகமும் உடையது; அதன் பற்றுறுதி மெய்ம்மையும் என்றும் மாறாது நிலைத்திருக்கும் இயல்புள்ளது. CCh 350.1

ஆசை, தீவிர இச்சை இவற்றின் ஆட்சியினின்று அன்பை விடுவித்துக் கைதூக்கி விடும் பொழுது, அது ஆவிக்குரிய தன்மை அடைந்து, சொல்லிலும் செயலிலும் வெளிப்படுகின்றது. கிறிஸ்தவர் பரிசுத்தமாக்கப் பெற்ற உருக்கமும் அன்பும் உடையவராய் இருக்க வேண்டும்; அதில் பதற்றமும் படபடப்பும் இராது; முரட்டுத்தனமும் கடுமையான குணமும் கிறிஸ்துவீன் கிருபையினால் மிருதுவாக வேண்டும். CCh 350.2