Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாபெரும் ஆன்மீகப் போராட்டம்! - Contents
 • Results
 • Related
 • Featured
No results found for: "".
 • Weighted Relevancy
 • Content Sequence
 • Relevancy
 • Earliest First
 • Latest First

  16—முற்பிதாக்களின் பயணம்!

  (மூலநூல் : The Great Controversy, பக்கம்: 289—298)

  ங்கில சீர்திருத்தக்காரர்கள் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தின் கோட்பாடுகளை மறுத்திருந்தபோதிலும், அதன் அநேக வடிவங்களை அவர்களுக்கிடையில் கைக்கொண்டிருந்தனர். இவ்வாறாக, ரோமாபுரியின் அதிகாரமும், கொள்கையும், அவர்களால் நிராகரிக்கப்பட்டிருந்த போதிலும், இங்கிலாந்து சபையின் ஆராதனையில் ஏற்படுத்தப்பட்டிருந்த அதன் சம்பிரதாயங்கள் ஒரு சிலதாக மட்டும் இருக்கவில்லை. அவை மனசாட்சி சம்பந்தப்பட்ட காரியங்கள் இல்லை என்று குரல் எழுப்பப்பட்டது. வேத வார்த்தைகள் அவைகளை கட்டளையிடாதிருந்தாலும், அதனால் அவை அவசியமற்றதாயிருந்தாலும், தடுக்கப்படாததால் அவைகள் தீமைகளல்ல என்று கோரப்பட்டது. அவைகளைக் கைக்கொண்டது, ரோமன் கத்தோலிக்க மார்க்கத்திற்கும் சீர்திருத்த சபைகளுக்கும் இடையிலிருந்த அகலமான இடைவெளியை குறுகச்செய்தது. கூடவே புரொட்டஸ்டாண்டுமார்க்க விசுவாசத்தை ரோமன் கத்தோலிக்க மார்க்கம் ஏற்றுக்கொள்ள இது வகைசெய்யும் என்றும் வற்புறுத்தப்பட்டது. (1)GCTam 331.1

  பழமைவாதிகளுக்கும் சமரசத்தை நாடினவர்களுக்கும் இந்த வாதங்கள் முடிவானவையாக இருந்தன. ஆனால் இவ்விதமாக நிதானிக்காத வேறொரு வகுப்பினர் இருந்தனர். இந்த சம்பிரதாயங்கள் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்திற்கும் சீர்திருத்தசபைகளுக்கும் இடையிலிருந்த பெரும் பிரிவை இணைக்கும் பாலமாக இருக்கின்றன என்பதே அவர்களுடைய பார்வையில், அவைகளைச் செய்வதற்கு எதிராக முடிவான வாதமாக இருந்தது. எவைகளில் இருந்து அவர்கள் விடுதலைசெய்யப்பட்டு திரும்பிச்செல்ல மனமற்றிருந்தனரோ அந்த அடிமைத்தனத்தின் அடையாள அட்டைதான் (Badge Identity Card) அது என்று அதனை அவர்கள் பாத்திருந்தனர். தேவன், அவருக்குச் செலுத்தப்படும் தொழுகை முறைகளின் நியமங்களனைத்தையும் அவரது வார்த்தைகளில் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதையும், அவைகளோடு எதையும் கூட்டுவதற்கோ அல்லது அவைகளிலிருந்து குறைப்பதற்கோ அவர்களுக்குச் சுதந்திரமில்லையென்ற நியாயத்தையும் அவர்கள் கண்டனர். பெரிய மருளவிழுகையின் துவக்கமே, தேவனுடைய அதிகாரத்திற்குப் பதிலாக சபையின் அதிகாரத்தை வைக்கத் தேடியதில்தான் இருந்தது. ரோமமார்க்கம், தேவன் தடைசெய்யாமலிருந்தவைகளை சேர்ப்பதில் துவக்கி, அவர் எவைகளைச் செய்யவேண்டுமென்று தெளிவாகக் கூறியிருந்தாரோ, அவைகளைச் செய்யக்கூடாதென்று தடைசெய்வதில் முடித்தது. (2)GCTam 331.2

  பழங்கால சபையில் காணப்பட்டிருந்த தூய்மைக்கும், எளிமைக்கும் திரும்புவதற்கு, அநேகர் ஆர்வத்துடன் வாஞ்சித்தனர். ஆங்கில சபையில் ஏற்படுத்தப்பட்டிருந்த அநேக சம்பிரதாயங்களை அவர்கள் உருவ வழிபாட்டின் நினைவுச்சின்னங்கள் என்று பாவித்து, மனசாட்சியுடன் அதன் ஆராதனையில் ஐக்கியப்படமுடியாதவர்களாக இருந்தனர். அரசியல் அதிகாரத்தால் அந்தச் சபை ஆதரிக்கப்பட்டிருந்ததினால், அதன் படிவத்தில் எவ்விதமான இணங்காமையையும் அது அனுமதிக்கவில்லை. அதன் ஆராதனைக்கு வருகை தரவேண்டுமென்பது சட்டப்பூர்வமாக்கப்பட்டு, அதிகாரப் பூர்வமற்ற சமய ஆராதனைகள், சிறைவாசம், நாடுகடத்தப்படுதல், மரணம் ஆகிய தண்டனைகளினால் தடைசெய்யப்பட்டன. (3)GCTam 332.1

  பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அப்போதுதான் இங்கிலாந்து தேசத்தின் அரியணையில் ஏறியிருந்த அரசன், “தூய்மையாளர்கள் இசையவேண்டும் அல்லது அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறும்படி துன்புறுத்தப்படவேண்டும் அல்லது மோசமான நிலைமையை அடைய வேண்டும்.” (George Bancroft, History of the United States of America, pt. 1, ch. 12, par. 6.) என்னும் அறிவிப்பை வெளியிடுவதில் தீர்மானமிக்கவனாக இருந்தான். வேட்டையாடப்பட்டு, உபத்திரவப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர்கள், எதிர்காலத்தில் நல்ல நாட்களைப்பற்றிய நம்பிக் கையை அறியக்கூடாதிருந்தனர். தங்களுடைய மனசாட்சியின்படி தேவனைச் சேவிக்க விரும்புகிறவர்களுக்கு, “இங்கிலாந்து வாழுவதற்கு ஏற்ற இடமில்லை” (J.G.. Palfrey, History of New England, ch. 3, par. 43.) என்ற உணர்விற்கு வந்தனர். கடைசியாக சிலர் ஹாலந்து நாட்டில் தஞ்சம்புகத் தீர்மானித்தனர். துன்பங்கள், இழப்புகள், சிறைவாசங்கள் ஆகியவைகளை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. அவர்களது நோக்கங்கள் முறியடிக்கப்பட்டு, விரோதிகளின் கரங்களில் காட்டிக்கொடுக்கப்பட்டனர். ஆனால் நிலைகுலையாத விடாமுயற்சி வெற்றியடையவே, அவர்கள் நட்புமிக்க டச்சுக் குடியரசின் கரைகளில் புகலிடம் கண்டனர். (4)GCTam 332.2

  வீடுகளையும் பொருட்களையும் அவர்களது வாழ்விற்கு ஆதாரமாயிருந்தவைகளையும் அவர்கள் தங்களது வெளியேற்றத்தின் போது விட்டுவிட்டனர். மாறுபட்ட மொழியையும், சம்பிரதாயங்களையும் உடைய ஒரு அந்நிய தேசத்தில் அவர்கள் அந்நியர்களாக இருந்தனர். தங்களது உணவைச் சம்பாதிப்பதற்காக, அவர்களுக்குத் தெரியாததும் புதிதுமாயிருந்த தொழில்களைச் செய்யும்படி வற்புறுத்தப்பட்டனர். இதுவரை தங்களது நிலங்களில் வேலைசெய்திருந்த மத்திய வயது மனிதர்கள், இப்பொழுது இயந்திரத் தொழில்களைக் கற்கவேண்டியவர் களானார்கள். ஆனால் அவர்கள் சோம்பேறித்தனத்திலும் அதிருப்தியிலும் காலத்தை வீணாக்காமல், அந்த நிலைமையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அடிக்கடி வறுமையினால் கிள்ளப்பட்டிருந்தபோதிலும், தங்களுக்குக் கொடுக்கப் பட்டிருந்த ஆசீர்வாதங்களுக்காக தேவனுக்கு நன்றிகூறி, அவருடனுள்ள கறையற்ற ஆவிக்குரிய தொடர்பில் மகிழ்ச்சியைக் கண்டனர். தாங்கள் மோட்சப்பயணம் செய்பவர்கள் என்பதை அறிந்து கஷ்டங்களில் அதிக கவனம் வைக்காமல், தங்களது மிக அருமையான நாடான பரலோகத்தை நோக்கித் தங்களது பார்வையை உயர்த்தி, தங்களது மனங்களை அமைதிப்படுத்திக்கொண்டனர்.-Bancroft, Pt. 1, ch. 12, par. 15. (5)GCTam 333.1

  நாடுகடத்தப்பட்டதற்கும் துன்பங்களுக்கும் நடுவில் அவர்களது அன்பும் விசுவாசமும் உறுதியாக வளர்ந்தது. அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்பினார்கள். அவர் அவர்களுக்குத் தேவையான நேரத்தில், அவர்களைக் கைவிடவில்லை. அவர்களை தைரியப்படுத்தவும், தாங்கவும் அவரது தூதர்கள் அவர்களருகில் இருந்தனர். அவர்களுக்கென்று ஒரு நாட்டைக் காணவும், அவர்களது பிள்ளைகளுக்கு மதச்சுதந்திரத்தைப் பிறப்புரிமையாகக் கொடுக்கவும், தேவனுடைய கரம் கடலுக்கப்பாலிருந்த ஒரு நாட்டைக் காட்டுவதுபோலத் தோன்றியபொழுது, பின்வாங்காதபடி தெய்வீக ஏற்பாட்டின் பாதையில் அவர்கள் முன்சென்றனர். (6)GCTam 333.2

  தேவன் அவரது மக்களுக்கான கிருபையின் நோக்கத்தை நிறைவேற்ற, அவர்களை ஆயத்தப்படுத்துவதற்காக அவர்கள்மீது சோதனைகளை அனுமதித்தார். உயர்த்தப்படவேண்டும் என்பதற்காக சபை தாழ்த்தப்பட்டது. அவரை விசுவாசிக்கிறவர்களை கைவிடமாட்டார் என்பதற்கான மற்றொரு சாட்சியை உலகத்திற்குக் கொடுப்பதற்காக அதன் சார்பாக வல்லமையை தேவன் வெளிக்காட்ட இருந்தார். தமது மக்களை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவரும்படியும், அவரது மகிமையை முன்கொண்டுசெல்லும்படியும், சாத்தானின் கோபத்தையும் துன்மார்க்கரின் திட்டங்களையும் அவர் மாற்றியமைக்கிறார். உபத்திரவமும் நாடுகடத்தப்படுதலும் சுதந்திரத்திற்கான பாதையை திறந்துகொண்டிருந்தன. (7)GCTam 333.3

  தூய்மையாளர்கள் ஆங்கில சபையிலிருந்து பிரிந்துசெல்ல முதலில் நெருக்கப்பட்டபோது, “அறிவிக்கப்பட்டுள்ள சகல பாதைகளிலும் அல்லது அறிவிக்கப்படவுள்ள சகல பாதைகளிலும் ஒன்றுசேர்ந்து நடப்போம்” (J. Brown, The Pilgrims Fathers, Page 74.) என்ற ஒரு பக்திவிநயமான உடன்படிக்கையுடன் கர்த்தரின் சுதந்திரமான மக்களாக ஒன்றுசேர்ந்தனர். சீர்திருத்தத்தின் உண்மையான ஆவியும், புரொட்டஸ்டாண்டு மார்க்கத்தின் உயிரோட்டமான கொள்கையும், இங்குதான் இருந்தன. அந்த மோட்சப்பயணிகள், இந்த நோக்கத்துடன் புதியஉலகில் ஒருஇடத்தைக் கண்டிட, ஹாலந்தைவிட்டுப் புறப்பட்டுச்சென்றனர். அவர்களுடன் பயணம் செய்வதிலிருந்து தெய்வீக ஏற்பாட்டினால் தடுக்கப்பட்டிருந்த அவர்களுடைய போதகர் ஜான் ராபின்சன், நாட்டைவிட்டுச்செல்லும் அவர்களுக்குக் கொடுத்த பிரியாவிடையில்: (8)GCTam 334.1

  “சகோதரரே! இதுமுதல் நாம் பிரிந்துசெல்லக் கூடியவர்களாக இருக்கிறோம். இதன்பின் நான் உங்கள் முகங்களைக் காண்பேனா என்பதைக் கர்த்தர்தான் அறிந்திருக்கிறார். ஆனால் கர்த்தர் அந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறாரா இல்லையோ, நான் தேவனுக்கு முன்பாகவும் அவரது ஆசீர்வதிக்கப்பட்டுள்ள தூதர்களுக்கு முன்பாகவும் உங்களிடம் மன்றாடுவது என்னவெனில், நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கும் அதிகமாக நீங்கள் என்னைப் பின்பற்றாதிருங்கள். எனது ஊழியத்தினால் கிடைத்த சத்தியங்களை எவ்வளவு ஆவலாக பெற்றுக்கொண்டீர்களோ, அதேபோல் தேவன் அவருடைய வேறு கருவியின் மூலமாக எதையாவது உங்களுக்கு வெளிப்படுத்தினால் அதைப் பெற்றுக்கொள்ள எப்போதும் ஆயத்தமாயிருங்கள். ஏனெனில், அவரது பரிசுத்தமான வார்த்தையிலிருந்து மேலும் வெளிவரக்கூடிய அதிகமான சத்தியத்தையும் ஒளியையும் அவர் வைத்திருக்கிறார் என்பதில் நான் மிகவும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.”- Martyn vol. 5, p. 70. (9)GCTam 334.2

  “சீர்திருத்தத்திற்கான கருவியாக இருந்தவர்கள் போதித்ததற்கும் அதிகமாக வளராமல், மதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சீர்திருத்த சபைகளின் நிலைமைக்காக, என்னால் போதுமான அளவில் அழ இயலவில்லை. லுத்தர் கண்டவைகளுக்கும் அதிகமாகச் செல்லும்படி இழுக்கப்பட முடியாதவர்களாக லுத்தரன்கள் உள்ளனர். கால்வினிஸ்டுகளைப் பாருங்கள். எல்லாவற்றையும் இன்னும் காணாதவராயிருந்த, தேவனுடைய அந்தப் பெரிய மனிதன் அவர்களை விட்டுச்சென்ற இடத்திலேயே, அவர்கள் பிடிவாதமாக நின்றுகொண்டிருக்கின்றனர். இது அதிகமாக புலம்பவேண்டிய துன்பமாக இருக்கிறது. அவர்கள் தங்களது காலத்தில் எரிந்து பிரகாசித்த விளக்குகளாக இருந்திருந்தபோதிலும், தேவனுடைய ஆலோசனையில் அவர்கள் முழுமையாக நுழையவில்லை. ஆனால் இப்பொழுது அவர்கள் வாழ்ந்திருந்தார்களானால், முதலில் கொடுக்கப்பட்டிருந்த ஒளியை அவர்கள் பெற்றுக்கொண்டதுபோலவே இப்பொழுதும் அதிகமான ஒளியைத் தழுவிக்கொள்ளுவதற்கு அவர்கள் விருப்பமுள்ளவர்களாக இருந்திருப்பார்கள்.”—D. Neal, History of the Puritans, vol. 1, p. 269. (10)GCTam 334.3

  “உங்களுக்கு அறிவிக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்படவிருக்கிற கர்த்தருடைய பாதையில் நடப்பீர்கள் என்று நீங்கள் ஒப்புக்கொண்ட சபை உடன்படிக்கையை நினையுங்கள். எழுதப்பட்டுள்ள அவருடைய வார்த்தையிலிருந்து உங்களுக்குக் கொடுக்கப்படும் எவ்வகையான ஒளியையும் சத்தியத்தையும் பெற்றுக்கொள்ளுவோமென்று தேவனுடனும் ஒருவரோடொருவரும் நீங்கள் செய்துகொண்ட உடன்படிக்கையை நினையுங்கள். ஆனால் சத்தியமென்று நீங்கள் எதைப் பெறுகிறீர்களோ அதை எச்சரிப்புடன் பெற்றுக்கொள்ளுமுன் சத்தியத்தின் மற்ற வசனங்களுடன் ஒப்பிட்டு நிறுத்திப் பாருங்கள். ஏனெனில், இப்படிப்பட்ட அந்திக்கிறிஸ்துவின் கனத்த இருளில் இருந்து கிறிஸ்தவ உலகம் சீக்கிரமாக வெளிவருவதும், உடனடியாகப் பூரணமான அறிவு தோன்றுவதும் இயலாததாகும்.-Martyn vol. 5, pp. 70—71. (11)GCTam 335.1

  வனாந்தரத்தின் துன்பங்களையும் அபாயங்களையும் சகிக்கவும், தேவனுடைய ஆசீர்வாதத்துடன் அமெரிக்கக் கடற்கரையில் வல்லமை மிக்க ஒரு நாட்டின் அஸ்திவாரத்தைப் போடவும், கடலுக்குக் குறுக்கே நீண்ட பயணத்தில் இருந்த ஆபத்தைத் தைரியத்துடன் எதிர்நோக்கிச் செல்லவும் அந்தப் பரதேசப் பயணிகள் ஏவப்பட்டதற்கு, “மனசாட்சிக்கு சுதந்திரம்” என்பதன் மீதிருந்த வாஞ்சையே காரணமாக இருந்தது. நேர்மையும் கடவுள் பயமும் உள்ளவர்களாக இருந்தபோதிலும் அந்தப் பரதேசப் பயணிகள் இதுவரை சமயச் சுதந்திரம் என்ற பெரும் கொள்கையைப் புரிந்துகொள்ளவில்லை. அநேகத் தியாகங்கள் செய்து பெற்றுக்கொண்ட அச்சுதந்திரத்தை பிறருக்கும் சமமாகக் கொடுக்க அவர்கள் தயாராயிருக்கவில்லை. புதிய ஏற்பாட்டின் வெளிவளர்ச்சியான, தேவன் மட்டுமே மனிதனுடைய நம்பிக்கையின் நீதிபதி என்ற உயரிய கொள்கையைப்பற்றிய சரியான புரிந்துகொள்ளுதலை பதினேழாம் நூற்றாண்டில் முன்னணியிலிருந்த சிந்தனையாளர்களிலும் சன்மார்க்க வாதிகளிலும் வெகுசிலரே பெற்றிருந்தனர்.--Ibid., vol. 5, p.297. “மனசாட்சியைக் கட்டுப்படுத்தும் உரிமையையும், மதவிரோதத்தை தண்டிக்கும் உரிமையையும் தேவன் சபையிடம் விட்டுவைத்திருக்கிறார்” என்னும் கோட்பாடு, மிக ஆழமாக வேரூன்றி உள்ள போப்புமார்க்கத்தின் தவறுகளில் ஒன்றாகும். சீர்திருத்தவாதிகள் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தின் மத அதிகாரத்தை நிராகரித்தபோதிலும் அதின் சகிப்புத்தன்மையின்மை என்னும் ஆவியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடையவில்லை. போப்பு மார்க்கத்தின் நீண்டகால ஆளுகையினால், கிறிஸ்தவமார்க்கம் முழுவதையும் மூடியிருந்த கடுமையான இருள், இதுவரை முற்றிலும் விலக்கப்படவில்லை. மசாசூசெட்ஸ் குடியிருப்பில் இருந்த ஊழியக்காரர்களில் ஒருவர், “சகிப்புத்தன்மைதான் உலகத்தை அந்திக் கிறிஸ்து மார்க்கமாக்கியது. மதவிரோதிகளை தண்டிப்பதால் சபை ஒருபோதும் பாதிக்கப்படவில்லை” என்று கூறினார்.--Ibid., vol. 5, p. 335. அரசாங்கத்தில் பேசும் உரிமை சபை அங்கத்தினர்களிடம் மட்டும்தான் இருக்கவேண்டும் என்ற ஒழுங்குமுறையை இந்தக் குடியிருப்பினர் ஏற்றுக்கொண்டிருந்தனர். ஒருவகையான அரசாங்க சபை அமைக்கப்பட்டு, பாதிரிமார்களின் தேவைகளை சந்திக்கும்படி மக்களனைவரும் வற்புறுத்தப்பட்டனர். மதவிரோத்தை ஒடுக்க நீதிபதிகள் அதிகாரம் பெற்றனர். இவ்வாறான வல்லமை சபையின் கரங்களில் இருந்தது. இச்செயல்களின் தவிர்க்க முடியாத விளைவுகளினால் உபத்திரம் ஏற்பட வெகுகாலம் செல்லவில்லை. (12)GCTam 335.2

  முதலாவது குடியிருப்பை ஏற்படுத்தியதற்குப் பதினொரு வருடங்களுக்குப் பின்னர், புதிய உலகத்திற்கு ரோஜர் வில்லியம்ஸ் வந்தார். ஆரம்பகாலப் பரதேசப் பயணிகளைப்போல, மதச் சுதந்திரத்தை அனுபவிக்கவே இவர் வந்தார். ஆனால் அவர்களைப்போல் இல்லாமல், தனது காலத்தில் வெகு சிலர் மட்டுமே புரிந்திருந்த “மதச்சுதந்திரம் எச்சமயத்தாருக்கும் உரிய மாற்றமுடியாத உரிமை” என்கிற உண்மையை அவர் கண்டார். தேவவார்த்தையிலிருக்கும் எல்லா ஒளியும் இன்னும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்ற ராபின்சனின் கருத்தைப் பற்றிக்கொண்டிருந்த அவர், ஆர்வத்தோடு சத்தியத்தைத் தேடினார். “மனசாட்சியின் சுதந்திரம், கருத்துக்கள்- இவை சட்டத்தின் முன் சமத்துவம் என்கிற கொள்கையின் முழுமையை நவீன கிறிஸ்தவ உலகத்தில் முதலில் புரிந்துகொண்ட நபர் இவர்தான்.”—Bancroft, Pt. 1, ch. 15, par. 16. குற்றங்களை அடக்குவது நீதிபதிகளின் கடமை, ஆனால் ஒருபோதும் மனசாட்சியை கட்டுப்படுத்துவது அல்ல என்று அவர் அறிவித்தார். “மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் நடைபெறவேண்டியது என்ன என்பதைப் பொதுமக்களோ அல்லது நீதிபதியோ முடிவுசெய்யலாம். ஆனால் ஒரு மனிதன் தேவனுக்குச் செய்யவேண்டிய கடமையைக் குறிப்பிட அவர்கள் முயலும்போது, அவர்களுக்கு அதில் இடமில்லை. அதில் பாதுகாப்பும் இருக்காது. ஏனெனில் நீதிபதிக்கு அதிகாரம் இருக்குமானால், அவர் இங்கிலாந்து நாட்டிலிருந்த பல அரசர்களையும் அரசிகளையும் போலவும், ரோமன் கத்தோலிக்க சபைக்குழுக்களைப் போலவும் இன்று ஒருவகைக் கருத்துக்களையும், நாளை வேறு ஒருவகை கருத்துக்களையும் நம்பிக்கையையும், கட்டளையிடுவார். அப்படியிருக்கும்போது, நம்பிக்கை என்பது குழப்பங்களின் ஒரு குவியலாகிவிடும்” என்றார். (13)GCTam 336.1

  அமைக்கப்பட்டிருந்த சபையின் ஆராதனைகளுக்கு வருகை தர வேண்டும் என்பது அபராதம், சிறைவாசம் ஆகியவைகளின் மூலமாக வற்புறுத்தப்பட்டிருந்தது. தங்களது சபைக்கு ஒவ்வொருவரும் தவறாது வரவேண்டும் என்று வற்புறுத்தும் சட்டம், ஆங்கிலேயர்களின் சம்பிரதாயத்தில் மிகவும் மோசமானதாக இருந்தது. வில்லியம்ஸ் அந்தச் சட்டத்தைக் கண்டனம் செய்தார். மாறுபட்ட மத நம்பிக்கை உள்ளவர்களை ஐக்கியப்படும்படி வற்புறுத்தல் என்பது அவர்களது இயற்கையான உரிமையை பகிரங்கமாக மீறுவதாகும் என்று அவர் கருதினார். மத நம்பிக்கையற்றவர்களையும், விருப்பமற்றவர்களையும் பொது ஆராதனைக்கு இழுத்துச்செல்லுதல் என்பது மாய்மாலத்தை வற்புறுத்துவதுபோலத் தோன்றுகிறது. எந்த ஒருவனும் அவனது சுயவிருப்பத்திற்கு எதிராக ஆராதிக்கவேண்டும் அல்லது ஒரு ஆராதனைமுறையைப் பின்பற்றவேண்டும் என்று கட்டுப்படுத்தப்படக் கூடாது என்று அவர் கூறினார். அவரது எதிரிகள் அவரது அபிப்பிராயத்தில் வியந்து: “என்ன? வேலைக்காரன் கூலிக்குப் பாத்திரவான் இல்லையா” என்றனர். அவர் மறுமொழியாக: “ஆம்! எவர்கள் அவனை வேலைக்கு வைத்துக்கொள்ளுகிறார்களோ, அவர்களிடமிருந்து கூலிபெற பாத்திரவானா யிருக்கிறான்” என்றார்.-Bancroft, Pt. 1, ch. 15, par. 2. (14)GCTam 337.1

  அபூர்வமான வரங்களையும் வளையாத நேர்மையையும் உண்மையான அனுதாபத்தையும் உடைய ஒரு விசுவாசமிக்க ஊழியர் ரோஜர் வில்லியம்ஸ் என்று மதிக்கப்பட்டும், நேசிக்கப்பட்டும் இருந்தார். அப்படியிருந்தும் சபைக் காரியங்களில் சமூக நீதிபதிகளுக்குள்ள அதிகாரத்தை, அவர் மறுத்ததும், மதச்சுதந்திரம் வேண்டும் என்ற அவரது கோரிக்கையும் சகிக்கமுடியாததாக இருந்தது. இந்தப் புதிய கோட்பாட்டை நடைமுறைப்படுத்தினால், அது அரசாங்கத்தின் அடிப்படை நிலைமையைக் கவிழ்த்துவிடும் என்று கூறப்பட்டது.--Ibid., pt. 1, ch. 15, par. 10. அவர் குடியிருப்பில் இருந்து நீக்கப்படும் தண்டனை அடைந்ததால், முடிவில் கைதாவதைத் தவிர்க்க, பனிக்காலத்தின் குளிர் காற்றில் மனிதர்கள் உட்புகமுடியாத காட்டிற்குள் ஓடி ஒளியும்படி வற்புறுத்தப்பட்டார். (15)GCTam 337.2

  “உணவு, படுக்கை என்றால் என்ன? என்பதை அறியாதவனாக நான் பதினான்கு வாரங்கள் கடுமையான குளிர்காலத்தில் அலைக்கழிக்கப்பட்டேன். ஆனால் வனாந்திரத்தில் பறவைகள் என்னைப் போஷித்தன. ஒரு மரப்பொந்து அடிக்கடி எனது புகலிடமாக இருந்தது.”—Ibid., pt. 1, ch. 15, par. 349- 350. ஒரு சிவப்பு இந்திய கூட்டத்தைக் கண்டு, அவர்களுக்கு சுவிசேஷ த்தின் சத்தியங்களை அறிவிக்கும்படி செய்த முயற்சிகளில், அவர்களுடைய நம்பிக்கையையும் அன்பையும் பெறும்வரை, அவர் தனது வேதனைமிக்க ஓட்டத்தை பனிநிறைந்த பாதையற்ற காட்டிற்கு ஊடாகத் தொடர்ந்தார். (16)GCTam 338.1

  கடைசியாக, அவர் நாரசன்செட் என்னும் வளைகுடாவை அடையும்வரை, மாறிமாறி மாதக்கணக்காக அவரது பாதையில் அலைந்து திரிந்து, நவீனகாலத்தில் மதச்சுதந்திரம் என்னும் உரிமையைப் பூரணமாக அங்கீகரிக்கும் மாநிலத்திற்கு அஸ்திவார மிட்டார். ஒவ்வொரு மனிதனும் அவனது சொந்த மனசாட்சியின் வெளிச்சத்தின்படி தேவனை ஆராதிக்கும் சுதந்திமுடையவனாக இருக்கவேண்டும் என்பது ரோஜர் வில்லியம்ஸின் குடியிருப்பின் அடிப்படைக்கொள்கையாக இருந்தது.--Ibid., vol. 5, p. 534. ரோட்ஐலண்டு எனப்படும் சிறிய மாநிலம் ஒடுக்கப்பட்டவர்களின் புகலிடமானது. சமூக, சமய சுதந்திரம் என்னும் அதன் கொள்கை, அமெரிக்கக் குடியரசின் மூலைக்கல்லாகும்வரை, அது வளர்ந்து செழுமை அடைந்தது. (17)GCTam 338.2

  நமது முற்பிதாக்கள் உண்டுபண்ணி முன்வைத்த உரிமைகளின் சட்டம்—என்னும் பழம்பெரும்ஆவணத்தில், சுதந்திரப் பிரகடனத்தில்: “எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர் தேவன் கொடுத்திருக்கிற மாற்ற இயலாத குறிப்பிட்ட உரிமைகளை உடையவர்களாக இருக்கின்றனர் இவைகளுக்குள் வாழ்க்கை, சுதந்திரம், மகிழ்ச்சியாய் இருப்பது ஆகிய இந்த உண்மைகள் சுயசான்றைக் கொண்டிருக்கின்றன” என்று அவர்கள் அறிவித்தது, மனசாட்சி மீறப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய, மிக வெளிப்படையான விதத்தில், “மத சம்பந்தமான தேர்வுகள் ஐக்கிய நாடுகளில் உள்ள எந்தப் பொது நிறுவனத்திலும் வேலைக்கான தகுதியாக இருக்கக்கூடாது” என்பதையும், “எந்த ஒரு மதஅமைப்பையும் மதிக்கின்ற அல்லது அதன் சுதந்திரமான செயல்பாட்டைத் தடைசெய்கின்ற சட்டத்தைக் காங்கிரஸ் இயற்றக்கூடாது” என்பதையும் அரசியல் அமைப்பு உத்தரவாதம் செய்கிறது.(18)GCTam 338.3

  “தேவனுடனுள்ள மனிதனின் உறவு, மனிதச் சட்டங்களுக்கு அப்பாற்பட்டது, அவனது மனசாட்சியின் உரிமைகள், மாற்றப்படமுடியாதது என்கிற நித்தியமான கொள்கைகளை அரசியல் அமைப்பை ஏற்படுத்தினவர்கள் அங்கீகரித்திருந்தனர். இந்த சத்தியத்தை நிலைப்படுத்துவதற்கு காரணம் தேவையில்லை. நமது இதயங்களில் நாம் இதைப்பற்றிய உணர்வைப் பெற்றிருக்கிறோம். மனிதச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்த இந்த உணர்வுதான் சித்திரவதைகளிலும் நெருப்பு ஜுவாலைகளிலும் ஏராளமான இரத்தசாட்சிகளைத் தாங்கியிருக்கின்றது. தேவனுடனுள்ள அவர்களது கடமை, மனிதச் சட்டங்களின் இயற்றுதலுக்கு மேலானதாக இருக்கிறதென்றும், அவர்களது மனசாட்சிக்கும் மேலாக மனிதன் அதிகாரம் செலுத்தக்கூடாது என்றும் அவர்கள் உணர்ந்தனர். ஒருவராலும் அழித்து நீக்கமுடியாத உடன்பிறந்த கொள்கையாக இது உள்ளது.”-Congressional Documents (U.S.A), serial No. 200, document No. 271. (19)GCTam 338.4

  ஒவ்வொரு மனிதனும் அவனது உழைப்பின் பலனை அனுபவிக்கவும், அவனது மனசாட்சியின் உணர்த்துதலுக்குக் கீழ்ப்படியவும் அனுமதிக்கிற ஒரு நாடு இருக்கின்றது என்கிற செய்தி, ஐரோப்பிய நாடுகளெங்கிலும் பரவியபோது, அந்தப் புது உலகின் கரைகளுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர். குடியிருப்புகள் விரைவாகப் பெருகின. யுத்தங்களிலும் அல்லது பஞ்சங்களிலும் அல்லது தங்களை ஒடுக்குபவரிடத்திலும் இருந்து தப்புவதற்காக, அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்து வரக்கூடிய எந்த நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும், தாராளமான வரவேற்பையும் உதவியையும், பொதுச்செயலிலிருந்து செய்ய ஒரு சிறப்புச் சட்டத்தை மசாசூசெட்ஸ் மாநிலம் இயற்றியது. இவ்வாறாக தப்பி ஓடினவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் அந்தச் சுதந்திர அரசாங்க நாடுகளின் ஐக்கியத்தில் சட்டத்தின்மூலமாக விருந்தினர்களாக்கப்பட்டனர். --Martyn, vol. 5, p. 417. பிளைமவுத் என்கிற இடத்திற்கு முதலில் வந்ததிலிருந்து இருபது வருடங்களுக்குள், பல்லாயிரக்கணக்கான பரதேசப் பயணிகள் புதிய இங்கிலாந்து என்னுமிடத்தில் வந்து தங்கினர். (20)GCTam 339.1

  அவர்கள் விரும்பிய நோக்கத்தை அடைந்துகொள்ளுவதற்கு, சிக்கனத்தினாலும் உழைப்பினாலும் உண்டாகக்கூடிய, பொருள்களற்ற, சாதாரண வாழ்க்கைக்கென்று சம்பாதித்தால்போதும் என்ற திருப்தி உடையவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களது உழைப்பிற்கான நியாயமான பலனையன்றி வேறொன்றையும் அந்த பூமியிலிருந்து அவர்கள் எதிர்பார்க்கவில்லை. வஞ்சிக்கிற மாயையான பொன்மயக் காட்சிகள் எதுவும் அவர்களது பாதையில் இருக்கவில்லை. அவர்களது சமுதாய உறவில் மெதுவாகவும் சீராகவும் முன்னேறுவதில் அவர்கள் திருப்தி அடைந்தனர். சுதந்திரம் என்கிற மரம் அந்த நாட்டில் ஆழமாக வேரூன்றும்வரை, அவர்களது கண்ணீரையும் நெற்றியின் வியர்வையையும் அதற்கு நீராக ஊற்றி வளர்த்து, வனாந்தரத்தின் தனிமையை அவர்கள் பொறுமையுடன் சகித்திருந்தனர். (21)GCTam 339.2

  விசுவாசத்தின் அஸ்திவாரமாகவும், ஞானத்தின் ஆதாரமாகவும் சுதந்திரத்தின் பண்பாகவும் வேதாகமம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. வீட்டிலும், பள்ளியிலும், ஆலயத்திலும் அதன் கொள்கைகள் அக்கரையுடன் கற்பிக்கப்பட்டு, அதன் பலன்களாகிய சிக்கனம், நுண்ணறிவு, தூய்மை, இச்சையடக்கம் ஆகியவைகளில் வெளிக்காட்டப் பட்டிருந்தது. ஒருவர் வருடக்கணக்கில் இந்தக் குடியிருப்பில் வாழ்ந்திருந் தாலும், அங்கு ஒரு குடிகாரனைக் காணாமலும், அல்லது ஒரு ஆணையிடுதலைக் கேட்காமலும், அல்லது ஒரு பிச்சைக்காரனைச் சந்திக்காமலும் இருக்கலாம்.-Bancroft, Pt. 1, ch. 19,par. 25. நாட்டின் மேன்மைக்கு நிச்சயமான பாதுகாப்பு வேதாகமக் கொள்கைகள்தான் என்பது உதாரணமாக எடுத்துக்காட்டப்பட்டது. பலவீனமானவை யாகவும், பிரிந்தும் இருந்த அந்தக் குடியிருப்புக்கள், வல்லமைமிக்க கூட்டாட்சி உள்ள மாநிலமாக மாறவே, போப்பு இல்லாத ஒரு சபையையும், அரசன் இல்லாத ஒரு நாட்டையும் அதன் சமாதானத்தையும் செழுமையையும் அது ஆச்சரியத்துடன் கண்டது! (22)GCTam 340.1

  முதலாவது வந்த பரதேசப் பயணிகளின் இலட்சியத்திலிருந்து விசாலமாக மாறுபட்ட நோக்கங்களால் கவரப்பட்டவர்களின் எண்ணிக்கை, அமெரிக்க கடற்கரையில் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருந்தது. உருவாக்கும் தன்மையை உடையவைகளாகப் பண்டையகால விசுவாசமும் தூய்மையும் இருந்திருந்தபோதிலும், அந்த எண்ணிக்கை அதிகரிக்கவே, உலக ஆதாயங்களை மட்டுமே தேடியிருந்தவர்களின் காரணாக, அதன் செல்வாக்கு குறையத் தெடங்கியது. (23)GCTam 340.2

  சமூக, அரசியலில் ஓட்டளிக்கவோ அல்லது பதவி வகிக்கவோ, சபை அங்கத்தினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும் என்று ஆரம்பகால குடியிருப்புகளில் இருந்தவர்கள் பின்பற்றியிருந்த ஒழுங்குமுறைகள் கெடுதலுண்டாக்கும் விளைவுகளுக்கு வழிநடத்தின. மாநிலத்தின் தூய்மையைப்பாதுகாக்கும் ஒரு உபாயமாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் அது சபையில் ஊழலை விளைவித்தது. ஓட்டுரிமையையும், பதவியையும் பெறுவதற்கு, மதச்சார்புடையவன் என்கிற அறிவிப்பு ஒரு நிபந்தனையாக இருக்கவே, உலகக் கொள்கைகளினால்மட்டுமே தூண்டப்பட்டு, இதய மாற்றமில்லாத அநேகர் சபையுடன் ஐக்கியப்பட்டனர். இவ்வாறாகக் குறிப்பிடும் அளவிற்கு சபைகள், மனமாற்றமடையாதவர்களை உள்ளடக்கியவையாக ஆயின. ஊழியத்திலிருந்தவர்களுங்கூட கோட்பாடுகளில் உள்ள தவறுகளைப் பற்றிக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல், பரிசுத்த ஆவியானவரால் உண்டாகும் புதுப்பிக்கும் வல்லமையைப் பற்றிய அறிவற்றவர்களாகவே இருந்தனர். “என்னுடைய ராஜ்ஜியம் இந்த உ லகத்திற்குரியதல்ல” (யோவான் 18:36) என்று அறிவித்தவரின் சுவிசேஷ த்திற்கு ஆதரவு தரும்படி மதச்சார்பற்ற வல்லமைகளுக்கு வேண்டுகோள் விடுத்து, அரசின் உதவியுடன் சபையைக்கூட்ட முயன்ற காண்ஸ்டன்டைனின் நாட்கள் முதல் இப்பொழுதுவரை உள்ள சபையின் வரலாற்றில், அடிக்கடி காணப்பட்ட தீயவிளைவுகள் இவ்வாறாகவே மறுபடியும் உதாரணமாக எடுத்துக்காட்டப்பட்டன. அரசுடன் சபை ஐக்கியப்படுவது, அதன் அளவு எவ்வளவு குறைந்ததாகக் காணப்பட்டாலும், அது உலகத்தை சபைக்கு அருகில் கொண்டுவருவதுபோல் காணப்பட்டாலும், உண்மையில் சபையை உ லகத்திற்கு அருகில் கொண்டுவருகிறது! (24)GCTam 340.3

  சத்தியம் முன்னேறக்கூடியது. தேவனுடைய வார்த்தையில் இருந்து வெளிப்படும் ஒளி அனைத்தையும் ஏற்றுக்கொள்ள கிறிஸ்தவர்கள் தயாராக நிற்கவேண்டும் என்று ராபின்சனும், ரோஜர் வில்லியம்சும் மேன்மையாகப் பரிந்துரை செய்திருந்த பெரும் கொள்கையைப்பற்றிய நோக்கத்தை, அவர்களுக்குப் பின்தோன்றிய வர்கள் கைவிட்டனர். சீர்திருத்தத்தின் ஆசீர்வாதங்களால் மிகவும்உயர்வான அனுகூலங்களை அடைந்திருந்த அமெரிக்கப் புரொட்டஸ்டாண்டு சபைகளும், அதைப்போலவே ஐரோப்பிய சபைகளும் சீர்திருத்தம் என்கிறப் பாதையில் முன்செல்லத் தவறிவிட்டன. புதிய சத்தியத்தை அறிவிக்கவும், நீண்டகாலமாகப் போற்றப்பட்டிருந்த தவறுகளை எடுத்துக்காட்டவும், அவ்வப்போது சில விசுவாசமிக்க மனிதர்கள் எழும்பியிருந்தபோதிலும், பெரும்பான்மையினர், கிறிஸ்துவின் காலத்திலிருந்த யூதர்களைப்போலவும், லுத்தரின் காலத்தில் இருந்த போப்புமார்க்கவாதிகளைப் போலவும் அவர்களது தகப்பன்மார்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் நம்பிக்கை உள்ளவர்களாகவும், அவர்கள் வாழ்ந்ததைப்போலவே வாழ்வதில் திருப்தி உள்ளவர்களாகவும் இருந்திருந்தனர். தேவனுடைய வார்த்தையின் ஒளியில் தொடர்ந்து நடந்திருந்தால், அதைப் பாதுகாத்துப் போற்றியிருந்தால், தவறுகளும் மூடநம்பிக்கைகளும் நீக்கப்பட்டிருந்திருக்கும். அப்படியிராததால் சபை மறுபடியும் சீர்கெட்டு, சம்பிரதாயத்திற்குள்ளானது. இவ்வாறாக லுத்தரின் காலத்தில் ரோமசபையில் சீர்திருத்தத்தின் ஆவி எவ்வளவு அவசியமாயிருந்ததோ, அதே அளவு அவசியப்படும்படியாக புரொட்டஸ்டாண்டு சபையிலும் சீர்திருத்தத்தின் ஆவி கொஞ்சங்கொஞ்சமாக மறைந்து போயிருந்தது. அதேபோன்ற உலகப்பிரகாரமான தன்மையும் ஆவிக்குரிய மயக்கமும், மனிதர்களுடைய கருத்துக்களின்மீது பக்தியும், தேவனுடைய வார்த்தைகளுக்குப்பதிலாக மனிதக் கொள்கைகளைப் போதிப்பதும் இருந்தன. (25)GCTam 341.1

  பத்தொன்பதாம் நூற்றாண்டின் பரவலான வேதாகம விநியோகத்திற்கும், அதனால் உலகத்திற்குக் கிடைத்த வெளிச்சத்திற்கும் இணையான முன்னேற்றம், அதற்குப்பின், வெளிப்படுத்தப்பட்டிருக்கிற சத்தியத்தின் அறிவிலும் மத அனுபவத்திலும் ஏற்படவில்லை. தேவனுடைய வார்த்தை எல்லோருக்கும் எட்டக்கூடிய இடத்தில் வைக்கப்பட்டது. எனவே மனிதர்களிடமிருந்து அதை நீக்கிவிட முற்காலத்தைப்போல சாத்தானால் முடியவில்லை. ஆனால் இன்னும் அவனது நோக்கத்தை நிறைவேற்ற, அதை மதிப்பற்ற சாதாரணமானதாகக் கருதும்படி அவன் அநேகரை நடத்தினான். வேதவாக்கியங்களை ஆராய்வதை மனிதர்கள் அலட்சியப்படுத்தினர். இப்படியாக அவர்கள் தவறான விளக்கங்களை ஏற்றுக்கொள்வதில் தொடர்ந்து, வேதாகம ஆதாரமில்லாத கோட்பாடுகளைப் போற்றுபவர்களாகவே இருந்தனர். (26)GCTam 341.2

  உபத்திரவத்தின்மூலமாக சத்தியத்தை நசுக்கும் முயற்சியில் தோல்வியைக் கண்ட சாத்தான், மறுபடியும் பெரும் மருளவிழுகைக்கும் ரோமன் கத்தோலிக்க சபை அமைக்கப்படுவதற்கும் வழிகோலுகின்ற சமரசம் என்கிற திட்டத்தைக் கையாளத் தொடங்கினான். இப்பொழுது அவன் கிறிஸ்தவர்களை அஞ்ஞானிகளுடன் கூட்டுச்சேரும்படி ஈர்க்காமல், சிலைவணக்கத்திற்கு நிகரான, உலகப் பொருள்களின்மீது பக்தி வைத்ததினால் விக்கிரக ஆராதனை செய்தவர்களுடன் இணைத்தான். இந்த ஐக்கியத்தின் விளைவு கடந்த காலத்தில் நிகழ்ந்த கேட்டினைவிடக் குறைவாக இருக்கவில்லை. மதம் என்கிறப் போர்வையில் அகந்தையும், ஊதாரித்தனங்களும் போஷிக்கப் பட்டிருந்தன. சபைகள் கறைபடிந்தவை களாயின. வேதாகமக் கோட்பாடுகளை சாத்தான் தொடர்ந்து திரித்து, இலட்சக்கணக்கான மக்களைப் பாழாக்கும்வண்ணம் பாரம்பரியங்களை ஆழமாக வேரூன்றச் செய்தான். “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காகப்” போராடுவதற்குப் பதிலாக, சபை இந்தப் பாரம்பரியங்களை ஆதரித்து நின்று, அவைகளை உயர்த்திப் பிடித்தது. இவ்விதமாக சீர்திருத்தவாதிகள் அதிகப்பாடுபட்டுப் போதித்த கொள்கைகள் அனைத்தும் தரக்குறைவாக்கப்பட்டன. (27)GCTam 342.1