Go to full page →

கிறிஸ்துவானவருடைய வருகை தாமதிக்கிறதாகக் கூறுவதின் ஆபத்து CCh 726

பொல்லாத ஊழியக்காரனோ “என் ஆண்டவன் வர நாள் செல்லும்” என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டும் (மத். 24:48), கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருக்கிறவன் போலவே தன்னைக் காட்டுகின்றான். வெளி யரங்கமாக தெய்வத்திற்குத் தன்னைத் தத்தம் செய்த ஒரு ஊழியக்காரனாகத் தன்னைக் காட்டி, இருதயத்திலோ சாத்தானுக்கு இடமளித்துள்ளான். CCh 726.2

பரியாசக்காரனைப் போல சத்தியத்தைப் பகிரங்கமாக மறுதலிக்காமல், தன் வாழ்விலே கர்த்தருடைய வருகை தாமதமடைந்தது என்னும் கருத்தைப் புலப்படுத்துகின்றான். அவனுடைய துணிகரம் நித்திய காரியங்களைப் பற்றி அவன் அஜாக்கிரதையாகவிருக்கும்படி செய்கின்றது. உலக வழக்கை அவன் அங்கீகரித்து, அதின் வழக்க பழக்கங்களுக்கு ஏற்ப தான் நடந்துகொள்ளுகின்றான். உலகப் பெருமையும், சுய நலமும், பேராசையும் அவனை மேற்கொள்ளுகின்றன. தன்னுடைய சகோதரன் தன்னை விடவும் அதிக உயர்வான நிலையில் வைக்கப்படலாமென்றுணர்ந்து அவர்களுடைய முயற்சிகளைப் பழித்து, அவர்களுடைய நோக்கங்களைக் குற்றம் பிடிக்கின்றான். இவ்வாறு அவன் உடன் வேலைக்காரரை அடிக்கின்றான். CCh 727.1

தெய்வ ஜனத்தை விட்டு அவன் தன்னை பிரித்துக்கொண்ட பிறகு அதிகமதிகமாக அவபக்தியுடையவர்களுடனே ஒன்றுபடுகிறான். அவன் வெறியரோடே புசிக்கிறவனாகவும் குடிக்கிறவனாகவும் காணப்படுகின்றான். உலகினரோடு ஒன்றுபட்டு, அவர்களுடைய ஆவியிலே பங்கு பெறுகின்றான். இவ்வாறு அவன் மறதியினாலும் நிர்விசாரத்தினாலும் சோம்பலினாலும் மேற்கொள்ளப்பட்டு, லெளகீக பாதுகாப்புடையவன் என்னும் மயக்கத்திற்குட்படுகின்றான். 5T 101,102. CCh 727.2