Go to full page →

கிறிஸ்துவின் நீதியாகிய அங்கி தரிக்கப்படுதல் CCh 748

தெய்வ மக்கள் தங்கள் ஆத்துமாக்களை அவருக்கு முன்பாகத் தாழ்த்தி இருதய சுத்தத்திற்காக வேண்டுதல் செய்யும் பொழுது, “அவர்கள் மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்து போடுங்கள்” என்ற கட்டளை கொடுக்கப்படுகின்றது. அன்றியும் “பார், நான் உங்கள் அக்கிரமங்களை உங்களிலிருந்து நீங்கச் செய்து, உங்களுக்குச் சிறந்த வஸ்த்திரம் தரிப்பித்தேன்” என்றுரைக்கும் தைரியமான வார்த்தைகளும் அருளப்படுகின்றன. புடமிடப்பட்டும் சோதிக்கப்பட்டும் உண்மையுள்ளவர்களாக விளங்கும் தெய்வப் பிள்ளைகளின் மேல் கிறிஸ்துவின் நீதியாகிய கறையற்ற அங்கி தரிக்கப்படுகின்றது. நிந்தையைடைந்த மீதியானவர்கள் இனி ஒரு போதும் உலகக் கறைகளினால் தீட்டுப்பாடமல் மகிமையான ஆடை அணியப் பெற்றிருப்பர். CCh 748.2

மீதியானவர்கள் மன்னிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்டதுமல்லாமல் மகிமைப்படுத்தப் பெற்றுமிருக்கின்றனர். அவர்கள் சிரசின் மேல் ஒரு “சுத்தமான பாகை” வைக்கப்படுகின்றது. அவர்கள் தேவனுக்கென்று ராஜாக்களும் ஆசாரியர்களுமாயிருப்பார்கள். CCh 749.1

சாத்தான் இவர்கள் மீது குற்றஞ் சாட்டி இவர்களை அழிப்பதற்கு வகை தேடிக்கொண்டிருக்கும் பொழுது, காணப்படாத பரிசுத்த தூதர்கள் எங்கும் சென்று, ஜீவனுள்ள தேவனின் முத்திரையை அவர்கள் மேல் வைத்தார்கள். தங்கள் பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டவர்களாக ஆட்டுக்குட்டியானவரோடு சீயோன் மலையில் நிற்கிறவர்கள் இவர்கள் தான்! பூமியிலிருந்து மீட்கப்பட்டவர்களாகிய இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரைத்தவிர வேறொருவரும் கற்றுக்கொள்ளக் கூடாத புதுப்பாட்டைச் சிங்காசனத்திற்கு முன்பாக நின்று அவர்கள் பாடுகின்றனர். “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.” (வெளி. 14: 4, 5.) CCh 749.2