Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மகா சர்ச்சை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம் 27 - ஆசாரிப்புப் கூடாரம்

    தேவ ஜனங்களின் மகா ஏமாற்றம் எனக்கு காண்பிக்கப் பட்டது. அவர்கள் எதிர்பார்த்த சமயத்தில் இயேசுவை காணமுடியவில்லை. தங்களுடைய இரட்சகர் வராததின் காரணம் அவர்களுக்கு தெரியவில்லை. தீர்க்கதரிசன காலம் இன்னமும் நிறைவேறாததின் காரணத்தையும் அவர்களால் காண முடியவில்லை. தேவனுடைய வார்த்தை தோற்றுவிட்டதா? தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தேவன் தோற்றுவிட்டாரா? என்கிற கேள்விகள் ஒரு தூதனின் மனதில் எழுந்தது. இல்லை! அவர் வாக்கு அருளிய அனைத்தும் நிறைவேறுகின்றனவே!! பரலோகக் கூடாரத்திலே, இயேசு எழுந்தருளி, பரிசுத்த ஸ்தலத்தின் வாசலை அடைத்துவிட்டு, மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசித்தார். பரலோகத்தின் ஆசாரிப்புக் கூடாரம் சுத்திகரிக்கப்பட வேண்டும். பொறுமையுடன் காத்திருப்பவர்களுக்கு இந்த இரகசியங்கள் விளங்குமென ஒரு தூதன் விளம்பினான். மனிதன் தவறு செய்திருந்தான்; தேவனின் சார்பில் யாதொரு தவறும் நிகழவில்லை. தேவன் விளம்பிய யாவும் நிறைவேறின. ஆனால், மனிதன் தவறாக கணக்கிட்டு, தீர்க்கதரிசன காலங்களின் முடிவில், சுத்திகரிக்கப்படவேண்டிய ஆசாரிப்புக்கூடாரம் இந்த பூமியே என்று நம்பினார்கள். மனிதனின் இந்த எதிர்பார்ப்பு தோல்வியடைந்தது; தேவனின் வாக்குகள் அல்ல. ஏமாற்றமடைந்திருந்தவர்களின் மனதை பரலோகக் கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு திரும்பி விடும்படியாக தூதர்களுக்கு இயேசு கட்டளையிட்டார். அவர் கூடாரத்தை சுத்திகரிக்கவும், இஸ்ரவேலருக்காக விசேஷமான பிராயச்சித்தம் பண்ணவுமே அங்கு நுழைந்திருக்கிறார் என்பதை தமது பிள்ளைகள் உணரவேண்டும். மகாபரிசுத்த ஸ்தலத்திலிருக்கும்போது, இயேசு புதிய எருசலேமுடன் பரிசுத்த விவாகத்தின் மூலமாக இணைக்கப்பட்டதை நான் கண்டேன். இங்கு அவருடைய வேலை நிறைவேறியபின், அவர் பூமிக்கு இராஜாதி இராஜாவாக திரும்பி வந்து, தமக்காக பொறுமையுடன் காத்துக்கொண்டிருப்பவர்களை தம்முடன் சேர்த்துக்கொள்வார்.GCt 76.1

    1844ஆம் ஆண்டு முடிவடைந்த தீர்க்கதரிசன காலத்தில், பரலோகத்தில் நிகழ்ந்தது என்னவென்பது எனக்கு காட்டப்பட்டது. நான் கண்டது என்னவென்றால், இயேசு பரிசுத்த ஸ்தலத்தில் தமது பணியை முடித்துவிட்டு, அப்பகுதியின் வாசலை அடைத்தபோது, அவருடைய வருகையின் செய்தியை மறுத்திருந்த யாவரின் மீதும் அந்தகாரம் படிந்தது. இயேசு சிறப்பான ஆடைகளினால் தம்மை அலங்கரித்துக்கொண்டார். அவருடைய அங்கியின் கீழ் பகுதியிலே ஒரு மணியும், மாதளம்பழமும் தொங்கும். அவருடைய தோள்பட்டையிலிருந்து ஒரு மார்கவசம் ஒன்று தொங்கவிடப் பட்டிருந்தது. அவர் அசைந்த பொழுது. அஃது வைரம்போல் மின்னியது. மார்ப்பதக்கத்தில் ஏதோ பெயர்கள் பொறிக்கப்பட்டதாகவோ எழுதப்பட்டதாகவோ தெரிந்து. அவர் முழுமையாக ஆடை அணிவித்த பின், சிரசில் கிரீடம் போல் ஒன்றை தரித்துக்கொண்டு, தூதர்கள் புடைசூழ, அக்கினி இரதத்தில் இரண்டாம் அறைக்குள் பிரவேசித்தார். பரலோகக் கூடாரத்தின் இரு அறைகளையும் கவனிக்கும்படி நான் உணர்த்தப்பட்டேன். திறந்திருந்த வாசலின் வழியாக நுழைய எனக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. முதல் அறையில், ஏழு கிளைகளைக் கொண்ட குத்துவிளக்கையும், சமுகத்தப்ப மேஜையையும், தூபபீடத்தையும், தூபகலசத்தையும் கண்டேன். அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சுத்தமான பொன்னைப்போல ஜொலித்து. அஃது, அங்கு நுழைபவரின் சாயலை பிரதிபலிப்பதாக இருந்தது. இவ்விரண்டு அறைகளையும் பிரித்த திரைச்சீலை மகிமையாக இருந்தது. அது பல நிறங்களாலும், பல விதமான துணிகளாலும் செய்யப்பட்டு, அதன் ஓரங்கள் மிக நேர்த்தியாக பின்னப்பட்டிருந்தது. அதின் மீது பொறிக்கப்பட்டிருந்த பொன் எழுத்துக்கள் தேவதூதர்களை குறித்துக் காட்டின. இத்திரைச்சீலை உயர்த்தப்பட்டபொழுது, நான் இரண்டாவது அறையை பார்த்தேன். அங்கு, மகாபரிசுத்த பொன்னினால் செய்யப்பட்ட சாட்சிப் பெட்டியை நான் கண்டேன். கிரீடங்களை அடையாளமாகக் கொண்ட அழகிய வேலைபாடுகளைக் கொண்ட ஓரங்கள் அந்த பெட்டியின் மீது இருந்தது. அது பசம்பொன்னினால் செய்யப்பட்டிருந்தது. பத்து கற்பனைகளைக் கொண்ட கற்பலகைகள் இந்த பெட்டிக்குள் இருந்தன. இச்சாட்சிப்பெட்டியின் இரு பக்கங்களிலும் அழகிய கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து நின்றன. இக்கேருபீன்களின் செட்டைகள் உயரே எழும்பி, சாட்சிப் பெட்டியினருகே நின்று கொண்டிருந்த இயேசுவின் மீது படர்ந்திருந்தது. கேருபீன்கள் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளாய் நின்று கொண்டு, கீழே இருந்த சாட்சிப் பெட்டியை உற்று நோக்கிக்கொண்டிருந்தன. தேவதூதர்களின் சேனை கர்த்தரின் கற்பனைகளை வாஞ்சையோடு நோக்குவதை இஃது உணர்த்திற்று. இவ்விரு கேருபீன்களின் நடுவே ஒரு தூபகலசம் இருந்தது. பரிசுத்தவான்களின் விசுவாச ஜெபங்கள் இயேசுவன்டை வந்த போது, அவர் தமது பிதாவிடம் அவைகளை அர்ப்பனித்தார். அப்பொழுது, சுகந்த வாசனை எழும்பிற்று. பல அழகிய நிறங்களில் எழும்பிய புகையைப்போல் அக்காட்சி இருந்தது. இயேசு நின்று கொண்டிருந்த சாட்சிப்பெட்டியின் முன் பகுதியில் ஒரு மிதமிஞ்சிய மகிமை இருந்து. என்னால் அதனை நோக்கக் கூடாமற் போயிற்று. தேவன் வாசம் செய்த சிங்காசனத்தைப் போல் அது காட்சியளித்தது. பிதாவினிடத்திற்கு அத்தூபம் உயர்ந்தபோது, அவருடைய சிங்காசனத்திலிருந்து கிளம்பிய மகிமை இயேசுவிடம் வந்தது. பின்பு அது, ஜெபித்த பரிசுத்தவான்களை சென்றடைந்தது. ஒளியும் மகிமையும் இயேசுவின் மீது அதிகமாய் படர்ந்தது. அஃது கிருபாசனத்தையும் மறைத்துக்கொண்டது. ஆசாரிப்புக் கூடாரமே அம்மகிமையால் நிறைந்திருந்தது. இதற்கு மேலாக என்னால் அம்மகிமையை காணமுடியவில்லை. நான் பெருமிதம் அடைந்தேன்.GCt 77.1

    பரலோகத்திலிருந்த கூடாரத்தைப் போலவே பூமியிலும் ஒரு கூடாரம் இருப்பது எனக்கு காட்டப்பட்டது. அஃது, பரத்திலிருந்த கூடாரத்தின் மாதிரி அமைப்பு, என எனக்கு தெரிவிக்கப்பட்டது. இப்பூமியிலுள்ள கூடாரத்தின் முதல் அறையிலிருந்த பணிமுட்டுகள் அனைத்தும், பரலோகக் கூடாரத்தின் முதல் அறையிலிருந்த மாதிரியே இருந்தது. பூமியிலிருந்த கூடாரத்தின் இரு அறைகளிலும் ஆசாரியர்கள் ஊழியம் செய்தார்கள். முதல் அறையில் அனுதினமும், மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் ஆண்டிற்கு ஒரு முறையும் நுழைந்து ஊழியம் செய்தார்கள். இயேசுவோ, பரலோகக் கூடாரத்தின் இரு ஸ்தலங்களிலும் ஊழியம் செய்தார். பரலோக கூடாரத்திற்குள் தமது சொந்த இரத்தத்தையே தியாகம் செய்து நுழைந்தார். உலகத்தின் ஆசாரியர்கள் மரணத்திற்குட்பட்டபடியினால், அவர்களால் நீண்டகாலம் பணி செய்ய முடியவில்லை. மாறாக, இயேசு, நித்திய ஆசாரியனாக செயல்பட்டார். இவ்வுலகில் உள்ள ஆசாரிப்பு கூடாரத்திற்கு கொண்டுவரப்பட்ட பலிகளினாலும், காணிக்கைகளினாலும், வரவிருக்கின்ற இரட்சகரைக் குறித்து இஸ்ரவேலர்கள் அறிந்துக் கொள்ள வேண்டியதாய் இருந்தது. தேவ ஞானத்திலும், இப்பணிகளின் மூலமாக, நாமும் இயேசுவின் பரலோகக் கூடாரப் பணிகளை நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது.GCt 78.1

    கல்வாரியில் இயேசு மரித்துக்கொண்டிருந்த வேளையில், “முடிந்தது” என்று கூறியவுடன், தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. இஃது, பூமியின் கூடாரங்களின் பலிகளும் பணிகளும் நித்தியமாக நிறைவடைந்துவிட்டது என்பதை காட்டுவதற்காகவே நிகழ்ந்தது. பரலோகக் கூடாரத்தில், தம்மால் மாத்திரமே செய்யப்படக்கூடிய ஊழியத்திற்காக இயேசு தம்முடைய இரத்தத்தையே சிந்தினார். ஆசாரிப்புக் கூடாரத்தை சுத்திகரிப்பதற்காக வருடத்திற்கு ஒரு முறை, பிரதான ஆசாரியன், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவது போல, தானியேல் 8ஆம் அதிகாரத்தில் உரைக்கப்பட்டிருக்கும் 2300 இராப்பகலின் முடிவில் - அதாவது 1844 ஆம் ஆண்டில் பரலோகக் கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் கிறிஸ்து நுழைந்தார். தமது மத்தியஸ்த ஊழியத்தினிமித்தமாக பயன்பெறுவோருக்கு இறுதி பரிகாரம் செய்வதற்காகவும், கூடாரத்தை சுத்திகரிப்பதற்காகவும் அவர் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்தார்.GCt 79.1

    பார்க்க : யாத்திராகமம் 25-28
    லேவியராகமம் 16 : 1 - 34
    II இராஜாக்கள் 2 : 11
    தானியேல் 8 : 14
    மத்தேயு 27 : 50-51
    எபிரேயர் 9 : 1-28
    வெளிப்படுத்தல் 21 : 1-27