Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாபெரும் ஆன்மீகப் போராட்டம்! - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First
  Larger font
  Smaller font
  Copy
  Print
  Contents

  6—ஹஸ் மற்றும் ஜெரோம்!

  (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 97-119)

  ன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சுவிசேஷம் பொஹிமியாவில் நடப்பட்டது. வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டு, பொது ஆராதனைகள் மக்களின் மொழியிலேயே நடத்தப்பட்டது ஆனால் போப்புவின் வல்லமை அதிகரித்தபோது, அதே அளவிற்கு தேவனுடைய வார்த்தை இருளாக்கப்பட்டது. “அரசர்களின் பெருமையைக் கீழே தள்ளு வேன்” என்ற எண்ணத்தையுடையவராயிருந்த ஏழாவது கிரகோரி என்ற போப்பு, அடிமைகளாகிக் கொண்டிருந்த மக்களின்மீதும் அதே நோக்கத்தை யுடையவராயிருந்து, பொது இடங்களில் பொஹிமிய மொழியில் ஆராதனை நடப்பதைத் தடுக்கும் ஒரு கட்டளையைப் பிறப்பித்தார். தேவன் அவருக்கான ஆராதனை ஒரு அந்நிய மொழியில் நடத்தப்படுவதில் மகிழ்ச்சியுடையவராக இருக்கிறாரென்றும், இந்த நியமனத்தை அலட்சியம் செய்வது அநேக தீமைகளுக்கும், மதத் துரோகத்துக்கும் காரணமாக இருக்கிறது என்றும் அறிவித்தார்.-Wylie, b. 3, ch. 1. இவ்விதமாகத் தேவனுடைய வார்த்தை என்கிற வெளிச்சம் அணைக்கப்பட்டு, மக்கள் இருளால் மூடப்படவேண்டும் என்று ரோமன் கத்தோலிக்க சபை எண்ணியது. ஆனால் சபையைப் பாதுகாக்கப் பரலோகம் வேறு ஏதுகரங்களை ஏற்படுத்தியிருந்தது. உபத்திரவத்தின் காரணமாக அநேக வால்டென்னியர்களும் அல்பீஜியன்களும், பிரான்சிலும் இத்தாலியிலுமிருந்து அவர்களது வீடுகளைவிட்டு விரட்டப்பட்டு, பொஹிமியாவிற்கு வந்தனர். பகிரங்கமாகப் போதிக்க துணியாமலிருந்தாலும், ஆர்வத்துடன் இரகசியமாக உழைத்தனர். இவ்விதமாக நூற்றாண்டுகள்தோறும் மெய்யான விசுவாசம் பாதுகாக்கப்பட்டிருந்தது! (1)GCTam 97.1

  ஹஸ்ஸின் நாட்களுக்குமுன் சபையிலுள்ள ஊழல்களையும் மக்களின் கீழ்த்தரமான செயல்களையும் கண்டிப்பதற்கென பகிரங்கமாக எழுந்த மனிதர்கள் இருந்தனர். அவர்களது பணி எங்கும் பரவலாக வாஞ்சையை உண்டுபண்ணினது. மதத் தலைவர்களால் உண்டான பயங்கரங்கள் எழுந்தன் சுவிசேஷத்தின் சீடர்களுக்கெதிரான உபத்திரவம் திறக்கப்பட்டது. காடுகளிலும் மலைகளிலுமிருந்து ஆராதனைசெய்யும்படியாக விரட்டப்பட்ட அநேகர், இராணுவ வீரர்களால் வேட்டையாடப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். கொஞ்ச நாட்களுக்குப்பின், ரோமன் கத்தோலிக்க ஆராதனை முறையைவிட்டுப் பிரிந்துசென்ற அனைவரும் எரிக்கப்பட வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கிறிஸ்தவர்கள் அவர்களது உயிர்களை விட்டுக்கொடுத்தபோது, அவர்களது நோக்கத்தின் வெற்றியை முன்னோக்கினர். சிலுவையில் அறையப்பட்ட மீட்பரைப்பற்றும் விசுவாசத்தினால்தான் இரட்சிப்பு உண்டாகிறது என்று போதித்தவர்களில் ஒருவர் சாகும்போது: “சத்தியத்தின் எதிரிகளின் மூர்க்கம் எங்களை மேற்கொள்ளுகிறது ஆனால் அது எப்போதும் அப்படி இருக்காது. சாதாரண ஜனங்களுக்கிடையிலிருந்து ஒருவர் போர்வாளும் அதிகாரமும் இல்லாதவராக எழும்புவார் அவரை அவர்களால் மேற்கொள்ள முடியாது” என்று அறிவித்தார்.-Ibid., b. 3, ch. 1. லுத்தரின் காலம் வெகு தொலைவில் இருந்தது. ரோமன் கத்தோலிக்க மார்க்கத்திற்கெதிராக ஏற்கனவே ஒருவர் எழும்பிக்கொண்டிருக்கிறார். ரோமன் கத்தோலிக்க மார்க்கத்திற்கெதிரான சாட்சி அவரது சாட்சி! அந்த சாட்சி நாடுகளைக் கலங்கச் செய்யும்! (2)GCTam 97.2

  ஜான் ஹஸ் மிகவும் தாழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்து, ஆரம்பத்திலேயே தகப்பனை இழந்ததால் அநாதையாக விடப்பட்டிருந்தார். எல்லா உடைமைகளையும்விட கல்வியையும் தேவனுக்குப் பயப்படுதலையும் மேலானதாக அவரது பக்திமிக்க அன்னை எண்ணி, இந்தப் பரம்பரைச் சொத்துக்கள் தனது மகனுக்குக் கிடைக்க வகைதேடினாள். ஹஸ் பள்ளிக் கல்வியை முடித்து அதன்பின் பிரேக் பல்கலைக்கழகத்தில் இலவசமாக கல்வி கற்கும் ஒரு மாணவராகச் சேர்ந்தார். ஏழையும் விதவையுமாகியிருந்த அவருடைய அன்னை பிரேக் நகர் வரை அவருடன் சென்றார். தன் மகனுக்கு கொடுப்பதற்கென்று உலகப்பிரகாரமான எந்தப் பரிசும் அவளிடம் இல்லாதிருந்தது. ஆனால் அப்பெருநகரை நெருங்கியதும், தந்தையற்ற மகனின் அருகில் அவள் முழுந்தாளில் நின்று, பரலோகத் தந்தையிடம் மகனுக்கான ஆசீர்வாதத்தை ஜெபத்தில் கெஞ்சிக் கேட்டார். அந்த அன்னையின் ஜெபம் எவ்விதமாகக் கேட்கப்படவிருந்தது என்பதைப்பற்றி அப்போது அவள் உணராதவளாயிருந்தாள். (3)GCTam 98.1

  தனது குற்றமற்ற சாதுவான வாழ்க்கையினாலும் எவரையும் ஈர்க்கின்ற சுபாவத்தினாலும் அனைவரது மதிப்பையும்பெற்ற அதேநேரம் களைப்படையாத முயற்சியினாலும் விரைவான வளர்ச்சியினாலும் பல்கலைக் கழகத்தில் தனிச் சிறப்பைப் பெற்றார் ஜான் ஹஸ். ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தை உண்மையாகப் பின்பற்றுபவராக இருந்து, அது தருவதாகச் சொல்லிக்கொண்டிருந்த ஆசீர்வாதங்களை வாஞ்சித்துத் தேடியிருந்தார். ஒரு ஜுபிலி விழாவின் சமயத்தில், அவர் பாவஅறிக்கை செய்யச்சென்று, தன்னிடம் கடைசியாக இருந்த சில நாணயங்களை, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட அவரது பாவமன்னிப்பின் பங்கைப் பெறுவதற்காகச் செலுத்தி, பின்பு நிகழ்ந்த ஊர்வலத்திலும் கலந்துகொண்டார். கல்லூரிப் படிப்பை முடித்தபின், குருப்பட்டத்தைப் பெற்று விரைவில் தேர்ச்சியடைந்து, அரசவையோடு விரைவில் இணைக்கப்பட்டார். எங்கு கல்வி பயின்றாரோ அங்கேயே பேராசிரியராகவும் பல்கலைக்கழக மடாலயத்தலைவராகவும் ஆனார். பிறரது பொருளுதவியினால் கல்வி பயின்ற, மிகத் தாழ்மையான அவர், அவரது நாட்டிற்குப் பெருமை சேர்ப்பவராக மாறினார். ஐரோப்பா முழுவதிலும் அவர் புகழ் பரவியது. (4)GCTam 98.2

  ஆனால் ஹஸ் வேறொரு துறையில் அவரது சீர்திருத்தப் பணியைத் தொடங்கினார். குருப்பட்டம்பெற்றுப் பல வருடங்களுக்குப் பின்னர் பெத்லெகேம் ஆலயத்தின் சொற்பொழிவாளர் என்ற பதவியைப் பெற்றார். வேத வாக்கியங்களைப்பற்றிய சொற்பொழிவு தங்களின் தாய்மொழியில் இருக்கவேண்டும் என்று இந்த ஆலயத்தின் அமைப்பாளர் கூறியிருந்தார். இந்தப் பழக்கத்திற்கு ரோமன் கத்தோலிக்க சபை நிர்வாகத்திலிருந்து எதிர்ப்பு இருந்திருந்தபோதிலும், பொஹிமியாவில் அது முற்றிலும் கைவிடப் படவில்லை. சமுதாயத்தின் எல்லா நிலைகளில் இருந்த மக்களிடமும், வேதாகமத்தைப்பற்றிய அறியாமையும் மிகவும் மோசமான பழக்கங்களும் உண்டாயிருந்தன. இந்தத் தீமைகளை விட்டுவைக்காமல் எதிர்த்தார். தான் போதித்த சத்தியத்தின் கோட்பாடுகளையும் தூய்மையையும் நடைமுறைப்படுத்துவதற்காக, தேவனுடைய வார்த்தைகளிடம் செல்லும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார். (5)GCTam 99.1

  பிற்காலத்தில் ஹஸ்ஸுடன் இணைந்து செயல்பட்ட, பிரேக் நகரவாசியான ஜெரோம் என்பவர் இங்கிலாந்திலிருந்து திரும்பிவந்தபோது, விக்ளிஃபின் எழுத்துக்களையும் தன்னுடன் கொண்டுவந்தார். இங்கிலாந்தின் அரசியார் விக்ளிஃபின் போதனைகளினால் சமய மாற்றமடைந்தார். அவர் பொஹிமியாவின் இளவரசியாக இருந்ததினால், அவரது செல்வாக்கினால் சீர்திருத்தக்காரரின் பணி அவரது சொந்த நாடெங்கிலும் பரவியது. இந்த எழுத்துக்களை ஹஸ் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்து, இதை எழுதியவர் உண்மையான ஒரு கிறிஸ்தவர் என்று நம்பி, அந்த சீர்திருத்தவாதி பரிந்துரை செய்திருந்த சீர்திருத்தங்களை ஆவலுடன் ஏற்றுக்கொள்ள விரும்பினார். ஹஸ் அவரையும் அறியாமலேயே ரோமன் கர்தோலிக்க மார்க்கத்திலிருந்து வெகுதூரம் செல்லக்கூடிய ஒரு பாதையில் நுழைந்திருந்தார். (6)GCTam 99.2

  இந்தச் சமயத்தில், கற்றறிந்த இரு அந்நியர்கள் ஒளியைப் பெற்றிருந்து, அதைத் தூரதேசத்தில் பரப்பிடவேண்டுமென்பதற்காக, இங்கிலாந்திலிருந்து வந்திருந்தனர். போப்புவின் மேலாதிக்கத்தை நேரடியாக ஆரம்பத்திலேயே தாக்கினதால், அவர்கள் விரைவில் அதிகாரிகளால் மௌனப்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்களது நோக்கத்தை விட்டுவிலக அவர்கள் மறுத்து, வேறு வழியைத் தேடினார்கள். அவர்கள் ஓவியர்களும், பிரசங்கிகளுமாயிருந்த தினால், தங்களது திறமையைக் காட்டத்தொடங்கினர். பொதுமக்கள் கூடும் இடத்தில் அவர்கள் இரு ஓவியங்களை வரைந்துவைத்தனர். ஒரு ஓவியம் காலணியற்றவராக எளிய உடையை அணிந்தவராக பயணத்தால் கந்தலான உடையை அணிந்த அவரது சீடர்கள் பின்தொடர, இயேசு “சாந்தகுணமுள்ளவராய் கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறிக்கொண்டு” (மத்தேயு 21:4) வந்ததைக் காட்டியது. மற்றுமொரு ஓவியம் போப்பு அவருடைய ஆடம்பரமான விலையுயர்ந்த உடையில், மூன்று அடுக்குகளையுடைய கிரீடம் சூடியவராக, மிக அதிகமாக அலங் கரிக்கப்பட்ட ஒரு குதிரையின் மீது அமர்ந்து, குழலூதுபவர்கள் முன்செல்ல, கர்தினால்களும் குருமார்களும் பின்செல்ல, அலங்காரமாகச் செல்வதுபோல வரையப்பட்டிருந்தது. (7)GCTam 100.1

  அனைத்து வகுப்பினரது கவனத்தையும் ஈர்க்கின்ற ஒரு சொற்பொழிவு இங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த ஓவியங்களைக் காண மக்கள் கூட்டமாக வந்தனர். எளிமையும் தாழ்மையுமிக்க தோற்றமுடைய எஜமானான கிறிஸ்து அவரது வேலைக்காரன் என்று சொல்லிக்கொள்ளும் அகந்தையும் கர்வமுமிக்க போப்பு இவர்கள் இருவருக்குமிடையிலிருந்த வேற்றுமைகளைக் கண்ட அநேகர் ஆழமாக உணர்த்தப்பட்டனர். இந்த நீதிவிளக்கத்தை வாசிக்காதவர்கள் ஒருவரும் அங்கிருக்கவில்லை! பிரேக் நகரில் உணர்ச்சிக் கொந்தளிப்பு உண்டானது. எனவே, அந்த அந்நியர்கள், பாதுகாப்பிற்காக எங்காவது செல்வது அவசியம் என்பதைச் சற்று நேரத்திற்குப்பின் கண்டனர். ஆனால் அவர்கள் கற்பித்த பாடம் மறக்கப்படவில்லை. இந்த ஓவியங்கள் ஹஸ்ஸின் உள்ளத்தில் ஆழமான உணர்வைப் பதித்தது. அது வேதாகமத்தையும் விக்ளிஃப் எழுதியவைகளையும் உற்றுநோக்கும்படி அவரை நடத்தினது. விக்ளிஃப் பரிந்துரைசெய்த எல்லா சீர்திருத்தங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு அவர் இன்னமும் ஆயத்தப்படாமல் இருந்தாலும், போப்பு மார்க்கத்தின் உண்மையான சுபாவத்தைக் கண்டு, அந்த மதத்GCTam 100.2

  தலைவரிடமிருந்த அகந்தை, பேராசை, ஊழல் ஆகியவைகளைப்பற்றித் தீவிரமான வைராக்கியத்துடன் குற்றஞ்சாட்டினார். (8)GCTam 101.1

  பொஹிமியாவிலிருந்து ஒளி ஜெர்மனிக்குப் பரவியது. ஏனெனில், பிரேக் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தொந்தரவுகள் நூற்றுக்கணக்கான ஜெர்மன் மாணவர்களை வீட்டிற்கு திரும்பிச் செல்லச் செய்தது. அவர்களில் அநேகர் ஹஸ்ஸிடமிருந்து அவர்களுடைய ஆரம்ப வேதாகம அறிவைப் பெற்றிருந்தனர். அவர்கள் திரும்பிச் சென்றதும், அவர்களது தந்தையர் நாட்டில் சுவிசேஷத்தைப் பரப்பினார்கள். (9)GCTam 101.2

  பிரேக் நகரில் நடந்த ஊழியர்களைப்பற்றிய செய்தி ரோம் நகருக்குக் கொண்டுசெல்லப்படவே, போப்புவிற்குமுன் விரைவில் வந்து நிற்கும்படி ஹஸ் அழைக்கப்பட்டார். அதற்குக் கீழ்ப்படிவது அவரை மரணத்திற்கு ஆளாக்கும். பொஹிமியாவின் அரசர், அரசி, மற்றும் பல்கலைக்கழகத்தின் மேலான சமூக அங்கத்தினர்கள் ஹஸ் பிரேக்கிலேயே இருக்க அனுமதிக்கப்படவேண்டும் என்றும், ரோமன் கத்தோலிக்க சபைத்தலைவருக்குப் பதில்சொல்ல, ஹஸ்ஸுக்குப் பதிலாக அவரது உதவியாளர் ஒருவர் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், ஒரு வேண்டுகோளை விடுக்க ஒன்றுபட்டனர். இந்த வேண்டுகோளை அனுமதிப்பதற்குப்பதிலாக, விசாரணை நடத்தத் தொடங்கி, ஹஸ்ஸைக் குற்றப்படுத்தி, பிரேக் நகரத்தின் சமயச் சடங்குகள் எதிலும் பங்குகொள்ளக்கூடாது என்ற தடையின்கீழ் அவர் இருப்பதாக போப் அறிவித்தார்.(10)GCTam 101.3

  அந்தக் காலத்தில் இந்தவிதமான தண்டைனைகள் அறிவிக்கப்பட்ட போதெல்லாம், அதுமிகப்பரவலான அபாய உணர்வை உண்டுபண்ணியிருந்தது. அதை நடைமுறைப்படுத்தும் சமயச்சடங்கு, போப்புவை தேவனுடைய பிரதிநிதியாகவும், பரலோகம், நரகம் ஆகியவைகளின் திறவுகோலை வைத்திருக்கிறவராகவும், உலகப்பிரகாரமானதும் ஆவிக்குரியதுமான தீர்ப்பைச் செலுத்தும் வல்லமை உடையவராகவும் காண்பித்து, அவரைப் பார்த்து மக்கள் திகிலடையும்படியானவிதத்தில் இருந்தது. சமயச் சடங்குகளை நடத்தக்கூடாது என்ற தடையால் பாதிக்கப்பட்டிருந்த இடத்திற்கெதிராக பரலோகத்தின் வாசல்கள் அடைக்கப்பட்டிருக்கும் என்றும், அந்தத் தடையை நீக்கும் இரக்கம் போப்புவிற்கு உண்டாகும்வரை அப்படியே இருக்குமென்றும், அந்தச் சமயத்தில் இறந்தவர்கள் அவர்களுடைய ஆனந்தமிக்க வாசஸ் தலங்களுக்கு வெளியில்தான் இருப்பார்கள் என்றும் நம்பியிருந்தனர். இந்தப் பயங்கரமான அழிவின் அடையாளமாக சகல சடங்குகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. ஆலயங்கள் மூடப்பட்டிருந்தன. திருமணங்கள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்தில் இறந்தவர்களை அடக்கம்செய்வது மறுக்கப்பட்டு, கல்லறைச் சடங்குகள் எதுவுமின்றி, அவர்கள் சாக்கடைகளிலோ அல்லது வயல்களிலோ புதைக்கப் பட்டனர். இவ்விதமாக, ரோமச்சபை தன் மனதில் தோன்றினபடி செயல்பட்ட தினால், அந்தத் தடையுத்தரவு மனிதர்களின் மனசாட்சியைக் கட்டுப்படுத்தி சோதித்தது. (11)GCTam 101.4

  பிரேக் நகரம் கொந்தளிப்பினால் நிறைந்தது. ஒரு பெரும் கூட்டமான மக்கள், அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்துகளுக் கெல்லாம் ஹஸ் தான் காரணம் என்று அவரைக் குற்றஞ்சாட்டி, கத்தோலிக்க நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு அவரை ஒப்படைத்துவிடவேண்டுமென்று கோரினர். இந்தப் புயலை அமைதிப்படுத்த, ஹஸ் சிலநாட்களுக்கு அவரது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். பிரேக் நகரில் அவர் விட்டுவந்த அவரது நண்பர்களுக்கு: “நான் உங்களைவிட்டு உங்கள் நடுவிலிருந்து பின்வாங்கிச் சென்றிருந்தால், அது தீய எண்ணமுடையவர்கள் அவர்கள்மீது தாங்களாகவே நிரந்தரமான பழியை உண்டுபண்ண இடம் கொடுக்கக்கூடாது என்பதற்காகவும், பக்தியுள்ளவர்களுக்குத் துன்பமும், உபத்திரவமும் உண்டாவதற்கு நான் காரணமாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், இயேசு கிறிஸ்துவின் கட்டளையையும் முன்மாதிரியையும் பின்பற்றும்படியாகவும் செய்யப்பட்டதாகும். தேவனுடைய வார்த்தைகளை உங்களின் நடுவில் பேசுவதை நீண்டகாலத்திற்குத் தடைசெய்யும் நோக்கத்துடன் பக்தியற்ற குருமார்கள் செயல்படக்கூடும் என்று பயந்தும் நான் ஒதுங்கி இருக்கிறேன் ஆனால் தெய்வீக சத்தியத்தை மறுக்கும்படியாக, நான் உங்களை விட்டுச் செல்லவில்லை. அதற்காக நான் தேவனுடைய உதவியுடன் இறப்பதற்கும் விருப்பம் கொண்டிருக்கிறேன்” என்று எழுதினார்.-Bonnechose, The ReformersBeforethe Reformation, vol.1,p. 87. ஹஸ் அவரது பணியிலிருந்து நின்றுவிடாமல், வாஞ்சைமிக்க கூட்டங்களில் சொற்பொழிவாற்றும்படி, சுற்றியிருந்த நாடுகளுக்குப் பயணத்தை மேற்கொண்டார். இவ்வாறாக, சுவிசேஷத்தின் செய்தியை ஓய்த்துவிட வேண்டுமென்று போப்பு எந்த அளவிற்குச் செயல்பட்டாரோ, அந்த அளவிற்கு அது மிக அதிகமான இடங்களுக்குப் பரவியது. “சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்”-2 கொரி. 13:8. (12)GCTam 102.1

  அவரது பணியின் இந்த நேரத்தில், ஹஸ்ஸின் மனம் போராட்டம் நிறைந்த காட்சியை உடையதைப்போல் காணப்பட்டது. சபையானது அதன் இடிமுழக்கங்களினால் அவரைத் திகைப்படையச்செய்ய வகைதேடி இருந்தபோதிலும், அவர் அதன் அதிகாரத்தை மறக்கவில்லை. அவருக்கு இன்னும் ரோமன் கத்தோலிக்க சபை கிறிஸ்துவின் மணவாட்டியாகவும், போப்பு தேவனின் பதிலாளியாகவும் பிரதிநிதியாகவும் இருந்தார். ஹஸ் சபையின் கோட்பாடுகளுக்கு எதிராகவே போர்செய்து கொண்டிருந்தார். அதுவே அவர் புரிந்துகொண்டிருந்த உணர்வுகளுக்கும், அவரது மனசாட்சிக்கும் இடையில் பயங்கரமான போராட்டத்தை உண்டுபண்ணியது. அவர் நம்பியிருந்தபடி அந்த அதிகாரம் நீதியும் தவறாமையும் உள்ளதாக இருந்திருந்தால், அதற்குக் கீழ்ப்படிய மறுக்கும் தனது குணம் எப்படி வந்தது? கீழ்ப்படிவது என்பது பாவம்செய்வதாக அவருக்குக் காணப்பட்டது ஆனால் தவறாமையுடைய ஒரு சபைக்குக் கீழ்ப்படிவது இப்படிப்பட்ட பிரச்சினைக்கு ஏன் வழிநடத்தவேண்டும்?—அவரால் பரிகரிக்கமுடியாத ஒரு பிரச்சினையாக அது இருந்தது. ஒவ்வொரு மணிநேரமும் அவரை இந்தச் சந்தேகம் வதைத்துக்கொண்டிருந்தது. மீட்பரின் காலத்திலிருந்த சபையின் ஆசாரியர்கள் கெட்ட மனிதர்களாக மாறி, அவர்களது நீதியற்ற அதிகாரத்தை நியதி இல்லாத முடிவுகளுக்காக செயல்படுத்தியபடியே மறுபடியும் நிகழ்ந்துள்ளது என்பதை அந்தப் பிரச்சினையில் கிட்டத்தட்ட சரியான விடையை, அவரால் காணமுடிந்தது. அவரது சொந்த வழிகாட்டலுக்காகவும், மற்றவர்களுக்குப் போதிக்கவும் புரிந்துகொள்ளும் திறனின் மூலமாக மனசாட்சியைக் கட்டுப்படுத்துகிற வேதவாக்கியங்களின் நியதிகளை ஏற்றுக்கொள்ளும்படி அது அவரை வழிநடத்தினது. வேறுவிதமாகச் சொன்னால், குருமாரின் மூலமாக சபை பேசுவதல்ல வேதாகமத்தில் பேசுகிற தேவனே தவறாமையுள்ள ஒரே ஒரு வழிகாட்டுதலாகும்.-Wylie, b. 3, ch. 2. (13)GCTam 102.2

  சில நாட்களுக்குப்பின்னர், பிரேக்கில் உண்டான உணர்ச்சிகளின் கொந்தளிப்பு அடங்கியபின், அதிகமான வைராக்கியத்துடனும் தைரியத் துடனும் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதைத் தொடர அவரது பெத்லெகேம் ஆலயத்திற்குத் திரும்பிவந்தார். அவரது விரோதிகள் செயலாற்றலும் வல்லமையுமிக்கவர்களாக இருந்தனர். ஆனால் மேன்மக்களில் அநேகரும், அரசியும் அவரது நண்பர்களாக இருந்ததோடல்லாமல், பெரும் எண்ணிக்கையுள்ள மக்கள் அவரது அணியில் இருந்தனர். அவரது தூய்மையையும் மேன்மைப்படுத்துகின்ற போதனைகளையும் தூய வாழ்க்கையையுைம், ரோமன் கத்தோலிக்கர்கள் போதித்த கீழ்த்தரமாக்கும் பிடிவாதமான கோட்பாடுகளேடும் அவர்கள் நடைமுறைப்படுத்தியிருந்த வெறுக்கத்தக்கதான செயல்களோடும் அமித உணவுப் பழக்கங்களோடும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, ஏராளமானவர்கள் ஹஸ்ஸின் அணியிலிருப்பதை ஒரு மதிப்பு என எண்ணினர். (14)GCTam 103.1

  இதுவரை ஊழியத்தில் ஹஸ் தனியாக நின்றிருந்தார். இங்கிலாந்தி லிருந்தபோது விக்ளிஃபின் போதனைகளை ஏற்றுக்கொண்ட ஜெரோம் ஹஸ்ஸின் சீர்திருத்தப்பணியில் இணைந்தார். அவர்களிருவரும் இதற்குப்பின் ஊழியத்தில் இணைந்திருந்து, மரணத்திலும் பிரியமுடியாதவர்களாக இருந்தனர்.(15)GCTam 103.2

  மக்களிடமிருந்த ஆதரவை ஈட்டும் மேலான தெளிந்த அறிவு, பேச்சுத்திறன், கற்றல் ஆகியவை ஜெரோமிடம் மிகமேலான நிலையில் இருந்தது. அதேசமயம் நல்ல தன்மைகளோடு பலப்படுத்துகின்ற செயல்களில் ஹஸ் மேலானவராக இருந்தார். அவரது அமைதியான ஆவி ஜெரோமின் துடிப்புமிக்க ஆவியின்மீது கட்டுப்பாட்டை உண்டுபண்ணுவதை ஜெரோம் உண்மையான தாழ்மையுடன் உணர்ந்து, அவரது ஆலோசனைகளுக்கு இணங்கி இருந்தார். இவ்வாறு இணைந்த ஊழியத்தால் சீர்திருத்தம் விரைவாகப் பரவியது. (16)GCTam 104.1

  ரோமன் கத்தோலிக்க சபையின் அநேக தவறுகளை வெளிக் காட்டி, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மனிதர்களின் மனதில் பெரும்ஒளி பிரகாசிக்க தேவன் அனுமதித்தார் ஆனால் உலகத்திற்குக் கொடுக்கப்படவேண்டிய வெளிச்சம் அனைத்தையும் இவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. தேவன் அவருடைய இந்த ஊழியக்காரர்களின்மூலமாக, ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தின் இருளிலிருந்து மக்களை வெளியே நடத்திக்கொண்டிருந்தார் ஆனால் அவர்கள் சத்திக்கவேண்டிய எராளமான பெரும் தடைகள் இருந்தன. அவர் அவர்களைப் படிப்படியாக நடத்தினார். அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ளமுடிந்தது. முழுமையான வெளிச்ச மனைத்தையும் ஒரே தடவையில் பெற்றுக்கொள்ளுவதற்கு அவர்கள் ஆயத்தமாக இருக்கவில்லை. இருளில் இருந்தவர்களுக்குமுன் நடுப்பகலின் சூரியஒளி திடீரென்று தோன்றினால், அது அவர்களை எவ்விதமாகத் திரும்பச் செய்யுமோ, அதைப்போலவே இதுவும் இருந்திருக்கும். எனவே மக்கள் அதைப் பெற்றுக்கொள்ளும்வண்ணம், தேவன் அந்தத் தலைவர்களுக்கு வெளிச்சத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தினார். நூற்றாண்டுகளின் மேல் நூற்றாண்டுகளாக பின்னர் வரவிருந்த விசுவாசமிக்க ஊழியக்காரர்கள், சீர்திருத்தத்தின் பாதையில் மக்களை மேலும் நடத்தவேண்டியிருந்தது. (17)GCTam 104.2

  சமயக் கருத்துவேறுபாடு சபையில் இன்னமும் தொடர்ந்துகொண் டிருந்தது. மூன்று போப்புக்கள்(!) பதவிக்காகப் போட்டியிடவே, அவர்களுக் கிடையிலுண்டான போர், கிறிஸ்தவ உலகத்தில் குற்றங்களையும் பதைபதைப்புகளையும் உண்டுபண்ணினது. ஒருவர்மீது ஒருவர் குற்றம் சொல்லுவதில் அவர்கள் திருப்தியடையாமல், உலகப்பிரகாரமான ஆயுதங்களால் ஒருவருடன் ஒருவர் சண்டையிடவும் ஆரம்பித்தனர். ஒவ்வொருவரும் பணம்செலவிட்டு, ஆயுதங்களையும் போர்வீரர்களையும் தங்களைச் சுற்றிலும் அமைத்துக்கொண்டனர். இவைகளை நடத்தப் பணம் தேவையாக இருந்தது. அதை அடைந்துகொள்ளுவதற்காக, சபையின் ஆசீர்வாதங்கள், பரிசுகள், பதவிகள் யாவும் விற்பனைசெய்யப்பட்டன. குருமார்களும் அவர்களது மேலதிகாரிகளைப் பின்பற்றி, புனிதப் பொருட்களை விற்றுப் பணம் சம்பாதிக்கவும் தங்களுக்கு எதிரானவர்களைத் தாழ்த்தி, அவர்களுடன் போரிடவும், தங்களது வல்லமையைப் பலப்படுத்தும் வழிகளில் ஈடுபட்டனர். நாள்தோறும் அதிகரிக்கும் தைரியத்துடன் மதத்தின் பெயரால், நடைபெற்றிருந்த அக்கிரமங்களுக்கெதிராக, ஹஸ் இடிமுழக்கம் செய்யவே, கிறிஸ்தவ சமுதாயத்தை மேற்கொண்டிருக்கும் துன்பங்களுக்கு, ரோமன் கத்தோலிக்கத் தலைவர்கள்தான் காரணமாயிருக்கிறர்கள் என்று மக்கள் கூறினர்.(18)GCTam 104.3

  மறுபடியும் பிரேக் நகரில் இரத்தக்கலவரம் உண்டாகவிருப்பதுபோல் காணப்பட்டது. கடந்த காலத்தில்: “இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா?” (1இராஜா. 16:17) என்றதுபோல, தேவனுடைய ஊழியக்காரர் குற்றஞ்சாட்டப்பட்டார். அந்த நகரம் மறுபடியும் சமயச் சடங்கு மறுப்புச் சட்டத்திற்கு உட்பட்டது. எனவே, ஹஸ் தனது சொந்த கிராமத்திற்குச் சென்றார். அவர் மிகவும் நேசித்திருந்த அவரது பெத்லெகேம் ஆலயத்திலிருந்து உண்மையாகக் கொடுத்துவந்த சாட்சி முடிவை அடைந்தது. சத்தியத்திற்குச் சாட்சியாக அவர் தன் உயிரைவிடும் முன்னர், கிறிஸ்தவ சமுதாயத்தின் விசாலமான மேடைகளில் அவர் பேசவேண்டியதாக இருந்தது.(19)GCTam 105.1

  ஐரோப்பாவைச் சிதறடித்துக் கொண்டிருந்த தீமைகளை குணப்படுத்த கான்ஸ்டன்ஸ் என்னுமிடத்தில் ஒரு பொதுக்குழு கூட்டப்பட்டது, இந்தக்கூட்டம் சிகிஸ்மண்ட் என்ற பேரரசனின் விருப்பப்படி, மூன்று போட்டிப் போப்புகளில் ஒருவரான இருபத்து மூன்றாம் ஜான் என்பவரால் கூட்டப்பட்டது. போப் ஜான் என்பவரின் பண்பும் கொள்கைகளும் விசாரிக்கப்பட்டால், அந்நாட்களில் இருந்த சபை மனிதர்களைப் போலவே சன்மார்க்கமற்றதாக இருக்கும் என்று குருமார்களால்கூடக் கருதப்பட்டதினால், ஒரு ஆலேசனைக் கூட்டத்தை நடத்தவேண்டும் என்ற போப் ஜானின் கோரிக்கை வரவேற்பிற்கு வெகுதூரத்தில் இருந்தது. எப்படியிருந்தாலும், அவர் சிகிஸ்மண்டின் கருத்தை எதிர்க்கத் துணியவில்லை. (20)GCTam 105.2

  இந்த ஆலோசனைக்குழு நிறைவேற்ற விரும்பின முக்கியமான நோக்கம், சபையிலுள்ள சமயப் பிளவைக் குணப்படுத்தி, மதப்புரட்டை வேருடன் களையவேண்டும் என்பதாயிருந்தது. எனவே, ஒருவருக்கொருவர் எதிரான இரு போப்புகளும் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வரும்படி அழைக்கப்பட்டனர். அதைப்போலவே, புதிய கருத்துக்களைப் பிரசங்கம் செய்வதில் முன்னணியிலிருந்த ஹஸ்ஸும் அதன்முன் தோன்றும்படி அழைக்கப் பட்டார். முன்சொல்லப்பட்டவர்கள் அவர்களது சொந்தப் பாதுகாப்பை எண்ணி நேரடியாக வராமல், அவர்களது பிரதிநிதிகளின் மூலமாகத் தோன்றினார்கள். தன்னை பதவியிலிருந்து நீக்கும் இரகசியமான நோக்கத்துடன் பேரரசன் இருக்கிறான் என்னும் சந்தேகத்துடனும், தான் அணிந்திருந்த மூன்றடுக்குக் கிரீடத்தின் மேன்மைக்குக் களங்கம் உண்டுபண்ணும்படியாக தான் செய்த தீயசெயல்களுக்கான கணக்கை ஒப்புவிக்க வேண்டியதிருக்கும் என்ற பயத்துடனும், அதைப்போலவே அந்த கிரீடத்தை அடைந்து கொள்ளுவதற் காகச் செய்யப்பட்ட குற்றங்களைப்பற்றியும் கேட்கக்கூடும் என்ற எண்ணத் துடனும், மிக டாம்பீகமாக இந்தக் கூட்டத்தை ஏற்படுத்தின போப் ஜான் இருந்தார். அப்படியிருந்தும் பெரும் ஆடம்பரத்துடனும், சபையின் மேலான நிலையிலிருந்தவர்கள் புடைசூழ, ஒரு கூட்டம் சேவகர்கள் பின்தொடர, அவர் கான்ஸ்டன்ஸ் நகருக்குள் நுழைந்தார். அனைத்துக் குருமார்களும் மேலான அந்தஸ்திலிருந்த நகரமக்களும் நெருக்கமான கூட்டத்துடன் அவரை வரவேற்கப் புறப்பட்டுச்சென்றனர். நான்கு தலைமை நீதிபதிகளால் சுமக்கப்பட்ட, ஒரு தங்கத்தாலான பாதுகாப்புக்கூரை அவரது தலைக்குமேல் இருந்தது. வரவேற்பாளர்கள் அவரைச் சுமந்து முன்செல்ல, கர்தினால்களும் மேன்மக்களும் அணிந்திருந்த விலையுயர்ந்த உடைகளும், மாட்சிமைமிக்க காட்சியாக இருந்தது. (21)GCTam 105.3

  அதேசமயம் வேறொரு பயணி கான்ஸ்டன்ஸ் நகரை நெருங்கிக் கொண்டிருந்தார் ஹஸ்! அவர் தன்னைப் பயமுறுத்தியிருந்த அபாயங்களை உணர்ந்தவராக இருந்தார். அந்தப் பயணம் அவரை மரண மேடைக்கு நடத்திச்செல்லுகிறதென்ற உணர்வுடன், இனி ஒருபோதும் தனது நண்பர் களைச் சந்திக்கப்போவதில்லை என்பதுபோல் அவர்களிடமிருந்து பிரிந்து தனது பயணத்தை மேற்கொண்டார். அதுவுமல்லாமல், அவர் பொஹிமியா வின் அரசரிடமிருந்து பாதுகாப்பு நடத்துதல் கடிதம் பெற்றிருந்தும், பயணத்தின்போது மரணம் உண்டாகலாம் என்று அனுமானித்து, சிகிஸ்மண்ட் பேரரசனிடமிருந்தும் ஒரு கடிதத்தைப் பெற்றிருந்தார். (22)GCTam 106.1

  பிரேக்கிலிருந்த அவரது நண்பர்களுக்கு ஒரு கடிதத்தில்: “எனது சகோதர-சகோதரிகளே! அரசரிடமிருந்துபெற்ற ஒரு பாதுகாப்பு நடத்துதல் கடிதத்துடன், நான் ஏராளமான எனது சரீரப்பிராகாரமான எதிரிகளை சந்திக்கப் புறப்பட்டுச் செல்லுகிறேன். நான் சர்வவல்லமையுள்ள தேவனின் மீது, என் மீட்பருக்குள்ளாக முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவர் தமது முன்னறிவையும் ஞானத்தையும் என் வாயில் வைத்து, நான் அவர்களைத் தடுக்கவும், நான் சத்தியத்தில் பலமுடையவனாகும்படி அவர் எனக்குப் பரிசுத்தஆவியைத் தரவும், அதனால் நான் தைரியத் துடன் சோதனைகளையும், சிறையையும், அவசியமானால் ஒரு கொடூர மரணத்தையும் சந்திக்கவும், உங்களது ஆர்வமிகுந்த ஜெபங்களைக் கேட்டு, அவர் எனக்கு அருள்செய்வார். இயேசு கிறிஸ்து, அவரால் நேசிக்கப்பட்டவர்களுக்காகப் பாடுகளைச் சகித்தார். நாம் நமது இரட்சிப்பிற்காக எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்துக்கொள்ள, அவர் நமக்கு ஒரு முன்மாதிரியினை விட்டுச்சென்றிருக்கிறார் என்பதற்காக ஆச்சரியப்படவேண்டாமா? அவர் தேவன் நாம் அவரது சிருஷ்டிகள் அவர் கர்த்தர் நாம் அவரது ஊழியக்காரர்கள்; அவர் இந்த உலகத்தின் எஜமானர் நாம் பழிக்கிடமான அழிவுக்குரியவர்கள். அப்படியிருந்தும் அவர் பாடுகளைச் சகித்தார். நாம் ஏன் சகிக்கக்கூடாது? குறிப்பாக, பாடுகள் நம்மைத் தூய்மைப்படுத்துவதற்காக என்னும்போது, நாம் ஏன் அவைகளை அனுபவிக்கக்கூடாது? எனவே அருமையானவர்களே! எனது மரணம் அவரது மகிமைக்கு உதவக்கூடியதாக இருக்குமானால், எனக்கு ஏற்படக்கூடிய தொடர்ச்சியான எல்லா அபாயங்களிலும் அவர் என்னைத் தாங்கும்படி, அவை விரைவாக நிகழும்படி ஜெபியுங்கள். ஆனால் நான் எந்தவிதமான கறையும் இல்லாதவனாகத் திரும்பிவிட தேவனிடம் ஜெபிப்போமாக் அதாவது எனது சகோதரர்கள் பின்பற்றும்படியான சிறப்பான உதாரணமாக அவர்களுக்கு நான் இருக்கும்படியாக, சுவிசேஷத்தின் எந்த ஒரு உறுப்பையும் கட்டுப்படுத்தாதவனாயிருக்க ஜெபியுங்கள். ஒருவேளை உங்களால் ஒருபோதும் எனது முகத்தைக் காண முடியாமலாகிவிடலாம். ஆனால் என்னை உங்களுக்குத் திரும்பக் கொடுக்கவேண்டும் என்பது தேவதிட்டமாயிருந்தால், அவரது பிரமாணங்களைப்பற்றிய அறிவுடனும் அன்புடனும் நாம் முன்னோக்கிச் செல்லுவோமாக” என்று குறிப்பிட்டிருந்தார்.- Bonnechose, vol. 1, pp. 147, 148. (23)GCTam 106.2

  சுவிசேஷத்திற்குச் சீஷராக மாறிய ஒரு குருவானவருக்கு அவர் எழுதின வேறொரு கடிதத்தில், ஹஸ் தனது தவறுகளைப்பற்றி மிகஆழ்ந்த தாழ்மையுடன் பேசி, விலை உயர்ந்த ஆடைகளை அணிவதில் மகிழ்ச்சி அடைந்ததற்காகவும், வீணான அலுவல்களில் காலத்தைச் செலவிட்டதற் காகவும் வருந்தி எழுதினார். அதன்பின் உள்ளத்தைத்தொடக்கூடிய “உடமைகளையும் சொத்துக்களையும் சேர்ப்பதினால் உண்டாகும் ஆதாயங்களை நாடாமல், தேவனுடைய மகிமையையும் ஆத்துமாக்களின் இரட்சிப்பையும்பற்றி மனம் நிரப்பப்படட்டும். உங்களுடைய வீட்டை அழகுபடுத்துவதைவிட, ஆத்துமாவை அதிக அழகுபடுத்துவதில்எச்சரிக்கை யாக இருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுடைய ஆவியின் மாளிகையைப்பற்றிக் கவனமுள்ளவர்களாயிருங்கள். ஏழைகளிடம் அன்பும் தாழ்மையுமுள்ளவர்களாயிருங்கள் மேலான உணவுகளை விரும்பி உண்டு, வீணர்களாகாதிருங்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் திருத்தாவிட்டால், என்னைப்போல அமிதமானவைகளிலிருந்து விலகாவிட்டால், பயங்கரமான தண்டனைக்குள்ளாவீர்கள். எனது கோட்பாடுகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் இளம்வயதுமுதல் எனது போதனைகளைப் பெற்றிருக்கிறீர்கள். ஆகவே இதற்கும்மேலாக உங்களுக்கு எழுதுவது பயனற்றதாகும். நான் ஏதாவது மாயையில் அகப்பட்டு விழுந்திருந்தால், அவைகளை நீங்கள் பின்பற்றவேண்டாமென்று நமது கர்த்தரின் இரக்கங்களினால் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளுகிறேன்” என்ற எச்சரிப்புகளைச்சேர்த்து எழுதினார். கடித்தின் அட்டையில் “நான் மரித்துவிட்டேன் என்கிற நிச்சயத்தைப் பெறும்வரை இக்கடிதத்தைப் பிரிக்கவேண்டாம் என்று மன்றாடுகிறேன்” என்று எழுதியிருந்தார்.-Ibid., vol. 1, pp. 148-149. (24)GCTam 107.1

  பயணம் நெடுகிலும், தனது கோட்பாடுகள் எங்கும் பரவியிருப்பதுடன், அவைகள் ஆதரவுடன் போற்றப்பட்டிருப்பதையும் ஹஸ் கண்டார். அவரைச் சந்திப்பதற்கு மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு வந்திருந்தார்கள். சில பேரூர்களின் தெருக்களில் நீதிபதிகள் அவருடன் சேர்ந்து சென்றனர். (25)GCTam 108.1

  ஹஸ் கான்ஸ்டன்ஸ் நகரத்திற்கு வந்ததும், அவருக்கு பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டது. பேரரசன் கொடுத்திருந்த பாதுகாப்பு நடத்துதல் கடிதத்துடன் அவருக்கு மேலும் பாதுகாப்பு கொடுக்கப்படுமென்ற பேப்புவின் நேரடியான வாக்குறுதியும் கொடுக்கப்பட்டது ஆனால் திரும்பத்திரும்பச்சொல்லப்பட்ட இந்தப் பாதுகாப்பு அறிவிப்புகளையெல்லாம்மீறி, போப், கர்தினால்களின் உத்தரவின்படி, அந்தச் சீர்திருத்தவாதி கைது செய்யப்பட்டு ஒரு அசுத்தமான சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ரைன் நதியின் மீதிருந்த ஒரு பலமான கோட்டையில் அவர் வைக்கப்பட்டார்.—Ibid., vol. 1, p. 247. (26)GCTam 108.2

  தனது துணிகரமான மீறுதலின் காரணமாக, அதிகமான ஆதாயத்தை அடையமுடியாத போப்பும் அதற்குப்பின் விரைவில் அதே இடத்தில் சிறைவைக்கப்பட்டார்! கொலைகளையும், சொல்லக்கூடாத மிகக் கேவலமான குற்றங்களைச் செய்தாரென்பது அந்த ஆலோசனைக்குழுவின் முன் மெய்ப்பிக்கப்பட்டது. எனவே, மூன்றடுக்கு கிரீடம் நீக்கப்பட்டு, அந்த போப்பு சிறைக்குள் தள்ளப்பட்டார். போப்புகளுக்கு எதிரானவர்களும் நீக்கப்பட்டு, வேறு ஒரு போப் நியமிக்கப்பட்டார். (27)GCTam 108.3

  சீர்திருத்தம் வேண்டுமென்று குருமார்களின்மீது ஹஸ் சுட்டிக் காட்டியிருந்த குற்றங்களைவிட அதிகமான பெரும் குற்றங்களைச் செய்த போப்புவைகுற்றவாளியாக தீர்த்த அதே ஆலோசனைக்குழுசீர்திருத்தவாதியை நசுக்குவதற்குப் புறப்பட்டது. ஹஸ்ஸின் சிறைவைப்பினால் பொஹிமியாவில் சீற்றமெழுந்தது. வல்லமைமிக்க மேன்மக்கள் இந்தத் தவறான செயலுக்காக ஆலோசனைக்குழுவிற்குத் தங்களது உறுதியான எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவரது பாதுகாப்பு நடத்துதல் கடிதத்தை மீறியதில் எரிச்சலடைந்த பேரரசன் ஹஸ்ஸுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் சீர்திருத்தவாதியின் எதிரிகள், தீயநோக்கமுடையவர்களாகவும், தீர்மானமுடையவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பேரரசனின் தவறான எண்ணங்களுக்கும், பயங்களுக்கும், சபையின்மீதுள்ள வைராக்கியத்திற்கும் வேண்டுகோள் விடுத்தனர். மதப்புரட்டருடனுள்ள விசுவாசத்தில் இல்லாமல் இருப்பதற்கு அவருக்கு முழுமையான சுதந்திரம் உண்டு என்றும், அந்த ஆலோசனைக்குழு பேரரசனுக்கு மேலானதாக இருந்து, அவரை அவரது வாக்குறுதியிலிருந்து விடுதலைசெய்ய, அதனால் முடியுமென்பதையும் மெய்பிக்க, மிக நீண்ட வாக்குவாதங்களைக் கொண்டுவந்து, பேரரசனை மேற்கொண்டது.—Jacques Lenfant, History of the Council of Constance, vol. 1, p. 516. (28)GCTam 108.4

  இருட்டறையின் ஈரம், அசுத்தமான காற்று ஆகியவை கிட்டத்தட்ட சாகக்கூடிய ஒரு நோயை ஹஸ்ஸிற்குக் கொண்டுவந்தது. நோயாலும், சிறையினாலும் பலவீனமடைந்திருந்த ஹஸ், இறுதியில் ஆலோசனைக் குழுவிற்குக் கொண்டுவரப்பட்டார். தன்னுடைய கௌரவமும் நல்ல விசுவாசமும் அவரைக் காக்கும் என்று உறுதிமொழி கொடுத்திருந்த அதே பேரரசனின்முன், அவர் சங்கிலிகளினால் பிணைக்கப்பட்டவராக நின்றார். அவரைப்பற்றிய நீண்ட விசாரணையின்போது, அவர் சத்தியத்தை உறுதியாகத்தாங்கி, கூடிவந்திருந்த அரசு, சபை ஆகியவைகளின் கௌரவ மிக்கவர்களின் கூட்டத்தின்முன், அதன் சபைத்தலைமைக்கு எதிராகவும், ஊழல்களுக்கு எதிராகவும் தனது பக்திவிநயமும் விசுவாசமுமிக்க எதிர்ப்பைத் தெரிவித்தார். தனது கோட்பாட்டை மறுத்து அறிக்கைசெய்தல், அல்லது சாதல் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்துகொள்ளும்படி அவரிடம் கேட்கப்பட்டபோது இரத்தசாட்சியாகுதல் என்ற முடிவை ஏற்று மரணமடைய அவர் ஒப்புக்கொண்டார். (29)GCTam 109.1

  தேவ கிருபை அவரைத் தாங்கியது அவரது இறுதித் தீர்ப்பிற்கு முன்னான அவரது பாடுகள் நிறைந்த வாரங்களில், பரலோக சமாதானம் அவரது ஆத்துமாவை நிரப்பியது. “சிறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட எனது கரத்துடன், நான் எனது மரணதண்டனை நிறைவேறும் என்பதை எதிர்பார்த்து, ஒரு சிநேகிதருக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இயேசு கிறிஸ்துவின் உதவியுடன் மறுபடியும் வருங்கால வாழ்க்கையின் சுவைமிக்க சமாதானத்தில் நாம் சந்திக்கும்போது, தேவன் என்மீது எப்படி இரக்கம் காட்டியிருக்கிறார் என்பதையும், எனது சோதனைகளுக்கும், விசாரணைகளுக்கும் மத்தியிலும் அவர் எவ்வளவாக வல்லமையுடன் என்னைத் தாங்கி இருக்கிறார் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளுவீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.-Bonnechose, vol. 2, p. 67. (30)GCTam 109.2

  மெய்யான விசுவாசத்தின் வெற்றியை, அவர் அவரது இருட்டறை யின் சோகத்தின்முன் கண்டார். அவரது கனவில் சுவிசேஷத்தைப் பெற்றிருந்த பிரேக் நகர ஆலயத்திற்கு அவர் திரும்பி வந்து, அதன் சுவரில் வரைந்திருந்த கிறிஸ்துவின் ஓவியங்களை போப்புவும் அவரது பேராயர்களும் அழிப்பதைக் கண்டார். இக்காட்சியால் அவர் ஆழ்ந்த மனவேதனைக்குள்ளானார் ஆனால் மறுநாள் அநேக ஓவியர்கள் வந்து மிகத் தெளிவான வண்ணங்களில் முன்னிருந்த அளவுகளைவிடப் பெரிய அளவுகளில் கிறிஸ்துவின் உருவங்களை மேலும் அதிகமாக வரைந்ததைக் கண்டபோது, அவரது துயரம் மகிழ்ச்சியாக மாறிற்று. அவர்களது வேலை முடிந்ததும் அந்த ஓவியர்களைச் சூழ்ந்திருந்த கூட்டத்தினரை அவர்கள் நோக்கி, உற்சாகத்துடன் “இப்பொழுது போப்புமார்களும் பேராயர்களும் வரட்டும்! இனிமேல் அவர்களால் ஒருபோதும் அழிக்க இயலாது!” என்றனர். இந்தக் கனவைப்பற்றி சீர்திருத்தவாதி எடுத்துக்கூறும்போது: “கிறிஸ்துவின் உருவத்தை ஒருபோதும் சிதைக்க இயலாது என்பதில் நான் நிச்சயமுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார். “அவர்கள் அதை அழிக்க விரும்பினார்கள் ஆனால் என்னைவிட மேலான அருளுரையாளர்களால், அது மனிதர்களின் இதயங்களில் புதிதாகப் பதிக்கப்படும்” என்றார்.—D’Aubigne, b. 1, ch. 6. (31)GCTam 110.1

  கடைசியாக, அவர் ஆலோசனைக் குழுவின்முன் கொண்டுவரப் பட்டார். பேரரசன், பேரரசனின் இளவரசர்கள், அரசாங்க உதவியாளர்கள், கர்தினால்கள், பேராயர்கள், குருமார்கள் ஆகியோரின் கூட்டமாக இருந்த அந்த நாள் பார்வையாளர்களாக வந்திருந்தவர்களால் நிறைந்து, மிகவும் ஒளிமிக்க கூட்டமாக இருந்தது. மனசாட்சியின் விடுதலையை காத்துக்கொள்ளுவதற்காக நடந்த நீண்ட போராட்டத்தில், ஏற்பட உள்ள முதல் தியாகத்திற்குச் சாட்சியாக இருக்கும்படி, கிறிஸ்தவ ஆளுகையின் சகல இடங்களிலிருந்தும் மக்கள் வந்து கூடியிருந்தனர். (32)GCTam 110.2

  அவரது இறுதிமுடிவை அறிவிக்கும்படியாக அவர் அழைக்கப்பட்ட போது தனது முடிவை மாற்ற முடியாது என்று ஹஸ் அறிவித்து, துளைக்கும் அவரது பார்வையால் தனது வாக்குறுதியான வார்த்தையை வெட்கமின்றி மீறின அரசனைப்பார்த்து: பொதுமக்களின் விசுவாசத்தின் கீழும், இங்குள்ள பேரரசனின் பாதுகாப்பிலும், தனது சுதந்திரமான மனவிருப்பத்தின்படி ஆலோசனைக்குழுவின் முன்பாகத் தான் தோன்றியதாகவும், தனது முடிவை மாற்ற முடியாது என்றும் அறிவித்தார்.-Bonnechose, vol. 2, p. 84. அனைவருடைய கண்களும் தன்னை நோக்கித் திரும்பியபோது, சிக்மண்ட் அவர்களின் முகம் சிவந்தது. (33)GCTam 110.3

  தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, கேவலப்படுத்துதல் என்ற சடங்கு ஆரம்பமானது! பேராயர்கள் ஆசாரிய உடையை அணியும் விதத்தில், அவர்களது கைதிக்கு உடை அணிவித்தனர். குருமாருக்குரிய அவரது உடையை அவர் நீக்கியபோது, அவமானத்தைக் காட்டும்படியாக நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏரோதுக்குமுன் கொண்டுசெல்லப்பட்டபோது, ஒரு வெள்ளை அங்கி தரிப்பிக்கப்பட்டார் என்றார்.—Ibid., vol. 2, p. 86. பின்வாங்கும்படியாக அவர் மறுபடியும் கேட்டுக்கொள்ளப்பட்டபோது, மக்களைப் பார்த்து: நான் வேறு எந்த முகத்துடன் பரலோகத்தைப் பார்க்க வேண்டும்? நான் திரள்கூட்டமான மனிதர்களுக்கு எவ்விதமாகத் தூய்மையான சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேனோ அவர்களை என்னால் வேறு எவ்விதமாகப் பார்க்கமுடியும்? இல்லை! இப்பொழுது மரணத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் எனது பலவீனமான இந்த உடலைவிட, அவர்களின் மீட்பை மேலானதாகக் கருதுகிறேன் என்றார். அந்தச் சடங்கின் ஒவ்வொரு பகுதியாக ஒவ்வொரு பேராயரும் ஒரு சாபத்தைக் கூறினார்கள். இறுதியாக அவரது சிரசின்மீது பயங்கரமான பேய்களின் உருவங்கள் வரையப்பட்டு, மதப்புரட்டர்களின் தலைவன் என்று பொறிக்கப்பட்ட எழுத்துக்களுள்ள, ஒரு கிரீடத்தை(அல்லது பட்டயத்தை) அவரது சிரசில் சூட்டினார்கள். “எனக்காக முள்முடியைச் சுமந்த கர்த்தாவே! இந்த அவமானமிக்க கிரீடத்தை உமக்காக நான் அணிந்துகொள்ளுகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். (34)GCTam 111.1

  அவர் இவ்விதமாக நடத்தப்பட்டபோது, குருமார்கள் அவரது ஆத்துமாவைச் சாத்தானுக்குப் படைத்தார்கள். ஹஸ் வானத்தை அண்ணாந்து பார்த்து, வியப்புடன்: “கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய ஆவியை உமது கரத்தில் வைக்கிறேன் ஏனெனில் நீர் என்னை மீட்டிருக்கிறீர்” என்று கூறினார்.—Wylie, b. 3, ch. 7. (35)GCTam 111.2

  அதற்குப்பின்னர், மரணதண்டனை நிறைவேற்றப்படும்படியாக அவர் மதச்சார்பற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, மரணதண்டனை நிறை வேற்றப்படுமிடத்திற்கு நடத்தப்பட்டார். ஆயுதம்தாங்கிய நூற்றுக்கணக்கான மனிதர்களும், விலையுயர்ந்த ஆடைகளுடனுள்ள குருமார்களும், பேராயர்களும், கான்ஸ்டன்ஸ் நகர மக்களும் நிரம்பிய ஊர்வலம் சென்றது. அவர் கம்பத்துடன் கட்டப்பட்டபின்னர், நெருப்பு மூட்டுவதற்கு அனைத்தும் தயாரானபோது, அவரது தவறை மறுதலிக்கும்படியாக அவர் மறுபடியும் எச்சரிக்கப்பட்டார். “எந்தத் தவறுகளை நான் மறுப்பேன்? நான் குற்றமில்லாதவன் என்பது எனக்குத் தெரியும்! நான் எழுதினவைகளும் பிரசங்கித்தவைகளுமாகிய அனைத்தும் பாவத்திலிருந்தும் அழிவிலிருந்தும் காக்கும்படிச் செய்யப்பட்டவை. எனவே நான் எழுதினவைகளையும், பிரசங்கித்த சத்தியத்தையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னுடைய இரத்தத்தினால் உறுதிப்படுத்துகிறேன்” என்றார்.--Ibid., b. 3, ch. 7. (36)GCTam 111.3

  அவரைச் சுற்றிலும் வைக்கப்பட்ட நெருப்புத்தழல்கள் உயர்ந்த போது. நித்தியமாக அவரது சத்தம் மௌனமடையும்வரை அவர், இயேசுவே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும் என்று பாடத் துவங்கினார். (37)GCTam 112.1

  அவரது வீரத்தைக் கண்டு அவரது எதிரிகளுங்கூடத் திகைப் படைந்தனர். ஹஸ் இரத்தசாட்சியானதுபற்றி வைராக்கியமிக்க போப்பு மார்க்கத்தைச் சேர்ந்த ஒருவர்: “ஹஸ்ஸும் அவருக்குப் பின் விரைவில் இறந்த ஜெரோமும், அவர்களது கடைசி மணிநேரம் வந்தபோது, இருவரும் ஒரே எண்ணமுடையவர்களாக இருந்தனர். அவர்கள் ஒரு திருமண விருந்துக்குச் செல்லுவதுபோல், தங்களை நெருப்புக்கு ஆயத்தம்செய்தனர். வேதனையைப்பற்றி அவர்கள் அழுது புலம்பவில்லை. நெருப்புத்தழல்கள் உயர்ந்தபோது, அவர்கள் தெய்வீகப்பாடல்களைப் பாடத்தொடங்கினார்கள். அவர்களது பாடல்களை, நெருப்பின் பயங்கரத்தால் நிறுத்தமுடியவில்லை” என்று விவரித்தார்.--Ibid., b. 3, ch. 7.(38)GCTam 112.2

  ஹஸ்ஸின் உடல் எரிந்து சாம்பலானது அந்த இடத்திலிருந்து அந்தச் சாம்பலை அள்ளி, ரைன் நதியில் போட்டார்கள். அங்கிருந்து அது சமுத்திரத்திற்குச் சென்றது. அவர் பிரசங்கித்த சத்தியத்தை வேருடன் பிடுங்கிவிட்டோமென்று அவரை உபத்திரவப்படுத்தினவர்கள் வீணாகக் கற்பனை செய்துகொண்டார்கள். அன்று கடலில் கலந்த அந்தச் சாம்பல்கள், பூமியிலுள்ள எல்லா நாடுகளுக்கும் விதைக்கப்பட்ட விதைகளாக மாறி, அறியப்படாத நாடுகளில் சத்தியத்தின் சாட்சிகளான கனிகளை ஏராளமாகக் கொடுக்கும் என்பதை அவர்கள் கனவிலும் கருதவில்லை. கான்ஸ்டன்ஸ் ஆலோசனை அரங்கத்தில் பேசின அந்த சத்தமானது, வரும் காலம் நெடுகிலும் கேட்கும்படியான எதிரொலியை எழுப்பினது. ஹஸ் இப்போது இல்லை ஆனால் அவர் இறந்ததற்குக் காரணமான சத்தியம் ஒருபோதும் அழியவில்லை. அவரது விசுவாசத்தின் உதாரணமும், கான்ஸ்டனஸ் நகரமும், திரள்கூட்டமானவர்களை சித்திரவதை மரணம் ஆகியவைகளின் முன் சத்தியத்திற்காக உறுதியாக நிற்கும்படி தைரியப்படுத்தும். ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தின் துணிகரமான விசுவாச மீறுதல்களையும், கொடூரத்தையும் அவரிடம் நிறைவேற்றின மரணதண்டனை உலகம் முழுவதற்கும் தெளிவான ஒரு காட்சியாக்கிவிட்டது. சத்தியத்தின் எதிரிகள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே, அவர்கள் வீணாக அழிக்க எண்ணிய காரியத்தைத் தீவிரமாக்கிக்கொண்டு சென்றனர்! (39)GCTam 112.3

  அப்படியிருந்தும் மற்றுமொரு சிதை கான்ஸ்டன்ஸில் ஏற்படுத்த வேண்டியதாக இருந்தது. மற்றொரு சாட்சியின் இரத்தம் சத்தியத்திற்காக சாட்சிபகர்ந்தாக வேண்டும். ஆலோசனைக்குழுவிற்கு ஹஸ் சென்றபோது, அவரை வழியனுப்பின ஜெரோம் அவரை தைரியத்துடனும் உறுதியுடனும் இருக்கும்படி ஊக்கப்படுத்தி, அவர் ஏதாவது ஆபத்துக்குள் வீழ்ந்துவிட்டால், அவரது உதவிக்கு தானே பறந்துவருவதாகக் கூறியிருந்தார். சீர்திருத்தவாதியின் சிறைவைப்பைக் கேட்டதும், விசுவாசமிக்க அவரது சீடரான ஜெரோம் தனது வாக்குறுதியை நிறைவேற்ற உடனடியாக ஆயத்தமானார். பாதுகாப்பு நடத்துதல் கடிதம் எதுவுமின்றி, அவர் ஒரே ஒரு துணையுடன் கான்ஸ்டன்ஸுக்கு புறப்பட்டார். அங்கு அவர் சென்றபோது, ஹஸ்ஸின் விடுதலைக்காக எதுவும் செய்யமுடியாதவராக தன்னையே ஆபத்துக்குள்ளாக்கிக்கொண்டார். அவர் அந்த நகரத்தைவிட்டு ஓடினார். ஆனால் வீட்டை நோக்கிச்சென்ற பயணத்தில் அவர் கைதுசெய்யப்பட்டு, சங்கிலிகளால் கட்டப்பட்டவராக, போர்வீரர்களின் கூட்டத்தின் கட்டுப்பாட்டில் திரும்பக் கொண்டுவரப்பட்டார். ஆலோசனைக்குழுவின் முன்பாக முதல் தடவையாக தோன்றி, அவர்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கெதிராக அவர் பதில்கூற முயன்றபோது, ‘அவனை சுட்டு எரித்துக்கொல்லுங்கள்! சுட்டெரித்துக் கொல்லுங்கள்!!” என்ற சத்தம் மேலிட்டது.—Bonnechose, vol. 1, p. 234. அவருக்கு மிகுந்த வேதனையைக் கொடுக்கும் விதத்தில் அவர் சங்கிலியால் கட்டப்பட்டு இருட்டறையில் வைக்கப்பட்டு, வெறும் ரொட்டியினாலும் தண்ணீரினாலும் மட்டுமே போஷிக்கப்பட்டார். (40)GCTam 113.1

  சிலமாத சிறையிருப்பில் அவரைக் கொடூரமாக நடத்தியபின், அவரது உயிரைப் போக்கிவிடக்கூடிய ஒரு நோய் அவரைப் பயமுறுத்தியதை அவரது விரோதிகள் அறிந்து, அவர் அவர்களிடமிருந்து தப்பிவிடக்கூடும் என்று பயந்து, ஒரு வருட சிறையிருப்பிற்குப் பின்னர், அவரைச் சற்று மென்மையாக நடத்தினார்கள். போப்பு மார்க்கத்தினர் எதிர்பார்த்ததுபோல் ஹஸ்ஸின் மரணத்தினால் ஒன்றும் நிகழவில்லை. அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு நடத்துதல் கடிதத்தை மீறியது கோபம் எனும் பெரும் புயலை உண்டுபண்ணினதால், ஜெரோமை எரிப்பதைவிட, அவரைப் பின்வாங்கும்படி வற்புறுத்துவது ஆபத்தில்லாத மார்க்கமாக இருக்கும் என்று ஆலோசனைக்குழு எண்ணினது. அவர் அரங்கத்திற்குக் கொண்டுவரப்பட்டு, ஒன்று தனது கோட்பாட்டை மறுத்துக்கூறவேண்டும் அல்லது சிறையில் சாகவேண்டும் என்று சொல்லப்பட்டது. அவர் அனுபவித்த கடுமையான பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவரது சிறையிருப்பின் ஆரம்பத்தில் மரணம் நேரிட்டிருந்தால், அது அவருக்குக் காட்டப்பட்ட இரக்கமாக இருந்திருக்கும். ஆனால் சிறைச்சாலை வாழ்க்கையில் உண்டான துன்பங்களின் நடுக்கத்தாலும், பீடித்த நோயினாலும், கவலையினாலும், நிச்சயமற்ற தன்மையினாலும், உண்டான சித்திரவதைகளினாலும், நண்பர் களிடமிருந்து பிரிக்கப்பட்டதினாலும், ஹஸ்ஸின் மரணத்தினால் உண்டான மனச்சோர்வினாலும், ஜெரோமின் தைரியம் அவரைவிட்டுச் சென்றது. அதனால் அவர் ஆலோசனைக்குழுவிற்குக் கீழ்ப்படிய இணங்கினார். கத்தோலிக்க விசுவாசத்தைப் பற்றிக்கொள்ளவும் விக்ளிஃப், ஹஸ் ஆகியோர் போதித்த பரிசுத்தமான சத்தியங்கள் நீங்கலாக, மற்ற கோட்பாடுகளைக் குற்றப்படுத்தின ஆலோசனைக் குழுவின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளுவதாகவும் அவர் வாக்குறுதி கொடுத்தார்.-Ibid., vol. 2, p. 141. (41)GCTam 113.2

  இந்த அவசர நிலைமையைச் சமாளிக்கும் முயற்சியில், ஜெரோம் அவரது மனசாட்சியின் குரலை மௌனமடையச்செய்து, தன்னை அழிவிலிருந்து காக்க முயன்றார். ஆனால் அவர் இருட்டறையின் தனிமையில், தான் செய்தது என்ன என்பதைத் தெளிவாகக் கண்டார். அவர் ஹஸ்ஸ பின் தைரியத்தையும் நேர்மையையும், தான் சத்தியத்தை மறுதலித்ததையும் ஒப்பிட்டு சிந்தித்துப் பார்த்தார். அவர் யாருக்கு ஊழியம்செய்வதாக வாக்குறுதி கொடுத்திருந்தாரோ, அந்த தெய்வீக எஜமானன் தனக்காக சிலுவையில் மரணத்தைச் சகித்ததையும் எண்ணிப்பார்த்தார். அவர் பின்வாங்கிப்போவதற்குமுன், அவரது எல்லாப் பாடுகளுக்கும் இடையில், தேவனுடைய ஆதரவு என்ற வாக்குத்தத்தத்தையும் ஆறுதலையும் கண்டிருந்தார். இப்போது குற்ற உணர்வினால் உண்டான வருத்தமும், சந்தேகமும் அவரது ஆத்துமாவை வதைத்தன. ரோமன் கத்தோலிக்க நிர்வாகத்துடன் சமாதானத்தைக் கண்டடையுமுன், அவர் மேலும் பல பின்வாங்குதலைச் செய்தாக வேண்டும் என்பதை அறிந்தார். அவர் நுழைந்துகொண்டிருக்கும் பாதை முழுமையான மருள விழுகையில்தான் சென்று முடிவடையும். ஒரு சொற்பகாலப் பாடுகளிலிருந்து தப்பிக்கும்படியாக, அவர் தனது கர்த்தரை மறுதலிக்கமாட்டார் என்ற அவரது தீர்மானம் உறுதியாக எடுக்கப்பட்டாகிவிட்டது. (42)GCTam 114.1

  விரைவில் அவர் மறுபடியும் ஆலோசனைக்குழுவின் முன் கொண்டு வரப்பட்டார். அவரது பணிவு அவரது நீதிபதிகளைத் திருப்திப்படுத்தாம லிருந்தது. ஹஸ்ஸின் இரத்தத்தினால் தூண்டப்பட்ட அவர்களது இரத்தப் பசி புதிய இரைக்காகக் குரலெழுப்பிக்கொண்டிருந்தது. சத்தியம்பற்றிய ஒரு நிபந்தனையற்ற சரணாகதியின் மூலமாகமட்டுமே, ஜெரோமினால் அவரது உயிரைக் காத்துக்கொள்ள முடியும். ஆனால் அவர் தமது விசுவாசத்தைப் புதுப்பித்து, உறுதிசெய்து, இரத்தசாட்சியான அவரது சகோதரரைப் பின்பற்றி, அக்கினிப் பிரவேசம் செய்யத் தீர்மானித்திருந்தார்! (43)GCTam 114.2

  அவர், முன்பு மறுத்துச் சொன்னதைப் பின்னர் மறுத்து, சாகும் ஒரு மனிதனாக, தனது தற்காப்பை செயல்படுத்தத் தேவையான பக்தி விநயமான ஒரு வாய்ப்பை தேவையாகக் கருதியிருந்தார். அவரது பேச்சின் விளவுகளுக்குப் பயந்த குருமார்கள், அவருக்கு எதிராக, அவருக்குமுன் வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டின் உண்மையை அவர் ஒப்புக்கொள்ளவேண்டும் அல்லது மறுக்கவேண்டும் என்று வற்புறுத்தினர். அப்படிப்பட்ட கொடூரத்தையும் நீதியின்மையையும் ஜெரோம் எதிர்த்தார். “நீங்கள் என்னை முந்நூற்று நாற்பது நாட்கள் பயங்கரமான சிறையில் பூட்டிவைத்தீர்கள். அழுக்குகள், இரைச்சல்கள், துர்வாடை ஆகியவைகளுக்கிடையில் எனது தேவைகள் எதையும் நிறைவேற்றாமல் வைத்தீர்கள். அதன்பின், அழிவுக்குரிய விரோதிகளுக்குச் செவிசாய்த்து, நான் சொல்லுவதைக் கேட்பதற்குமறுத்து, நீங்கள் உங்கள் முன்பாக என்னைக் கொண்டுவந்திருக்கிறீர்கள். நீங்கள் மெய்யாகவே ஞானவான்களாகவும், உலகத்திற்கு ஒளியாகவும் இருந்தால், நீதிக்கு எதிராகப் பாவம் செய்யாமலிருப்பதற்கு கவனமுள்ளவர்களாக இருங்கள். என்னைப் பொறுத்தவரை நான் அழிவுக்குரிய ஒரு பலவீனன். எனது உயிர் அவ்வளவு முக்கியமானதல்ல. அநீதியான ஒரு தீர்ப்புச் செய்யாதீர்கள் என்று நான் கூறும்போது, உங்களுக்காகப் பேசுவதைவிட, எனக்காக நான் குறைவாகவே பேசுகிறேன்” என்றார்.—Ibid., vol. 2, pp. 146, 147. (44)GCTam 115.1

  அவரது வேண்டுகோள் இறுதியாக அனுமதிக்கப்பட்டது. சத்தியத்துக்கு எதிராகவோ அல்லது அவரது எஜமானின் மதிப்பைக் குறைக்கும்படியாகவோ பேசாதபடி, தேவ ஆவியானவர் தனது எண்ணங்களையும் வார்த்தைகளையும் கட்டுப்படுத்தவேண்டுமென்று ஜெரோம் தனது நீதிபதிகளுக்கு முன் முழந்தாளில் நின்று ஜெபித்தார் “என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்” (மத்தேயு 10:18- 20) என்று முதல்சீடர்களுக்குச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தம் அவருக்கு அந்த நாளில் நிறைவேறியது. ஜெரோமின் வார்த்தைகள் அவர்களது எதிரிகளிடத்திலுங்கூட ஆச்சரியத்தையும், பாராட்டுதலையும் எழுப்பியது. ஒரு வருடம் முழுவதிலும் வாசிக்கவும் பார்க்கவுங்கூட முடியாதபடி பெரும் உடல் உபாதையுடனும் மனக்கலவரத்தோடும் இருட்டறையாகிய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அப்படியிருந்தும் அவரது வாதங்கள் மிகத் தெளிவுடனும், வல்லமையுடனும் அவர் வாசிப்பதற்கு இடையூரற்ற வாய்ப்பைப் பெற்றிருந்தார் என்பதுபோல முன்வைக்கப்பட்டன. அநீதி மிக்க நீதிபதிகளினால், குற்றவாளிகள் எனத் தீர்ப்புச்செய்யப்பட்ட பரிசுத்த மனிதர்களின் நீண்ட பட்டியலை, அவரது பேச்சைக் கேட்டிருந்தவர் களுக்குச் சுட்டிக்காட்டினார். கிட்டத்தட்ட ஒவ்வொரு தலை முறையிலும் தங்களது காலத்திலிருந்த மக்களை உயர்த்த வகைதேடினவர்கள் பழிக்கப்பட்டுப் புறம்பாக்கப்பட்டனர். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் சிறப்பிக்கப்படுதலுக்குத் தகுதியுடையவர்கள் என்று காட்டப்பட்டனர். ஒரு அநீதியான நீதிமன்றத்தில், கிறிஸ்துவுங்கூட குற்றவாளியென்று தீர்ப்புச்செய்யப்பட்டார். (45)GCTam 115.2

  ஜெரோம் பின்வாங்கினபோது, ஹஸ் குற்றவாளி என்ற தீர்ப்பை சம்மதித்திருந்தார். ஆனால் இப்பொழுது அவர்: “எனக்கு ஹஸ்ஸைச் சிறுவயதிலிருந்தே தெரியும். நீதியும் பரிசுத்தமுமுள்ள ஒரு மிகச் சிறந்த மனிதராக அவர் இருந்தார். அவர் குற்றவாளியெனத் தீர்ப்புச் செய்யப்பட்டார். அவரது களங்கமின்மையுடன் நான் சாவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன். எனது எதிரிகளினாலும் பொய்ச்சாட்சிகளினாலும் ஆயத்தம்செய்யப்பட்டிருக்கும் வேதனைகளுக்கு முன்னிருந்தும் நான் பின்வாங்கமாட்டேன். ஒரு நாள்- எதினாலும் வஞ்சிக்கமுடியாத மாபெரும் தேவனுக்கு முன்பாக அவர்கள் செய்த வஞ்சகத்திற்குக் கணக்குக் கொடுக்கவேண்டியது வரும்” என்றார்.- Ibid., vol. 2, p. 151. (46)GCTam 116.1

  “எனது இளம் வயதிலிருந்து நான் செய்த பாவங்களனைத்திலும் விக்ளிஃப் அவர்களுக்கும் எனது ஆசிரியராயிருந்த இரத்தசாட்சியான ஜான் ஹஸ் அவர்களுக்கும் விதிக்கப்பட்ட அக்கிரமமான தண்டனையை அங்கீகரித்த, சாவுக்குரிய இடத்தில் நான் செய்த பாவத்தைப்போல் எனது மனதைப் பாரப்படுத்தி, மிகவும் வேதனை தரக்கூடிய பச்சாதாபத்தை உண்டுபண்ணினது வேறெதுவும் இல்லை என்று, சத்தியத்தை மறுத்தது பற்றிய சுய நிந்தனையை ஜெரோம் கூறினார். ஆம்! நான் அவமானத்தினால் உண்டான நடுக்கத்துடனும் சாவைப்பற்றிய பயத்தினாலும் அவர்களுடைய கோட்பாடுகளைப் பழித்துக்கூறினேன். எனவே, என்னுடைய பாவங்களை மன்னிக்கும்படி நான் சர்வவல்லமையுள்ள தேவனிடம், குறிப்பாக எனது வெறுக்கத்தக்க செயலுக்காக மன்னிப்புக்கேட்கிறேன். நீங்கள் விக்ளிஃ பையும் ஹஸ்ஸையும் அவர்கள் சபையின் கோட்பாடுகளை அசைத்தார்கள் என்பதற்காக அல்ல, சாதாரணமான குருமார்களின் ஊழல்களையும், அவர்களது டாம்பீகத்தையும், அகந்தையையும், சகலவிதமான கெட்ட பழக்கங்களையும் சுட்டிக்காட்டி, அவர்களை நெறிகெட்டவர்களென்று குறிப்பிட்டதினால் பழித்தீர்கள். மறுக்க முடியாதவைகளாயிருந்த, அவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட அனைத்தையும் நான் எண்ணி, அவர்களைப்போலவே நானும் அறிவிக்கிறேன்” என்று ஜெரோம் அவரது நீதிபதிகளைச் சுட்டிக்காட்டிக் கூறினார். (47)GCTam 116.2

  அவரது பேச்சு தடைசெய்யப்பட்டது. “இதற்கும் அதிகமான எந்தச் சான்று நமக்குத் தேவையாக உள்ளது? மிகவும் பிடிவாதமான இந்த மதப்புரட்டனை தூரக்கொண்டு செல்லுங்கள்” என்று குருமார் கள் கோபாவேசத்தால் நடுங்கிக்கொண்டு கூறினார்கள். (48)GCTam 117.1

  இந்தப் புயலினால் அசைக்கப்படாத ஜெரோம்: “என்ன? நான் சாவதற்குப் பயப்படுகிறேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?” என்று உரக்கக் கேட்டார். “மரணத்தைவிட மிகப் பயங்கரமான இருட்டறையில் நீங்கள் என்னை ஒரு வருடம் வைத்திருந்தீர்கள். துருக்கியனையும், யூதனையும், அஞ்ஞானியையும்விட மிகக் கேவலமான விதத்தில் நீங்கள் என்னை நடத்தினீர்கள். நான் உயிருடன் இருக்கும்போதே எழுத்தின்படி என் மாம்சம் என் எலும்புகளிலிருந்து அழுகி விழுந்துவிட்டது. அப்படியிருந்தும் நான் அதைப்பற்றிக் குறைகூறவில்லை. ஏனெனில், புலம்பல் ஒரு பலமான மனிதனையும் இதயத்திலும், ஆவியிலும் நோயுள்ளவனாக்கிவிடும். ஆனால் ஒரு கிறிஸ்தவனுக்கு எதிராக இழைக்கப்படும் காட்டுமிராண்டித்தனமான செயல்களை என்னால் உங்களிடம் உணர்த்திக்காட்டாமலிருக்க முடியாது” என்றார்.-Ibid., vol. 2, pp. 151-153. (49)GCTam 117.2

  மறுபடியும் கோபப் புயல் வீசியது. ஜெரோம் மிக விரைவாகச் சிறைக்குக் கொண்டுபோகப்பட்டார். அப்படியிருந்தும் அந்த அரங்கத்தில் இருந்த சிலரின்மீது அவரது வார்த்தைகள் ஆழ்ந்த உணர்த்துதலை உண்டுபண்ணினதால், அவர்கள் அவரது உயிரைக் காக்க விரும்பினார்கள். சபையின் மேன்மக்கள் அவரைச் சந்தித்து, ஆலோசனைக் குழுவிற்குக் கீழ்ப்படியும்படி அவரை வற்புறுத்தினார்கள். ரோமன் கத்தோலிக்க சபைக்கு எதிராக உள்ள அவரது எதிர்ப்பை மறுக்கும்போது, தரப்படவிருக்கும் பிரகாசமான வாய்ப்புகள் அவர்முன் வைக்கப்பட்டன் ஆனால் அவரது எஜமானனைப்போலவே, ஜெரோமும் உலகத்தின் மகிமையைத் தருவதாகச் சொல்லப்பட்டபோதும் அசையாமல் உறுதியாக இருந்தார்.(50)GCTam 117.3

  “நான் தவறில் இருக்கிறேன் என்பதைப் பரிசுத்த எழுத்துக்களில் இருந்து சுட்டிக்காட்டுங்கள் அப்போது நான் என் விசுவாசத்தை விட்டு விலகுகிறேன்” என்று அவர் கூறினார். (51)GCTam 117.4

  “பரிசுத்த எழுத்துக்கள்!” அவரது சோதனைக்காரர்களில் ஒருவர், “அதனால் மட்டுமே அனைத்தும் நியாயம் தீர்க்கப்படவேண்டுமா? சபை விளக்காதவரை யாரால் அதைப் புரிந்துகொள்ளமுடியும்” என்றார்.(52)GCTam 118.1

  “மனிதர்களின் சடங்காச்சாரங்கள் நமது மீட்பரின் சுவிசேஷத்தைவிட அதிகமான விசுவாச மதிப்பை உடையனவா? பவுல் நிருபம் எழுதினபோது, மனிதர்களின் சடங்காச்சாரங்களைக் கவனிக்காமல், வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் என்றே எச்சரித்தார்” என்றார் ஜெரோம். (53)GCTam 118.2

  “மதப்புரட்டன்! நான் இவ்வளவு நேரம் வரை உனக்காகப் பரிந்து பேசினதற்காக மனம் வருந்துகிறேன், நீ பேயினால் நெருக்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன்” என்பதே பதிலாக இருந்தது.— Wylie, b. 3, ch. 10. (54)GCTam 118.3

  குற்றவாளியெனத் தீர்க்கும் தண்டனை அவசரமாக அவருக்கு வழங்கப்பட்டது. ஹஸ் எங்கு உயிர்விட்டாரோ, அதே இடத்திற்கு, அவர் நடத்திச்செல்லப்பட்டார். அவரது முகம் மகிழ்ச்சியினாலும் சமாதானத் தினாலும் ஒளிவிட, அவர் மகிழ்ச்சியுடன் அவரது பாதையில் பாடிக் கொண்டே சென்றார். அவரது பார்வை கிறிஸ்துவின் மேலிருக்க, மரணம் அதன் பயங்கரத்தை இழந்திருந்தது. கொலைஞர்கள் நெருப்பு மூட்டும்படி அவருக்குப் பின்னால் அடியெடுத்து வைத்தபோது: “தைரியமாக முன்னுக்கு வாருங்கள்” என்று அந்த இரத்தசாட்சி அறைகூவி, “நெருப்பை என் முகத்திற்குமுன் பற்றவையுங்கள் நான் பயந்திருந்தால், இங்கு இருந்திருக்கமாட்டேன்” என்றார். (55)GCTam 118.4

  “சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தகப்பனே! என்மீது இரக்கமாயிரும் எனது பாவங்களை மன்னியும் ஏனெனில் நான் உம்முடைய சத்தியத்தை எப்போதும் நேசிக்கிறேன் என்பதை நீர் அறிந்திருக்கிறீர்” என்பது தீயின் நாக்குகள் உயர்ந்தபொழுது, அவர் சொன்ன ஜெபமாக இருந்தது. அவருடைய சத்தம் நின்றது. ஆனால் அவருடைய உதடுகள் ஜெபத்தைச் சொல்லிக்கொண்டிருந்தது.-Bonnechose, vol. 1, p. 234. (56)GCTam 118.5

  நெருப்பு அதன் வேலையைச் செய்துமுடித்தபோது, தரையின்மேல் தங்கியிருந்த அந்த இரத்தசாட்சியின் சாம்பல் சேகரிக்கப்பட்டு, ஹஸ்ஸின் சாம்பலைப்போலவே அதுவும் ரைன் நதியில் கொட்டப்பட்டது. இவ்வாறாக தேவனுடைய ஒளியைத் தாங்கினவர்கள் அழிந்தனர் ஆனால் அவர்கள் அறிவித்த சத்தியத்தின் ஒளி, வெளிச்சமாயிருந்த வீரர்களின் உதாரணம், அணைக்கப்படமுடியாததாக இருந்தது. அது, சூரியனை அதன் பாதையி லிருந்து திரும்பச்செய்து, காலை உதயமாவதையும் உலகின்மீது ஒளி வீசுவதையும் தடுக்கச்செய்யும் முயற்சியைப்போலிருந்தது! (57)GCTam 118.6

  ஹஸ்ஸின் மரண தண்டனையின் நிறைவேறுதல் பொஹிமியாவில் பெரும் பயங்கரத்தை உண்டுபண்ணினது. குருமார்களின் தீய எண்ணங்களுக்கும், பேரரசனின் நம்பிக்கைத் துரோகத்திற்கும் அவர் இரையாக வீழ்ந்துபோனார் என்பது அந்த நாடுமுழுவதிலும் உணரப்பட்டது. அவர் சத்தியத்தின் விசுவாசமிக்க ஆசிரியர் என்றும், அவருக்கு மரண தண்டனையை விதித்த ஆலோசனைக்குழுவினர் கொலைக்குற்றம் செய்தவர்கள் என்றும் பழிசுமத்தப்பட்டனர். அதற்குமுன் ஒருபோதும் இல்லாததைவிட இப்போது அவரது கோட்பாடுகள் மக்களின் கவனத்தை ஈர்த்தது. போப்புவின் கட்டளைகளினால் விக்ளிஃபின் எழுத்துக்கள் குற்றமுள்ளவைகள் என்று தீக்கிரையாக்கப்பட்டன் ஆனால் இந்த அழிவிற்குத் தப்பினவைகள் மறைவிடங்களில் இருந்து வெளியில் கொண்டுவரப்பட்டு, வேதாகமத்துடன் சம்பந்தப்படுத்தி வாசிக்கப்பட்டது. மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய பகுதிகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இவ்விதமாக, அநேகர் சீர்திருத்த விசுவாசத்தை ஏற்றுக்கொள்ளுவதற்கு வழிநடத்தப்பட்டனர். (58)GCTam 119.1

  ஹஸ்ஸைக் கொலைசெய்தவர்களால் அவரது நோக்கத்தின் வெற்றியை சாட்சியாகக்கண்டு, அமைதியாக நிற்கமுடியவில்லை. அந்த இயக்கத்தை ஒடுக்குவதற்குப் போப்புவும் அரசனும் ஒருமிக்கவே, சிக்மண்டின் படையானது பொஹிமியாவின்மீது ஏவப்பட்டது. (59)GCTam 119.2

  ஆனால் ஒரு விடுதலைவீரர் இந்தப் போருக்குப்பின் முற்றிலும் கண்களை இழந்த ஒருவர்—அப்படியிருந்தும் அவரது காலத்திலிருந்த போர்த் தளபதிகளில் மிகச் சிறந்த தளபதியாக இருந்தவர் சிஸ்கா (ணுஐளுமுயு) என்பவர் பொஹிமியர்களின் தலைவராக எழுப்பப்பட்டார். தேவனுடைய உதவியிலும், அவர்களது காரியத்திலிருந்த நீதியிலும் அவர்கள் நம்பிக்கைவைத்து, அவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட மிகப் பலம்பொருந்திய படைகளை வென்றனர். பொஹிமியாவை ஆக்கிரமிக்க திரும்பத்திரும்ப பேரரசனால் அனுப்பப்பட்ட படைகள் அவமானத்துடன் திருப்பிவிடப்பட்டன. ஹஸ்ஸைட்டிகள் (ஹஸ்ஸை பின்பற்றுவோர்) மரணபயத்திற்கும் மேலாக எழும்பினதால், அவர்களுக்கு எதிராக எதனாலும் நிற்க இயலவில்லை. சில வருடங்களுக்குப்பின் சிஸ்கா இறந்துவிட்டார் ஆனால் அவரது இடத்தை அவருக்குச் சமமான தைரியமும் திறமையுமிக்கவரும், சில வகைகளில் அவரைவிட அதிகமான தகுதியையுடைய தலைவருமாயிருந்தவரான ப்ரோக்கோப்பியஸ் என்பவர் நிரப்பினார். (60)GCTam 119.3

  குருடரான வீரர் இறந்துபோனதை அறிந்த பொஹிமியர்களின் எதிரிகள், அவர்கள் இழந்துபோன அனைத்தையும் மீட்டுக்கொள்ளச் சாதகமான வாய்ப்புக் கிட்டியுள்ளதென எண்ணினர். இப்பொழுது ஹஸ்ஸை ட்டிகளுக்கெதிராக ஒரு சிலுவைப் போரைப் பறைசாற்றி, ஒரு பெரும்படை மறுபடியும் பயங்கரமான தோல்வியை சந்திப்பதற்கென்றே ஏவப்பட்டது. மற்றொரு சிலுவைப்போர் பறைசாற்றப்பட்டது. ஐரோப்பாவில் போப்புவின் கீழிருந்த எல்லா நாடுகளிலிருந்தும் படைவீரர்கள் பணம் போர்க்கருவிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டன. போப்புமார்க்கத்தின் தரப்பில் அணிதிரண்ட திரள்கூட்டமானவர்கள் கடைசியாக மதப்புரட்டாளர்களான ஹஸ்ஸை ட்டிகளுக்கு ஒரு முடிவு உண்டாக்கப்படும் என்ற வாக்குறுதி தந்தனர். வெற்றியின்மீது நம்பிக்கை வைத்து, ஒரு பெரும்படை பொஹிமியாவிற்குள் நுழைந்தது. அவர்களைப் புறமுதுகிடச்செய்ய மக்கள் ஒன்றுதிரண்டனர். இந்த இரு அணிகளுக்கும் இடையில் ஒரு ஆறு குறுக்காகச் செல்லும் இடம்வரை அவை ஒன்றையொன்று நெருங்கின. கூட்டணியில் இருந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக இருந்தபோதிலும், ஹஸ்ஸை ட்டிகளைத் தாக்குவதற்கு முன்னேறுவதற்குப்பதிலாக, அவர்கள் ஆடாமல் அசையாமல் அவர்களை மௌனமாகப் பார்த்துக்கொண்டு நின்றனர். Wylie, b. 3, ch. 17. (61)GCTam 119.4

  பின்பு அவர்களைத் திடீரென்று பயம் பற்றிக்கொண்டது. காணப் படாத ஒரு வல்லமையினால் சிதறடிக்கப்பட்டதுபோல், ஒரு தாக்குதலை யும் நடத்தாமல், அந்த பலமிக்க படை சிதறிப்போனது. ஓடிப்போய்க் கொண்டிருந்தவர்களை ஹஸ்ஸைட் அணியினர் பின்தொடர்ந்து, அதிக எண்ணிக்கையானவர்களை வெட்டிச் சாய்த்தார்கள். வென்றவர்களுக்கு ஏராளமான கொள்ளைப்பொருட்கள் கிடைத்தன. எனவே அந்த யுத்தம் பொஹிமியர்களை நலிவடையச் செய்வதற்குப்பதிலாக செல்வந்தர் களாக்கியது. (62)GCTam 120.1

  சில வருடங்களுக்குப்பின், ஒரு புதிய போப்புவின்கீழ் மேலும் ஓர் சிலுவைப்போர் தொடங்கப்பட்டது. முதலில் செய்யப்பட்டதுபோல், ஐரோப்பாவில் போப்புவின் ஆளுகையின் கீழிருந்த சகல நாடுகளிலிருந்தும் மனிதர்களும், பொருட்களும் சேகரிக்கப்பட்டன. ஆபத்தான இந்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் மிகப் பெரியவையாக இருந்தன. ஒவ்வொரு சிலுவைப்போர் வீரனுக்கும் அவன் செய்திருந்த வெறுக்கத்தக்க பாவத்திற்கும் முழுப் பாவமன்னிப்புக் காப்பீடு செய்யப்பட்டது! இப்போரில் இறப்பவர்கள் அனைவருக்கும் பரலோகத்தில் பெரும் அன்பளிப்பு கிடைக்கும் என்றும் வாக்குத்தத்தம் செய்யப்பட்டது! போரில் உயிர் பிழைப்பவர்களுக்கு போர்க்களத்திலேயே கௌரவமும் பெரும் அன்பளிப்பும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. மறுபடியும் ஒரு பெரும்படை திரட்டப்பட்டு, அது எல்லையைக்கடந்து, பொஹிமியாவிற்குள் நுழைந்தது. (63)GCTam 120.2

  ஹஸ்ஸைட்டுகளின் படை, அவர்கள் முன் வீழ்வதுபோன்று பின்சென்றது. ஆக்கிரமிப்பாளர்கள் வெற்றியடைந்துவிட்டதாக எண்ணும் விதத்தில், தங்களுடைய நாட்டின் உட்புறத்திற்குள் வரும்வரை அது பின்வாங்கியது. கடைசியாக ப்ரோக்கோபியசின் படை நின்று, எதிரியின்மீது திரும்பிப் போரிட முன்சென்றது. சிலுவைப்போர்வீரர்கள் இப்பொழுது தங்களுடைய தவறுகளை உணர்ந்து, மேற்கொண்டு நிகழக்கூடிய ஆபத்தை எதிர்பார்த்து, தங்களது பாளையத்திலே இருந்தனர். ஹஸ்ஸை ட்டுகள் அவர்களது பார்வைக்குப் புலப்படாமல் இருந்தபோதே, அவர்கள் நெருங்கிவரும் சத்தத்தைக் கேட்டபோது, சிலுவைப்போர் வீரர்களிடையே ஒரு கலவரம் உண்டானது. இளவரசர்களும், தளபதிகளும், சாதாரண வீரர்களும் தங்களுடைய ஆயுதங்களை விட்டுவிட்டு, எல்லாத் திசைகளிலும் ஓடிப்போனார்கள். அந்தப் படையெடுப்பின் தலைவராயிருந்த போப்புவின் பிரதிநிதி, பயந்தும் சீர்குலைந்தும்போன அவருடைய படையை ஒன்றுதிரட்ட வீணாக முயன்றார். அவரது மிகமேலான முயற்சியின்போது, அவருங்கூட ஓடிப்போனவர்களின் அலைகளில் அடித்துச்செல்லப்பட்டார். அந்த முறியடிப்பு முழுமையானதாக இருந்தது. வெற்றியடைந்தவர்களின் கரங்களில் ஏராளமான கொள்ளைப் பொருட்கள் வீழ்ந்தன. (64)GCTam 121.1

  இவ்வாறாக, இரண்டாவது தடவையாக ஐரோப்பாவின் சக்தி மிக்க நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட படை, வீரமிக்க ஒரு கூட்டத்தினர், போரில் பழக்கப்பட்டு போருக்கென்று ஆயுதமணிந்தவர்களாக இருந்த மனிதர்கள், இதுவரை ஒரு பலவீனமான சிறிய நாட்டு வீரர்களிடமிருந்து ஒரு அடிகூட வாங்காமல் ஓடிப்போனது, தெய்வீக வல்லமையின் ஒரு தோற்றமாகவே அங்கிருந்தது. படையெடுத்தவர்கள் இயற்கைக்கு மேற்பட்ட ஒரு வல்லமையின் பயங்கரத்தினால் தாக்கப்பட்டனர். பார்வோனின் அணியைச் செங்கடலில் ஆழ்த்தினவர், கிதியோனின் முந்நூறு வீரர்களுக்கு முன்னால் மீதியானியர்களின் சேனையை ஓடச்செய்தவர், அகந்தைமிக்க அசீரியனின் படையை ஒரே இரவில் விழச்செய்தவர், அவரது எதிரிகளின் வல்லமையைப் பலவீனப்பட்டுப்போகும்படிச்செய்யத் தமது கரத்தை நீட்டினார். “உனக்கு விரோதமாகப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள் தேவன் அவர்களை வெறுத்தபடியினால், நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்” (சங்கீதம் 53:5) என்ற வாக்குத்தத்தம் நிறைவேறியது! (65)GCTam 121.2

  பலவந்தத்தினால் வெற்றியடையலாம் என எண்ணித் தோல்வி அடைந்த போப்புமார்க்கத் தலைவர்கள், இறுதியாக ராஜதந்திரத்தில் ஈடுபட்டனர். பொஹிமியர்களுக்கு மனசாட்சியின் சுதந்திரம் தருவதாகச் சொல்லி, உண்மையில் ரோமன் கத்தோலிக்க வல்லமையிடம் அவர்களைக் காட்டிக்கொடுக்கும் ஒரு சமரச ஏற்பாடு செய்யப்பட்டது. வேதாகமத்தை சுதந்திரமாகப் போதித்தல் திருவிருந்து ஆராதனையில் அப்பமும் ரசமும் சபை முழுவதற்கும் கொடுக்கப்படவேண்டும் என்பதான உரிமை ஆராதனையில் தாய்மொழியைப் பயன்படுத்துதல் மதச் சார்பற்ற எல்லா அமைப்புகளிலிருந்தும் குருமார்கள் நீக்கப்படவும் குற்றங்களைப் பொறுத்தமட்டில் குருமார்களையும் சாதாரண சபையின் அங்கத்தினர்களையும் ஒரேமாதிரி விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்குத் தருதல் என்பதான இந்த நான்கு கோரிக்கைகளையும் ரோமன் கத்தோலிக்க சபையுடனுள்ள சமாதானத்திற்கான முன்நிபந்தனையாக வைத்தனர். கடைசியாக, போப்புமார்க்க அதிகாரிகள் இந்த நான்கு நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்ள முன்வந்தாலும், அவைகளுக்கான விளக்கம் தரும் உரிமையும் அதன் சரியான அர்த்தம்பற்றித் தீர்மானிப்பதும் சபையிடம்தான் இருக்கவேண்டும் என்றனர்.—Wylie, b. 3, ch. 18. இதன் அடிப்படையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, போரினால் வெற்றியடைய முடியாததை ரோமன் கத்தோலிக்க சபையானது பாசாங்கினாலும், ஏமாற்றுவதினாலும் அடைந்தது. ஏனெனில் வேதாகமத்திற்கு அது தன் சொந்த விளக்கத்தைக் கொடுத்ததுபோலவே, ஹஸ்ஸைட்டுகளின் கோரிக்கைகளுக்கும் சொந்தமாக, அதாவது அதன் சொந்த நோக்கங்களுக்குப் பொருந்துகிறமாதிரி விளக்கத்தைக் திரித்துக் கொள்ள அதனால் முடிந்தது. (66)GCTam 121.3

  போப்பு மார்க்கம் தங்களுடைய சுதந்திரத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டதைக் கண்ட பொஹிமிய மக்களின் ஒரு பெரும் கூட்டத்தினரால் அந்த ஒப்பந்தத்திற்கு இணங்கமுடியாமலாகிவிட்டது. அவர்களுக் குள்ளே சண்டையும் இரத்தம் சிந்துதலும் உண்டாவதற்கு வழிகோலிட பிரிவினையின்மேல் பிரிவினைகள் உண்டாயின. இந்தச் சண்டையில் ப்ரோக்கோப்பியஸ் விழவே, பொஹிமியாவின் சுதந்திரமும் அழிந்தது. (67)GCTam 122.1

  ஹஸ், ஜெரோம் ஆகியோரைக் காட்டிக்கொடுத்த சிகிஸ்மண்ட இப்போது பொஹிமியாவின் அரசனானான். பொஹிமியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பேன் என்று சொல்லி எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தை மதிக்காமல், போப்பு மார்க்கத்தை ஸ்தாபிக்க அவன் புறப்பட்டான். ரோமன் கத்தோலிக்க நிர்வாகத்தின்கீழ் சேவை செய்ததினால் அவனுக்கு நன்மை எதுவும் உண்டாகவில்லை. அவனது வாழ்க்கையானது வேலைகளிலும் ஆபத்துக்களிலுமாக இருபது வருடங்கள் கழிந்தது. நீண்டகாலப் பயனற்ற போராட்டத்தினால் அவனது படைகள் வீணாயின் அவனது செல்வமும் கரைந்துபோனது. அவனது ஒருவருட ஆட்சியில் உள்நாட்டுக்கலகம் உச்சமடைந்தது. மிக மோசமான அரசன் என்று பின்வரும் சந்ததியார் அழைக்குமளவிற்கு அவப்பெயரைச் சுமந்தவனாக மரித்தான். (68)GCTam 122.2

  கொந்தளிப்புகள், சண்டைகள், இரத்தம் சிந்துதல் ஆகியவை களைப்படையச் செய்தன. மறுபடியும் அயல்நாட்டுப் படைகள் பொஹிமியாவின் மீது படையெடுத்து உள்ளே வந்தன. நாட்டைச் சிதறடிக்கும் உள்நாட்டுச் சமயப் பிரிவினைகள் தொடர்ந்தன. சுவிசேஷத்திற்கு விசுவாசமாக இருந்தவர்கள் இரத்தம்சிந்தும் உபத்திரவத்திற்கு உள்ளானார்கள். (69)GCTam 123.1

  அவர்களது முன்னைய சகோதரர்கள் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்துடன் இணைய முற்பட்டு, அதன் தவறுகளைத் தங்களுக்குள் கொண்டுவர, பூர்வீக விசுவாசத்தைப் பற்றிக்கொண்டிருந்தவர்கள் தங்களை ஒரு தனித்த சபையாக “ஐக்கிய சகோதரர்கள்” என்று அழைத்துக்கொண்டனர். இச்செயலானது எல்லா வகுப்பினரிடமிருந்தும் அவர்கள்மீது சாபத்தைக் கொண்டுவந்தது. அப்படியிருந்தும் இந்த உறுதியானது அசையாததாகவிருந்தது. அவர்கள் காடுகளுக்கும், குகைகளுக்கும் புகலிடம் தேடிச்செல்ல வற்புறுத்தப்பட்டபோதிலும், தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கவும் தேவனை ஆராதிப்பதில் ஒற்றுமைப்படவும் ஐக்கியப்பட்டார்கள். (70)GCTam 123.2

  இரகசியமாகப் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஊழியக்காரர்களின் வழியாக, சத்தியத்தை அறிவிக்கக்கூடிய, தங்களைப் போன்ற நோக்கமுடையவர்கள், உபத்திரவத்தினிமித்தம் அங்குமிங்குமாக, சிலர் இந்த நகரத்திலும் சிலர் அந்த நகரத்திலும் பிரிந்திருந்தனர் என்பதையும், வேதவாக்கியங்களை அஸ்திவாரமாகக் கொண்டு, அதன்மீது நின்றிருந்த ஒரு பழங்கால சபை, ஆல்ப்ஸ் மலைகளுக்கிடையில் இருக்கிறது என்பதையும் அறிந்துகொண்டனர்.—Wylie, b.3, ch. 19. இந்தச்செய்தி மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு வால்டென்னியக் கிறிஸ்தவர்களுடன் கடிதத்தொடர்பு ஆரம்பிக்கப்பட்டது. (71)GCTam 123.3

  கடுமையான இருளிலிருந்து விடியலை எதிர்நோக்கி கண்களை அடிவானத்திற்குத் திருப்பி கவனித்திருப்பவர்களைப்போல, உபத்திரவம் என்னும் இருளில் இருந்த பொஹிமியர்கள் சுவிசேஷத்திற்காகக் காத்து இருந்தனர். தீயநாட்கள் அவர்களது பங்காக இருந்தது. ஆனால் முதலில் ஹஸ்ஸும் அடுத்தபடியாக ஜெரோமும்: “காலை விடியுமுன் ஒரு நூற்றாண்டு சுழலும்” என்று திரும்பத்திரும்பச் சொன்ன வார்த்தைகளை அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். “நான் மரிக்கப்போகிறேன், தேவன் உங்களை நிச்சயமாகச் சந்தித்து, அவர் உங்களை வெளியே கொண்டுவருவார்” என்று யோசேப்பு அடிமைத்தனத்திலிருந்தவர்களுக்குச் சொல்லிய வார்த்தைகள் ஹஸ்ஸைட்டுகளுக்குச் (ஹஸ்ஸைப் பின்பற்றியவர்களுக்கு) சொல்லப்பட்டவையாக இருந்தன.—Wylie, b. 3, ch. 19. ஏறத்தாழ 1470 -ல் உபத்திரவம் நின்றது. ஒப்பிடத்தக்கவகையில் முன்னேற்றம் சிறந்துவந்தது. அந்த நூற்றாண்டின் முடிவுவந்தபோது, “ஐக்கிய சகோதரர்களின் இருநூறு சபைகள் பொஹிமியாவிலும், மொரேஷியாவிலும் காணப்பட்டன.-Ezra Hall Gillett, Life and Times of John Huss, vol. 2, p. 570. அழிவுக்குரிய கோபத்திற்கும், நெருப்பிற்கும், வாளுக்கும் தப்பி, ஹஸ் முன்சொல்லியிருந்த அந்தக் காலையைக் காணும்படி அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மீதியான சபை அவ்வளவு நல்லதாக இருந்தது!— Wylie, b. 3, ch. 19. (72)GCTam 123.4

  Larger font
  Smaller font
  Copy
  Print
  Contents