Go to full page →

மாபெரும் தாக்கத்தை உண்டாக்கும் குடும்பம் TamChS 272

ஒழுக்கமிக்க ஒரு கிறிஸ்தவக்குடும்பமானது கிறிஸ்தவமார்க்கத்தின் உண்மைக்கு வல்லமையான வாதமாகும்; பக்தியற்றவர்கள் கூட அதை மறுக்கமுடியாது. பிள்ளைகளில் தாக்கத்தை உண்டாக்குகிற செல்வாக்கு குடும்பத்திலே செயல்படுவதையும், ஆபிரகாமின் தேவன் அவர்களோடு இருக்கிறதையும் அனைவரும் காணமுடியும். கிறிஸ்தவர்களெனச் சொல்வோரின் குடும்பங்கள் நல்ல ஆவிக்குரிய நிலையில் இருந்திருந்தால், நன்மைக்கு ஏதுவாக மிக வல்லமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்கள். அவர்கள் மெய்யாகவே ‘உலகத்திற்கு வெளிச்சமாக’ இருப்பார்கள். 2PP, 44 TamChS 272.2

ஒரு குடும்பத்தின் ஊழியப்பணி அந்தக்குடும்ப அங்கத்தினர்களையும் தாண்டிச் செல்கிறது. கிறிஸ்தவக்குடும்பம் ஒரு விளக்கப் பாடமாக இருக்கவேண்டும். அது வாழ்க்கையின் மெய்யான நியதிகளின் மேன்மையை எடுத்துக்காட்டுகிறது. அவ்வாறு எடுத்துக் காட்டுவது உலகத்தில் நன்மைக்கேதுவான ஆற்றலாக இருக்கும். ஒரு மெய்யான குடும்பமானது மனித இருதயங்களிலும் வாழ்க்கையிலும் ஏற்படுத்துகிற தாக்கம் பிரசங்கிக்கப்படுகிற எந்தப் பிரசங்கத்தையும் விட ஆற்றல்மிக்கதாக இருக்கிறது. அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து ஒருவர் வெளியே செல்லும்போது, தாங்கள் கற்ற பாடங்களை மற்றவர்களிலும் புகுத்துகிறார். வாழ்க்கையின் மேன்மையான நியதிகளை பிற குடும்பத்தினர்களுக்கும் அறிமுகப் படுத்துகிறார். மேலும், சமுதாயத்தில் மேன்மைப்படுத்துகிற ஒரு தாக்கம் செயல்படுகிறது. 1MH, 352 TamChS 272.3

ஒழுங்கும் ஒழுக்கமும் மிக்க குடும்பம்தான் கிறிஸ்தவ மார்க்கத்தின் ஆற்றல்பற்றி உலகத்திற்கு எடுத்துக்காட்டுகிறமிகப்பெரிய ஆதாரம். வேறு எதைக்காட்டிலும் இதுதான் சத்தியத்தைப் பிறருக்குப் பரிந்துரைக்க முடியும்; ஏனெனில், இருதயத்தின் மீதான நடைமுறை ஆற்றலுக்கு அது உயிருள்ள சாட்சியாக இருக்கிறது. 24T, 304 TamChS 273.1

பூமியின் குடும்பங்கள் பரலோகக் குடும்பத்திற்கு ஓர் அடையாளமாக இருக்கவேண்டும் என்பது தேவனுடைய திட்டம். கிறிஸ்தவக் குணம் உருவாகுதற்கும் அவருடைய ஊழியம் தொடர்ந்து நடைபெறுவதற்கும் அவர் நியமித்துள்ள பயன்மிக்க ஏதுகரங்களில் ஒன்றாக, தேவ திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டு, நடத்தப்படுகிற கிறிஸ்தவக் குடும்பங்கள் உள்ளன. 36T, 430 TamChS 273.2

நம் செல்வாக்கின் எல்லை குறுகியதாகவும், நம் திறமை சிறியதாகவும், நம் வாய்ப்புகள் சிலதாகவும், நாம் பெற்றிருப்பவை குறைவாகவும் தோன்றலாம்; ஆனாலும் நம் சொந்தக்குடும்பங்கள் சம்பந்தப்பட்ட வாய்ப்புகளை உண்மையோடு பயன்படுத்தினால் அருமையான வாய்ப்புகளைச் சொந்தமாக்கலாம். தேவன் நியமித்துள்ள வாழ்க்கை நியதிகளை நம் இருதயங்களிலும் குடும்பங்களிலும் ஏற்றுக்கொண்டால், ஜீவனைக் கொடுக்கிற வல்லமை புறப்பட்டு ஓடுகிற பாதைகளாக நாம் மாறலாம். நம் வீடுகளிலிருந்து சுகத்தைக் கொடுக்கும் நீரோடைகள் புறப்பட்டு ஓடும்; இப்போது வறட்சியும் மரணமும் காணப்படுகிற இடத்தில் அழகையும் விளைச்சலையும் ஜீவனையும் கொண்டுவரும். 4 MH, 355 TamChS 273.3