Go to full page →

பிள்ளைகளை ஞானஸ்நானத்திற்கு ஆயத்தப்படுத்தல் LST 172

ஞானஸ்நானம் பெற விரும்புகிற பிள்ளைகளுடைய பெற்றோர் தற்பரிசோதனை செய்கிறதும் தங்கள் பிள்ளைகளுக்கு உத்தம போதனை அளிக்கிறதுமாகிய இரண்டிலும் ஓர் வேலை செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். ஞானஸ்நானம் மிகவும் பரிசுத்தமும் முக்கியமும் ஆனதோர் நியமம். அதின் பொருளைக் குறித்துத் திட்டமாய் அறிந்திருக்க வேண்டும். அது பாவத்திற்காக மனஸ்தாபப்படுவதையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஓர் புதிய ஜீவியம் செய்வதையும் குறிக்கிறது. அந்த முறைமையைப் பெறுவதற்கு அதிக அவசரப்படக் கூடாது. பெற்றோரும் பிள்ளைகளுமாகிய இருதிறத்தினரும் அது எவ்வளவு பொறுப்புடையதென்று கணக்குப் பார்க்கட்டும். தங்கள் பிள்ளைகள் ஞானஸ்நானம் பெறச் சம்மதிக்கும் பெற்றோர் இப்பிள்ளைகளைப் பற்றித் தாங்கள் உண்மையுள்ள உக்கிராணக் காரணராயிருந்து, அவர்களுடைய குணத்தைக் கட்டுவதில் அவர்களை வழி நடத்துவதற்கு தாங்களே உத்திரவாதிகளென்னும் பரிசுத்த கடமைக்கு உட்படுகிறார்கள். அவர்கள் விசுவாசிப்பதாய் சொல்லும் விசுவாசத்தை அவமானப் படுத்தாத படிக்கு மந்தையின் இவ்வாட்டுக் குட்டிகளை விசேஷ கவனமாய்க் காத்துக்கொள்ள அவர்கள் தங்களையே ஈடாக்குகிறார்கள். LST 172.1

சிறு பிராயத்திலிருந்தே பிள்ளைகளுக்கு மார்க்க சம்பந்தமான போதனை போதிக்கப் பட வேண்டும். அது ஆக்கினைக் கேதுவான ஆவியிலல்ல, முக மலர்ச்சியுள்ள, சந்தோஷமான ஆவியுடன் கொடயுக்கப் படவேண்டும். பிள்ளைகள் அறியாவிதமாய் அவர்களுக்குச் சோதனைகள் வராதபடிக்குத் தாய்மார் எப்பொழுதும் விழிப்பாயிருக்க வேண்டியது அவசியம். ஞானமும் இன்பகரமானதுமான போதனையினால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அனுபோகமற்றவர்களாகிய இவர்களின் உத்தம நண்பர்களாக அவர்கள் இவர்களைச் ஜெயங்கொள்ளச் செய்யும் வேலையில் இவர்களுக்கு உதவி புரிய வேண்டும்; ஏனெனில் சகல காரியமும் அவர்கள் ஜெயங் கொள்ளுகிற விதத்தைப் பொறுத்திருக்கின்றது. LST 172.2

நீங்கள் உண்மையாய்ப் பிரயாசப்பட்ட பின்பு, உங்கள் பிள்ளைகள் மனந்திரும்புதலையும், ஞானஸ்நானத்தையும் பற்றிய கருத்தை அறிந்து கொண்டார்கள் என்றும் உண்மையாய்க் குணப்பட்டிருக்கிறார்கள் என்றும் உங்களுக்குத் திருப்தியாயிருந்தால் அவர்கள் ஞானஸ்நானம் பெறட்டும். ஆனால், முதலாவதாக அனுபோகப் படாத அவர்களுடைய பாதங்களைக் கீழ்ப்படிதலின் இடுக்கமான பாதையில் நடத்துவதில் நீங்கள் உண்மையுள்ள மேயப்பர்களாய் நடந்து கொள்வதற்கு உங்களையே ஆயத்தப்படுத்துங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். LST 172.3

அன்பிலும், ஒழுக்கத்திலும், கிறிஸ்தவ மனத் தாழ்மையிலும், கிறிஸ்துவுக்குத் தன்னை முழுவதுமாய் ஒப்புக் கொடுப்பதிலும் பெற்றோர் தன்கள் பிள்ளைகளுக்குச் சரியான ஓர் மாதிரியைக் காண்பிக்கும் பொருட்டுத் தேவன் அவர்களிடத்தில் கிரியை செய்ய வேண்டும். ------ 6 T 93-4. LST 173.1