Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாபெரும் ஆன்மீகப் போராட்டம்! - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    2—முதலாம் நூற்றாண்டுகளின் உபத்திரவம்!

    (மூலநூல் : The Great Controversy பக்கம்: 39—48)

    யேசுவின் இரண்டாம் வருகை சம்பந்தப்பட்ட காட்சிகளை, அவர் தமது சீடர்களுக்கு வெளிப்படுத்தினபோது, அவர் எடுத்துக்கொள்ளப் படவேண்டிய நேரத்திலிருந்து, அவர்களுக்கு விடுதலை தரும்படியாக அவர் வல்லமையோடும் மகிமையோடும் திரும்பிவரும்வரை, அவருடைய மக்களுக்கு உண்டாகக்கூடிய அனுபவங்களை முன்னுரைத்தார். அப்போஸ்தல சபையின்மீது வீசவிருந்த புயல்களை, மீட்பர் ஒலிவமலை யிலிருந்து கண்டு, அதற்கும் அப்பால், அவரது பின்னடியார்களின்மீது இருண்ட காலத்தில் நிகழவுள்ள உபத்திரவத்தையும் அவர் ஆழமாக நோக்கி அறிந்தார். திகைப்பூட்டும் அடையாளங்களுடைய சில வார்த்தைகளினால், உலகத்தின் அதிபதிகளால் தேவனுடைய சபைக்கு நிகழவிருப்பவைகளை அவர் முன்னறிவித்தார் (மத்தேயு 24:9, 21, 22). தங்களுடைய எஜமானன் நடந்துசென்ற தாழ்வு, நிந்தை, பாடுகள் ஆகிய பாதையில் அவரது பின்னடியார்களும் நடந்தாகவேண்டும். உலக இரட்சகருக்கு எதிராக வெடித்த பகைமை அவருடைய நாமத்தின்மீது நம்பிக்கைவைக்கும் அனைவர்மீதும் வெளிக்காட்டப்படும். (1)GCTam 27.1

    ஆரம்பகால சபையின் வரலாறு மீட்பருடைய வார்த்தைகளின் நிறைவேறுதலுக்குச் சாட்சி கொடுக்கிறது. பூமி-பாதாளம் ஆகியவைகளின் வல்லமைகள், கிறிஸ்துவின் பின்னடியார்களின் வடிவிலிருந்த கிறிஸ்துவிற்கு எதிராக அணிதிரண்டன. சுவிசேஷம் வெற்றியடைந்தால், அஞ்ஞான மார்க்கமும் அதன் ஆலயங்களும் பலிபீடங்களும் அடித்துச்செல்லப்படும் என்பதை அஞ்ஞான மார்க்கம் முன்னதாகவே கண்டறிந்திருந்தது. எனவே, கிறிஸ்தவ மார்க்கத்தை அழிக்க அது தனது சக்திகளை அழைத்தது. உபத்திரவம் என்னும் நெருப்பு மூட்டப்பட்டது. கிறிஸ்தவர்கள் உடமைகள் பறிக்கப்பட்டவர்களாக, அவர்களுடைய வீடுகளிலிருந்து விரட்டப்பட்டனர். துன்பப்படுதல் என்னும் பெரும் போராட்டங்களையும் அவர்கள் சகித்தனர் (எபிரெயர் 10:32). அவர்கள் “நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்”-எபிரெயர் 11:36. தங்கள் இரத்தத்தினாலே அநேகர் தங்கள் சாட்சிகளை முத்திரையிட்டார்கள். சுயாதீனர்கள்- அடிமைகள், செல்வந்தர்கள்-ஏழைகள், கற்றவர்கள்-கல்லாதவர்கள் என அனைவரும் வேறுபாடின்றி, இரக்கமற்ற வகையில் கொல்லப்பட்டனர். (2)GCTam 27.2

    பவுல் இரத்தசாட்சியாக மரித்த காலக்கட்டத்தில் நீரோ அரசனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த உபத்திரவங்கள், சில சமயங்களில் அதிகமானதாகவும் சில சமயங்களில் குறைவானதுமான கொடுமைகளாக நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தன. கிறிஸ்தவர்கள் மிகப் பயங்கரமான குற்றவாளிகள் என்று அவர்கள்மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இயற்கையினால் உண்டான பாழ்க்கடிப்புக்கள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள், பூகம்பம் ஆகியவைகளுக்கும் கிறிஸ்தவர்கள்தான் காரணம் என்று அறிவிக்கப்பட்டது. வெகு ஜனங்களின் வெறுப்புக்கும் சந்தேகத்திற்கும் அவர்கள் ஆளானபோது, லாபநோக்கத்திற்காக, குற்றமற்றவர்களைக் காட்டிக்கொடுக்க, தகவல் கொடுப்பவர்கள் தயாராக நின்றனர். பேரரசுக்கு எதிராகக் கலகம் செய்பவர்கள், மதவிரோதிகள், சமுதாயத்தின் விஷப்பூச்சிகள் என்று அவர்கள் தீர்க்கப்பட்டனர். ஏராளமானவர்கள் மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டனர்; சிலர் சிலுவைகளில் அறையப்பட்டனர்; சிலர் விளையாட்டு அரங்கங்களில் எரிக்கப்பட்டனர்; சிலர் மிருகங்களின் தோல்களால் சுற்றப்பட்டு, நாய்களால் கிழித்தெறியப்படுவதற்காக, விளையாட்டு மைதானங்களில் வீசியெறியப் பட்டனர்; அவர்களது தண்டனைகள் அடிக்கடி மக்கள் கூடிக்களிக்கின்ற பொழுதுபோக்காக நடத்தப்பட்டிருந்தன. திரளான மக்கள், அவர்களது மரண ஓலமிக்க வேதனைக் காட்சியை சிரிப்புடனும் கைதட்டலுடனும் கண்டுகளிப்பதற்காகக் கூடினர். (3)GCTam 28.1

    கிறிஸ்துவின் பின்னடியார்கள் எங்கெல்லாம் தஞ்சம் புகுந்தனரோ, அங்கெல்லாம் அவர்கள் விலங்குகளைப்போல வேட்டையாடப்பட்டனர். பாழிடங்களிலும் தனிமையான இடங்களிலும் ஒளிப்பிடம் தேடும்படி அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். “மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும் படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்; வேறுசிலர் நிந்தை களையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; உலகம் அவர் களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்”-எபிரெயர் 11:36-38. அடுக்குத் தொடர்குகைகள் ஆயிரக் கணக்கானவர்களுக்குத் தங்குமிடமாயின. ரோம் நகருக்கு வெளியே, குன்றுகளின் அடிவாரத்தில், மண்ணுக்கும் பாறைகளுக்கும் ஊடாக, நீண்ட சுரங்கங்களாகத் தோண்டப்பட்ட இடுக்கமான பாதைகள், நகரச் சுவர்களுக்கு வெளியே தெரியாமல் மைல் கணக்கில் பரவி இருந்தன. பூமிக்கடியிலிருந்த ஒதுக்குப்புறமான இடங்களில், கிறிஸ்துவின் பின்னடியார்கள், தங்களில் இறந்தவர்களைப் புதைத்தனர்; இப்படிப்பட்ட அவர்கள், சந்தேகத்திற்குரியவர் களாக்கப்பட்டு, தடைசெய்யப்பட்ட வேளைகளில், இந்த இடங்களை தங்கள் வீடுகளாகக் கண்டனர். நல்ல போராட்டத்தைப் போராடின இவர்களை ஜீவாதிபதியானவர் எழுப்பும்போது, கிறிஸ்துவிற்காக இரத்தசாட்சிகளான அநேகர், இந்தத் துயரமிக்க தாழிடங்களிலிருந்து வெளிவருவார்கள். (4)GCTam 28.2

    மிகக்கடுமையான உபத்திரவத்திலும் இவர்கள் இயேசுவின்சாட்சிகளாக தங்களுடைய விசுவாசத்தை பலவீனப்படுத்தாமல் பாதுகாத்திருந்தனர். சகலவிதமான சுகங்களையும் இழந்து, சூரிய வெளிச்சத்திலிருந்து விலக்கப்பட்டு, பூமியின் இருண்ட மடியைத் தங்களது நட்புமிக்க வீடாகக் கொண்டிருந்தபோதிலும், குறைகூறும் வார்த்தைகளை அவர்கள் சொல்ல வில்லை. தனிமையையும் துன்பங்களையும் சகித்துக்கொள்ளும்படி, அவர்கள் ஒருவரையொருவர் விசுவாசமும் பொறுமையும் நம்பிக்கையும்மிக்க வார்த்தை களினால் தைரியப்படுத்தினார்கள். உலகத்திற்குரிய பொருள்களின் இழப்புகள், கிறிஸ்துவின்மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையை குறைக்க வில்லை. சோதனைகளும் உபத்திரவங்களும் அவர்களுக்குக் கிடைக்க இருக்கின்ற இளைப்பாறுதலுக்கும் வெகுமதிக்குமருகில் அவர்களைக் கொண்டுவருகின்ற படிக்கட்டுகளாக அமைந்தன. தங்களுக்கு முன்னிருந்த தேவனுடைய பணியாளர்களைப் போலவே, அநேகர் “மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்”-எபிரெயர் 11:35. கிறிஸ்துவிற்காக உபத்திரவப்பட நேரிடும்போது, அதிகமான மகிழ்ச்சியோடு இருக்கவேண்டுமெனவும், பரலோகத்தில் அவர்களுக்குக் கிடைக்க இருக்கும் பரிசு மிகவும் அதிக மேன்மையானதென்றும், தங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளும் இவ்விதமாகவே உபத்திரவப்படுத்தப்பட்டிருந்தனர் என்றும் அவர்களுடைய எஜமான் கூறியிருந்த வார்த்தைகளை அவர்கள் தங்கள் நினைவிற்குக் கொண்டுவந்தனர். பற்றியெரியும் அக்கினி ஜுவாலைகளுக்கு நடுவில், தாங்கள் சத்தியத்திற்காகப் பாடனுபவிப்பதற்குத் தகுதியடைந்ததற்காக, அவர்கள் மகிழ்ந்து பாடிய வெற்றியின் பாடல்கள், விண்ணுக்கு எழும்பின. அவர்கள் விசுவாசத்தினால் மேல் நோக்கியபோது, பரலோகப் பிராகாரங்களில் இருந்து, மிகுந்த வாஞ்சையுடனும் ஆர்வத்துடனும் அவர்களுடைய உறுதியை அங்கீகரித்து, கிறிஸ்துவும் தேவதூதர்களும் அவர்களைப் பார்ப்பதைக் கண்டனர். “நீ மரணபரியந்தம் உண்மையாயிரு; அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” (வெளி. 2:10) என்னும் வார்த்தைகள் தேவ சிங்காசனத்திலிருந்து அவர்களை நோக்கிவந்தன. (5)(6)GCTam 29.1

    கொடுமைகளின் மூலமாக, கிறிஸ்துவின் சபையை அழித்துவிட வேண்டும் என்ற சாத்தானின் முயற்சி வீணாகியிருந்தது. இந்த விசுவாசத்திலிருந்த அவர்கள் கம்பத்தில் கட்டப்பட்டு, நெருப்பிற்கு மத்தியில் நின்று உயிர்விட்டபோது, இயேசுவின் சீடர்கள் எந்த மாபெரும் போராட்டத்தில் உயிர்விட்டார்களோ, அது முடிவடைந்திருக்கவில்லை. வீழ்ச்சி அடைந்தாலும்-அவர்கள் வெற்றி அடைந்தார்கள்! தேவனுடைய பணியாளர்கள் கொலைசெய்யப்பட்டனர்; ஆனாலும் அவருடைய பணி சீராக முன்னேறிச்சென்றது! சுவிசேஷம் தொடர்ந்து பரவியது; அதைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது; யாரும் உட்புகாமலிருந்த இடங்களுக்கு எல்லாம் சுவிசேஷம் நுழைந்து, ரோமின் உயர்ந்த இடங் களுக்குள்ளும் அது சென்றது. உபத்திரவத்தை விரைவுபடுத்தும்படி நெருக்கினவர்களைப் பார்த்து, ஒரு கிறிஸ்தவர்: “நீங்கள் எங்களை சித்திரவதைசெய்யலாம்; துன்பப்படுத்தலாம்; சலிப்படையச்செய்யலாம்; உங்களுடைய தீயதன்மைகள் எங்கள் பலவீனங்களைச் சோதனைக்குட் படுத்தலாம்; ஆனால், அதுவே பிறரை எங்கள்பால் இழுக்கும் பலத்த அழைப்பாக அமையும்! எந்த அளவிற்கு அதிகமாக நாங்கள் புற்களைப்போல் கத்தரிக்கப்படுகிறோமோ, அந்த அளவிற்கு நாங்கள் மறுபடியும் துளிர்த்து வளர்வோம். கிறிஸ்தவனின் இரத்தம் விதையாக உள்ளது” என்று சொன்னார்.--Tertuilian, Apology, Paragraph 50. (7)GCTam 30.1

    ஆயிரக்கணக்கானவர்கள் சிறைப்படுத்தப்பட்டு, கொலை செய்யப் பட்டனர். ஆனால் அவர்களின் இடங்களை நிரப்ப மற்றவர்கள் கிளர்ந்து எழும்பினர். தங்களுடைய விசுவாசத்திற்காக இரத்தசாட்சிகளானவர்கள், கிறிஸ்துவுடன் பாதுகாக்கப்பட்டு, அவரால் வெற்றி வீரர்களெனக் கணக்கிடப் பட்டனர்; அவர்கள் நல்லபோராட்டம் போராடி, கிறிஸ்து வரும்பொழுது, அவரிடமிருந்து மகிமையின் கிரீடத்தைப் பெறுபவர்களாக இருந்தனர்; அவர்கள் அனுபவித்த பாடுகள், கிறிஸ்தவர்களை ஒருவருக்கொருவருடனும் அவர்களுடைய இரட்சகருடனும் கிட்டிச்சேரச் செய்தது; அவர்களுடைய வாழ்க்கையின் மாதிரியும் சாட்சியான மரணமும் சத்தியத்திற்கு தொடர் சாட்சியாக இருந்தது. சாத்தானின் சேவையில், அவனுக்கு அடிமையாக இருந்தவர்கள், அவனது சேவையைவிட்டு விலகிச்சென்று கிறிஸ்துவின் கொடியின்கீழ் நிற்பதென்பது சற்றும் எதிர்பாராததாக இருந்தது. (8)GCTam 30.2

    எனவே, சாத்தான் அவனுடைய கொடியைக் கிறிஸ்தவ சபையில் நாட்டி, தேவ அரசாங்கத்திற்கு எதிராக வெற்றிகரமான யுத்தம்செய்ய, திட்டங்கள் தீட்டினான். கிறிஸ்துவின் பின்னடியார்கள் வஞ்சிக்கப்பட்டு, தேவனின் அதிருப்திக்குள்ளாகும்படி நடத்தப்பட்டால், அப்பொழுது அவர் களுடைய பலமும் கோட்டையும் விழுந்துவிடும். அவர்கள் எளிதில் இரையாக விழுந்துவிடுவார்கள். (9)GCTam 31.1

    ஆம். பலவந்தத்தினால் அடையமுடியாமலிருந்தவைகளைத் தந்திரத் தினால் அடைந்துகொள்ள பெரும் எதிரியானவன் முயன்றான். உபத்திரவம் நின்று அதற்குப்பதிலாக, உலகப்பிரகாரமான கவர்ச்சியும் மேன்மையும் வைக்கப்பட்டன. முக்கியமான சத்தியங்களை நிராகரித்து, கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒரு பகுதியைப் பெற்றுக்கொள்ளும்படி விக்கிரக ஆராதனைக் காரர்கள் நடத்தப்பட்டனர். இயேசுவை தேவகுமாரனென்று அறிவிக்கவும், அவரது மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவைகளை நம்பவும் செய்தனர்; ஆனால் பாவத்தைப்பற்றிய உணர்வும், மனந்திரும்பவேண்டும் அல்லது இதயத்தில் மாற்றம் தேவை என்ற அவசியத்தையும் அவர்கள் உணரவில்லை. கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கை என்னும் மேடையில் அனைவரும் ஒற்றுமைப்படுவதற்கு, கிறிஸ்தவர்கள் அவர்களது கோட்பாடுகளைச் சற்று விட்டுக்கொடுக்கவேண்டுமென்றும், அதேபோல், அவர்களும் அவர்களுடைய கோட்பாடுகளை விட்டுக்கொடுக்க இசைவதாகவும் தீர்மானம் செய்தனர். (10)GCTam 31.2

    சபை இப்பொழுது பயங்கரமான பேராபத்தில் இருந்தது, இதனுடன் ஒப்பிடும்போது, சிறைவாசம், சித்திரவதை, நெருப்பிற்கிரையாகுதல், வாளினால் வெட்டப்படுதல் ஆகியவை ஆசீர்வாதங்களாக இருந்தன. தங்களால் சமரசம் செய்துகொள்ள இயலாது என அறிவித்து, கிறிஸ்தவர்களில் சிலர் உறுதியாக நின்றனர். வேறு சிலர் கிறிஸ்தவ மார்க்கத்தின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டவர்களுடன் ஐக்கியப்படுவதற்காக, கிறிஸ்தவக் கோட்பாடுகளில் மாறுதல் செய்வதை ஆதரித்தனர். இதனால், அவர்களிலும் முழு மாறுதல் உண்டாகும் என்றனர். கிறிஸ்துவின் உத்தமமான பிள்ளைகளுக்கு அது மிகவும் கொடுமையான காலமாக இருந்தது. கிறிஸ்தவமார்க்கம் என்று சொல்லும் போலியான உடையுடன், சாத்தான் தானாக சபைக்குவந்து, அவர்களது விசுவாசத்தைக் கறைப்படுத்தி, சத்திய வார்த்தையிலிருந்து அவர்களது மனதை திசைதிரும்பும்படியாகச் செயலாற்றினான். (11)GCTam 31.3

    பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள், இறுதியில் தங்களுடைய தரத்தைத் தாழ்த்திக்கொள்ளச் சம்மதிக்கவே, கிறிஸ்தவ மார்க்கத்திற்கும் அஞ்ஞான மார்க்கத்திற்குமிடையில் ஒரு ஒற்றுமை உண்டாக்கப்பட்டது! விக்கிரக ஆராதனைக்காரர்கள்தாங்கள் மனந்திரும்பி விட்டதாகவும், சபையுடன் ஐக்கியப்பட்டுவிட்டதாகவும் அறிவித்தபோதிலும், அவர்கள் தங்களுடைய விக்கிரக ஆராதனைப் பொருட்களை இயேசு, மரியாள், பரிசுத்தவான்கள் ஆகியோரின் உருவங்களாக மாற்றி, அவைகளைத் தொழுது, இன்னமும் அவர்களுடைய விக்கிரக ஆராதனைகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தனர்; இவ்விதமாக, சபைக்குள் புளிப்பை உண்டுபண்ணும் துர்நாற்றமுடைய இந்த உருவ வழிபாடு, அதன் அழிவுக்குரிய வேலையைத் தொடர்ந்து செய்தது. தவறான கோட்பாடுகளும், மூடத்தனமான சமயச் சடங்குகளும், உருவ வழிபாடுமிக்க ஆராதனை முறைமைகளும், அதன் விசுவாசத்திற்கு உள்ளும் வழிபாட்டிலும் சேர்க்கப்பட்டன; கிறிஸ்துவின் பின்னடியார்கள் உருவவழிபாடு செய்பவர்களுடன் இணைந்ததினால், கிறிஸ்தவ மார்க்கம் கறைப்பட்டு, சபை அதன் தூய்மையையும் வல்லமையையும் இழந்தது. அப்படியிருந்தும், இந்த மாய்மாலத்தினால் தவறாக வழிநடத்தப்படாத சிலர் இருந்தனர். அவர்கள் சத்தியத்திற்கு ஆதாரமானவருடன் நேர்மையாக நடந்து, தேவனை மட்டும் வணங்கினர். (12)GCTam 32.1

    நாங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக்கொள ‘ளபவர்களுக்கிடையில், எப்பொழுதும் இரு பிரிவுகள் இருந்து வந்துள்ளன. ஒரு வகுப்பினர் மீட்பரின் வாழ்க்கையை உய்த்தறிந்து, தங்களிடமுள்ள குறைபாடுகளை நீக்கி, கிறிஸ்துவின் சாயலை அடைய வாஞ்சையுடன் முற்படும்போது, இன்னொரு வகுப்பினர், தங்களுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டுகிற தெளிவானதும் நடைமுறையில் உள்ளதுமான சத்தியத்தைப் பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கினார்கள். சபை அதன் மேலான நிலையிலுங்கூட, முற்றிலும் சத்தியமும் தூய்மையும் உண்மையும் உள்ளவர்களால் நிரம்பியிருக்கவில்லை. அறிந்தபோதிலும் வேண்டுமென்றே பாவத்தில் நடப்பவர்களை சபைக்குள் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று நமது மீட்பர் போதித்தார்; அப்படியிருந்தும், அவர் தவறான சுபாவம் உள்ளவர்களை தம்முடன் இணைத்து, தம்முடைய போதனையினாலும், உதாரணமான நடத்தையினாலும், அவர்கள் தங்கள் தவறுகளைக்கண்டு அவைகளைத் திருத்திக்கொள்ளும் நன்மையை அடைந்துகொள்ளக்கூடிய வாய்ப்பினை அனுமதித்தார். பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்குள் ஒரு துரோகி இருந்தான். யூதாசின் சுபாவத்தில் என்ன அடங்கியிருக்கிறது என்பதை அவன் அறிந்துகொள்ளவும், மனந்திரும்பவும், தெய்வீகக் கிருபையினால் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து தனது ஆத்துமாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவும் சீடர்களுடன் இணைக்கப்பட்டான்; ஆனால் அவன்மீது பிரகாசிக்கும்படியாக, தெய்வீகக் கிருபையினால் அருளப்பட்ட வெளிச்சத்தில் யூதாஸ் நடக்கவில்லை; அவனது தீய சுபாவங்கள் மேலாதிக்கமுள்ளவையாக ஆயின. அந்தகார சக்திகளின் கட்டுப்பாட்டிற்கு அவன் தன் மனதை விட்டுக்கொடுத்தான். அவனது குற்றங்களுக்காக அவன் கடிந்துகொள்ளப்பட்டபோது, அவன் கோபமடைந்தான். இவ்வாறாக, தனது ஆண்டவரை காட்டிக்கொடுக்கும் பயங்கரமான குற்றம்செய்ய நடத்தப்பட்டான். இதைப்போலவே, தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொண்டு, தீமையைத் தங்களில் வளர்க்கும் அனைவரும், அவர்களுடைய பாவ நடவடிக்கையைச் சுட்டிக்காட்டுபவர்களை, அவர்களுடைய சமாதானத்திற்கு இடையூறு செய்கிறவர்களாக நினைத்து வெறுக்கின்றனர். இப்படிப்பட்டவர்களுக்குச் சாதகமான ஒரு வாய்ப்புக் கிட்டும்போது, அவர்களுடைய நன்மைக்காக கடிந்துகொள்ளுகிறவர்களை, யூதாசைப்போலவே அவர்களும் வஞ்சிப்பார்கள்.(13)GCTam 32.2

    சபையில் இரகசியமாக அக்கிரமங்களைச் செய்துகொண்டு, தெய்வ பக்தியின் வேஷத்தைத் தரித்திருந்தவர்களை அப்போஸ்தலர்கள் சந்தித்தனர். அனனியாவும் சப்பீராளும் தேவனுக்காகப் பூரணமாகத் தியாகம்செய்வதுபோல் நடித்து, இச்சையுடன் தங்கள் சொத்தின் ஒரு பகுதியை தங்களுக்கென்று வைத்துக்கொண்டு, வஞ்சகர் செய்யும் செயலைச் செய்தனர். இந்தப் போலியானவர்களின் சுபாவத்தை சத்திய ஆவியானவர் அப்போஸ்தலர்களுக்கு வெளிப்படுத்தி, சபையின் தூய்மைக்கு எதிராக நடத்தப்பட்ட தீய திட்டத்தை நீக்கினார். சபையில் எல்லாவற்றையும் அறியும் கிறிஸ்துவின் ஆவி இருக்கிறது என்பதற்கு, சாட்சியாக இருந்த இந்த அடையாளம், மாயக்காரர்களுக்கும், துன்மார்க்கர்களுக்கும் பயங்கரமாக இருந்தது, பழக்கத்தாலும், சுபாவத்தாலும் தொடர்ந்து கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருந்தவர்களுடன், அவர்களால் அதிகக் காலம் இணைந்திருக்க முடியவில்லை. அவரது பின்னடியார்களின்மீது சோதனைகளும் உபத்திரவங்களும் வந்தபோது, சத்தியத்திற்காக எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராக இருந்தவர்கள்மட்டுமே அவருடைய சீடர்களாவதற்கு விரும்பினர். இவ்வாறு உபத்திரவம் தொடர்ந்துகொண்டு இருந்தவரைக்கும், ஒப்பிட்டுப்பார்க்குமளவிற்கு சபை தூய்மையாக இருந்தது. ஆனால் உபத்திரவம் நின்றபோது, உண்மையற்றவர்களும் பக்தியற்றவர்களுமாயிருந்து மதம் மாறினவர்கள் சபைக்குள் சேர்க்கப்பட்டபோது, சாத்தானுக்கு சபைக்குள் காலூன்றும்படியான வழி திறக்கப்பட்டது. (14)GCTam 33.1

    ஆனால் ஒளியின் பிரபுவிற்கும் அந்தகார பிரபுவிற்குமிடையில் ஒற்றுமை கிடையாது; அவர்களது பின்னடியார்களுக்கிடையிலும் ஒற்றுமை நிலவ முடியாது. அஞ்ஞான மார்க்கத்திலிருந்து, அரைகுறையாக மதம்மாறினவர் களுடன் ஒருமைப்படுவதற்குக் கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொண்டபோது, சத்தியத்திலிருந்து வெகுதூரம் விலகிச்செல்லக்கூடிய ஒரு பாதையில் அவர்கள் நுழைந்தனர். மிக அதிகமான எண்ணிக்கைக்குட்பட்ட கிறிஸ்துவின் பின்னடியார்களை வஞ்சிப்பதில் வெற்றி அடைந்ததை எண்ணி, சாத்தான் வெற்றிச் சிரிப்பு சிரித்தான்! அதற்குப்பின், இப்படிப்பட்டவர்களுக்கு அவன் அவனுடைய மிக அதிகமான வல்லமையைக் கொடுத்து, தேவனுக்கு உண்மையாக இருப்பவர்களை உபத்திரவப்படுத்தும்படி அவர்களை ஏவினான். மெய்க் கிறிஸ்தவ விசுவாசத்தை நன்றாக எதிர்ப்பது எப்படி என்பதை ஒரு சமயம் கிறிஸ்தவ மார்க்கத்தின் பாதுகாவலர்களாக இருந்தவர்களைப்போல, வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. இப்படி மருள விழுந்த கிறிஸ்தவர்கள், அவர்களுடைய அரைகுறையான அஞ்ஞான நண்பர்களுடன் ஒருமித்து, கிறிஸ்தவ மார்க்கத்தின் மிக முக்கியமான கோட்பாடுகளுக்கெதிராக யுத்தஞ்செய்தார்கள். (15)GCTam 34.1

    வஞ்சகங்களையும் அருவருப்புக்களையும் ஆசாரிய உடைக்குள் மறைத்து, அவைகளை சபைக்குள் கொண்டுவருபவர்களுக்கெதிராக, உறுதியாக நிற்பதற்கான விசுவாசமுடையவர்களாக இருப்பதற்கு, ஆபத்தைப் பொருட்படுத்தாத போராட்டம் செய்வது அவசியமாக இருந்தது. விசுவாசத்தின் தரத்தை நிர்ணயிக்கும் கருவியாக வேதாகமம் அங்கீகரிக்கப்படவில்லை. சமயச் சுதந்திரம் என்னும் கோட்பாடு மதபேதம் என்று சொல்லப்பட்டு, அதை உயர்த்தியவர்கள் வெறுக்கப்பட்டுத் தடைசெய்யப்பட்டனர். (16)GCTam 34.2

    மருளவிழுந்துபோன சபை தன் தவறுகளிலிருந்தும், உருவ வழிபாட்டிலிருந்தும் விடுதலைபெற மேலும் மறுத்தால், அதனுடனுள்ள ஐக்கியத்திலிருந்து பிரிந்துவிடவேண்டும் என்று சில விசுவாசமிக்கவர்கள் நீண்டகாலமாகவும் கடுமையாகவும் நடந்த போராட்டத்திற்குப்பின்னர் முடிவுக்குவந்தனர். தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவேண்டுமானால், பிரிவினை மிக அத்தியாவசியமானது என்பதை அவர்கள் கண்டனர். தங்களுடைய ஆத்துமாக்களுக்கு மரணத்தை விளைவிக்கக்கூடிய தவறுகளை அங்கீகரித்து, அதனால் தங்களுடைய பிள்ளைகளின் விசுவாசத்திற்கும் பிள்ளைகளின் பிள்ளைகளுடைய விசுவாசத்திற்கும் ஆபத்தை உண்டுபண்ணுகிற உதாரணமானவர்களாக இருக்க அவர்கள் துணியவில்லை. சமாதானத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்ட, விசுவாசத்திற்கு இசைவான எல்லா தியாகங்களையும்செய்ய அவர்கள் ஆயத்தமாக இருந்தனர்; ஆனால் கொள்கைகளைத் தியாகம்செய்து, சமாதானத்தை வாங்குவதற்கு, சமாதானம் அவ்வளவு அருமையானதல்ல என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். சத்தியத்தையும் நீதியையும் விட்டுக்கொடுக்கும் சமரசத்தினால்தான் ஒற்றுமையை வாங்கமுடியும் என்றால், அதைவிட வேற்றுமையும் யுத்தங்களும் உண்டாகட்டுமே என்று எண்ணினர். (17)GCTam 34.3

    உறுதியாக நிலைத்து நிற்கும்படி அந்த ஆத்துமாக்களைச் செயல்படச்செய்த கொள்கைப்பற்று, சபைகளிலும் உலகத்திலும் மீண்டுமாக எழுப்பப்பட்டால் நன்றாக இருக்கும். கிறிஸ்தவ விசுவாசத்தின் தூண்களாயிருக்கும் கோட்பாடுகளுக்கு மாறான வேற்றுமையான கருத்துக்கள் அபாயகரமான அளவிற்கு உள்ளது. இவைகளெல்லாம் அந்த அளவிற்கு முக்கியமானவைகளல்ல என்னும் கருத்து அதிகரித்துவருகிறது. கடந்தகாலத்தில் விசுவாசமிக்கவர்களாக இருந்தவர்கள், எந்தத் தவறான கோட்பாடுகளையும் மரணத்தை உண்டுபண்ணும் மாயங்களையும் தடுக்கும்படி தங்கள் ஜீவனைக் கொடுத்தார்களோ, அவைகள் இப்போது தங்களைக் கிறிஸ்துவின் பின்னடியார்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஆயிரக்கணக்கான மக்களால் ஆதரிக்கப்பட்டு, சாத்தானின் ஏவலாளிகளின் கரங்களைப் பலப்படுத்துகிறது. (18)GCTam 35.1

    ஆரம்பகாலக் கிறிஸ்தவர்கள் மிகவும் சிறப்பிற்குரியவர்களாய் இருந்தனர். அவர்களது குற்றமற்ற நடத்தையும், அசையாத விசுவாசமும் பாவியின் சமாதானத்திற்கு இடையூறுசெய்யும் கண்டனமாக இருந்தது. அவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக-செல்வமற்றவர்களாக- பதவி அற்றவர்களாக-மேன்மையான பட்டங்களில்லாதவர்களாக இருந்த போதிலும், அவர்களது சுபாவமும் கோட்பாடுகளும் அறியப்பட்ட இடங்களி லெல்லாம், துன்மார்க்கர்களுக்கு ஒரு திகிலாக இருந்தனர்; எனவே, தெய்வ பக்தியற்ற காயீனால் ஆபேல் வெறுக்கப்பட்டதுபோல, இவர்களும் துன்மார்க்கரால் வெறுக்கப்பட்டனர். பரிசுத்த ஆவியினாலான கட்டுப்பாட்டை மீறிய காரணத்தினால், காயீன் ஆபேலுக்குச் செய்தது போல், இவர்களும் அதே காரணத்திற்காக, அதேபோல, தேவனுடைய ஜனங்களைக் கொலை செய்வார்கள்; இதே காரணத்தினால்தான் யூதர்கள் மீட்பரை நிராகரித்து, அவரைச் சிலுவையில் அறைந்தனர்; ஏனெனில், அவரது சுபாவத்திலிருந்த தூய்மையும் பரிசுத்தமும் யூதர்களுடைய சுயநலத்திற்கும் ஊழலுக்கும் எதிரான தொடர்ச்சியான கடிந்துகொள்ளுதலாயிருந்தது. கிறிஸ்துவின் காலத்தில் இருந்து இன்றுவரை, அவருக்கு விசுவாசமான சீடர்கள், பாவத்தை விரும்பி, அதன் பாதையில் நடப்பவர்களின் வெறுப்பையும் எதிர்ப்பையும் எதிர்கொள்கின்றனர். (19)GCTam 35.2

    அப்படியானால், சுவிசேஷம் சமாதானத்தின் ஒரு தூது என்று எப்படி அழைக்கப்படுகிறது? மேசியாவின் பிறப்பை ஏசாயா முன்னறிவித்தபோது, அவரது பெயரை சமாதானப்பிரபு என்று அறிவித்தான். கிறிஸ்து பிறந்திருக்கிறார் என்பதை தேவதூதர்கள் மேய்ப்பர்களுக்கு அறிவித்தபோது, அவர்கள் பெத்லெகேமின் வெளியில் உயரநின்று “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று பாடினார்கள். “பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்” (மத்தேயு 10:34) என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கும் தீர்க்கதரிசன அறிவிப்புகளுக்குமிடையில் முரண்பாடு இருப்பதுபோல் காணப்படுகிறது; ஆனால் சரியான விதத்தில் அறிந்துகொண்டால், அவை இரண்டும் முழுமையான இசைவுள்ளவைகளாக இருப்பது தெரியும். சுவிசேஷம் என்பது ஒரு சமாதானத்தின் தூது. பெற்றுக் கீழ்ப்படிந்தால், சமாதானத்தையும் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் உலகெங்கும் பரப்பும் ஒரு மார்க்கமாக கிறிஸ்தவம் இருக்கும். கிறிஸ்தவத்தின் போதனைகளை ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் நெருக்கமான சகோதரத்துவம் என்னும் ஒருமைப்பாட்டிற்குள் அது கொண்டுவரும். அது தேவனை மனிதனுடனும், மனிதர்களை ஒருவருக்கொருவருடனும், ஐக்கியப்படுத்துவதாகவும் இருக் கிறது; ஆனால் உலகமோ பெரிய அளவில் கிறிஸ்துவின் மிகக் கசப்பான எதிரியான சாத்தானின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. சுவிசேஷம் அவர்களது பழக்கவழக்கங்களுக்கும் விருப்பங்களுக்கும் மாறுபட்டதாயிருந்து, அவர்கள் முன் நித்திய ஜீவனுக்கான கொள்கைகளை வைக்கும்போது, அவர்கள் அதற்கு எதிராக எழுந்து கலகம் செய்கிறார்கள். அவர்களது பாவங்களை வெளிப்படுத்தி, தவறுகளைக்காட்டும் அதன் தூய்மையை அவர்கள் வெறுத்து, அதின் நீதியும் பரிசுத்தமும் அவர்கள்மீது பாராட்டும் உரிமையைக் குறித்து அவர்களுக்குச் சொல்லுபவர்களையும் உபத்திரவப்படுத்தி, அழிக்கின்றனர். இப்படியாக அது கொண்டுவரும் உயர்ந்த சத்தியங்களினால், வெறுப்பையும் சண்டையையும் உண்டுபண்ணுகிற சந்தர்ப்பத்தை உண்டாக்குகிறது; எனவேதான் சுவிசேஷம் ஒரு பட்டயமாகச் சொல்லப்படுகிறது. (20)GCTam 36.1

    துன்மார்க்கரின் கரத்தில் நீதிமான் உபத்திரவங்களை அனுபவிக்க அனுமதிக்கும் தேவ இரகசியமான தெய்வீகப் பாதுகாப்பு, விசுவாசத்தில் பலவீனராயுள்ள அநேகரின் பெரும் குழப்பத்திற்குக் காரணமாக உள்ளது. மிகவும் கீழ்த்தரமானவர்கள் முன்னேறவும், மிகவும் தூய்மையானவர்கள் கீழ்த்தரமானவர்களின் கொடுமையான வல்லமையினால் வேதனைப்படவும் தேவன் அனுமதிப்பதினால், சிலர் தேவன்மீதுள்ள தங்களின் நம்பிக்கையை விட்டுவிடவும் ஆயத்தமாக உள்ளனர். நீதியும் இரக்கமுமுள்ள ஒருவராக, எல்லையில்லா வல்லமை உள்ளவராக அவர் இருக்கும்போது, இப்படிப்பட்ட அநீதியையும் ஒடுக்குதலையும் அவர் சகித்துக்கொள்ளுவது எப்படி? என்று கேட்கப்படுகிறது. நம்மால் ஒன்றும் செய்யவியலாத ஒரு கேள்வியாக இது உள்ளது. தேவனுடைய தெய்வீகப் பாதுகாப்பு எவ்விதமாகச் செயல்படுகிறது என்பது நமக்குப் புரியாததாக உள்ளதால், அவரது நல்ல தன்மைகளைப்பற்றி நாம் சந்தேகிக்கக்கூடாது. தேவன் அவரது அன்பைப்பற்றி நமக்குப் போதுமான சாட்சியங்களை வைத்திருக்கிறார். “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்;” (யோவான் 15:20) என்று, சோதனைகளும் இருளும் உள்ள நாட்களில் சந்தேகம் அவர்களது ஆத்துமாக்களை அழுத்த இருப்பதை முன்னறிந்து, மீட்பர் அவரது சீடர்களுக்குச் சொன்னார். தீய மனிதர்களின் கொடூரத்தினால், பாடுகளை அனுபவிக்கும் இயேசுவின் பின்னடியார்களைவிட அதிகமான பாடுகளை இயேசு நமக்காக அனுபவித்தார். சித்திரவதையையும், இரத்த சாட்சியான மரணத்தையும் அனுபவிக்கும்படி அழைக்கப்பட்டவர்கள், நேசகுமாரனின் அடிச்சுவடுகளைத்தான் பின்பற்றுகின்றனர். (21)GCTam 36.2

    “கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயி(ல்லை) ராமல்” (2பேதுரு 3:9). அவர் அவருடைய பிள்ளைகளை மறக்கவோ அலட்சியப்படுத்தவோ இல்லை; மாறாக, அவருடைய சித்தத்தின்படி செய்யவிரும்பும் ஒருவரும் துன்மார்க்கரால் வஞ்சிக்கப்படாமலிருக்கும்படி, துன்மார்க்கர் அவர்களுடைய சுபாவத்தை வெளிக்காட்ட அனுமதிக்கிறார். அப்படியே சுத்திகரிக்கப்படும்படி, நீதிமான்களை பாடுகள் என்னும் சூளையிலிட்டு, விசுவாசத்தையும் தெய்வபக்தியின் நிஜத்தையும் மற்றவர்கள் காணச்செய்கிறார். அத்துடன் அவர்களுடைய நடக்கையின் மூலம் தேவபக்தி இல்லாதவர்களைக் கண்டனம் செய்யவும் அனுமதிக்கிறார். (22)GCTam 37.1

    அவருடைய ஜனங்களை ஒடுக்கின அனைவருக்கும், அவர்களது செயல்களுக்குத்தக்கதாகப் பதில்செய்யும்படி, தேவனுடைய பழிவாங்கும் நாள் விரைந்து வருகிறது. தேவனுக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட ஒவ்வொரு கொடுமையான செயலும், கிறிஸ்துவிற்கே செய்யப்பட்டதாகக் கருதப்பட்டு, அப்படிச் செய்தவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படும்.(23)GCTam 37.2

    இக்காலத்திலுள்ள சபைகளின் கவனத்தை ஈர்க்கவேண்டிய வேறொரு முக்கிமான கேள்வி உள்ளது. “அன்றியும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” (2 தீமோத்தேயு 3:12) என பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார்; அப்படி யானால், உபத்திரவம் பெருமளவிற்கு உறங்கிக்கொண்டிருப்பதேன்? சபை உலகத்தின் தரத்துடன் இசைந்து விட்டதினால், அது எதிர்ப்பை எழுப்பவில்லை! இப்பொழுதுள்ள மதம், கிறிஸ்துவும் அவரது அப்போஸ் தலர்களுமிருந்த நாட்களில் இருந்தது போல், தூய்மையும் பரிசுத்தமுமான கிறிஸ்தவ விசுவாசமும் உடையதாக இல்லை. பாவத்துடன் சமரசம்செய்யும் ஆவியினால் வேத வசனத்திலுள்ள பெரும் சத்தியங்கள் கவனமற்ற வகையில் கருதப்பட்டதினால், சபையில் உயிராற்றல்மிக்க மிகவும் குறைவாக இருப்பதினால், கிறிஸ்தவமார்க்கம் வெளிப்படையாக உலகத்துடன் பெரும்பான்மையாய் இசைந்திருப்பதினால், உபத்திரவம் எழவில்லை. ஆரம்பகால சபையிலிருந்த விசுவாசமும் வல்லமையும் எழுப்புதல் அடையட்டும்—அப்போதுதான் உபத்திரவத்தின் ஆவி எழுப்புதல் அடைந்து, உபத்திரவம் என்னும் நெருப்பும் மீண்டும் எரியத்தொடங்கும்! (24)GCTam 37.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents