Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாபெரும் ஆன்மீகப் போராட்டம்! - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    33—மாபெரும் முதலாம் வஞ்சகம்!

    (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 531-550)

    னித வரலாற்றின் ஆரம்பகாலத்திலிருந்தே சாத்தான் நமது இனத்தை வஞ்சிக்கும் அவனது முயற்சியைத் தொடங்கினான். பரலோகத்தில் கலகத்தைத் தூண்டிய— தேவ அரசாங்கத்திற்கு எதிரான அவனது போரில், புமியின் குடிகளையும், தன்னுடன் சேர்த்துக்கொள்ள விரும்பினான். தேவனுடைய கற்பனைக்குக் கீழ்ப்படிந்த ஆதாமும் ஏவாளும் பூரணமான மகிழ்ச்சியுள்ளவர்களாக இருந்தனர். இந்த உண்மை, தேவனுடைய கற்பனை ஒடுக்கும் தன்மை உடையது, அவரது படைப்புக்களின் நன்மைக்கு எதிரானது என்று சாத்தான் பரலோகத்தில் வற்புறுத்திக்கொண்டிருந்த அவனுடைய வாதத்திற்கு எதிரான தொடர் சாட்சியாக இருந்தது. அதற்கும் மேலாக, பாவமில்லாத அந்தத் தம்பதிகளுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருந்த அந்த அழகிய வீட்டை அவன் பார்த்தபோது, அவனது பொறாமை அதிகரித்தது. அவர்களைப் பாவத்தில் விழச்செய்து, தேவனிடமிருந்து பிரித்து, தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதின்மூலம் இந்த உலகத்தின் உடைமையை ஆதாயப்படுத்தி, உன்னதமானவருக்கு எதிராக, பூமியில் தனது ஆளுகையை அமைக்கலாம் என்று அவன் தீர்மானித்தான். (1)GCTam 623.1

    சாத்தான் தன்னை அவனது உண்மையான சுபாவத்தில் வெளிக்காட்டியிருந்தால் அப்பொழுதே எதிர்க்கப்பட்டிருந்திருப்பான். ஏனெனில் அபாயகரமான இந்த எதிரியைப்பற்றி ஆதாமும் ஏவாளும் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவனது நோக்கத்தை மிகத்திறமையாக நிறைவேற்றுவதற்காக, தன்னை மறைத்துக்கொண்டு, இருளில் செயலாற்றினான். அதற்காக கவர்ச்சியான சர்ப்பத்தைத் தனது கருவியாக ஏற்படுத்திக்கொண்டு, அவன் ஏவாளிடம் பேசினான். “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ” (ஆதி. 3:1) என்றான். சோதனைக்காரனுடன் வாதம்செய்வதில் ஈடுபடுவதை ஏவாள் தவிர்த்திருந்தால், அவள் பாதுகாப்பாக இருந்திருப்பாள். ஆனால் அவளோ அவனுக்குப் பதிலளித்துப் பேசமுயன்றதால், அவனது தந்திரத்திற்குப் பலியாக விழுந்தாள். இப்பொழுதும் அநேகர் இவ்விதமாகத்தான் மேற்கொள்ளப்படுகின்றனர். தெய்வீகக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக அவர்கள் தேவனின் கோரிக்கைகளின்மீது சந்தேகம்கொண்டு, வாதம்செய்து, சாத்தானின் மூடிமறைக்கப்பட்ட கருவிகளாக இருக்கும் மனித தத்துவ விளக்கங்களை ஒப்புக்கொள்ளுகின்றனர். (2)GCTam 623.2

    “ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது”-ஆதி. 3:2-5. இதுவரை இருந்ததைவிட அவர்கள் பெரும் ஞானத்தையும் ஒரு மேலான வாழ்வுநிலையை அடையும் தகுதியையும் அடைந்து, தேவனைப் போலாவார்கள் என்று அவன் அறிவித்தான். ஏவாள் சோதனைக்கு இணங்கினாள். அவளது செல்வாக்கின் மூலமாக ஆதாமும் பாவத்திற்குள் நடத்தப்பட்டான். தேவன் கூறியது அந்த அர்த்தத்தில் இல்லை என்ற சர்ப்பத்தின் வார்த்தைகளை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். தேவனுடைய கற்பனையை மீறுவதின் மூலமாக, பெரும் ஞானத்தையும் உயர்வான நிலையையும் அடையக்கூடிய அவர்களது சுயாதீனத்தை தேவன் கட்டுப்படுத்துகிறார் என்று அவர்கள் கற்பனை செய்து, தங்களுடைய சிருஷ்டிகரின்மீது அவநம்பிக்கை கொண்டனர். (3)GCTam 624.1

    ஆனால் “அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” என்ற வார்த்தைகளின் பொருளைப்பற்றி ஆதாம் அவனது பாவத்திற்குப்பின் கண்டது என்ன? அவர்களை நம்பும்படி சாத்தான் நடத்தியிருந்த அர்த்தத்தை அதாவது ஒரு மேலான வாழ்வுநிலையைத் தொடங்கவேண்டி வந்ததை அவன் கண்டானா? அவ்விதமாக நிழ்ந்திருந்தால், மீறுதலினால் பெரும் நன்மை ஆதாயமாகியிருக்கும். சாத்தான் மனித இனத்திற்கு நன்மை செய்பவன் என்பதும் மெய்ப்பிக்கப்பட்டிருந்திருக்கும். ஆனால் தெய்வீக வார்த்தையின் அர்த்தம் இதுதான் என்பதை ஆதாம் காணவில்லை. நீ மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்குத் திரும்புவாய் என்பதை ஆதாம் காணவில்லை. அவனது பாவத்திற்குரிய ஒரு தண்டனையாக, அவன் எந்த மண்ணிலிருந்து எடுக்கப்பட்டானோ அதற்குத் திரும்பவேண்டும் என்று தேவன் அறிவித்தார். “உங்கள் கண்கள் திறக்கப்படும்” என்ற சாத்தானின் வார்த்தைகள் உண்மை என்பது இந்த அர்த்தத்தில் மட்டும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஆதாமும் ஏவாளும் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் செயல்பட்டபோது, அவர்களது தவறுகளை அறிந்து கொள்ளும்படி, அவர்களது கண்கள் திறக்கப்பட்டன. தீமையை அவர்கள் அறிந்துகொண்டனர். மிறுதலின் கசப்புமிக்க கனியை அவர்கள் ருசித்தனர். (4)GCTam 624.2

    நித்திய ஜீவனைத் தரக்கூடிய ஜீவ விருட்சம் ஏதேன் தோட்டத்தின் நடுவில் வளர்ந்திருந்தது. ஆதாம் தேவனுக்குக் கீழ்ப்படிபவனாக இருந்திருந்தால், இந்த மரத்தை அடையும் வழியைத் தாராளமாக அடைந்து என்றென்றைக்கும் வாழ்ந்திருந்திருப்பான். ஆனால், அவன் பாவம்செய்தபோது, ஜீவவிருட்சத்தில் பங்கு பெறுவதிலிருந்து அவன் தடுக்கப்பட்டு, மரணத்திற்குக் கீழ்ப்பட்டவனானான். “நீ மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்குத்திரும்புவாய்” என்னும் தெய்வீக வாசகம், ஜீவன் முற்றிலுமாக இல்லாமல் போவதையே சுட்டிக்காட்டுகிறது. (5)GCTam 625.1

    கீழ்ப்படிதல் என்னும் நிபந்தனையின்மீது மனிதனுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருந்த அழியாமை, மீறுதலின் காரணமாக மறுக்கப்பட்டது. தன்னிடத்தில் இல்லாததை, ஆதாமினால் அவனது பின்சந்ததியினருக்கு மாற்றம் செய்து கொடுக்கமுடியவில்லை. தேவன் அவருடைய குமாரனின் தியாகபலியினால், அவர்கள் அடைந்துகொள்ளும் சமீபத்திற்கு அழியாமையைக் கொண்டுவந்திருக்காவிட்டால், விழுந்துபோன இனத்திற்கு நம்பிக்கை இருந்திருக்கமுடியாது. “எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும்”-ரோமர் 5:12. “ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்'—2 தீமோத்தேயு 1:10. இயேசு கிறிஸ்து ஒருவரின் மூலமாக மட்டுமே அழியாமையை அடையமுடியும். “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை”-யோவான் 3:36 என்று இயேசு பெருமான் கூறினார். விலையேறப்பட்ட இந்த ஆசீர்வாதத்தை, அதின் நிபந்தனைக்கு இணங்கி நடக்கும் ஒவ்வொரு மனிதரும் உடைமையாக பெற்றுக்கொள்ளலாம். “சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்”-ரோமர் 2:7. (6)GCTam 625.2

    கீழ்ப்படியாமையில் நித்திய ஜீவனை ஆதாமுக்கு வாக்குத்தத்தம் செய்த ஒரே ஒருவன்—பெரும் வஞ்சகன் சாத்தான் மட்டும்தான்! நீங்கள் நிச்சமாகவே சாவதில்லை என்று ஏதேன் தோட்டத்தில் ஏவாளுக்கு சர்ப்பத்தின் மூலமாக சாத்தான் கொடுத்த போலியான வாக்குத்தத்தமே ஆத்துமாவின் அழியாமையைப் பற்றி இதுவரை பேசப்பட்டதில் முதல் மதப் பிரசங்கமான உள்ளது. அப்படியிருந்தும், சாத்தானின் தனிப்பட்ட அதிகாரத்தைச் சார்ந்திருக்கும் இந்த அறிக்கை, கிறிஸ்தவ மேடைகளிலிருந்து எதிலொலித்து, நமது முதல் பெற்றோர்கள் அதை ஏற்றுக்கொண்ட அதேவிதமாக, மனித இனத்தின் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசே. 18:20) என்னும் அறிவிப்பு, பாவம் செய்கிற ஆத்துமா சாகாமல் நித்தியகாலமான வாழும் என்று (தவறாக) எண்ணும் விதத்தில் பொருட்படச் செய்யப்பட்டுள்ளது. தேவனுடைய வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளாமல், சாத்தானின் வார்த்தைகளில் சந்தேகம் கொள்ளாமல் இருக்கும்படி, மனிதர்களை நடத்தும் மாறுபட்ட சித்தப்பிரமையைப் பற்றி நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்கமுடியாது. (7)GCTam 626.1

    மனிதனின் விழுகைக்குப்பின், அவனுக்கு ஜீவ விருட்சத்தை அடையும் வழி அனுமதிக்கப்பட்டிருந்தால், அவனால் நித்தியகாலமாக வாழ்ந்திருக்க முடிந்து, பாவம் அழியாமை உள்ளதாகியிருந்திருக்கும். ஆனால் ஜீவ விருட்சத்திற்குச் செல்லும்பாதை கேரூபீன்களினாலும் (ஆதி. 3:24) வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப்பட்டயத்தினாலும் காவல் செய்யப்பட்டது. ஆதாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவன்கூட அந்தத் தடையைக் கடந்துசென்று, ஜீவனைத் தருகிற அந்தக் கனியில் பங்குபெற அனுமதிக்கப்படவில்லை. எனவேதான் அழியாமையை உடைய ஒரு பாவிகூட இன்று இல்லை. (8)GCTam 626.2

    ஜலப்பிரளயத்திற்கு சற்றுமுன், ஜீவ விருட்சத்தையுடைய ஏதேன் தோட்டம் பரதீசிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ()GCTam 626.3

    ஆனால் விழுகைக்குப்பின், அழியாமை இயற்கையானது என்னும் நம்பிக்கையை மனிதனுக்குள் பதியச்செய்ய விசேஷமாக முயற்சி செய்யும்படி சாத்தான் அவனது தூதர்களுக்குக் கட்டளை இட்டான். இந்தத் தவறை ஏற்றுக்கொள்ளும்படி மக்களைத் தூண்டியபின், பாவி நித்திய காலமாக துன்பத்தில் வாழுவான் என்று முடிவு செய்யும்படி அத்தீயதூதர்கள் அவர்களை நடத்தவேண்டும். இப்பொழுது அந்தகாரப்பிரபு அவனது பிரதிநிதிகள் மூலமாக செயலாற்றி, தேவனை, ஒரு பழிவாங்கும் கொடுங்கோலனாகவும், அவருக்குப் பிடித்தமில்லாத அனைவரையும் நரகத்திற்குள் மூழ்கடித்து, எப்பொழுதும் அவரது கோபத்தை உணரும்படிச் செய்கிறவர் என்றும் அவர்கள் சொல்லிமுடியாத வேதனையில் பாடுபட்டு, நித்திய அக்கினியின் ஜுவாலையில் நெளிந்துகொண்டிருக்கும்போது, அவர்களுடைய சிருஷ்டிகர் திருப்தியுடன் அவர்களை நோக்கிப் பார்க்கிறார் என்றும் அறிவிக்கிறான். (9)GCTam 626.4

    இவ்விதமாக, மனித இனத்தின் சிருஷ்டிகரும் நன்மை செய்கிறவரின்மீது தலைமைப்பிசாசானவன் தனது சொந்த சுபாவங்களைச் சுமத்துகிறான். கொடுமை என்பது சாத்தானின் தன்மையாகும். தேவன் அன்பாய் இருக்கிறார். முதல்பெரும் கலகக்காரனால் பாவம் இந்த பூவுலகில் கொண்டுவரப்படும்வரை, அவர் படைத்த அனைத்தும் தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் வசீகரமானதாகவும் இருந்தன. மனிதனைப் பாவம் செய்யும்படி சோதிக்கிறவன் சாத்தானே. அதன்பின், கூடுமானால் அவனை அழிக்கிறான். அவனது இரையைப்பற்றி அவன் நிச்சயமடைந்தபின், அவன் உண்டுபண்ணின அழிவைப்பறறி அவன் வெற்றிச்சிரிப்பு சிரிக்கிறான். அனுமதிக்கப்பட்டால் அவன் மனித இனம் முழுவதையும் அவனுடைய வலைக்குள் இழுத்துச் செல்லுவான். தெய்வீக வல்லமை குறுக்கிடாமல் இருந்திருந்தால், ஆதாமின் ஒரு மகனும் மகளும் கூட தப்பியிருக்கமாட்டார்கள்.(10)GCTam 627.1

    நமது முதல் பெற்றோர் சிருஷ்டிகரின்மீது கொண்டிருந்த நம்பிக்கையை அசைத்து, அவரது அரசாங்கத்தில் இருந்த ஞானத்தையும் அவரது கற்பனைகளின் நீதியையும் சந்தேகிக்கும்படி நடத்தி, அவர்களை மேற்கொண்டதைப்போல், அவன் இன்றும் மனிதர்களை மேற்கொள்ளுவதற்கு வகை தேடிக்கொண்டிருக்கிறான். தங்களுக்குச் சொந்தமான அபவாதங்களையும் கலகத்தையும் நியாயப்படுத்த சாத்தானும் அவனது இரகசிய தூதர்களும் அவர்களைவிட தேவன் மோசமானவர் என்பதாக எடுத்துக்காட்டுகின்றனர். அநீதியான ஒரு ஆளுநருக்குக் கீழ்ப்படிய மறுத்ததின் காரணமாகத்தான் அவன் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டானென்றும், பெரிய அளவில் தவறு செய்தவராக தேவனைத் தோன்றச்செய்யவும், பெரும் வஞ்சகன் தனது பயங்கரமான கொடூரமிக்க சுபாவத்தை நமது பரமபிதாவின்மீது சுமத்த முயலுகிறான். யேகோவாவின் கடினமான கட்டளைகளினால் திணிக்கப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தை, அவனது மென்மையான ஆட்சியின்கீழ் மனிதர்கள் அனுபவிக்கக்கூடிய சுயாதீனத்துடன், உலகத்திற்குமுன் ஒப்பிட்டுக்காட்டுகிறான். இவ்வாறாக, தேவனுடைய உறவிலிருந்து ஆத்துமாக்களை ஆசைகாட்டிப் பிடிப்பதில் அவன் வெற்றியடைகிறான். (11)GCTam 627.2

    அன்பு, இரக்கம் ஆகியவைகளின் ஒவ்வொரு உணர்ச்சிக்கும், நியாயம் என்று தோன்றும் நமது புலன் உணர்வுகட்குங்கூட, ஒரு குறுகிய கால உலக வாழ்க்கையில் செய்த பாவத்திற்காக, உயிருடன் இருக்கும்வரை அவர்கள் சித்திரவதை அனுபவித்தாகவேண்டும் என்பதும், மரித்த துன்மார்க்கர் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் நித்தியகாலமாக வேதனை அடைந்தாக வேண்டும் என்பதும் தேவனின் குணத்திற்கு மாறான, எப்படிப்பட்ட அவல நிலையாக உள்ளது? அப்படியிருந்தும் இந்தக் கோட்பாடு பரவலாகப் போதிக்கப்பட்டும், கிறிஸ்தவ உலகின் பல பிரிவுகளில் பதிக்கப்பட்டும் உள்ளது. இறையியல் பயின்ற ஒரு அறிஞர்: “நரகாக்கினையின் வேதனை பரிசுத்தவான்களின் மகிழ்ச்சியை என்றென்றைக்கும் உயர்த்தும். தங்களைப் போன்ற தன்மையும் அதேபோன்ற சூழ்நிலையிலும் பிறந்த மற்றவர்கள், அப்படிப்பட்ட துன்பத்திற்குள் மூழ்கடிக்கப்பட்டதையும், தாங்கள் வேறுபடுத்தப்பட்டதையும் காணும்போது, எத்தனை மகிழ்ச்சியோடு இருக்கிறோம் என்பதை உணருவார்கள்.” வேறொருவர்: “கோபாக்கினை பாத்திரங்களின்மீது, தேவகோபமாகிய நித்திய தண்டனை நடைமுறைப்படுத்தப்படும்போது, இந்தப் பரிதாபமான ஜீவன்களோடு பங்கடையாமல், ஆமென், அல்லேலூயா! கர்த்தரைத் துதியுங்கள்! என்று கூறும் கிருபாபாத்திரங்களின் பார்வையில் அவர்களது வாதையின் புகை என்றென்றுமாக எழுந்து கொண்டிருக்கும்” என்கிறார். (12)GCTam 627.3

    தேவனுடைய வார்த்தையின் எந்தப்பக்கங்களில் இப்படிப்பட்ட போதனைகள் காணப்படுகிறது? பரலோகத்திலுள்ள மீட்கப்பட்டவர்கள் இரக்கமும், மன உருக்கமும், பொதுவான மானிட உணர்வுகளையும் இழந்திருப்பார்களா? சுக துக்கங்களைப் பொருட்படுத்தாதவர்களின் வேற்றுமையின்மைக்கும் காட்டுமிராண்டித்தனத்தின் கொடூரங்களுக்கும் இக்குணங்கள் மாற்றம் செய்யப்படவேண்டியவைகளா? அல்ல, அப்படி அல்ல, தேவனுடைய புத்தகத்தின் போதனை அப்படிப்பட்டதேயல்ல. மேலே கொடுக்கப்பட்ட மேற்கோள்களில் வெளிக்காட்டப்படும் காட்சிகளை முன்வைப்பவர்கள், சமுதாயத்திலுள்ள மிகவும் கற்றவர்களாகவும், நேர்மைமிக்கவர்களாகவும் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் சாத்தானின் தந்திரங்களினால் மாயத் தோற்றமுடையவர்களாகவே உள்ளனர். வேதவாக்கியங்களில் உள்ள கடுமையான உணர்த்துதல்களைத் தப்பார்த்தம் கொள்ளும்படி அவன் அவர்களை நடத்தி, சிருஷ்டிகளுக்குச் சொந்தமல்லாத, அவனுக்குச் சொந்தமான, கசப்பும், அபவாதமுமிக்க வர்ணத்தை அந்த மொழிக்குக் கொடுக்கிறான். “கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார்” -எசே. 33:11. (13)GCTam 628.1

    முடிவில்லாத சித்திரவதைகளைக் காண்பதில் அவர் மகிழ்கிறார் என்றும், அவர் நரக அக்கினி ஜுவாலையில் பிடித்து வைத்திருக்கும் அவரது படைப்புகளின் கதறல்களையும், கூக்குரல்களையும் சாபங்களின் பாடுகளையும் பார்த்து மகிழ்கிறார் என்றும் நாம் ஒத்துக்கொள்ளுவோமானால், அதனால் தேவனுக்கு உண்டாகக்கூடிய நன்மை என்ன? முடிவில்லாத அன்புள்ளவர்களின் செவிகளில் வெறுப்பூட்டும் சத்தங்கள் இசையாக இருக்குமா? துன்மார்க்கரின்மீது செலுத்தப்படும் பாடுகள், பிரபஞ்சத்தின் சமாதானத்திற்கும் ஒழுக்கத்திற்கும் கேடு விளைவிக்கும் பாவ தீமையின் மீதுள்ள தேவனுடைய வெறுப்பைக் காட்டும் என்று கூறப்படுகிறது. ஆ, எத்தனை பயங்கரமான தேவதூஷணம்! பாவத்தின்மீதுள்ள தேவனின் வெறுப்புதான், அவர் பாவத்தை என்றும் நிலையாக வைத்திருப்பதற்குக் காரணம் என்பதுபோலத் தோன்றுகிறது. ஏனெனில் இப்படிப்பட்ட இறையியல் வல்லுனர்களின் போதனைகள், இரக்கம் என்கிற நம்பிக்கையற்ற தொடர் சித்திரவதை, துர்ப்பாக்கியமான பலியாட்களை வேதனைப்படுத்துகிறது. அவர்கள் தங்களுடைய கடுங்கோபத்தை சபிப்பதிலும் தேவ தூஷணம் கூறுவதிலுமாக ஊற்றும்போது, அவர்கள் என்றென்றைக்குமாக, அவர்களது குற்றத்தின் பாரத்தை அதிகரிக்கச்செய்கிறார்கள். இவ்விதமாகப் பாவத்தை நித்தியமாக முடிவில்லாத யுகங்களின் ஊடாக அதிகரிக்கச் செய்வதால் தேவனுடைய மகிமை அதிகரிப்பதில்லை. (14)GCTam 629.1

    நித்தியகால வேதனை என்னும் மதப்புரட்டினால் உண்டுபண்ணப்பட்டுள்ள தீமையின் தன்மையை அனுமானிப்பது மனித மனதின் வல்லமைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. நிறைவான அன்பு, நன்மை, மன உருக்கத்தின் பெருக்கம் அகியவைகளாக உள்ள வேதாகமக் கோட்பாடு, மூடநம்பிக்கை திகில் ஆகிய ஆடைகளினால் போர்த்தப்பட்டு இருளாக்கப்பட்டுள்ளது. தேவனுடைய சுபாவத்தின்மீது சாத்தான் எப்படிப்பட்ட தவறான வர்ணம் பூசியிருக்கிறான் என்பதை பார்க்கும்போது, இரக்கமிக்க நமது சிருஷ்டிகரை ஏன் பயப்படுத்துகிறவராகவும், பயங்கரமானவராகவும், வெறுக்கத்தக்கவராகவுங்கூட பார்க்கிறார்கள் என்பதில் நாம் ஆச்சரியப்படமுடியுமா? பிரசங்க மேடைகளிலிருந்து தேவனைப்பற்றித் திடுக்கிடக்கூடிய நோக்குகளில் செய்யப்பட்ட போதனைகள், ஆயிரக்கணக்கானவர்களை, பல்லாயிரக்கணக்கானவர்களை, சந்தேகவாதிகளாகவும் கடவுள் இல்லை என்பவர்களாகவும் மாறச்செய்துள்ளது. (15)GCTam 629.2

    நித்திய வேதனை என்னும் தவறான தத்துவ விளக்கம், பாபிலோனின் அருவருப்புகளினால் ஏற்படுத்தப்பட்டு, சகல ஜாதிகளையும் குடிக்கும்படி அவள் செய்துள்ள தவறான கோட்பாடுகளில் ஒன்றாகும். (வெளி 14: 8 17:2). இந்த மதப் புரட்டுகளை கிறிஸ்துவின் ஊழியக்காரர்களும் ஒப்புக்கொண்டு, பரிசுத்தமான மேடையிலிருந்து அறிவிப்புச் செய்தாகவேண்டும் என்பது உண்மையில் மனிதப் புத்திக்கு எட்டாத ஒரு மறைபொருளாக உள்ளது. அவர்கள் போலியான ஓய்வுநாளை ரோம சபையிடமிருந்து பெற்றுக்கொண்டதுபோலவே, இதையும் அங்கிருந்தே பெற்றுக்கொண்டனர். பெரிய மனிதர்களாலும், நல்லவர்களாலும் இது போதிக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அந்த ஒளி நம்மிடத்திற்கு வந்திருப்பதைப்போல, அவர்களிடத்திற்கு வரவில்லை. அவர்களுடைய காலத்தில் வீசியிருந்த ஒளிக்கு மட்டும் அவர்கள் பொறுப்பானவர்களாக இருந்தனர். நமது காலத்தில் வீசும் ஒளிக்கு நாம் கணக்குக் கொடுக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். தேவனுடைய வார்த்தையிலுள்ள சாட்சியிலிருந்து திரும்பி, நமது பிதாக்கள் நமக்குப் போதித்தார்கள் என்பதற்காக தவறான கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளுவோமானால், பாபிலோனின் மீது கூறப்பட்டுள்ள தண்டனைக்கு நாமும் உட்படுகிறோம். அவளது அருவருப்பின் மதுவை நாமும் பருகிக்கொண்டிருக்கிறோம்.(16)GCTam 630.1

    நித்திய வேதனை என்னும் கோட்பாட்டினால் எதிர்ப்பில் ஈடுபட்டிருக்கும் ஒரு வகுப்பினர், அதற்கு நேர் எதிரான தவறுக்கு விரட்டப்பட்டுள்ளனர். வேதவாக்கியம் தேவனை அன்பும் மன உருக்கமும் மிக்க ஒருவராக எடுத்துக்காட்டுவதை அவர்கள் காண்கின்றனர். எனவே அவரது படைப்புகளை நித்தியகாலமாக எரிந்துகொண்டிருக்கும் நரக அக்கினிக்குள் அவர் அனுப்புவார் என்பதை அவர்களால் நம்பமுடியாது. ஆனால் ஆத்துமா இயற்கையாகவே அழியாமை உடையது என்று பிடித்துக்கொண்டு, அதற்கு வேறு ஒரு மாற்றுவழியையும் காணாமல், மனிதஇனம் முழுவதும் கடைசியாக இரட்சிக்கப்படும் என்று முடிவுசெய்கின்றனர். வேதாகமத்தில் காணப்படும் பயமுறுத்தல்கள், மனிதர்களைக் கீழ்ப்படியச் செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும், மற்றபடி அவைகள் எழுத்தின்படி நிறைவேற்றக்கூடியவை அல்ல என்றும் அநேகர் கருதுகின்றனர். இவ்விதமாக பாவியானவன் தேவனுடைய நியமங்களை எண்ணாமல், சுயநலமிக்க இன்பங்களில் வாழ்ந்தாலும், முடிவில் அவருடைய அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறான். தேவனுடைய நீதியை புறக்கணித்து, அவருடைய இரக்கத்தின் மீதுள்ள யூகத்தால் வரும் கோட்பாடு, மாம்ச சிந்தையை மகிழ்வித்து, துன்மார்க்கரை அவர்களுடைய அக்கிரமங்களில் துணிகரமாக்குகிறது. (17)GCTam 630.2

    எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள் என்னும் நம்பிக்கை உள்ளவர்கள், தங்கள் ஆத்துமாக்களை அழிக்கும் பிடிவாதமாக கோட்பாட்டைத் தாங்குவதற்காக வேதவாக்கியங்களைத் தங்களுக்கு சாதகமாக பொருள்கொள்கின்றனர் என்பதைக் காட்டும்படி, அவர்களுடைய சொந்த வார்த்தைகளை குறிப்பிடவேண்டிய அவசியம் உள்ளது. விபத்தினால் கொல்லப்பட்ட மதச்சார்பற்ற ஒரு இளைஞனின் இறுதிச்சடங்கில், ஒரு யுனிவர்கலிஸ்ட போதகர் (பிரபஞ்ச முழுவதற்கும் ஒரே தேவன் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள் என்னும் போதனையை உடைய ஒரு கிறிஸ்தவப்பிரிவின் போதகர்) தாவீதைப்பற்றிய: “தாவீதுராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காக ... ஆறுதல் அடைந்தபோது” (2 சாமுவேல் 13:39) என்ற வேதவாக்கியத்தை அவரது செய்தியின் வாசகமாகத் தெரிந்துகொண்டார்.(18)GCTam 631.1

    “பாவத்துடன் மரிக்கிற, ஒருவேளை குடிபோதையில், குற்றங்களின் சிவப்புக்கறை கழுவப்படாத உடைகளுடன் மரிக்கிற, அல்லது இந்த இனைஞனைப்போல மதத்தை ஒருபோதும் அறிக்கை செய்திராது, அல்லது மதத்தைப்பற்றி அனுபவம் இல்லாது இந்த உலகத்தை விட்டுப் பிரிந்துசெல்லுவர்களின் முடிவு எப்படி இருக்கும் என்று நான் அடிக்கடி விசாரிக்கப்படுகிறேன். வேதவாக்கியங்களில் நாம் திருப்தி உள்ளவர்களாக இருக்கிறோம். பயங்கரமான அந்தப் பிரச்சினைக்கு அவைகளின் பதில் பரிகாரம் செய்யும். அம்னோன் மிகுந்த பாவமுடையவனாக இருந்தான். அவன் மனந்திரும்பவில்லை. மது அருந்தும்படி நிர்பந்திக்கப்பட்டு, போதையில் இருந்தபோது கொலைசெய்யப்பட்டான். தாவீது தேவனுடைய ஒரு தீர்க்கதரிசி. வரப்போகும் உலகில் அம்னோனுக்கு நல்லது நடக்குமோ அல்லது கெட்டது நடக்குமா என்பது அவனுக்கு தெரிந்திருக்கும். அவனுடைய இருதயத்தின் வெளிப்பாடு என்ன?—”தாவீதுராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காக ... ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்.” (19)GCTam 631.2

    “இந்த அறிவிப்பிலிருந்து, அனுமானிக்கக்கூடிய நியாயமான முடிவு என்ன? முடிவற்ற அந்தத் துன்பம் அவனது மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக இல்லாமல் இருப்பதில்லையா?—அப்படித்தான் நாம் கருதுகிறோம். முடிவில் எங்கும் தூய்மையும் சமாதானமும் நிலவும் என்கிற மிகுந்த மகிழ்ச்சியையும் மிகுந்தஞானத்தையும் தாராளத்தையுமுடைய அனுமானத்திற்கு ஆதரவான வெற்றிகரமான வாதத்தை நாம் இங்கு கண்டுபிடிக்கிறோம். ஏன் அப்படி?- ஏனென்றால், அவனதுமகன் சகலவிதமாக சோதனைகளிலிருந்தும் அகற்றப்பட்டு, பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, பாவத்தின் அழிவிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு, போதுமான அளவிற்குப் பரிசுத்தத்தையும் தெளிவையும் அடைந்தபின், உயரே சென்று மகிழ்ச்சியிலிருக்கும் ஆவிகளின் கூட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டான் என்பதை, ஒரு மகிமைமிக்க எதிர்காலத்தை தீர்க்கதரிசனக் கண்ணினால் அவனால் காணமுடிந்தது. இப்போதுள்ள பாவமும் பாடுகளும் நிறைந்த நிலையிலிருந்து நீக்கப்பட்ட அவனுடைய மகன், இருளடைந்த அவனுடைய ஆத்துமாவின்மீது மிக உயர்வான பரிசுத்த ஆவி பொழியும் இடத்திற்கும், பரலோக ஞானத்திற்கும் அழியாத அன்பின் இனிய பரவசத்துக்கும், பரலோக சுதந்திரத்திலிருக்கும் சமுதாயத்தின் இளைப்பாறுதலை அனுபவிக்கும் பரிசுத்த இயல்புக்கு ஆயத்தமாக்கப்படும்படி போயிருக்கிறான் என்பது ஒன்று மட்டும்தான் அவனது ஆறுதலாக இருந்தது. (20)GCTam 631.3

    “பரலோக இரட்சிப்பு, இந்த வாழ்க்கையில் நாம் செய்யும் எதையும் சார்ந்து இல்லை என்பதையும், இப்பொழுது இருதயத்தில் உண்டாகும் மாறுதலிலோ அல்லது நிகழ்கால நம்பிக்கையிலோ அல்லது நிகழ்கால மத சம்பந்தமான அறிக்கையிலோ இல்லை என்பதையும் இந்தக் கருத்துக்களின் வழியாக நாம் நம்பும்படியாக புரிந்துகொள்ளப்படுகிறோம்” என்றார். (21)GCTam 632.1

    “நீங்கள் சாகவே சாவதில்லை” “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும்” “நீங்கள் நன்மை தீமை அறிந்து, தேவர்களைப்போல் இருப்பீர்கள்” என்றும் ஏதேனில் சர்ப்பம் கூறிய பொய்யை, இவ்விதமாக கிறிஸ்தவ ஊழியக்காரன் உறுதிப்படுத்துகிறான். படுமோசமான பாவிகள் கொலைகாரன், திருடன், விபசாரக்காரன் ஆகியோருங்கூட மரணத்திற்குப்பின் அழியாமையாகிய பேரின்பத்தின் உயர்நிலைக்குள் பிரவேசிக்க ஆயத்தம் செய்யப்படுவார்கள் என்றும் அவன் அறிவிக்கிறான்!? (22)GCTam 632.2

    வேதவாக்கியங்களைப் புரட்டுபவன் அவனது முடிவுகளை எதிலிருந்து எடுக்கிறான்? தெய்வீக ஏற்பாட்டிற்கு தாவீது ஒப்புக்கொடுத்ததை வெளிக்காட்டும் ஒரு வாக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டுகிறான். “அம்னோன் செத்தபடியினால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்.” காலத்தினால் அவனது துயரத்தின் வேதனை மென்மையடைந்தபோது, அவனது எண்ணங்கள் இறந்துபோனவனிடத்திலிருந்து தனக்குள்ள நியாயமான தண்டனையின் பயத்தினால் தானாகவே தூரமாகச் சென்றுவிட்ட, உயிருள்ள மகனிடத்திற்குத் திரும்பியது. ஆனால் தகாத பாலுறவில் ஈடுபட்டு வெறித்திருந்த அம்னோன், மரணத்தினால், உடனே பேரின்பத்தின் வாசஸ்தலத்திற்குள், பாவமற்ற தேவதூதர்களின் தோழமைக்காகத் தூய்மைப்படுத்தப்படவும் ஆயத்தப்படுத்தப்படவும் கொண்டு செல்லப்பட்டான் என்று கருதும்படி இந்த வசனம் காட்டப்பட்டுள்ளது! மாம்ச இருதயத்தை திருப்திப்படுத்தும் நன்கு பொருந்தக்கூடிய ஒரு கட்டுக்கதைதான். இது சாத்தானின் சொந்தக் கோட்பாடாக இருக்கிறது! அது அதன் வேலையைப் பயன்தரும் விதத்தில் செய்கிறது. இப்படிப்பட்ட உபதேசத்தினால், தீமை பெருகுகிறது என்பதில் நாம் ஆச்சரியப்படவேண்டுமா? (23)GCTam 632.3

    இந்த ஒரு தவறான ஆசிரியனால் பின்பற்றப்படும் நடவடிக்கை, மற்ற அநேகரையும் படம்பிடித்துக் காட்டுகிறது. முழுமையான உள்ளடக்கத்திலிருந்து, அநேக விஷயங்களில், அவைகளின்மீது வைக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு நேர் எதிரான அர்த்தம் காட்டக்கூடிய விதத்தில், வேதவாக்கியங்களின் சில வார்த்தைகள் பிரிக்கப்படுகின்றன. இவ்விதமாக இணைக்கப்பட்ட வாசகப்பகுதிகள், தேவனுடைய வார்த்தையினால் அஸ்திவாரமில்லாத கோட்பாடுகளாக மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. குடிவெறியனாயிருந்த அம்னோன் பரலோகத்தில் இருக்கிறான் என்பதற்குச் சாட்சியாக எடுத்துக்காட்டப்படும் ஒரு அனுமானம், வேதவாக்கியத்தின் தெளிவான நிச்சயமான அறிவிப்புடன் நேரடியாக முரண்பட்டுள்ளது. “திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை”-1 கொரி. 6:10. இவ்விதமாகச் சந்தேகப்படுபவர்கள், நம்பிக்கையில்லதவர்கள், கடவுள் இல்லை என்பவர்கள் சத்தியத்தைப் பொய்யாக மாற்றுகிறார்கள். அவர்களுடைய தந்திரத்தினால் திரள் கூட்டமானவர்கள் வஞ்சிக்கப்பட்டு, மாம்சத்திற்குரிய பாதுகாப்பபு என்னும் தொட்டிலில் உறங்கும்படியாகத் தாலாட்டப்படுகின்றனர். (24)GCTam 633.1

    உடலும் உயிரும் பிரியும்போது, அனைவரது ஆத்துமாக்களும் நேராகப் பரலோகத்திற்குக் கடந்துசெல்லுகின்றன என்பது உண்மையாக இருந்திருந்தால், நாம் வாழ்வைவிட சாவையே நன்கு விரும்பலாம்! இந்த நம்பிக்கையினால், அநேகர் தங்களுடைய வாழ்க்கையை முடிக்க நடத்தப்படுகின்றனர். துன்பம், குழப்பம், ஏமாற்றங்கள் ஆகியவைகளால் மேற்கொள்ளப்படும்போது, அறுந்துபோகக்கூடிய உயிரென்னும் நூலை அறுத்துக்கொண்டு, நித்தியமான உலகத்தின் பேரின்பத்திற்கு தூரமாக உயரே செல்லுவது எளிதான காரியம்போல் காணப்படுகிறது. (25)GCTam 633.2

    தேவனுடைய கற்பனைகளை மீறுபவர்களை அவர் தண்டிப்பார் என்னும் முடிவான சாட்சியை அவரது வார்த்தையில் கொடுத்திருக்கிறார். பாவியின்மீது நியாயத்தீர்ப்பை நடத்தமுடியாத அளவிற்கு அவர் மிக அதிகமான இரக்கமுடையவர் என்று முகஸ்துதி கூறுபவர்கள், கல்வாரிச் சிலுவையை மட்டும் நோக்கினால் போதும். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதற்கு குறைவற்ற தேவகுமாரனின் மரணம் சாட்சி பகருகிறது. தேவனுடைய கற்பனையை மீறும்போது, நீதியான தெய்வ தண்டனையைப் பெற்றாகவேண்டும் என்பதே! பாவமில்லாத கிறிஸ்து மனிதனுக்காகப் பாவமானார். அவரது இருதயம் உடைக்கப்படும்வரை, அவரது ஜீவன் நசுக்கப்படும்வரை, மீறுதலின் குற்றத்தைத் தாங்கி, அவரது பிதாவின் முகம் அவருக்கு மறைக்கப்பட்டவராக இருந்தார். பாவிகள் மீட்கப்படவேண்டும் என்பதற்காக இந்தத் தியாகபலி அனைத்தும் செயல்படுத்தப்பட்டது. பாவத்தின் தண்டனையிலிருந்து மனிதனை விடுவிப்பது வேறு எந்த வழியிலும் முடியாததாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு கிரயத்தினால் ஏற்படுத்தப்பட்ட பாவநிவாரணத்தில் பங்காளியாவதற்கு மறுக்கின்ற ஒவ்வொரு ஆத்துமாவும், தனது சொந்த சரீரத்தில் மீறுதலின் குற்றத்தையும் தண்டனையையும் சுமந்தாக வேண்டும். (26)GCTam 633.3

    மேலும் யுனிவர்சலிஸ்டுகளின் போதகத்தின்படி பரிசுத்தமும் மகிழ்ச்சியுமிக்க தேவதூதர்களாகப் பரலோகத்தில் வைக்கப்படடுள்ள பக்தி அற்றவர்களையும் மனந்திரும்பாதவர்களையும் பற்றி வேதாகமம் என்ன போதிக்கிறது என்றும் நாம் ஆலோசிப்போம்.(27)GCTam 634.1

    “தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்” வெளி. 21:6. தாகமாயிருப்பவர்களுக்கு மட்டும்தான் இந்த வாக்குத்தத்தம் உள்ளது. வேறு எவருக்கும் இல்லாமல், ஜீவத் தண்ணீர் வேண்டும் என்னும் தங்களுடைய அவசியத்தை உணர்ந்து, மற்றெல்லாப் பொருள்களின் இழப்பினாலும் அதைத் தேடுபவர்களுக்கு மட்டுமே, அது வழங்கப்படும். “ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்”-வெளி. 21:6,7. இங்குங்கூட நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ள, நாம் பாவத்தை ஜெயித்து மேற்கொள்ளவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. (28)GCTam 634.2

    “உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள் ... துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்” (ஏசா. 3:10,11) என்று ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக கர்த்தர் சொல்லுகிறார். “பாவி நூறுதரம் பொல்லாப்பைச்செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை” (பிர. 8:12,13) என்று ஞானி சொல்லுகிறான். “உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.... முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்” (ரோமர் 2:5,6,9)—துன்மார்க்கன் ஆக்கினையை அவன்மேல் குவித்துக்கொள்ளுகிறான் என்று பவுல் சாட்சி பகருகிறார். (29)GCTam 634.3

    “விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக் காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே”—எபே. 5:5. “யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே”- எபி. 12:14. “ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்”- வெளி. 22:14,15. (30)GCTam 635.1

    தேவன் அவரது சுபாவத்தைப்பற்றியும் பாவத்தின் மீதுள்ள நடவடிக்கையிலுள்ள அவரது முறையைப்பற்றியும் மனிதர்களுக்கு ஒரு அறிவிப்பைக் கொடுத்திருக்கிறார். “கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்”-யாத். 34:6,7. “கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்”-சங். 145:20. “அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு-சங். 37:38. கலகத்தை ஒடுக்குவதற்காக தெய்வீக அரசாங்கத்தின் வல்லமையும் அதிகாரமும் செயல்படுத்தப்படும். இருந்தபோதிலும், தேவகோபத்தின் நீதியின் வெளிக்காட்டல் அனைத்தும், இரக்கமும், நீடிய பொறுமையும், அனுதாபமும் உள்ளவரான அவரது தேவ சுபாவத்திற்குப் பூரணமாகப் பொருந்தக்கூடியதாக இருக்கும்.(31)GCTam 635.2

    ஒருவருடைய சித்தத்தை அல்லது நிதானிக்கும் தன்மையை தேவன் வற்புறுத்தவில்லை. அடிமை மனப்பான்மை உள்ள ஒரு கீழ்ப்படிதலில் அவர் மகிழ்ச்சி அடைவதில்லை. அன்பு செலுத்தப்படுவதற்குப் பாத்திரராக இருக்கிறார் என்றறிந்து, அவரது கரத்தின் படைப்புகள் அனைத்தும் அவரிடம் அன்பு செலுத்துவதை அவர் விரும்புகிறார். அவரது ஞானம் நீதி, கருணை ஆகியவைகளை வரவேற்கும் நுண்ணறிவை உடையவர்களாக இருந்து, அவருக்குக் கீழ்ப்படிபவர்களை அவர் தம்முடையவர்களாக வைப்பார். இந்தப் பண்புகளைப்பற்றி ஒத்த கருத்துள்ள அனைவரும் அவரை நேசிப்பார்கள். ஏனெனில், அவரது நிறந்த குணங்களினால் வியப்படைந்து, அனைவரும் அவரிடம் இழுக்கப்பட்டுள்ளனர்.(32)GCTam 636.1

    நமது இரட்சகரால் போதிக்கப்பட்டும் உதாரணம்காட்டி விளக்கப்பட்டும் உள்ள கொள்கைகளான உதாரத்துவம், இரக்கம், அன்பு ஆகியவை, தேவனுடைய சித்தம், பண்பு ஆகியவைகளின் மறுவடிவமாக உள்ளன. இயேசு பெருமான் தம்முடைய பிதாவிடம் இருந்து பெற்றுக்கொண்டவைகளையன்றி வேறு எந்த உபதேசங்களையும் போதிக்கவில்லையென்று அறிவித்தார். உங்கள் விரோதிகளை நேசியுங்கள் என்னும் இரட்சகரின் பிரமாணத்துடன் தெய்வீக அரசாங்கத்தின் கொள்கைகள் பூரணமான இசைவுள்ளவையாக உள்ளன. பிரபஞ்சத்தின் நன்மைக்காகவும் அவரது நியாயத்தீர்ப்பு எவர்களைச் சந்திக்க உள்ளதோ அவர்களது நன்மைக்காகவுங்கூட தேவன் துன்மார்க்கரின்மீது நியாயத்தீர்ப்பைச் செலுத்துகிறார். அவரது அரசாங்கத்தின் சட்டங்களின்படியும் அவரது சுபாவத்திலுள்ள நீதியின்படியும் அவர்களை மகிழ்ச்சியானவர்களாக இருக்கச் செய்ய முடியுமானால், அவர் அப்படியே செய்வார். அவரது அன்பின் அடையாளங்களின் மூலமாக, அவர் அவர்களைச் சூழ்ந்து, அவரது கற்பனையைப் பற்றிய ஒரு அறிவை அவர்களுக்கு அனுமதித்து, அவரது இரக்கத்தின் ஈவுடன் அவர்களைப் பின்தொடர்கிறார். ஆனால் அவர்கள் அவரது அன்பை அவமதித்து, அவரது கற்பனையில் பிளவை உண்டாக்கி, அவரது இரக்கத்தை நிராகரிக்கின்றனர். அவரது ஈவைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொண்டிருக்கும்போதே, அதைக் கொடுப்பவரை கனவீனப்படுத்துகின்றனர். தேவன் அவர்களது பாவத்தை வெறுக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருப்பதினால், அவர்கள் அவரை வெறுக்கின்றனர். அவர்களது பலனைப்பற்றி முடிவுசெய்யவேண்டிய முடிவான நேரம் இறுதியில் வரும். அதன்பின் இந்தக் கலகக்காரர்களை அவர் தன் பக்கத்தில் கட்டிவைப்பாரா? அவருடைய சித்தத்தின்படி செய்ய இந்தக் கலகக்காரர்களை வற்புறுத்துவாரா? (33)GCTam 636.2

    சாத்தானைத் தங்களது தலைவனாகக்கொண்டு, அவனது வல்லமையினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளவர்கள், தேவனுடைய சமுகத்திற்குள் பிரவேசிக்க ஆயத்தமற்றவர்களாக உள்ளனர். பெருமை, வஞ்சகம், காமவிகாரம், கொடூரம் ஆகியவை அவர்களுடைய சுபாவத்தில் பதிக்கப்பட்டுள்ளன. பூமியில் நிந்தித்து வெறுத்தவர்களுடன் பரலோகத்தில் சேர்ந்து வாழ, அவர்களால் அதில் பிரவேசிக்கமுடியுமா? சத்தியம் பொய்யனுக்கு ஒருபோதும் ஒத்துவராத ஒன்றாகும். சுயமேன்மையையும் பெருமையையும், எளிமை திருப்திப்படுத்தாது. கறைபடிந்தவர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத் தூய்மையின் தன்மை இருக்காது. சுயநலமுள்ளவனுக்கு எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, கவர்ச்சியுள்ளதாக இருக்காது. உலகப்பிரகாரமானதும் சுயநலமிக்கதுமான விருப்புக்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சிக்கான எந்த ஆதாரத்தைத்தான் பரலோகத்தால் வழங்கமுடியும்? (34)GCTam 637.1

    பரலோகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்துமாவும் அன்பினால் நிரப்பப்பட்டுள்ளதாக உள்ளது. ஒவ்வொரு முகமும் மகிழ்ச்சியால் ஒளி விட்டுக்கொண்டுள்ளது. தேவனுடைய ஆட்டுக்குட்டியானவருடைய மேன்மைக்காக உள்ளத்தை ஈர்க்கும் இனிய இசை உயர எழுந்து கொண்டுள்ளது. சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவரின் முகத்திலிருந்து முடிவற்ற விதமாகச் செல்லும் ஒளிக்கதிர்கள், மீட்கப்பட்டவர்களின் முகத்தில் வீசிக்கொண்டுள்ளன. தேவனுக்கு விரோதமான கலகத்தில் தங்களுடைய வாழ்க்கையைச் செலவிட்டவர்கள், பரிசுத்தமும் பூரணமுமான நிலையைக் காணும்படி திடீரென்று பரலோகத்திற்கு மாற்றப்பட்டால், தேவன்மீதும் சத்தியத்தின்மீதும் பரிசுத்தத்தின்மீதும் இருக்கும் வெறுப்பினால் இருதயம் நிரப்பப்பட்டவர்கள், பரலோகக்கூட்டத்தினருடன் கலந்து, அவர்களது துதியின் பாடல்களுடன் சேர்ந்துகொள்ளுவார்களா? தேவனுடையதும் ஆட்டுக்குட்டியானவருடையதுமான மகிமையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியுமா? அல்ல. முடியாது! பரலோகத்தின் சுபாவத்தை அடைந்துகொள்ள அவர்களுக்கு வருடக்கணக்காகத் தவணையின் காலம் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தூய்மையை அடைந்துகொள்ள அவர்கள் ஒரு போதும் அவர்களது மனதிற்குப் பயிற்சி கொடுக்கவில்லை. இப்பொழுது காலம் மிகவும் பிந்திவிட்டது. தேவனுக்கு எதிரான ஒரு கலகமிக்க வாழ்க்கை, அவர்களைப் பரலோகத்திற்குத் தகுதியில்லாமல் ஆக்கிவிட்டது. அதன் தூய்மை, பரிசுத்தம், சமாதானம் ஆகியவை அவர்களுக்குச் சித்திரவதையாகவும், தேவனுடைய மகிமை எரிக்கும் நெருப்பாகவும் இருக்கும். அந்தப் பரிசுத்தமான இடத்திலிருந்து ஓடிப்போக அவர்கள் ஏங்குவார்கள். அவர்களை மீட்பதற்காக மரித்தவரின் முகத்திற்கு முன்னிருந்து தங்களை மறைத்துக்கொள்ள அவர்கள் அழிவை வரவேற்பார்கள். துன்மார்க்கருடைய வழி, அவர்கள் தெரிந்துகொண்டபடியே குறிக்கப்பட்டுள்ளது. பரலோகத்திற்குத் தகுதியற்றவர்களாக செய்யப்படுதல், அவர்கள் தாங்களாகவே செய்துகொண்டதும் தேவனுடைய பக்கம் நீதியும் இரக்கமும் உள்ளதாயிருக்கிறது. (35)GCTam 637.2

    துன்மார்க்கர்கள் குணப்படுத்தப்படமுடியாதவர்கள் என்னும் தேவனுடைய தீர்ப்பை ஜலப்பிரளயத்தின் வெள்ளத்தைப்போல், பெரும் நாளின் அக்கினி அறிவிக்கிறது. தெய்வீக அதிகாரத்திற்குக் கீழ்ப்படியும் தன்மை அவர்களிடம் இல்லை. அவர்களது வாழ்க்கை முடியும்போது அவர்கள் மனம் கலகத்தையே செயலாற்றி, எண்ணத்தின் ஓட்டத்தை எதிர்த்திசையில் திருப்புவதற்கும், மீறுதலிலிருந்து கீழ்ப்படிதலுக்கும் வெறுப்பிலிருந்து அன்பிற்கும் திரும்புவதற்கும் மிகவும் பிந்திவிட்டது. (36)GCTam 638.1

    கொலைகாரனான காயீனின் உயிரை விட்டுவைத்ததின் மூலம் பாவியை உயிர்வாழ அனுமதித்தால், அதன் பலன் என்னவாக இருக்கும்? அது கடிவாளமிடப்படாத அக்கிரமமிக்க நடத்தையைத் தொடர்வதாக இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணத்தைக் கொடுத்தார். “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,... இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்”-ஆதி. 6:5,12. இவ்விதமாக காயீனின் போதனைகளினாலும் உதாரணத்தினாலும், திரள்கூட்டமான அவனுடைய பின்சந்ததியினர் பாவத்திற்குள் நடத்தப்பட்டிரு்தனர். (37)GCTam 638.2

    உலகத்தின்மீதிருந்த இரக்கத்தினால், நோவாவின் காலத்திலிருந்த துன்மார்க்கமான பூமியின் குடிகளை தேவன் அழித்தார். அக்கிரமக்காரர்களாயிருந்த சோதோமின் குடிகளை இரக்கத்தினால் அவர் அழித்தார். அக்கிரமச் செய்கைக்காரர்கள் சாத்தானின் வஞ்சிக்கும் வல்லமையின் மூலமாக அனுதாபத்தையும் போற்றப்படுதலையும் பெற்று, பிறரையும் தொடர்ச்சியாக கலகம் செய்யும்படி நடத்துகின்றனர். காயீனின் நாட்களிலும் நோவாவின் நாட்களிலும் ஆபிரகாம், லோத்து ஆகியோரின் நாட்களிலும் அப்படியே இருந்தன. நமது காலத்திலும் அது அப்படியே உள்ளது. பிரபஞ்சத்தின்மீதுள்ள இரக்கத்தினால், அவரது கிருபையை நிராகரிப்பவர்களை, தேவன் கடைசியில் அழிப்பார்.(38)GCTam 638.3

    “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்”- ரோமர் 6:23. நீதிமானின் பிறப்புரிமையாக ஜீவன் உள்ளபோது, மரணம் துன்மார்க்கர்களின் பங்காக உள்ளது. “இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்” (உபா. 30:15) என்று இஸ்ரவேலருக்கு மோசே அறிவித்தான். இந்த வேத வாக்கியங்களில் குறிப்பிடப்படும் மரணம் ஆதாமின்மீது கூறப்பட்டது அல்ல. ஏனென்றால் மனித இனம் முழுவதும் அவனது மீறுதலின் தண்டனையை அனுபவிக்கிறது. அது நித்திய ஜீவனுடன் ஒப்பிட்டு, எதிரானதாக வைக்கப்பட்டுள்ள இரண்டாம் (நித்திய) மரணமாகும்.(39)GCTam 639.1

    ஆதாமின் பாவத்தின் பலனாக மனித இனம் முழுவதின்மீதும் மரணம் கடந்துவந்து, எல்லோரும் மற்றவரைப்போலவே கல்லறைக்குச் செல்லுகின்றனர். இரட்சிப்பின் திட்டத்திலுள்ள ஏற்பாட்டின் மூலமாக, அனைவரும் தங்களுடைய கல்லறைகளிலிருந்து எழுப்பப்பட உள்ளனர். “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்றும்”-அப். 24:15, “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்” (1 கொரி. 15:22) என்றும் இங்கு காட்டப்பட்டுள்ள இரு வகுப்பினருக்கும் இடையில் ஒரு வேற்றுமை காட்டப்பட்டுள்ளது. “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்”- யோவான் 5:28,29. “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை”-வெளி. 20:6. மனந்திரும்புதலினாலும் விசுவாசத்தினாலும் மன்னிப்பைப் றொதவர்கள், மீறுதலின் தண்டனையை— பாவத்தின் சம்பளத்தைப் பெற்றாகவேண்டும். அவர்கள் அவர்களுடைய கிரியைகளுக்குத் தக்கதான தண்டனையை வெவ்வேறு கால அளவிலும், கடுமையிலும், அனுபவித்து, கடைசியாக இரண்டாம் மரணத்தில் முடிவடைகின்றனர். பாவத்திற்குள் இருந்துகொண்டே இருக்கும் பாவியை இரட்சிப்பது, தேவனுடைய நீதி, இரக்கம் ஆகியவைகளுக்கு இசைவானதாக இல்லாததினால், அவரால் அப்படிச் செய்யமுடியாததாக உள்ளது. பாவியின் மீறுதல் அவனது வாழ்வை மறுத்துள்ளது. ஜீவனுக்கு அவன் தகுதி அற்றவன் என்பதை அவன் தானாகவே மெய்ப்பித்திருக்கிறான். எனவே, தேவன் அவனது உயிர்வாழும் தன்மையை அவனிலிருந்து நீக்குகிறார். “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை” (சங். 37:10) என்று ஒருவரும், “இராதவர்களைப்போல் இருப்பார்கள்” (ஒபதியா 16) என்று மற்றொருவரும், ஆவியானவரால் ஏவப்பட்டு அறிவிக்கின்றனர். அவர்கள் இகழ்ச்சியினால் மூடப்பட்டு, நம்பிக்கையின்மையில் மூழ்கி, நித்தியமாக மறக்கப்பட்டிருப்பார்கள்.(40)GCTam 639.2

    இப்படியாக பாவத்திற்கு அதன் சகலவிதமாக ஆபத்துக்களுடனும் அதன் பலனான பாழ்க்கடிப்புகளுடனும் முடிவு உண்டுபண்ணப்படும். “துன்மார்க்கரை அழித்து, அவர்கள் நாமத்தை என்றென்றைக்கும் இல்லாதபடி குலைத்துப்போட்டீர்” (சங். 9:5,6) என்று சங்கீதக்காரன் கூறுகிறான். நித்திய நிலையை எதிர்நோக்கியிருந்த யோவான் வெளிப்படுத்தின விசேஷத்தில், அபஸ்வரத்தால் குலைக்கப்படாத துதியின் பாடலை பிரபஞ்சம் முழுவதும் சேர்ந்துபாடக் கேட்கிறார். வானத்திலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் தேவனை மகிமைப்படுத்துவது கேட்கப்பட்டது. முடிவில்லாத ஆக்கினையில் நெளிந்துகொண்டு தேவனைத் தூஷிக்கும் எந்த இழக்கப்பட்டுப்போன ஆத்துமாவும் இருக்காது. இரட்சிக்கப்பட்டவர்களின் பாடலுடன் தங்களுடைய கதறல்களைக் கலப்பதற்கு நரகத்திலுள்ள எந்தத் துர்ப்பாக்கியமானவர்களும் அங்கே இருக்கமாட்டார்கள். (41)GCTam 640.1

    வேத வாக்கியங்களின் போதனைகளுக்கும், கராணங்களை அறியும் திறனுக்கும், நமது மானிட உணர்வுகளுக்கும் எதிரான, நித்திய ஆக்கினை போன்ற மரணத்தில், உணர்வு உண்டு என்னும் கோட்பாடு, இயற்கை அழியாதது என்னும் தவறான அடிப்படையின்மீது அமைந்துள்ளது. பிரபலமான நம்பிக்கையின்படி, பரலோகத்திலிருக்கும் மீட்கப்பட்டவர்கள் பூமியில் நடைபெறும் அனைத்துடனும் அறிமுகமானவர்களாக உள்ளனர். குறிப்பாக தாங்கள் பின்விட்டுச்சென்ற நண்பர்களின் வாழ்க்கைகளைப்பற்றி, நன்கு அறிந்தவர்களாக உள்ளனர். ஆனால் உயிரோடிருப்பவர்களின் துன்பங்களை அறிவதும் தாங்கள் நேசித்தவர்களால் செய்யப்பட்ட பாவங்களுக்குச் சாட்சியாக இருப்பதும், வாழ்க்கையின் துயரங்களையும், ஏமாற்றங்களையும், வேதனைகளையும் அவர்கள் அனுபவிப்பதைப் பார்ப்பதும், மரித்தவர்களின் மகிழ்ச்சிக்கு எப்படி ஆதாரமாக இருக்கமுடியும்? பூமியிலுள்ள தங்களின் நண்பர்களுக்கு மேலாக வட்டமிட்டுக் கொண்டிருப்பவர்களால், பரலோகத்தின் பேரின்பத்தை எந்த அளவு அனுபவிக்க முடியும்? சுவாசம் சரீரத்தைவிட்டு நீங்கிய உடனேயே, பாவத்திற்கு மன்னிப்புப் பெறாதவரின் ஆத்துமா, நரகத்தின் அக்கினி ஜுவாலைக்கு அனுப்பப்படுகிறது என்னும் நம்பிக்கை, எந்த அளவிற்கு முற்றிலும் மாறான கருத்தாக இருக்கிறது! நித்திய காலமாக துன்பத்திற்குள்ளும் பாவத்திற்குள்ளும் பிரவேசிப்பதற்குத் தங்களுடைய நண்பர்கள் ஆயத்தமற்றவர்களாகக் கல்லறைகளுக்குக் கடந்துசெல்லுவதைக் காண்பது, அவர்களை எந்த அளவிற்கு ஆழமான வேதனைக்குள் மூழ்கடிக்கும்? இந்தத் திகிலூட்டும் சிந்தனையினால், அநேகர் பைத்தியகாரர்களாகும்படி விரட்டப்பட்டுள்ளனர். (42)GCTam 640.2

    இவைகளைப்பற்றி வேதவாக்கியங்கள் என்ன கூறுகின்றன? “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்”-சங். 146:4. மரணத்தில் மனிதன் நினைவுள்ளவனாக இருப்பதில்லை என்று தாவீது அறிவிக்கிறார். “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை.... நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே” (பிர. 9:5,6,10) என்று சாலொமோனும் அதே சாட்சியைத்தான் கூறுகிறான். (43)GCTam 641.1

    எசேக்கியா அரசனின் ஜெபத்திற்கு மறுமொழியாக அவனது உயிர் பதினைந்து வருடங்கள் நீடிக்கப்பட்டபோது, நன்றிமிக்க அந்த அரசன்: “பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தைத் தியானிப்பதில்லை. நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான்” (ஏசாயா 38:18,19) என்று தேவனை அவரது இரக்கத்திற்காகப் புகழ்ந்து ஸ்தோத்திரித்தான். பிரபலமான இறையியல் போதனை, மரித்த நீதிமான் பரலோகப் பேரின்பத்திற்குள் பிரவேசித்து அழியாமையுள்ள ஒரு நாவினால் தேவனைத் துதிப்பான் என்று அறிவிக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு மகிமைமிக்க எதிர்காலப் பலனை எசேக்கியாவினால் மரணத்தில் காணமுடியவில்லை. அவனது வார்த்தைகளுடன் “மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?” (சங். 6:5) “மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்” (சங். 115:17) என்ற சங்கீதக்காரனின் சாட்சியும் இசைந்திருக்கிறது. (44)GCTam 641.2

    பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு நமது முற்பிதாவாகிய தாவீதைப்பற்றி: “அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.... தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே” (அப். 2:29,34) என்று கூறினார். உயிர்த்தெழுதல்வரை தாவீது கல்லறையில் இருக்கிறான் என்னும் உண்மை, நீதிமான்கள் மரித்தவுடன் பரலோகத்திற்கு செல்லுவதில்லை என்பதற்குச் சாட்சியாக உள்ளது. கிறிஸ்து எழுந்திருக்கிறார் என்ற உண்மையின் புண்ணியத்தால் மட்டுமே கடைசியாக தாவீதினால் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்காரமுடியும். (45)GCTam 641.3

    “மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை. கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே” (1 கொரி. 15:16- 18) என்று பவுல் கூறினான். நாலாயிரம் வருடங்களாக மரித்தவுடன் நீதிமான்கள் பரலோகத்திற்குச் சென்றிருந்தால்—உயிர்த்தெழுதலே அவசியப்படாதே! உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால்-கிறிஸ்துவிற்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே என்று பவுல் எப்படிக் கூறியிருந்திருக்கமுடியும்? (46)GCTam 642.1

    இரத்தசாட்சியான திண்டேல் மரித்தவர்களின் நிலையைக் குறித்து: “அந்த ஆத்துமாக்கள் பரலோகத்தில் கிறிஸ்து இப்போது இருக்கிற அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தேவதூதர்கள் இருக்கிற முழு மகிமையில் ஏற்கனவே இருக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படையாக அறிக்கைசெய்கிறேன். அது என்னுடைய விசுவாசத்திற்குட்பட்டதும் அல்ல. அப்படியில்லாதிருந்தால் மரித்தேரின் உயிர்த்தெழுதலைக் குறித்து பிரசங்கிப்பது வீண் என்பதையே காண்கிறேன்” என்று அறிவித்தார்.--William Tyndale, Preface to New Testament (ed. 1534). Reprinted in British Reformers—Tindal,Frith,Barnes,page 349. (47)GCTam 642.2

    மரணத்தில் அழியாமை என்கிற ஆசீர்வாதம் உள்ளது என்னும் (தவறான) நம்பிக்கை, உயிர்த்தெழுதலைப்பற்றிய வேதாகமக் கோட்பாட்டை பரவலாக அலட்சியம் செய்யும்படிக்கு நடத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாக இருக்கிறது. டாக்டர் ஆதாம் கிளார்க் என்னும் அறிஞர் இந்தப் போக்கைக் குறித்து: “உயிர்த்தெழுதலைக் குறித்த கொள்கை இப்பொழுதுள்ள கிறிஸ்தவர்களைவிட, ஆதிகாலக் கிறிஸ்தவர்களுக்கு இடையில் அதிக விளைவைக் கொண்டிருந்ததாகக் காணப்படுகிறது. இது எப்படி? அப்போஸ்தலர்கள் இதைப்பற்றி தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டிருந்து, தேவனைப் பின்பற்றினவர்களை அக்கரைகாட்டவும், கீழ்ப்படியவும், உற்சாகங்கொள்ளவும் அதன்மூலம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இன்றைக்கு இருக்கிற அவர்களுடைய பின்னடியார்கள் அதைப்பற்றி அபூர்வமாகவே குறிப்படுகின்றனர். அப்போஸ்தலர்கள் போதித்தவண்ணமாக ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். நாம் போதிக்கிறவண்ணமாக நம்மைக் கேட்பவர்கள் நம்புகின்றனர். சுவிசேஷத்தில் வேறு எந்த கோட்பாட்டிற்கும் இதைவிட அதிகமான அழுத்தம் கொடுக்கப்படவில்லை. இப்பொழுதுள்ள பிரசங்க முறையில் இதைவிட வேறு எந்த கோட்பாடும் அதிகம் அலட்சியப்படுத்தப் படுவதில்லை” என்று குறிப்பிட்டார். Commentary,remarks on I Corinthians 15,paragraph 3. (48)GCTam 642.3

    உயிர்த்தெழுதல் என்னும் மகிமைமிக்க சத்தியம், ஏறத்தாழ முற்றிலுமாக இருளடைந்து, கிறிஸ்தவ உலகத்தின் பார்வையிலிருந்து மறைந்துபோகும் வரை இந்நிலை தொடர்ந்திருக்கிறது. ஒரு தலைசிறந்த மத எழுத்தாளர் 1 தெச. 4:13-18-ல் உள்ள பவுலின் வார்த்தைகளைப்பற்றி வர்ணனை செய்யும்போது: “கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என்னும் கோட்பாட்டில் சந்தேகம் ஏதாவது இருந்தால், சகலவிதங்களிலும் நமக்கு ஆறுதல் தரும் நடைமுறை நோக்கங்களுக்காக, அந்த இடத்தை நீதிமான்களின் ஆசீர்வாதமிக்க அழியாமை என்னும் கோட்பாடு எடுத்துக் கொள்ளுகிறது. நமது மரணத்தில் நமக்காக கர்த்தர் வருகிறார். அதற்காகத்தான் நாம் காத்து விழித்திருக்கவேண்டும். மரித்தவர்கள் ஏற்கனவே மகிமைக்குள் கடந்து சென்றுள்ளனர். அவர்கள் நியாயத்தீர்ப்புக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் காத்திருப்பதில்லை” என்கிறார். (49)GCTam 643.1

    ஆனால் இயேசு அவருடைய சீடர்களை விட்டுச்சென்ற சமயத்தில், விரைவில் அவர்கள் அவரிடம் வந்துசேருவார்கள் என்று கூறவில்லை. “ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்” (யோவான் 14:2,3) என்று கூறினார். பவுல் மேலும்: “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்” (1தெச. 4:16—18) என்கிறார். இந்த ஆறுதலின் வார்த்தைகளுக்கும், முன்னர் கோடிட்டுக்காட்டப்பட்ட யுனிவர்சலிஸ்ட் போதகரின் வார்த்தைகளுக்கும் எத்தனை வேற்றுமை! மரித்தவர் எப்படிப்பட்ட பாவியாக இருந்தாலும், அவர் தனது இறுதிமூச்சை இங்கு விடும்போது, தேவதூதர்களுக்கு மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்ற நிச்சயத்தைக் கொடுத்து துக்கத்தில் இருந்தவர்களை ஆறுதல்படுத்தியது. பவுலோ, கல்லறையின் விலங்குகள் தறிக்கப்பட்டு, கிறிஸ்துவிற்குள் மரித்தவர்கள் நித்திய ஜீவனுக்கென்று எழுப்பப்பட உள்ள கர்த்தரின் எதிர்கால வருகையை அவரது சகோதரர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார். (50)GCTam 643.2

    ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் வாசஸ்தலத்திற்குள் எவரும் பிரவேசிக்குமுன், அவர்களது வழக்குகள் விசாரணை செய்யப்படவேண்டும், அவர்களது சுபாவங்களும் செயல்களும் திருப்பிப்பார்க்கப்படுவதற்காக தேவனுக்கு முன்பாகச் செல்லவேண்டும். புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வைகளின்படி, அனைவரும் நியாயம் தீர்க்கப்பட்டு, அவர்களது கிரியைகளுக்குத்தக்கதாகப் பலனடைய வேண்டும். இந்த நியாயத்தீர்ப்பு மரணத்தில் நடைபெறுவதில்லை. “மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்” (அப். 17:31) என்கிற பவுலின் வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள். இவ்விதமாக எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரம், உலகத்தின் நியாத்தீர்ப்புக்காக குறிக்கப்பட்டிருந்ததை அப்போஸ்தலன் தெளிவாக அறிவித்தார். (51)GCTam 644.1

    “தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்” (யூதா 6), “ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனேக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவ பக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தை களெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிர மான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார்” (யூதா 14,15) என்று யூதாவும் இந்தக் காலத்தை குறிப்பிட்டு ஏனோக்கின் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டுகிறார். “மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; ... அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்” (வெளி. 20:12) என்கிறார் யோவான். (52)GCTam 644.2

    ஆனால் மரித்தவர்கள் ஏற்கனவே பரலோகப் பேரின்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தால், அல்லது நரக அக்கினி ஜுவாலையில் நெளிந்துகொண்டிருந்தால், ஒரு எதிர்கால நியாத்தீர்ப்புக்கு அவசியம் என்ன? இந்த முக்கியமான விஷயங்களைக்குறித்த தேவனுடைய வார்த்தைகளின் போதனைகள் இருளாகவோ அல்லது முரண்பட்டதாகவோ இல்லை, சாதாரணமானவர்களும் புரிந்துகொள்ளமுடியும். கபடமற்ற மனம் இப்போதுள்ள தத்துவ விளக்கத்தில் ஞானத்தையோ அல்லது நீதியையோ எப்படிக்காணும்? நியாயத்தீர்ப்பில் அவர்களுடைய வாழ்க்கை விசாரணையின் முடிவில் பெறவேண்டிய “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரி யாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” (மத். 25:21) என்கிற புகழ்ச்சியை நீதிமான்கள் நீண்ட காலமாக அவரது சமுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே பெறுவார்களா? சர்வபூமிக்கும் நியாயாதிபதியானவரிடமிருந்து “சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்” (மத்தேயு 25:41) என்கிற இகழ்ச்சியை பெற துன்மார்க்கர் தங்களது ஆக்கினையை அனுபவித்துக்கொண்டிருக்கும் இடத்திலிருந்து அழைக்கப்படுவார்களா? இது பக்திவிநயமான பரியாசம். தேவனுடைய ஞானம், நீதி ஆகியவைகளின்மீதான வெட்கத்திற்குரிய குற்றச்சாட்டு (53)GCTam 644.3

    ஆத்துமா அழியாதது என்ற தத்துவ விளக்கம், அஞ்ஞான மார்க்கத்திடமிருந்து கடனாகப்பெற்று கிறிஸ்தவ மதத்திற்குள் பதித்த ரோமசபையின் தவறான கோட்பாடுகளில் ஒன்றாகும். “ரோம கட்டளைகளான எருக்களத்தை அமைக்கிற அரக்கத்தனமான கட்டுக்கதைகளில் ஒன்று” என்று மார்ட்டின் லுத்தர் இதைத் தரப்பிரிவு செய்திருக்கிறார்.—E. Petavel,The Problem of Immortality,page 255. “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என்ற பிரசங்கியின் புத்தகத்திலுள்ள சாலொமோனின் வார்த்தைகளைப்பற்றி விவரிக்கும்போது சீர்திருத்தக்காரர்: “இது மரித்தவர்கள் உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் மற்றொரு இடம். அங்கே கடமையும் அறிவும் ஞானமும் இல்லை என்று அவர் சொல்லுகிறார். மரித்தவர்கள் நித்திரையிலிருக்கிறார்கள் எனவும் ஒன்றையும் உணருவதில்லையென்றும் சாலொமோன் நிதானிக்கிறார். அவர்கள் நாட்களையும் வருடங்களையும் கணக்கிடாதவர்களாக படுத்துக்கிடக்கிறார்கள். ஆனால் எழுப்பப்படும்போது, ஒரு நிமிடங்கூட உறங்கியிராதவர்களைப்போல நினைப்பார்கள்.”- Martin Luther,Exposition of Solomon’s Booke Called Ecclesiastes,page 152.(54)GCTam 645.1

    மரணத்தில் நீதிமான்கள் தங்களுடைய பரிசையும் துன்மார்க்கர் தங்களுடைய தண்டனையையும் அடையச் செல்லுகின்றனர் என்பது பரிசுத்த வேதவாக்கியங்களில் எங்கும் காணப்படவில்லை. இப்படிப்பட்ட வாக்குறுதியை முற்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் விட்டுச் செல்லவில்லை. கிறிஸ்துவும் அவரது சீடர்களும் இதைப்பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மரித்தவர்கள் உடனே பரலோகம் செல்லுவதில்லை என்று வேதாகமம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. உயிர்த்தெழும்வரை நித்திரை செய்து கொண்டிருப்பவர்களாக அவர்கள் காட்டப்பட்டுள்ளனர். 1 தெச. 4:14; யோபு 14:10-12. வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கிப் போகும் (பிர. 12:6) அதே நாளில் அவர்களது யோசனை அழிந்துவிடும். கல்லறைக்குள் செல்லுகிறவர்கள் மௌனத்திலிருக்கின்றனர். சூரியனுக்குக் கீழே செய்யப்படும் ஒன்றிலும் அவர்களுக்கு இனிப் பங்கு இல்லை (யோபு 14:21). களைத்துப்போன நீதிமான்களுக்கு அது ஆசீர்வாதமான இளைப்பாறுதலின் காலம். நீண்டதாயினும் குறுகியதாயினும், அவர்களுக்கு அது ஒரு வினாடியாக மட்டுமே இருக்கும். அவர்கள் நித்திரை செய்கின்றனர். மகிமைமிக்க அழியாமையைத் தரித்துக்கொள்ளும்படி தேவ எக்காளத்தினால் எழுப்பப்படுகின்றனர். “எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்” (1 கொரி. 15:52—55). ஆழ்ந்த நித்திரையிலிருந்து அவர்கள் அழைக்கப்படும்போது, நிறுத்தின இடத்திலிருந்து சிந்திக்கத் தொடங்குவார்கள். அவர்களுடைய கடைசி உணர்வு மரண வேதனையாக இருந்தது, கடைசி சிந்தனை கல்லறையின் வல்லமைக்குக் கீழே விழுந்துகொண்டிருப்பதைப் பற்றியதாக இருந்தது. கல்லறையிலிருந்து அவர்கள் எழும்பும்போது, வெற்றிமுழக்கத்தில் எதிரொலிக்கப்போகிற அவர்களுடைய மகிழ்ச்சிமிக்க முதல் எண்ணம்: “மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே?” என்பதாக இருக்கும். (55)GCTam 645.2