Go to full page →

எல்லாவற்றையும் தேவ மகிமைக்கென்று செய் CCh 604

ஆகார விஷயமாய் என்ன திட்டமான முறையைப் பின்பற்ற வேண்டுமென நாங்கள் குறிப்பிடுவதில்லை; ஆயினும் எந்த நாடுகளில் தானியங்கள், பழங்கள், கொட்டைகள் கிடைக்குமோ, அங்கே தேவனுடைய மக்களுக்கு மாமிச ஆகாரம் உகந்த உணவு அல்ல என்று நாங்கள் சொல்லுகிறோம். மாமிச உணவு, ஆடவரும் பெண்டீரும் ஒவ்வொருவருக்காகவும் உணர்ந்து பாராட்ட வேண்டிய அன்பையும், அனுதாபத்தையும் கொள்ளைகொண்டு, மேல்தரமான வல்லமைகளைக் கீழ்த்தரமான ஆசைகள் அடக்கி ஆளும்படி செய்து, சுபாவத்தை மிருகத்தன முள்ளதாக்கும் தன்மையுடையதாயிருக்கிறது. மாமிசம் புசிப்பது இதற்குமுன் எப்பொழுதாவது ஆரோக்கியமுள்ளதாயிருந்திருக்குமானாலும், இப்பொழுது அது பாதுகாப்பானதல்ல. புற்றுநோய், கட்டிகள், இரத்தக் குழாய் சம்பந்தமான நோய்கள் பெரும்பாலும் மாமிசம் புசிப்பதால் உண்டாகின்றன. CCh 604.1

மாமிச உணவை உபயோகித்தலை சபை ஐக்கியத்துக்கு ஒரு பரீட்சையாக வைக்கக் கூடாது, ஆனால், மாமிச உணவுகள் உபயோகிக்கும் விசுவாசிகள் பிறர் மேல் செலுத்தும் செல்வாக்கை நாம் கவனிக்க வேண்டும். ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். (1 கொரி. 10:31) என்று தேவனுடைய தூதாட்களாக மக்களுக்கு நாம் சொல்ல வேண்டாமா? மாறுபாடான போஜனப்பிரியத்தைப் பேணுவதர்கு விரோதமாக, நாம் ஒரு திட்டமான சாட்சி பகர வேண்டாமா? மானிடருக்குக் கொடுக்கப்பட்ட மகா சக்தி வினயமான சத்தியத்தைக் கூறி அறிவிக்கின்ற சுவிசேஷ ஊழியர்களில் யாராவது, எகிப்திய இறைச்சிப் பாத்திரங்களுக்கு திரும்பிப் போக பின் மாதிரி காட்டுவார்களா? தேவனுடைய பண்டக சாலையிலிருந்து வரும் தசமபாகத்தினால் போஷிக்கப்படுகிறவர்கள், தங்கள் உதிர நாளங்கள் வழியாகச் செல்லும் ஜீவனைக் கொடுக்கும் ஊற்றை சுய போஜனப் பிரியத்தினால் விஷமாக்க தாங்களே அனுமதிப்பார்களா? தேவன் தங்களுக்குக் கொடுத்த வெளிச்சத்தையும் எச்சரிப்புகளையும் அவர்கள் அசட்டை செய்வார்களா? சம நிலையான குணத்தை அடையவும், கிருபையில் வளரவும் சரீர சுகத்தை முக்கியமாக கவனிக்க வேண்டும். வயிறு சரியான பிரகாரமாகக் கவனிக்கப்படாவிடில், நேர்மையான சன்மார்க்கக் குணம் கட்டுவதும் தடைப்பட்டுப் போம். மூளையும், நரம்புகளும் இரைப்பையோடு சம்பந்தப் பட்டிருக்கின்றன. தப்பிதமாக உண்டு பானம்பண்ணுதல், தப்பிதமான நினைவுக்கும் செய்கைக்கும் வழி நடத்துகிறது. CCh 604.2

எல்லாரும் இப்பொழுது சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுகிறார்கள். நாம் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம்; நாம் எப்படிப்பட்டவர்களாயிருக்க கூடாதோ நம்மை அப்படிப் பட்டவர்களாகச் செய்து, கீழே இழுத்துச் செல்லும் ஒவ்வொரு காரியத்திலிருந்து, விலகி, நமது பாகத்தைச் செய்வோமாகில், அப்பொழுது நமது ஜீவனுள்ள தலையாயிருக்கிற கிறிஸ்துவுக்குள் வளர நமக்குப் பெலன் கொடுக்கப்படும். நாம் தேவனுடைய இரட்சிப்பையும் காண்போம். CCh 605.1

நாம் ஆரோக்கிய வாழ்வு விதிகளைப்பற்றி அறிவுடையவர்களாயிருக்கும் பொழுது மாத்திரம். தகுதியற்ர உணவால் ஏற்படும் தீமைகளைக் காண பூரணமாய் எழுப்புதலடையக் கூடும். தங்கள் தவறுதல்களை உணர்ந்து, தங்கள் பழக்கங்களை மாற்ற தைரியம் உடையவர்கள் சீர்திருத்தம் செய்யப் போராட்டமும், அதிக விடா முயற்சியும் தேவை என்பதைக் கண்டுகொள்வர்; ஆனால் சரியான சுவை ஒரு தடவை பழக்கத்தில் வரும்போது, இதற்கு முன் தீங்கற்றவை என அவர்கள் உபயோகித்த உணவு மெதுவாக, ஆனால், திடமாக அஜீரணத்திற்கும் மற்ற நோய்களுக்கும் அஸ்திவாரத்தைப் போடுகின்றது என்று கிரகித்துக் கொள்வார்கள். CCh 605.2

தாய்மார்களே தகப்பன்மார்களோ, ஜெபத்தில் விழித்திருங்கள். ஒவ்வொரு விதத்திலும் இச்சையடக்க மின்மைக்கு எதிராகக் கண்டிப்பாய்க் காவல் செய்யுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு உண்மையான ஆரோக்கிய சீர்திருத்த ஒழுங்குகளைப் போதியுன்க்கள். சுகத்தைப் பேண எப்பொருட்களை நீக்க வேண்டுமென அவர்களுக்குக் கற்பியுங்கள். கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் தேவ கோபாக்கினை விழ ஆரம்பித்திருக்கின்றது. எப்படிப்பட்ட பாதகங்கள், எப்படிப்பட்ட பாவங்கள், எப்படிப்பட்ட அக்கிரம செய்கைகள் எப்பக்கத்திலும் வெளிப்படுகின்றன! நாம் ஒரு ஜனமாக சீர்கெட்ட தோழர்கள் சகவாசத்திலிருந்து நமது பிள்ளைகளைப் பாதுகாக்க மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டும். CCh 606.1