Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாபெரும் ஆன்மீகப் போராட்டம்! - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First

  22—நிறைவேறின தீர்க்கதரிசனங்கள்!

  (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 391-408)

  மு தல்முறையாக கர்த்தரின் வருகையை எதிர்பார்த்திருந்த காலம்-கி.பி.1844-ம் ஆண்டின் வசந்தகாலம் கடந்து சென்றபோது, விசுவாசத்தோடு அவரது வருகையை எதிர்பார்த்து இருந்தவர்கள், சிறிது காலம் சந்தேகத்தோடும் நிச்சயமில்லாமலும் இருந்தனர். உலகம் அவர்களை முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டவர்கள் என்றும், அவர்கள் மாயையைப் போற்றியிருந்தது மெய்ப்பிக்கப்பட்டது என்றும் கருதினபோது, தேவனுடைய வார்த்தை மட்டுமே அவர்களது ஆறுதலின் ஆதாரமாக இருந்தது. மேற்கொண்டு அதிகமான வெளிச்சத்தைப் பெற, தங்களது விசுவாசத்திற்கான சான்றுகளை மீண்டும் தேடியும், தீர்க்கதரிசனங்களை கவனமாக ஆராய்ந்தும் வேதவாக்கியங்களை தொடர்ந்து படித்தனர். அவர்களது நிலைக்கு ஆதரவான வேதாகம சாட்சி தெளிவானதாகவும், முடிவானதாகவும் காணப்பட்டது. தவறாகக் கருதமுடியாத அடையாளங்கள் கிறிஸ்துவின் வருகை சமீபமாக இருக்கிறது என்றுச் சுட்டிக்காட்டின. கிறிஸ்தவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியிலும் பாவிகளின் மனந்திரும்புதலிலும் இருந்த ஆண்டவரின் விசேஷமான ஆசீர்வாதம், அந்தத் தூது பரலோகத்தினுடையது என்று சாட்சி பகர்ந்தது. விசுவாசிகளால் அவர்களது ஏமாற்றத்திற்கான காரணத்தை விளக்க முடியாமலிருந்தாலும் அவர்களது கடந்தகால அனுபவத்தில் தேவன் அவர்களை நடத்தியிருந்தார் என்று நிச்சயமாக உணர்ந்தனர். (1)GCTam 453.1

  இரண்டாம் வருகையின் காலத்திற்குப் பொருந்துவதாக அவர்கள் கருதியிருந்த தீர்க்கதரிசனங்கள், அவர்களது நிச்சயமற்ற நிலையிலும், சந்தேகத்திலும், இப்பொழுது புரிந்துகொள்ளுதலுக்கு இருளாக இருக்கிறவைகள் சரியான நேரத்தில் தெளிவாக்கப்படும் என்ற விசுவாசத்தில் பொறுமையுடன் காத்திருக்கும்படி அவர்களைத் தைரியப்படுத்தும் போதனைகளோடு இணைந்திருந்தன. அவை அனைத்தும் வருகையின் காலத்திற்குப் பொருந்தியிருந்த தீர்க்கதரிசனங்களின் ஊடாக நெய்யப்பட்டிருந்தன. (2)GCTam 453.2

  இந்தத் தீர்க்கதரிசனங்களுக்கிடையில், “நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப் பார்ப்பேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை. குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” (ஆபகூக் 2:1-4) என்ற தீர்க்கதரிசனமும் இருந்தது. (3)GCTam 454.1

  “நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை” என்று இந்தத் தீர்க்கதரிசனத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற ஆலோசனை, தானியேல், வெளிப்படுத்தின விசேஷம் ஆகியவைகளில் உள்ள தீர்க்கதரிசனங்களை விளக்கிட தீர்க்கதரிசன விளக்கப்படத்தை ஆயத்தம்செய்ய, சார்லஸ் பிட்ச் ஐ 1842-ம் ஆண்டின் துவக்கத்திலேயே உணர்த்தியது. இந்த விளக்கப்படத்தின் வெளியிடு, ஆபகூக் கொடுத்திருந்த கட்டளையின் நிறைவேறுதல் என்று கருதப்பட்டது. அதன் நிறைவேறுதலில் வெளிப்படையாகக் காணப்பட்ட தாமதத்தை ஒரு காத்திருக்கும் காலத்தை அதே தீர்க்கதரிசனத்தில் இருந்த அதை ஒருவரும் கவனிக்கவில்லை. ஏமாற்றம் நிகழ்ந்தபின், “குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்ற வேதவாக்கியம் மிக முக்கியமானதாகத் தோன்றியது. (4)GCTam 454.2

  “பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லா அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன? ஆகையால் நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் சமீபித்து வந்தன என்று அவர்களோடே சொல்லு.... நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது;” “மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள். ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்” (எசே. 12:21—25,27,28) என்கிற எசேக்கியேல் தீர்க்கதரிசியின் ஒரு பகுதியும் விசுவாசிகளை பலப்படுத்தி ஆறுதல்படுத்தின ஆதாரமாகவிருந்தது. (5)GCTam 454.3

  ஆரம்பத்திலேயே முடிவைப்பார்க்கிறவர், யுகங்கள் நெடுகிலும் நடைபெற உள்ளவைகளைப் பார்த்து, அவர்களது ஏமாற்றத்தையும் முன்கண்டு, தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கக்கூடிய வார்த்தைகளை கொடுத்திருந்தார் என்று நம்பி காத்திருந்தவர்கள் மகிழ்ந்தனர். பொறுமையுடன் காத்திருக்கவும், தேவனுடைய வார்த்தையில் தங்களது நம்பிக்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கவும் அறிவுரை கொடுக்கின்ற வேதாகமப்பகுதிகள் இருந்திருக்காவிட்டால், அந்தச் சோதனையான மணி நேரத்தில் அவர்களது விசுவாசம் தோல்வி அடைந்திருக்கும். (6)GCTam 455.1

  அட்வெந்து மக்களின் அனுபவத்தை, மத்தேயு 25-ம் அதிகாரத்திலுள்ள பத்துக் கன்னிகைகளின் உவமையுங்கூட விளக்குகிறது. மத்தேயு 24-ம் அதிகாரத்தில்,அவரதுவருகைக்கும் உலகமுடிவிற்குமான அடையாளம் பற்றிய சீஷர்களின் கேள்விக்கான அவரது பதிலில், எருசலேமின்அழிவு, அஞ்ஞானப் போப்புமார்க்கங்களினால் சபைக்கு உண்டாகும் பெரும் உபத்திரவங்கள், சூரியனும் சந்திரனும் இருளடைவது, நட்சத்திரங்களின் விழுகை போன்ற அவரது முதலாம் வருகையிலிருந்து இரண்டாம்வருகை வரை நடக்கவுள்ள உலக வரலாற்றிலும், சபையின் வரலாற்றிலும் மிகமுக்கியமாக இருந்த சில சம்பவங்களைக் கிறிஸ்து சுட்டிக்காட்டினார். அதற்குப்பின், அவரது ராஜ்யத்தில் அவர் வருவதைக்குறித்துப் பேசி, அவர் தோன்றுவதை எதிர்பார்த்திருந்த இரண்டு வகையான வேலைக்காரர்களைப் பற்றிய உவமையோடு தொடர்புபடுத்தினார். மத்தேயு 25-ம் அதிகாரம், “அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்” என்ற வார்த்தைகளில் துவங்குகிறது. மத்தேயு 24- அதிகாரத்தின் முடிவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததைப் போலவே, கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் சபை, கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. கிழக்கத்திய நாட்டுத் திருமணத்தின் வாயிலாக இந்த உவமையில் அவர்களது அனுபவங்கள் விளக்கப்பட்டுள்ளது. (7)GCTam 455.2

  “அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.” (8)GCTam 456.1

  மணவாளன் வருகிறார் என்பது, முதலாம் தூதனால் அறிவிக்கப்பட்ட கிறிஸ்துவின் வருகையைக் குறித்தது புரிந்துகொள்ளப் பட்டது. அவரது அதிவிரைவான வருகையின் அறிவிப்பின்கீழ் நிகழ்ந்த பரவலான சீர்திருத்தம், கன்னிகைகள் புறப்பட்டுச்சென்றனர் என்பதன் மறுமொழியாக இருந்தது. மத்தேயு 24-ம் அதிகாரத்தில் உள்ளதைப்போலவே, இந்த உவமையிலும், இரு வகுப்பினர் எடுத்துக்காட்டப்படுகின்றனர். அனைவரும் வேதாகமமான தீவட்டிகளை எடுத்துக்கொண்டு, அதன்வெளிச்சத்தில்மணவாளனைச்சந்திக்கப் புறப்பட்டுச் சென்றனர். ஆனால், புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை மாத்திரம் எடுத்துக்கொண்டு எண்ணெயை கொண்டுபோகாதபோது, புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூட தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். பின்சொல்லப்பட்ட வகுப்பினர், தேவனுடைய கிருபையை, புதுப்பித்து ஒளிரச்செய்யும் அவருடைய வசனத்தை, கால்களுக்குத் தீபமாகவும் பாதைக்கு வெளிச்சமாகவும் ஆக்குகிற ஆவியின் வல்லமையை பெற்றிருந்தனர். தேவனின்மீதுள்ள பயத்தினால், சத்தியத்தை அறிவதற்காக வேதவாக்கியங்களை ஆராய்ந்து, இருதயத்திலும் வாழ்க்கையிலும் தூய்மையடைய மிகுந்த அக்கரையுடன் வகைதேடினார்கள். தனிப்பட்ட அனுபவம் உள்ளவர்களாக, ஏமாற்றத்தாலும் தாமதத்தாலும் வீழ்த்தப்பட முடியாத விசுவாசத்தை, தேவனிலும் அவரது வார்த்தையிலும் வைத்திருந்தனர். “தீவட்டிகளை எடுத்துக்கொண்டு போனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை” இவர்கள் உணர்ச்சிகளினால் உந்தப்பட்டவர்களாக இருந்தனர். பக்திவிநயமான தூதினால், அவர்கள் பயம் தூண்டப்பட்டிருந்தது. இருந்தபோதும், அவர்களுடைய சகோதரரின் விசுவாசத்தைச் சார்ந்திருந்து, ஒளிர்கின்ற நல்ல உணர்வுகளினால் திருப்தி அடைந்தவர்களாக, சத்தியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமலும், இருதயத்தில் மெய்யான கிருபையின் செயல் இல்லாமலும் இவர்கள் இருந்தனர். உடனடியாகப் பலன் கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் அவர்கள் கர்த்தரைச் சந்திக்கச் சென்றனர். ஆனால் தாமதத்தையும் ஏமாற்றத்தையும் சந்திக்க ஆயத்தமாக இல்லை. சோதனை வந்தபோது அவர்களது விசுவாசம் தோற்று, அவர்களது தீவட்டிகள் மங்கியெரிந்தன. (9)GCTam 456.2

  “மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.” மணவாளனுடைய வருகை யின் தாமதத்தினால் கர்த்தரின் வருகையை எதிர்பார்த்திருந்தபோது கடந்து சென்ற காலமும், உண்டான ஏமாற்றமும், தாமதமும் குறித்துக் காட்டப்பட்டிருந்தது. நிச்சமற்றதாக இருந்த இந்த நேரத்தில், மேலோட்ட மான அரைமனமுள்ளவர்களின் ஆர்வம் குறையவும், முயற்ச்சி தளரவும் தொடங்கியது. ஆனால் எவர்களது விசுவாசம் வேதாகமத்தின் மீதான நேரடியான அறிவின் அடிப்படையில் இருந்ததோ, அவர்கள் தங்களுடைய பாதங்களின் கீழ், ஏமாற்றம் என்னும் அலைகளினால் அடித்துச்செல்லப்பட முடியாத கன்மலையைக் கொண்டிருந்தனர். “அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.” ஒரு வகுப்பினர் அக்கரை யற்று தங்களுடைய விசுவாசத்தைக் கைவிட்டவர்களாகவும், அடுத்த வகுப்பினர் தெளிவான வெளிச்சம் கிடைக்கும்வரை பொறுமையுடன் காத்துக்கொண்டிருந்தவர்களாகவும் இருந்தனர். சோதனையின் அந்த இரவில் பின்சொல்லப்பட்ட வகுப்பினர், அவர்களது ஈடுபாட்டையும் வைராக்கியத்தையும் (ஓரளவு) இழந்துவிட்டவர்கள்போல் காணப்பட்டனர். அரைமனமுள்ள மேலோட்டமானவர்களாக இருந்தவர்கள், அதற்குமேல் அவர்களது சகோதரர்களின் விசுவாசத்தைச் சார்ந்து நிற்கமுடியவில்லை. ஒவ்வொருவரும் தனக்காகவே நிற்க வேண்டும் அல்லது தனக்காகவே விழவேண்டும். (10)GCTam 457.1

  இந்த நேரத்தில் மதவாதம் தோன்றத் தொடங்கியது. இந்தத் தூதில் வைராக்கியமான நம்பிக்கை உடையவர்கள் என்று கூறிக்கொண்டிருந்த சிலர், தவறாத வழிகாட்டி தேவனுடைய வசனம் மட்டுமே என்பதை நிராகரித்து, தேவ ஆவியானவரால் நடத்தப்படுவதாக உரிமைபாராட்டிக்கொண்டு, தங்களது சுய உணர்வுகள் உணர்த்துதல்கள் கற்பனைகளின் கட்டுப்பாட்டிற்குத் தங்களை விட்டுக்கொடுத்தனர். சிலர் குருட்டுத்தனமாக பக்தியினால் தங்களுடைய வழியை ஏற்றுக்கொள்ளாதவர்களை கண்டனம் செய்தனர். அவர்களது மதவாக போதனைகளும் செயல்களும் பெரிய அட்வெந்து கூட்டத்தினரின் அனுதாபத்தைப் பெறவில்லை. அப்படியிருந்தும் சத்தியத்தின் வேலைக்கு நிந்தையை வரவழைக்க அவர்கள் பணியாற்றினர். (11)GCTam 457.2

  இந்த உபாத்தியின் மூலமாக தேவனுடைய பணியை எதிர்க்கவும் அழிக்கவும் சாத்தான் வகைதேடிக்கொண்டிருந்தான். அட்வெந்து இயக்கத்தினால், மக்கள் பெருமளவிற்குக் தூண்டப்பட்டிருந்தனர். ஆயிரக்கணக்கான பாவிகள் மனமாற்றம் அடைந்தனர். விசுவாசமிக்க மக்கள் சத்தியத்தை அறிவிக்கும் ஊழியத்தில் காத்திருப்பின் வேளையில்கூட தாங்களாகவே ஈடுபட்டிருந்தனர். துன்மார்க்கப் பிரபு தனக்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களை இழந்துகொண்டிருந்தான். தேவனுடைய காரியத்தின்மீது பழியைக் கொண்டுவருவதற்காக, விசுவாசத்தை அறிக்கைசெய்தவர்களில் சிலரை வஞ்சித்து, அவர்களை அளவிற்கு மீறிச்செல்ல நடத்தினான். அவனது (ஏஜண்டுகள்) எடுபிடிகள் ஒவ்வொரு தவறையும், தோல்வியையும், தகாத செயலையும் பற்றிக்கொண்டு, அவைகளை மிகைப்படுத்தும் ஒளியில் மக்களிடம் காட்டிட தூக்கிப்பிடித்து, அட்வெந்துக்களையும் அவர்களது விசுவாசத்தையும் பழிக்க ஆயத்தமாக நின்றனர். இவ்வாறாக, தனது வல்லமையினால் இருதயம் கட்டுப்படுத்தப்பட்ட எத்தனைபேர்களை இரண்டாம் வருகையை விசுவாசிப்பவர்களின் கூட்டத்தில் சேர்க்கமுடியுமோ, அத்தனை பெரிய ஆதாயத்தை, அக்கூட்டம்தான் விசுவாசிகளின் முழு அமைப்பின் பிரதிநிதிகளென்று அவர்கள்மீது கவனத்தைத் திருப்புவதால் பெற்றுக்கொள்ளுவான். (12)GCTam 458.1

  சாத்தான் சகோதரரைக் குற்றஞ்சாட்டுகிறவனாக இருக்கிறான். கர்த்தருடைய ஜனங்களின் நற்செயல்கள் கவனிக்கப்படாதவைகளாக விடப்பட்டன. அதே சமயத்தில் கர்த்தருடைய ஜனங்களின் தவறுகளையும் குறைபாடுகளையும் கவனித்து, அவைகளை உயர்த்திப்பிடிக்கும்படி அவனுடைய ஆவி மனிதர்களை ஏவுகிறது. ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காக தேவன் பணியாற்றும்நேரத்தில், அவன் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கிறான். தேவபுத்திரர்கள் கர்த்தருடைய சமுகத்தில் கூடிவரும்போது, சாத்தானும் அவர்களுக்கு மத்தியில் வருகிறான். இவர்கள் சத்தியத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொண்டு, விசுவாசிகளுடன் ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்ளுகின்றனர். இவர்கள் மூலமாக அஜாக்கிரதையாக இருக்கக்கூடியவர்களை வஞ்சிக்கக்கூடிய கொள்கைகளை அறிமுகம் செய்ய, அவன் செயலாற்றுகிறான். தேவனுடைய கூட்டத்தில் காணப்படுவதி னாலேயோ, ஆராதனை செய்யும் சபையிலும் கர்த்தரின் பந்தியிலும் காணப்படுவதினாலேயோ ஒருவனும் உண்மையான கிறிஸ்தவன் என்று மெய்ப்பிக்கப்பட முடியாது. பக்திவிநயமான சந்தர்ப்பங்களில் தனது முகவர்களாக (ஏஜெண்டுகளாக) எவர்களைப் பயன்படுத்தமுடியுமோ, அவர்களுடைய வடிவில் சாத்தான் அடிக்கடி அங்கு இருக்கிறான். (13)GCTam 458.2

  பரலோக நகரத்தை நோக்கிய பயணத்தில், தேவனுடைய பிள்ளைகள் முன்னேறும் ஒவ்வொரு அங்குல இடத்திலும் தீமையின் பிரபு போராடுகிறான். சபையின் வரலாறு முழவதிலும், கடுமையான தடைகள் இல்லாமல் எந்தச் சீர்திருத்தமும் செயல்படவில்லை! பவுலின் நாட்களிலும் இவ்விதமாகவே இருந்தது. விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டவர்களாக இருக்கிறோம் என்று பவுலின் காலத்தில் சிலர் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் மதப்புரட்டுகளை சபைக்குள் கொண்டுவந்தனர். அவைகளை ஏற்றுக்கொண்டிருந்தால், காலப்போக்கில் சத்தியத்தின் மீதுள்ள அன்பு நீங்கியிருந்திருக்கும். பவுல் அப்போஸ்தலன் எங்கெல்லாம் சபைகளை எழுப்பினாரோ, அங்கெல்லாம் இப்படிப்பட்டவர்கள் இருந்தனர். தேவன் தங்கள் மூலமாகப் பேசியிருந்தார் என்று கூறும் பல மதவாதிகள் இருந்தனர். அவர்கள் தங்களுடைய சொந்த யோசனைகளையும் கருத்துக்களையும் வேதவாக்கியங்களுக்கும் மேலாக வைத்தனர். இப்படிப்பட்டவர்களால் உண்டான பெரும் குழப்பங்களையும் துன்பத்தையும் லுத்தர் சகித்தார். விசுவாசமும் அனுபவமும் இல்லாத சிலர் இருந்தனர். அவர்கள் சுயநிறைவை உடையவர்களாக இருந்தனர். அவர்கள், தங்களைப் புதிய ஆசிரியர்கள் என்னும் கற்பனையான போர்வையில் மறைத்துக்கொண்டு, சில புதிய காரியங்களைப் பேசவும் கேட்கவும் விருப்பமுள்ளவர்களாக இருந்தனர். எவைகளைக் கட்டுவதற்கென்று தேவன் லுத்தரை ஏற்படுத்தியிருந்தாரோ, அவைகளை அந்த அநேகர் இடித்துக் கீழே விழச்செய்யும் பணியிலே சாத்தானுடன் அவனது முகவர்களாகச் சேர்ந்துகொண்டனர். வெஸ்லியும் மற்றவர்களும் இப்படிப்பட்ட பரிசுத்தமற்றவர்களை அகற்றும் பணியிலே, தங்களுடைய ஊழியத்தின் ஒவ்வொரு அடியிலும் போராடினார்கள். (14)GCTam 459.1

  மதவெறிக்குள் நடத்தியிருந்த செல்வாக்குகளின்மீது வில்லியம் லுத்தரைப் போலவே மில்லர் அனுதாபமற்றவராக இருந்தார். அவர் ஒவ்வொரு ஆவியும் தேவனுடைய வார்த்தையினால் சோதிக்கப்படவேண்டும் என்று அறிவித்தார். இந்த நாட்களில் சிலரின் மனங்களின்மீது பிசாசு பெரும் வல்லமை உடையவனாக இருக்கிறான் என்று மில்லர் கூறினார். அவைகள் எப்படிப்பட்ட ஆவிகள் என்று நம்மால் எப்படி அறியமுடியும்? அவர்களது கனிகளினால் அவர்களை அறிவீர்கள் என்று வேதாகமம் பதில்கூறுகிறது. இந்த உலகத்திற்குள் அநேக ஆவிகள் சென்றுள்ளன. நாம் இந்த ஆவிகளைச் சோதித்து அறிந்தாகவேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கிறோம். நம்மை நிதானபுத்தி உள்ளவர்களாகவும், நீதியாகவும் தெய்வபக்தியுடனும் இப்போதுள்ள உலகத்தில் வாழ அனுமதிக்காத ஆவி கிறிஸ்துவின் ஆவி அல்ல. இந்தக் காட்டுத்தனமான இயக்கங்களில் அதிகமாகச் செயலாற்றக் கூடியவனாக சாத்தான் இருக்கிறான் என்னும் எண்ணத்தை உடையவனாக நான் இருக்கிறேன். முற்றிலுமாகப் பரிசுத்தமடைந்துவிட்டதாகக் கூறிக்கொள்ளும் நம்மில் அநேகர் மனிதர்களின் பாரம்பரியங்களைப் பின்பற்றி, இவ்விதமாக பாவனை செய்யாத சத்தியத்தைப்பற்றிய அறியாமை உள்ளவர்களைப் போலவே வெளிப்படையாக உள்ளனர்.—Bliss, pages 236,237. தவறின் ஆவியானது நம்மைச் சத்தியத்திலிருந்து வேறுபடுத்தி நடத்தும். சத்தியத்தின் ஆவியோ நம்மை சத்தியத்திற்கு உள்ளாகவே நடத்தும். ஒரு மனிதன் தவறில் இருக்கும்போதே அவன் சத்தியத்தை உடையவனாக இருப்பதாக எண்ணலாம் என்று நீங்கள் கூறுகிறீர்களா? அப்படியானால் என்ன? ஆவியும் வசனமும் ஒத்திருக்கின்றன என்று நாம் மறுமொழி கூறுகிறோம். ஒரு மனிதன் தன்னைத் தேவனுடைய வார்த்தையினால் நியாயந்தீர்த்தால், முழு வேதவாக்கியம் மூலமாக பூரணமான இசைவைக் கண்டால், அப்பொழுது அவன் சத்தியத்தை உடையவனாக இருப்பதாக அவனை நம்பவேண்டும். ஆனால் அவன் நடத்தப்படும் ஆவியினால் தேவப்பிரமாணத்திற்கோ அல்லது வேதாகமத்திற்கோ முற்றிலுமாக இசைவில்லாமல் நடத்தப்பட்டால், அவன் சாத்தானின் கண்ணியில் விழுந்துவிடாமல் இருக்கும்படி ஜாக்கிரதையாக நடப்பானாக.—The Advent Herald and Signs of the Times Reporter, vol. 8, No. 23 (Jan. 15,1845). எரியும் கண்களில் இருந்தும், நனைந்த கன்னங்களில் இருந்தும் அடைத்துக்கொண்ட தொண்டையிலிருந்தும் உண்டான வார்த்தைகளில் இருந்து, கிறிஸ்தவ உலகத்தில் காணப்படும் சத்தங்கள் அனைத்தையும்விட, உள்ளான பக்தியின் அதிகமான சாட்சியை நான் பெற்றிருக்கிறேன்.--Bliss, page 282.(15) சீர்திருத்தத்தின் காலத்தில் மதவெறிக்கு எதிராக மிகுந்த வாஞ்சையுடன் பாடுபட்டவர்களுக்கு எதிராக அந்த எதிரிகள் மதவெறியின் தீமைகள் அனைத்தையும் அவர்கள் மீதே குற்றப்படுத்தினர். அட்வெந்து இயக்கத்தின்மீதும் இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தீவிரவாதிகளுடனும் மதவெறியர்களுடனும் அட்வெந்துக்களையும் சேர்த்து, திரித்தும் மிகைப்படுத்தியும் கூறி திருப்தி அடையாதவர்கள், சத்தியத்தின் மிக லேசான சாயலும் இல்லாத பிரதிகூலமான அறிக்கைகளை சுற்றுக்கு விட்டிருந்தனர். இந்த நபர்கள், தவறான எண்ணத்தினாலும் வெறுப்பினாலும் தூண்டப்பட்டுச் செயலாற்றினர். கிறிஸ்து வாசலருகில் வந்திருக்கிறார் என்ற அறிவிப்பு அவர்களது அமைதியைச் சீர்குலைத்தது. அது உண்மையாக இருக்கக்கூடும் என்று அவர்கள் பயந்தனர். இதுவே அட்வெந்துக்களுக்கும் அவர்களது விசுவாசத்திற்கும் எதிராக அவர்கள் நடத்திய போருக்குக் காரணமாக இருந்தது. (16)GCTam 459.2

  மதவெறியர்களும், ஏமாற்றுக்காரர்களும் பவுலின் காலத்திலும் லுத்தரின் காலத்திலும் சபையில் இருந்தனர். அவர்களது ஊழியத்கைக் குற்றப்படுத்திக் கூறுவதற்குப் போதுமான சாக்குப்போக்காக அது இருந்தது. அதைவிட சில மதவெறியினர் அட்வெந்துக்களின் பதவியைப் பெற்றுக்கொள்ளச் செயலாற்றினர் என்பது உண்மையாக இருந்தது. இதன் காரணமாக அந்த இயக்கமே தேவனுடையது அல்ல என்று முடிவுசெய்வதற்கு அது காரணமாகாது. (அறுவடையின் நாள்வரை வயலில் கோதுமையுடன் களைகள் இருக்கத்தான் செய்யும்). மனந்திரும்புதல், சீர்திருத்தம் ஆகியவைகளின் பணியைத் தொடங்கிட, தேவனுடைய மக்கள் மிகுந்த அக்கரையுடன் உறக்கத்திலிருந்து விழித்து எழுவார்களாக! இயேசுவிற்குள் சத்தியம் இருப்பதுபோல, சத்தியத்தை அறிந்துகொள்ள அவர்கள் வேத வாக்கியங்களை ஆராய்வார்களாக. சாத்தான் இன்னும் செயலாக்கமும் விழிப்பும் உடையவனாக இருக்கிறான் என்னும் சான்று (வேதவாக்கியங்களை நன்கு ஆராயாதபோது) கிடைக்காமல் போகும். இதைத் தவிர்ப்பதற்காக, அவர்கள் தங்களை முற்றிலுமாக தேவனுக்கென்று அர்ப்பணம் செய்வார்களாக. சாத்தான் அவனது உதவிக்கு அவனது எல்லைக்குட்பட்டிருக்கும் வீழ்ந்துபோன தூதர்கள் அனைவரையும் அழைத்துக்கொள்ளுவான். முடிந்தவரை அவன் சகலவிதமான வஞ்சகங்களுடனும் தன்னுடைய வல்லமையை வெளிக்காட்டுவான். (17)GCTam 461.1

  மதவாதத்தையும், பிரிவினையையும் இரண்டாம் வருகையின் அறிவிப்பு உண்டுபண்ணவில்லை. கி.பி.1844-ம் ஆண்டின் வசந்த காலத்தில் அட்வெந்துக்கள் அவர்களது உண்மையான நிலைமையைப் பற்றி சந்தேகமும் குழப்பமுமிக்க நிலையில் இருந்தபோது, இவை தோன்றின. முதலாம் தூதனின் தூதின் பிரசங்கமும், நடுஇராத்திரியின் சத்தமும் மதவெறியையும் பிரிவினையையும் பின்னடையச்செய்திட நேரடியாக வகைசெய்தன. பக்திவிநயமான இந்த இயக்கத்தில் பங்கு வகித்தவர்களின் இருதயங்கள் இசைவுள்ளவையாக இருந்தன. அவர்களது இருதயங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளதாகவும் இருந்தன. அவர்களது சகலவிதமான மனித செல்வாக்கிலிருந்தும் உயர்த்தின. சாத்தானின் தாக்குதலுக்கு எதிரான கவசங்களாக அவர்கள் இருந்தனர். என்பது மெய்ப்பிக்கப்பட்டிருந்தது. (18)GCTam 461.2

  “மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது, அந்தச் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.” கி.பி.1844-ம் வருடத்தின் மத்தியில், வசந்தகாலத்தில் 2300 நாட்கள் முடிவடையும் என்பதாக முதலில் எண்ணப்பட்டது. பின்னர் அவை நீடித்திருந்தது காணப்பட்டது. அந்த நேரம் “இதோ, மணவாளன் வருகிறார்” என்ற வேதவாக்கியத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. (19)GCTam 461.3

  எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டும் கட்டளை கி.மு.457-ன் இலையுதிர் காலத்தில் நடப்பிற்கு வந்தது. இந்தக் காலம்தான் 2300 நாட்களின் ஆரம்பமாக இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் இந்த இயக்கம் தொடங்குவதை நடப்பித்தது. அப்படி இல்லாமல், முன்னர் நம்பி இருந்ததுபோல, வருடத்தின் ஆரம்பத்தில் இருக்கவில்லை. கி.மு. 457-ம் இலையுதிர்காலத்திலிருந்து கணக்கிடப்பட்டபோது, 2300 வருடங்கள் 1844—ன் இலையுதிர்காலத்தில் முடிவடைந்திருந்தது. (20)GCTam 462.1

  பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படுதல் என்பதால் குறிப்பிடப்பட்டிருந்த சம்பவம் நடைபெறவேண்டியது காலம், இலையுதிர்காலம் என்பதை பழைய ஏற்பாட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட பொருட்பாடங்கள் சுட்டிக்காட்டி யிருந்தன. கிறிஸ்துவின் முதல் வருகை சம்பந்தப்பட்ட மாதிரிகள் நிறைவேறி யிருந்தவிதத்தை கவனித்தபோது, இது நன்றாகத் தெளிவாகியது. (21)GCTam 462.2

  பஸ்கா ஆட்டுக்குட்டி வெட்டப்பட்ட நிகழ்ச்சியானது கிறிஸ்துவின் மரணத்தின் நிழலாக இருந்தது. “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே” (1கொரி. 5:7) என்று பவுல் கூறுகிறார். பஸ்கா பண்டிகையின்போது, கர்த்தருடைய சமூகத்தில் கதிர்கட்டு அசைவாட்டப்பட்டதானது, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு மாதிரியாக இருந்தது. “முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்” (1கொரி. 15:23) என்று கர்த்தருடைய உயிர்த்தெழுதலையும், அவருடைய மக்கள் அனைவரது உயிர்த்தெழுதலையும்பற்றிக் பவுல் கூறுகிறார். அறுவடைக்கு முன்பாகச் சேகரிக்கப்படும் நீதிமான்களின் அழிவுக்குரிய சரீரம் அவரது மகிமைமிக்க சரீரத்தைப்போல உருவமைக்கப்படுவதற்கு மாதிரியாக, மீட்கப்பட்டவர்கள் தேவனுடைய களஞ்சியத்தில் சேர்க்கப்பட உள்ளனர். இது எதிர்காலத்தில் நடைபெற உள்ள சாவாமையை உடைய உயிர்த்தெழுதலாக இருக்கிறது. இந்த அறுவடையின் முதற்பலனாகக் கிறிஸ்து இருக்கிறார். (22)GCTam 462.3

  இந்த நிழலானவை சம்பவத்தில் மாத்திரமல்ல, காலத்திலும் சரியாக நிறைவேறின. யூதர்களின் முதலாம் மாதத்தின் பத்தாம் நாளில், 15 நூற்றாண்டுகளாக பஸ்கா ஆடு அடிக்கப்பட்ட அதே மாதம் அதே நாள், கிறிஸ்து தமது சீஷர்களுடன் பஸ்காவைப் புசித்தபின், “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று சுட்டிக்காட்டப்பட்ட தமது மரணத்தை நினைவுபடுத்தும் பண்டிகையை ஏற்படுத்தினார். அதே இரவில் சிலுவையில் கொல்லப்படும்படி துன்மார்க்கரால் பிடிக்கப்பட்டார். அசைவாட்டப்படும் காணிக்கையின் நிஜமாக, உயிர்த்தெழும் அனைத்து நீதிமான்களின் மாதிரியாக, “நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” (பிலிப். 3:21) என்பதன் அடையாளமாக, “கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்” (1 கொரி. 15:20) என்றதன்படி, நமது ஆண்டவர் மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார். (23)GCTam 462.4

  அதே விதமாக, அவரது இரண்டாம் வருகையின் மாதிரியாக, ஆராதனை முறைகள் சுட்டிக்காட்டியிருந்தவைகளெல்லாம் அவைககள் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நேரத்தில் நிறைவேறியாகவேண்டும். மோசேயின் அமைப்பின்கீழ், ஆசரிப்புக்கூடாரம் சுத்திகரிக்கப்படுதல் அல்லது பாவநிவாரணநாள் என்பது யூதர்களின் ஏழாம் மாதம், பத்தாம் தேதியில் நிகழ்ந்தது. அன்று பிரதான ஆசாரியன் அனைத்து இஸ்ரவேலருக்காகவும் பாவநிவாரணம் செய்தான். அவ்விதமாக அவர்களது பாவங்களை ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து நீக்கியபின், வெளியில் வந்து மக்களை ஆசீர்வதித்தான். அதைப்போலவே நமது பிரதான ஆசாரியராகிய கிறிஸ்துவும் பாவத்தையும் பாவிகளையும் அழிப்பதன் மூலமாக, பூமியைத் தூய்மைப்படுத்தவும் அவரது மக்களை அழியாமையினால் ஆசீர்வதிக்கவும் தோன்றுவார் என்று நம்பப்பட்டது. பாவநிவாரணப் பெரும்நாளாகிய ஏழாம்மாதம் பத்தாம்தேதி, ஆசரிப்புக்கூடாரம் சுத்திகரிக்கப்படும் காலம், 1844-ம் வருடம் அக்டோபர் மாதம் 22-ம் நாள் நிகழ்ந்தது. அந்த நாள் கர்த்தரின் வருகையின் நாள் என்று கருதப்பட்டிருந்தது. அந்த 2300 நாட்கள் (1844) இலையுதிர் காலத்தில் முடிவடையும் என்பது ஏற்கனவே முன்வைக்கப்பட்ட சான்றுகளுக்கு இசைவாக இருந்து, முடிவானதாகவும் தடுக்கமுடியாததைப் போலவும் காணப்பட்டது. (24)GCTam 463.1

  மத்தேயு 25-ம் அதிகாரத்தில் உள்ள உவமையில், காத்திருந்ததையும் நித்திரை மயக்கமடைந்திருந்ததையும் பின்தொடர்ந்து, மணவாளனின் வருகை இருந்தது. அது தீர்க்கதரிசனங்கள், சாயல்கள் ஆகிய இரண்டிலிருந்தும் இப்பொழுது முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு இசைவாகவும் இருந்தது. அவைகள் அவர்களது சத்தியமுள்ள தன்மையைப் பற்றிய பலத்த உணர்த்துதலைச் சுமந்தன. நடு இராத்திரியின் சத்தம் ஆயிரக்கணக்கான விசுவாசிகளால் பறை சாற்றப்பட்டது. (25)GCTam 463.2

  ஒரு பேரலையைப்போல, அது தேசம் முழுவதையும் அடித்துச் சென்றது. காத்திருந்த தேவனுடைய ஜனங்கள் முழுவதுமாக எழுப்பப்படும்வரை அது நகரத்திலிருந்து நகரத்திற்கும் கிராமங்களில் இருந்து கிராமங்களுக்கும் மூலை முடுக்கிலிருந்து நாட்டுப்புறங்களுக்குமாக எங்கும் சென்றது. அதிகாலைச் சூரிய ஒளியின் முன் பனி மறைவது போன்று, மதவாதம் இந்த அறிவிப்பின் முன்பாக மறைந்தது. விசுவாசிகள் அவர்களது சந்தேகமும் குழப்பமும் நீக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். அதனால் நம்பிக்கையும் தைரியமும் அவர்களது இருதயங்களுக்கு உயிரூட்டின. தேவனுடைய வார்த்தை, ஆவி ஆகியவற்றின் கட்டுப்படுத்தும் செல்வாக்கில்லாத மனித எழுச்சிகள் எங்கு இருந்ததோ, அங்கு அந்த ஊழியம் வரம்பு கடந்தவையாக இல்லாமல் இருந்தன. பண்டைய இஸ்ரவேலர்கள் தாழ்மையான நிலைமையில் இருந்த காலங்களில் கர்த்தரின் ஊழியக்காரர்கள் அவர்களுக்குக் கொடுத்த கடிந்துகொண்ட தூதுகளைப் பின்பற்றினர். அவர்கள் கர்த்தரிடத்திற்குத் திரும்பினர். அந்த ஊழியம் அதே தன்மையை உடையதாக இருந்தது. அது காலங்கள் ஒவ்வொன்றிலுமிருந்த தேவனுடைய செயலின் அடையாளத்தைத் தாங்கி இருந்தது. அது மிக மகிழ்ச்சியாக இராமல், இருதயத்தை ஆழமாக ஆராய்தல், பாவத்தை அறிக்கைசெய்தல், உலகத்தை மறுத்துவிடுதல் ஆகியவை உள்ளதாக இருந்தது. கர்த்தரைச் சந்திக்க ஆயத்தப்படுதல் என்பது வேதனைமிக்க ஆவிகளுக்குப் பாரமாக இருந்தது. முயற்சிமிக்க ஜெபமும், தேவனுக்கென்று பூரணமான அர்ப்பணமும் தேவையாக இருந்தன. (26)GCTam 464.1

  அந்த ஊழியத்தைப்பற்றி மில்லர்: “இப்போது இருக்கவேண்டிய விதத்தில் மகிழ்ச்சியின் பெரும் உணர்த்துதல் இல்லை. பரலோகமும் பூலோகமும் முழுமையாக ஒன்றுபட்டு, சொல்லமுடியாத மகிழ்ச்சியுடனும் நிறைவான மகிமையுடனும் மகிழும் ஒரு எதிர்கால சந்தர்ப்பத்திற்காக அது அடக்கிவைக்கப்பட்டுள்ளது. ஆரவாரம் எதுவும் இல்லை. அதுவும் பரலோகத்திலிருந்து உண்டாகக்கூடிய ஆரவாரத்திற்காக தனித்து வைக்கப்பட்டுள்ளது. பாடகர்கள் மௌனமாக உள்ளனர். பரலோகத்திலிருந்து பாடக்கூடிய தேவதூதர்களின் பாடல் குழுவினருடன் சேர்ந்துகொள்ள அவர்கள் காத்திருக்கின்றனர். நுண்ணுணர்வுகளின் மோதல்கள் இல்லை. அனைவரும் ஒரே இருதயமும் ஒரே மனமும் உடையவர்களாக உள்ளனர்” என்று கூறினார்.--Bliss, pages 270,271. (27)GCTam 464.2

  இந்த இயக்கத்தில் கலந்துகொண்ட வேறொருவர் இவ்விதமாகக் கூறினார். :“அது இருதயத்தை ஆராய்தலையும் ஆத்துமாவில் தாழ்மை யையும் மிக அதிகமாக எங்கும் உருவாக்கியிருந்தது. உலகப் பிரகாரமான பொருள்களின்மீதுள்ள பற்றுகள் தேய்ந்துபோகும்படி அது நடத்தினது. எதிர்வாதங்களும் பகைகளும் குணப்படவும், தவறுகளை அறிக்கைசெய்யவும், தேவனுக்கு முன்பாக அழவும், குற்றத்தை உணர்ந்து மன்னிப்பையும் அங்கீகாரத்தையும் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் அது நடத்தினது. இதுவரை நாம் கண்டிராத விதத்தில் ஆத்துமா தன்னைத்தான் தாழ்த்திப் பணிந்து கிடக்கவும் அது வழிசெய்தது. கர்த்தருடைய பெரிதான நாள் சமீபிக்கும்போது, அது உடையைக் கிழிக்காமல், இருதயத்தைக் கிழிப்பதை உண்டுபண்ணி, உபவாசத்துடனும் அழுகையுடனும் துக்கம் கொண்டாடுதலுடனும் கர்த்தரிடத்திற்குத் திரும்பும்படி யோவேல் தீர்க்கதரிசியினால் கர்த்தரால் கட்டளையிடப்பட்டிருந்ததுபோல் இருந்தது. கிருபையின் ஆவியும் மன்றாட்டின் ஆவியும் அவரது மக்களின் மீது ஊற்றப்பட்டிருந்தது என்ற கர்த்தர் சகரியாவினால் கூறியிருந்தார். எவர்கள் அவரை உருவக்குத்தியிருந்தனரோ, அவரை அவர்கள் நோக்கிப் பார்த்தனர். தேசத்தில் பெரும் துக்கம்கொண்டாடுதல் இருந்தது. கர்த்தருக்காகக் காத்திருந்தவர்கள் அவருக்கு முன்பாகத் தங்களைத் தாழ்த்தினர்.-Bliss,in Advent Shield and Review,vol. I, p. 271 (January, 1845). (28)GCTam 464.3

  அப்போஸ்தல்களின் காலத்திற்குப்பின் பெரும் சமய இயக்கங்கள் உண்டாயின. அவைகளில் மானிடப் பூரணமின்மையும், சாத்தானின் மோசம்போக்கும் தந்திரங்களும் இருந்தன. அவை 1844-ன் இலையுதிர் காலத்தில் நிகழ்ந்த இயக்கத்தில் இருந்ததைவிட, அதிகமாக ஒருபோதும் இருக்கவில்லை. இப்போதுங்கூட அந்த இயக்கத்தில் அநேகர் பங்கு கொண்டனர். அவர்கள் அனைவரும் சத்தியமாகிய மேடையின்மீது உறுதியாக நின்றனர். அவர்கள் அனைவரும் ஆசீர்வாதமிக்க அந்த ஊழியத்தின் பரிசுத்தமான செல்வாக்கின்மீது நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தனர். அது தேவனுடையதாக இருந்தது என்பதற்கான சாட்சியையும் உடையவர்களாக இருந்தனர். (29)GCTam 465.1

  “இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள்” என்ற சத்தத்தில், வேதவாக்கியங்ககளை அறியாதவர்கள் முன்பாக மிகுந்த ஆர்வத்துடன் அதை ஆராய்ந்து காத்திருந்தவர்கள் எழுந்திருந்து தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். அதைரிய மடைந்திருந்தவர்களை எழுப்பவும், அத்தூதைப் பெற்றுக்கொள்ள அவர்களை ஆயத்தப்படுத்தவும், பரலோகத்திலிருந்து தூதர்கள் அனுப்பப்பட்டனர். அந்தப் பணி மனிதர்களின் ஞானத்தினாலும் கல்வி அறிவினாலும் உண்டாக வில்லை. தேவனுடைய வல்லமையினால் உண்டாயிருந்தது. அந்த அழைப்பை முதலாவதாகக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படிந்தவர்கள் அதிக திறமைவாய்ந்தவர்களாக இருக்கவில்லை. அவர்கள் மிகுந்த தாழ்மையும் பக்தியும் உள்ளவர்களாகவும் இருந்தனர். அந்த எச்சரிப்பைக் கொடுப்பதற்கு, விவசாயிகள் கண்ணீருடனும் மகிழ்ச்சியுடனும் அவர்களது விவசாயத்தை விட்டுச்சென்றனர். அதேபோல இயந்திரத்தொழிலாளர்கள் தங்களுடைய கருவிகளைக் கீழே வைத்துவிட்டுச் சென்றனர். இந்தக் காரியத்தில் பலர் முன்நடத்தப்பட்டனர். இந்த இயக்கத்தில் கலந்துகொள்ளுவதில் இவர்கள் கடைசியானவர்களுக்கு இடையில் இருந்தனர். சபைகள் பொதுவாக இந்தத் தூதுக்கு எதிராகத் தங்கள் கதவுகளை மூடிக்கொண்டன. அதைப் பெற்றுக்கொண்ட பெரும் கூட்டத்தினர் அவர்களது தொடர்புகளில் இருந்து பின்வாங்கினர். தேவ ஏற்பாட்டினால், இந்த அறிவிப்பானது இரண்டாம் தூதுடன் இணைந்து, அந்த ஊழியத்திற்கு வல்லமையைக் கொடுத்தது. (30)GCTam 465.2

  வேதவாக்கியச் சான்றுகள் தெளிவானவையாகவும் முடிவானவையாகவும் இருந்தன. அவ்வாறு இருந்தபோதிலும், “இதோ, மணவாளன் வருகிறார்” என்னும் அத்தூது, வாதங்களடங்கிய பெரும் விஷ யமாக இருக்கவில்லை. ஆத்துமாவை முன்தள்ளி அசைத்த வல்லமை அதனுடன் சென்றது. சந்தேகமும், கேள்விகேட்டலும் அதில் இருக்கவில்லை. கிறிஸ்து எருசலேமிற்குள் வெற்றிகரமாக நுழைந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் பண்டிகையை ஆசரிப்பதற்காக, தேசத்தின் சகல பகுதிகளிலிருந்தும் மக்கள் எருசலேமிற்கு வந்து கூடியிருந்தனர். அவர்கள் ஒலிவமலையின் மீது திரளாகக் கூடினர். அவர்கள் இயேசுவிற்குப் பாதுகாப்பாகச் சென்றிருந்த கூட்ட நெரிசலுடன் சேர்ந்து கொண்டனர். அவர்கள் அந்த நேரத்திற்குரிய ஆவியின் தூண்டுதலை அடைந்து, “கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” (மத்தேயு 21:9) என்ற முழக்கத்தால் நிறைக்க உதவினர். இதே விதமாக, அட்வெந்து கூட்டங்களில் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினாலும், சிலர் பரிகசிப்பதற்கென்றும் மட்டுமே கலந்திருந்தனர். நம்பிக்கையற்ற இவர்கள் “இதோ, மணவாளன் வருகிறார்” என்னும் தூதில் அடங்கியுள்ள மன உணர்த்துதலை உண்டுபண்ணும் வல்லமையை உணருகின்றனர். (31)GCTam 466.1

  அந்த நேரத்தில் ஜெபத்திற்கு விடையைக் கொண்டுவந்திருந்த விசுவாசம் இருந்தது. பரிசைப் பரிகாரமாகத் தரும் மதிப்புடைய விசுவாசம் இருந்தது. வறண்ட நிலத்தின்மீது பொழிந்த மழைநீர் போல வாஞ்சையுடன் தேடினவர்களின்மீது, கிருபையின் ஆவி இறங்கியது. தங்களது மீட்பரின் முன் விரைவில் முகமுகமாக நிற்பதை அநேகர் எதிர்பார்த்து இருந்தனர். இவர்களது பக்திவிநயமான மகிழ்சி, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாததாக இருந்தது. பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதம், விசுவாசமும் நம்பிக்கையும் உள்ளவர்களின்மீது அதிகமான அளவில் சொரிந்தது. அப்போது அதன் சாந்தப்படுத்தும் வல்லமையினால் இருதயங்கள் கரைந்தன. (32)GCTam 466.2

  அத்தூதைக் கவனமாகவும் பக்திவிநயத்துடனும் கேட்டவர்கள் தங்களது கர்த்தரைச் சந்திப்போம் என நம்பினர். அவர்கள் அந்த நேரத்திற்குத் தக்கவண்ணம் எழுந்தனர். தேவனால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறோம் என்னும் சான்றினைப் பெறுவதே அவர்களது முதல் கடமை என்பதை அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் உணர்ந்தனர். அவர்களது இருதயங்கள் ஒருமைப் பட்டவையாக இருந்தன. அவர்கள் ஒருவருக்காக ஒருவர் அதிகமாக ஜெபித்தனர். தேவனுடன் தொடர்புகொள்ள அவர்கள் தனிமையான இடங்களில் அடிக்கடிச் சந்தித்தனர். வயல்வெளிகளிலும் தோப்புகளிலும் இருந்து ஆண்டவருடன் பேசும் சத்தம் பரலோகத்தை நோக்கி உயர்ந்தது. இரட்சகர் அவர்களை அங்கிகரித்திருக்கிறார் என்னும் நிச்சயம், அவர்களுக்கு அவர்களுடைய அன்றாட உணவைவிட அதிக அவசியமாக இருந்தது. ஒரு மேகம் அவர்களது மனங்களை இருளாக்கினால், அது துடைத்து நீக்கப்படும் வரை அவர்கள் ஓய்வில்லாதவர்களாக இருந்தனர். அவரது மன்னிக்கும் கிருபையை அவர்கள் உணர்ந்தபோது, அவர்களது ஆத்துமாக்கள் நேசித்திருந்தவரைக் காண, அவர்கள் ஏங்கி இருந்தனர். (33)GCTam 467.1

  ஆனால் அவர்கள் மறுபடியும் ஏமாற்றம் அடைவதற்கு விட்டுவிடப்பட்டனர். எதிர்பார்த்திருந்த காலம் கடந்துசென்றது. இரட்சகர் தோன்றவில்லை. அவர்கள் அசையாத நம்பிக்கையுடன் அவரது வருகையை எதிர்பார்த்திருந்தனர். இப்பொழுது மரியாள் இரட்சகரின் கல்லறைக்கு வந்து, அது காலியாக இருப்பதைக்கண்டு, “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை” (யோவான் 20:13) என்று சத்தமிட்டு அழுததைப்போல, அவர்கள் இப்பொழுது உணர்ந்தனர். (34)GCTam 467.2

  இந்தத் தூது உண்மையானதாக இருக்கலாமென்ற ஒரு பய உணர்வை நம்பிக்கையில்லாமலிருந்த உலகின்மீது அது கொண்டுவந்தது. அது சிறிது காலத்திற்கு கட்டுப்பாட்டை உண்டுபண்ணி இருந்தது. அந்தநேரம் கடந்துசென்றபின், இந்த உணர்வு உடனே மறைந்துவிடவில்லை. முதலில், அவர்கள் ஏமாற்றமடைந்தவர்களை மேற்கொள்ளத் துணியவில்லை. ஆனால் தேவகோபத்தின் அடையாளம் காணப்படாமல் ஆனபோது, அவர்கள் பயத்திலிருந்து மீண்டனர். மீண்டும் நிந்திக்கவும் பரிகசிக்கவும் தொடங்கினர். ஒரு பெரும் கூட்டத்தினர் தங்களைக் கர்த்தரின் விரைவான வருகையின்மீது நம்பிக்கைகொண்டவர்கள் என்று கூறிக்கொண்டிருந்தனர். இவர்கள் தங்களுடைய விசுவாசத்தை இப்போது மறுத்தனர். சிலர் மிக அதிகமான நம்பிக்கை கொண்டிருந்தனர். இவர்கள் அகந்தையினால் காயப்பட்டு உலகத்தைவிட்டே ஓடிவிடவேண்டும் என்பதுபோல உணர்ந்தனர். அவர்கள் யோனாவைப்போல தேவன்மீது குறைகூறி, ஜீவனைவிட மரணத்தைத் தெரிந்துகொண்டனர். அநேகர் தேவனுடைய வார்த்தையைச் சார்ந்திராமல், பிறரது அபிப்பிராயங்களைத் தங்களது விசுவாசத்திற்கு அடிப்படையாகக்கொண்டிருந்தனர். அவர்கள் இப்பொழுது தங்கள் நோக்கத்தை மறுபடியும் மாற்றிக்கொள்ள ஆயத்தமானவர்களைப்போல இருந்தனர். பலவீனமானவர்களையும் கோழைகளையும் பரியாசக்காரர்களையும் தங்களுடைய அணியில் சேர்த்துக்கொண்டனர். இதற்குமேல் பயங்கள் எதுவுமில்லை. அல்லது எதிர்பார்ப்புகள் இப்பொழுது இல்லை என அறிவிப்பதில் ஒன்றுபட்டனர். கர்த்தர் வரவில்லை, உலகம் இருந்த நிலைமையிலேயே இருப்பதற்காக, ஆயிரக்கணக்கான வருடகாலம் கடந்துசெல்வது போலிருந்தது....(35)GCTam 467.3

  வாஞ்சையும் உண்மையுமிக்க விசுவாசிகள் கிறிஸ்துவிற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டனர். அவர்கள் முன்னர் ஒருபோதும் இருந்திராதவிதத்தில் அவரது பிரசன்னத்தில் பங்குகொண்டிருந்தனர். அவர்கள் நம்பி இருந்தபடி தங்களது தெய்வீக எஜமானரின் சமுகத்துடனும் தேவதூதர்களுடனும் ஏற்றுக்கொள்ளப்பட இருப்பதை எதிர்பார்த்தனர். இந்த உலகத்திற்கு அவர்களுடைய கடைசி எச்சரிப்பைக் கொடுத்தனர். அந்தத் தூதை ஏற்றுக்கொள்ளாத சமூகத்தினரைவிட்டு அவர்கள் விலகி இருந்தனர். கர்த்தராகிய இயேசுவே வாரும் சீக்கிரமாக வாரும் என்று மிகுந்த வல்லமையுடன் அவர்கள் ஜெபித்தனர். ஆனால், அவர் வரவில்லை. இப்பொழுது வாழ்க்கையின் பாரமான சுமைகள், கவலைகள், குழப்பங்கள் ஆகியவைகளை, மீண்டும் சுமப்பதும், பரியாச உலகின் இகழ்ச்சியையும் நிந்தையையும் சகிப்பது அவர்களுடைய விசுவாசத்திற்கும் பொறுமைக்கும் பயங்கரமான சோதனையாக இருந்தது. (36)GCTam 468.1

  ஆனாலும் கிறிஸ்துவின் முதலாம் வருகையின்போது அவருடைய சீஷர்கள் அனுபவித்திருந்த ஏமாற்றத்தைப்போன்று இது மிகப் பெரியதாக இருக்கவில்லை. கிறிஸ்து வெற்றியாக எருசலேமிற்குள் நுழைந்தபோது, அவர் தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்து, இஸ்ரவேலை அவளை ஒடுக்குகிறவர்களின் கைகளிலிருந்து விடுவிக்கப்போகிறார் என்று நம்பியிருந்தார்கள். உயர்ந்த நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடனும் அவருக்கு எப்படி மரியாதை செலுத்தப்போகிறார்கள் என்பதை ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அவருடைய வழியில் அநேகர் தங்களுடைய மேலங்கியை அல்லது குருத்தோலைகளை விரித்தனர். உற்சாகமான சந்தோஷத்தில் “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று அறிவிப்பதில் அவர்கள் ஒன்றுசேர்ந்தனர். இந்த மகிழ்ச்சின் வெளிப்பாட்டினால் தொந்தரவடைந்து கோபப்பட்டு, அவரது சீஷர்களை கண்டிக்கும்படி கேட்ட பரிசேயர்களுக்கு, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும்” (லூக்கா 19:40) என்று அவர் பதிலளித்தார். தீர்க்கதரிசனம் நிறைவேறவேண்டும். என்றாலும் மிகக் கசப்பான ஏமாற்றத்திற்கு அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். சில நாட்களே கடந்திருந்தது, இரட்சகரின் வேதனை மரணத்தைக்கண்டு, அவரை கல்லரையில் வைத்தனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு ஒரு காரியத்திலும் உணரப்படவில்லை. அவர்களுடைய நம்பிக்கை இயேசுவுடன் மடிந்தது. ஆண்டவர் கல்லறையிலிருந்து வெற்றியுள்ளவராக வரும் வரை இவைகளெல்லாம் “கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்று” தீர்க்கதரிசனங்களால் முன்னுரைக்கப்பட்டிருந்தன என்பதை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை-அப். 17:3. (37)GCTam 468.2

  “சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்” (சக. 9:9) என்று ஐநூறு வருடங்களுக்கு முன்பே, கர்த்தர் அறிவித்திருந்தார். கிறிஸ்து நியாயம் தீர்க்கப்படவும் மரிக்கவும் போகிறார் என்பதை அவரது சீடர்கள் உணர்ந்திருந்தார்களானால், அவர்கள் இந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியிருக்கமாட்டார்கள். (38)GCTam 469.1

  அதைப்போலவே, இந்த உலகத்திற்குக் கொடுக்கப்படவேண்டும் என்று ஆவியானவர் முன்கூறியிருந்த தூதை, மில்லரும் அவரது சகாக்களும் கொடுத்து, தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினர். ஆனால் அவர்களது ஏமாற்றத்தைச் சுட்டிக்காட்டியிருந்த தீர்க்கதரிசனங்களை அவர்கள் முழுவதுமாகப் புரிந்துகொள்ளவில்லை. புரிந்து கொண்டிருந்தார்களானால், கர்த்தரின் வருகைக்குமுன் சகல ஜாதிகளுக்கும் பிரசங்கிக்கப்படவேண்டிய வேறொரு தூதை அறிந்திருந்தார்களானால், முதலாவதை அவர்களால் கொடுக்கமுடியாமல் இருந்திருக்கக்கூடும். முதலாம் இரண்டாம் தூதர்களின் தூதுகள் மிகச்சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டு, அவர்களால் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தேவன் வடிவமைத்திருந்த ஊழியத்தை அது நிறைவேற்றியது. (39)GCTam 469.2

  கிறிஸ்து தோன்றாமல் காலம் கடந்துசெல்லுமானால் அட்வெந்துக்களின் அமைப்பு முழுவதும் முற்றிலுமாகக் கைவிடப்படும் என்று உலகம் பார்த்தும் எதிர்பார்த்துக்கொண்டும் இருந்தது. ஆனால் அநேகர் பலத்த சோதனையின்கீழ் தங்களுடைய விசுவாசத்தை விட்டுவிட்டனர். அப்போதும் சிலர் உறுதியாக நின்றனர். தாழ்மை, இருதயத்தை ஆராய்தல், உலகத்தை மறுத்துவிடுதல், வாழ்க்கையில் சீர்திருத்தம்,என்று அட்வெந்து இயக்கத்தில் காணப்பட்ட இந்த ஆவியின் கனிகள், அது தேவனுடைய இயக்கம் என்று சாட்சி பகர்ந்திருந்தன. இரண்டாம் வருகையைப்பற்றிய பிரசங்கத்திற்கு, பரிசுத்த ஆவியின் வல்லமை சாட்சி பகர்ந்திருந்தது என்பதை அவர்கள் மறுக்கத் துணியவில்லை. அவர்களது தீர்க்கதரிசன காலக்கணக்குகளில் அவர்களால் எந்தத் தவறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களது தீர்க்கதரிசன விளக்கமுறையைக் கவிழ்ப்பதில் அவர்களது எதிரிகளில் மிகத்திறமை வாய்ந்தவர்களாலுங்கூட பெற்றிபெற முடியவில்லை. தேவ ஆவியினால் மனங்கள் பிரகாசித்து, ஜீவனுள்ள வல்லமையால், இருதயங்கள் எரிந்துகொண்டிருந்தன. இவர்களது ஆர்வமிக்க ஜெபத்துடன்கூடிய வேத ஆராய்ச்சியினால் அடைந்த நிலைகளை வேதாகமச் சான்று இல்லாமல் மறுப்பதற்கு இவர்களால் முடியவில்லை. மிக அதிகமாக ஆராயும் விமர்சகர்கள், சமய ஆசிரியர்கள், உலகப்பிரகாரமான ஞானவான்கள் ஆகியவர்களிடமிருந்து மிகக் கசப்பான நிலை உண்டாகி இருந்தது. இந்த நிலை அவர்களைச் சமாளித்து நின்றது. நன்கு கற்றவர்கள், பேச்சாளர்கள், மேலானோர், கீழானோர் இணைந்த அணியானது அனைத்திலும் உள்ளவர்களால் ஏற்பட்ட ஏளனங்களுக்கும் ஏச்சுக்களுக்கும் எதிராக நிலையான உறுதியுடன் நின்றது. (40)GCTam 469.3

  எதிர்பார்த்திருந்த நிகழ்ச்சியில் ஒரு தோல்வி உண்டானது மெய்தான். ஆனால் அதனால் அவர்கள் தேவனுடைய வார்த்தையின் மீது கொண்டிருந்த விசுவாசத்தை அசைக்க முடியவில்லை. இன்னும் நாற்பது நாட்களில் நினிவே நகரம் கவிழ்க்கப்பட்டுப் போகுமென்று அதன் தெருக்களில் யோனா அறிவித்தபோது, நினிவே மக்களின் தாழ்மையைக் கர்த்தர் ஏற்றுக்கொண்டு, அவர்களது தவணையின் காலத்தை நீட்டித்தார். அப்படியிருந்தும் யோனாவின் தூது, கர்த்தரால் அனுப்பப்பட்டு, அவரது சித்தத்தின்படி நினிவே சோதிக்கப்பட்டது. அதேவிதமாக, நியாயத்தீர்ப்புப்பற்றிய எச்சரிப்பைக் கொடுக்கும்படி தேவன் அவர்களை நடத்தினார் என்று அட்வெந்துக்கள் நம்பினர். “அதைக்கேட்ட அனைவரது இருதயங்களையும் சோதித்து, கர்த்தரின் வருகைக்கான விருப்பத்தை அவர்களுக்குள் எழுப்பியிருக்கிறது அல்லது அவரது வருகையைப்பற்றி தேவனுக்கு மட்டுமே தெரிந்துள்ள காரியத்தில் கூடக்குறைய உணரும் விதத்திலான ஒரு வெறுப்பை அது அழைத்துள்ளது. கர்த்தர் அப்போது வந்திருந்தால், அவர்கள் எந்தப் பகுதியில் காணப்பட்டிருந்திருப்பார்கள்? ‘இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்’ என்று வியந்து கூறியிருந்திருப்பார்களா? அல்லது ‘பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறி இருப்பார்களா? என்பதை அறியும்படி ஒரு கோட்டினை வரைந்திருக்கிறது. இப்படி நாம் நம்புவதுபோல், அவரது ஜனங்களை சோதித்து, அவர்களது விசுவாசத்தைச் சோதித்து, அவர்களை மெய்ப்பிக்கிறார். சோதனையின் வேளைக்குள் அவர்களை வைப்பதை அவர் தகுதியாகக் கண்டு, வைத்திருந்த இடத்திலிருந்து அவர்கள் பின்வாங்குவார்களா? அல்லது இந்த உலகத்தை விட்டுவிலகி, தேவனுடைய செயலின்மீது முழு நம்பிக்கையுடன் சார்ந்திருப்பார்களா? என்று அவரது ஜனங்களைச் சோதிக்கிறார்” என்றனர்.—The Advent Herald and Signs of the Times Reporter, vol. 8, No. 14 (Nov 13,1844). (41)GCTam 470.1

  தங்களது கடந்தகால அனுபவத்தில் தேவன் அவர்களை நடத்தியிருந்தார் என்று இன்னும் நம்பினவர்களின் உணர்ச்சிகள் வில்லியம் மில்லரின் வார்த்தைகளால் வெளிக்காட்டப்பட்டுள்ளன. “நான் மீண்டும் வாழும்படி நேரிட்டிருந்தால், தேவனிடத்திலும் மனிதர்களிடத்திலும் நேர்மை உள்ளவனாக இருக்கவேண்டும் என்று முன்னர் செயலாற்றியிருந்த, அதே சான்றை உடையவனாக செயலாற்றியாகவேண்டும். ஆத்துமாக்களின் இரத்தக்கறையிலிருந்து எனது ஆடையை நான் சுத்திகரித்திருக்கிறேன் என்று நான் நம்புகிறேன். அவர்களுடைய குற்றத்தினாலுள்ள பழியிலிருந்து முடிந்தவரை விடுபட்டிருக்கிறேன் என்று நான் உணருகிறேன். நான் இரண்டு தடவைகள் ஏமாற்றமடைந்தவனாக இருந்தபோதிலும், நான் இன்னும் கீழே விழுந்துவிடவோ அல்லது அதைரியமடைந்துவிடவோ இல்லை. கிறிஸ்துவின் வருகையின்மீதுள்ள எனது நம்பிக்கை எப்பொழுதும் இருந்ததைப்போல, பலமிக்கதாகவே உள்ளது. வருடக்கணக்கான எனது நிதானமான ஆலோசனைக்குப்பின், எதைச் செய்வது பக்திவிநயமான எனது கடமை என்று உணர்ந்தேனோ அதைச் செய்திருக்கிறேன். நான் தவறி இருந்தால், அது உதாரணத்தின் பகுதியில் உடன் மனிதனுடனுள்ள எனது அன்பு, தேவனுக்குச் செய்யவேண்டிய ஊழியத்தின்மீதான எனது கடமை உணர்வு, ஆகியவைகளின் பக்கத்தில் உள்ளது. நான் எதை நம்பியிருந்தேனோ அதையன்றி, வேறெதையும் பிரசங்கிக்கவில்லை என்னும் ஒன்றினை நான் அறிந்திருக்கிறேன். தேவன் என்னுடன் இருந்திருக்கிறார். அவரது வல்லமை அந்த ஊழியத்தில் வெளிக்காட்டப்பட்டிருக்கிறது. நல்ல நன்மைகள் உண்டாயிருக்கின்றன. எல்லா மனிதர்களுக்கும் விளங்கும் விதத்தில், காலத்தைப்பற்றிய பிரசங்கத்தினால், அந்த உபாத்தியினால் விசுவாசத்தினாலும் கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்படுதலினாலும் அநேகமாயிரமானவர்கள் தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டிருக்கின்றனர்.”- Bliss, pages 256,255,277,280,281. “அகந்தை உள்ளவர்களின் புன்னகையை நான் ஒருபோதும் தழுவவில்லை. உலகம் கோபம் கொண்டபோது, நான் தைரியத்தை இழக்கவில்லை. நான் அவர்களது ஆதரவை இப்பொழுது விலைக்கு வாங்கமாட்டேன். அல்லது அவர்களது வெறுப்பைத் தூண்டும்படி எனது கடமையைக் கடந்துசெல்லவும் மாட்டேன். எனது ஜீவனை நான் ஒருபோதும் அவர்களது கரங்களில் தேடமாட்டேன். தேவன் அவரது தெய்வீக ஏற்பாட்டினால், அவ்விதமாகக் கட்டளையிட்டால், நான் அதை இழப்பதிலிருந்து பின்வாங்கமாட்டேன் என்று நம்புகிறேன்” என்றார். -J. White,Life of Wm. Miller,page 315.(42)GCTam 471.1

  தேவன் அவரது ஜனங்களைக் கைவிடவில்லை. பெற்றுக்கொண்ட ஒளியை அவசரகோலமாக மறுக்காமலிருந்து, அட்வெந்து இயக்கத்தைப் பகிரங்கமாகக் குற்றப்படுத்தாமல் இருந்தவர்களிடம் அவரது ஆவி இன்னமும் தங்கி இருந்தது. இந்த நெருக்கடியில் பரீட்சிக்கப்பட்டுக் காத்திருப்பவர் களுக்கான தைரியமூட்டுதலும் எச்சரிக்கையுமிக்க வார்த்தைகள், எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் உள்ளன. “ஆகையால், மிகுந்த பலனுக் கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும் படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்”-எபி. 10:35—39. (43)GCTam 472.1

  “வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்” என்று கடைசி காலத்திலுள்ள சபைக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிப்பின் வார்த்தைகள் கர்த்தரின் வருகை சமீபமாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன என்பதற்குச் சான்றாக உள்ளது. தாமதம்போல் காணப்படும் ஒன்றும், கர்த்தர் வருவதற்குத் தாமதிப்பார் என்பதும் இதில் தெளிவாகப் பொருள்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள போதனை இந்தக் காலத்திலுள்ள அட்வென்டிஸ்டுகளின் அனுபவத்திற்குப் பொருந்தக்கூடியதாக இருக்கிறது. இங்கு போதிக்கப்பட்ட மக்கள், விசுவாசக் கப்பலை உடைக்கும் ஆபத்தில் இருந்தனர். அவர்கள் அவருடைய ஆவியின் வழிகாட்டுதலையும் அவருடைய வார்த்தைகளைப் பின்பற்றுவதிலும் தேவனுடைய சித்தத்தைச் செயல்படுத்தி இருந்தனர். அப்படியிருந்தும் அவர்களது கடந்தகால அனுபவத்திலிருந்த அவரது நோக்கத்தை அவர்கள் அறியமுடியாதவர்களாக இருந்தனர். அவர்களுக்குமுன் இருந்த பாதையையும் அவர்கள் அறியவில்லை. உண்மையாகவே தேவன்தான் அவர்களை நடத்திக்கொண்டிருந்தாரா? என்று சந்தேகிக்கும்படி அவர்கள் சோதிக்கப்பட்டனர். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்னும் வார்த்தைகள் இந்த நேரத்தில் பொருந்தக்கூடியதாக இருந்தது. நடுஇராத்திரியின் சத்தம் என்னும் பிரகாசமிக்க ஒளி, அவர்களது பாதையில் வீசியபோது, தீர்க்கதரிசனங்கள் முத்திரை நீக்கம் செய்யப்பட்டிருப்பதை அவர்கள் கண்டபோது, விரைவாக நிறைவேறிவரும் அடையாளங்கள் கிறிஸ்துவின் வருகை சமீபம் என்று கூறிக்கொண்டிருந்தபோது, அவர்கள் பார்வை உள்ளவர்கள் நடப்பதுபோல் நடந்தனர். ஆனால் இப்பொழுது ஏமாற்றத்தினால் நம்பிக்கை இழந்து மனம் கவிழ்ந்த அவர்களால், தேவனின் மீதுள்ள விசுவாசத்தினாலும் அவரது வார்த்தையினாலும்மட்டுமே நிற்கமுடிந்தது. நீங்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய விசுவாசத்தை விட்டுவிட்டு அட்வெந்துக்களின் இயக்கம் சாத்தானுடையது என்று கூறுங்கள் என்று ஏளனமாக உலகம் கூறிக்கொண்டிருந்தது. எவனாவது பின்வாங்கிப்போவானானால், அவன்மேல் நான் பிரியமாய் இருக்கமாட்டேன் என்று தேவனுடைய வார்த்தை அறிவித்தது. இப்பொழுது அவர்களுடைய விசுவாசத்தை மறுதலிப்பதும், அந்தத் தூதில் இருந்த பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை மறுப்பதும், அழிவை நோக்கிப் பின்னிழுத்துச் செல்லுவதாக இருக்கும். ஆகையால் உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். பொறுமை உங்களுக்கு வேண்டியதாக இருக்கிறது. வருகிறவர் இன்னுங்கொஞ்சங்காலத்தில் வருவார். தாமதம்பண்ணார் என்னும் பவுலின் வார்த்தைகளினால், உறுதியாக நிற்கும்படி அவர்கள் தைரியமூட்டப்பட்டனர். ஏற்கனவே தேவனைப்பற்றி அவர்கள்பெற்றிருந்த ஒளியைப் போற்றுவது மட்டுமே அவர்களது பாதுபாப்பான ஒரு பாதையாக இருந்தது. (44)GCTam 472.2