Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    14 - “தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு நியாயம் செய்யாமல் இருப்பாரா?”

    தமது இரண்டாம் வருகைக்குச் சற்று முன்னர் இருக்கும் காலத்தைக் குறித்தும், அவரது பிள்ளைகள் கடந்து செல்ல வேண்டிய இன்னல்கள் பற்றியும் கிறிஸ்து பேசிக்கொண்டிருந்தார். இந்தக் காலத்தைக்கட்டத்தைக் குறிப்பிட்டு, ” சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.”COLTam 164.1

    “ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய் : எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள். வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லா திருந்தது. பின்பு அவன் : நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார். பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி : அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ள வராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.COLTam 164.2

    இந்த உவமையில் சொல்லப்படும் நியாயாதிபதியிடம் நீதி குறித்தோ, பாடுகளில் உள்ளோர் மேல் பரிவு காட்டுவது குறித்தோ அக்கறையே இல்லை. தன் வழக்கில் நியாயம் கேட்டு அந்த விதவை வந்தபோதெல்லாம் அவளைத் திருப்பி அனுப்பிவிட்டான். மீண்டும் மீண்டும் அவனிடம் வந்தாள்; ஆனால் அவமானம் மட்டுமே மிஞ்சியது, நியாயாசனத்தண்டை வராதபடி விரட்டப் பட்டாள். அவள் பக்கம் நியாயம் இருந்ததை நியாயாதிபதி அறிந்திருந்தான்; உடனே அவளுக்கு நியாயம் வழங்கியிருக்கலாம்; ஆனால் விரும்பவில்லை. தன்னிச்சை அதிகாரத்தைக் காட்டினான்; அவளை தன்னிடம் கேட்கவும், வேண்டவும், மன்றாடவும் செய்து, பிறகு அவளை வெறுங்கையாய் அனுப்பிவிடுவதில் திருப்தி யடைந்தான். ஆனால் சோர்ந்து போகவுமில்லை, அதைரியப்படவு மில்லை. அவன் கண்டு கொள்ளாமல், மனக்கடினத்தோடு நடந்துகொண்டாலும், அந்த நியாயாதிபதி அவளுடைய வழக்கை விசாரிக்க சம்மதிக்கும் வரை அவனிடம் முறையிட்டாள். “நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடி யினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும்” என்று சொன்னான் நியாயாதிபதி . தன் பெயரைக் காப்பாற்றவும், பாரபட்சத்துடன் தீர்ப்புச்செய்கிறவன் என்கிற விஷயம் வெளிவராமல் இருக்கவும், விடாப்பிடியாக வந்த அவளுக்கு நியாயஞ்செய்தான்.COLTam 165.1

    “பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி : அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்ட வர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாம லிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்றார். அந்த விதவை மீண்டும் மீண்டும் தன்னை அலட்டாதபடிக்கு, சுயநலத்தோடுதான் அவளுடைய கோரிக்கைகளுக்கு நியாயாதிபதி இணங்கினான். அவள் மேல் அவனுக்கு பரிவோ மனதுருக்கமோ கிடையாது. அவளுடைய துக்கத்தைக் கண்டு கொஞ்சங்கூட அவன் அசையவில்லை. ஆனால் தம்மைத் தேடி வருகிறவர்கள் மேல் தேவன் காட்டுகிற மனநிலைதான் எப்படிப்பட்டது ! தேவையிலும் வேதனையிலும் இருப்போர் அவரிடம் வேண்டிக்கொள்ளும்போது அளவள்ள மனதுருக்கத்தால் அக்கறை கொள்கிறார்.COLTam 165.2

    அந்த நியாயாதிபதியிடம் நியாயம் கேட்டு மன்றாடிய அந்தப் பெண், தன் கணவனை மரிக்கக் கொடுத்தவள். வறுமை, உதவியற்ற நிலை; சொத்துக்களும் சீரழிந்து கொண்டிருந்தன; அவற்றை மீட்க வழியில்லை. எனவே பாவத்தால், தேவனு டானான தன் தொடர்பை மனிதன் இழக்கிறான். மனிதன் தானாக தன்னை இரட்சி க்க வழியேயில்லை. கிறிஸ்துவுக்குள் பிதாவின் அருகில் கொண்டு செல்லப்படுகிறோம். தேவனால் தெரிந்தெகாள்ளப்பட்ட வர்கள் அவருக்கு மிகவும் பிரியமானவர்கள். அவருடைய புகழை அறிவிப்பதற்கும், உலகத்தின் இருளின் ஊடே வெளிச்சம் வீசு வதற்கும் அவர்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளிக்குள் வரவழைத்திருக்கிறார். நீதி வேண்டி மீண்டும் மீண்டும் முறையிட்டு வந்த விதவையின் மேல் அந்த நியாயாதிபதிக்கு விசேஷித்த அக்கறை இல்லை ; ஆனாலும், அவள் மறுபடியும் மறுபடியும் தன்னிடம் வந்து கெஞ்சாதபடிக்கு, அவளுடைய வேண்டுதலைக் கேட்டான்; அவளுடைய எதிராளி யிடமிருந்து அவளை மீட்டான். ஆனால் தேவன் தமது பிள்ளைகளை அளவற்ற அன்போடு நேசிக்கிறார். பூமியிலேயே அவருக்கு மிகவும் பிரியமானது அவருடைய சபைதான்.COLTam 166.1

    ‘கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு ; யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம். பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டு பிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்.” உபா 32:9, 10. பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளை யிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். சகரியா 2:8.COLTam 166.2

    “எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று அந்த விதவை வேண்டினாள்; அது தேவனுடைய பிள்ளைகளின் ஜெபத்திற்கு அடையாளமாக இருக்கிறது. அவர்களுடைய மிகப்பெரிய எதிரி சாத்தான். இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சாட்டுகிறான்.” வெளி. 12:10. தேவபிள்ளைகளைத் திரித்துக்கூறி, குற்றப் படுத்தவும், வஞ்சித்து, அழிக்கவும் அவன் தொடர்ந்து கிரியை செய்து வருகிறான். சாத் தானுடைய வல்லமையிலிருந்தும் அவனோடு சேர்ந்தவர்களுடைய வல்லமையிலிருந்தும் விடுதலை பெறவே, தம் சீடர்கள் ஜெபிக்கவேண்டுமென இந்த உவமையில் கிறிஸ்து போதிக்கிறார்.COLTam 167.1

    சாத்தான் குற்றஞ்சாட்டுகிற செயலையும், கிறிஸ்து தமது மக்களின் எதிராளியை எதிர்க்கிற வேலையையும் சகரியாவின் தீர்க்கதரிசனத்தில் காணமுடிகிறது.’‘அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலது பக்கத்திலே நின்றான். அப்பொழுது கர்த்தர் சாத் தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள் வாராக; சாத் தானே, எருசலேமைத் தெரிந்து கொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார். யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.” என்று தீர்க்கதரிசி சொல்கிறார். சகரியா 3:1-3.COLTam 167.2

    விசாரணைக்காக நிற்கும் ஒரு குற்றவாளியைப்போல் தேவ ஜனங்கள் இங்கு காட்டப்படுகிறார்கள். பெருந்துன்பத்தில் இருக்கும் தமது மக்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்க பிரதான ஆசாரியனாகிய யோசுவா முயல்கிறான். அவன் தேவனிடம் முறையிடுகிற சமயத்தில், சாத்தான் அவனுடைய எதிராளியாக அவனுக்கு வலது புறத்தில் நிற்கிறான். அவன் தேவபிள்ளைகள்மேல் குற்றஞ்சாட்டி, அவர்களுக்கு இனி நம்பிக்கையே இல்லாதது போலத் தோன்றச் செய்கிறான். அவர்கள் செய்த பாவங்களையும் அவர்களுடைய குறைகளையும் கர்த்தருக்கு முன்பாகச் சொல்லுகிறான். அவர்களுடைய குற்றங்களையும் தோல்விகளையும் காண்பிக்கிறான்; அதிக உதவி தேவைப்படுகிற அந்த நிலையில் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யமுடி யாத அளவுக்கு அவர்களுடைய குணம் இருப்பதாக இயேசுவின் கண்களுக்குத் தெரிவார்களென எதிர்பார்க்கிறான். தேவனுடைய ஜனங்களின் பிரதிநிதியாகிய யோசுவா, அழுக்கான வஸ்திரம் தரித்து, ஆக்கினைக்குட்பட்டவனாக நிற்கிறான். தனக்கு இனி நம்பிக்கையே இல்லை என்று அவன் நினைக்கும் படி குற்ற வுணர்வை ஆத்துமாவில் உருவாக்குகிறான். ஆனாலும், சாத்தான் அவனுக்கு எதிராக நிற்கிற அதே வேளையில், தேவனிடம் மன்றாடுகிறவனாக யோசுவா நிற்கிறான்.COLTam 167.3

    குற்றஞ்சாட்டுகிற வேலையை சாத்தான் பரலோகத்திலேயே துவங்கிவிட்டான். மனிதனின் விழுகை முதல் பூமியிலும் இதே வேலையாகத்தான் இருக்கிறான்; உலக வரலாற்றின் முடிவை நாம் நெருங்குகிற இந்தச் சமயத்திலும், குறிப்பிடத்தக்க விதத்தில் இதே வேலையைத்தான் செய்வான். இனியும் தனக்கு காலமில்லை என்று, மக்களை வஞ்சிக்கவும் அழிக்கவும் மிகுந்த ஊக்கத்தோடு செயல்படுவான். தங்களுடைய பெலவீனத்திற்கும், பாவநிலைக் கும் மத்தியிலும், யெகோவாவின் கட்டளையை மதிக்கிற மக்களை இந்தப் பூமியில் பார்க்கும் போது கோபங்கொள்கிறான். தேவனுக்கு அவர்கள் கீழ்ப்படியக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான். அபாத்திரநிலையைக் கண்டு மகிழ்ச்சியடைகிறான். அனைவரையும் சிக்கவைத்து, தேவனிடமிருந்து பிரித்துவிடு வதற்கு வசதியாக கண்ணிகளை ஆயத்தமாக வைத்திருக் கிறான். இரக்கத்தோடும் அன்போடும், மனதுருக்கத்தோடும் மன்னிப்போடும் இந்த உலகில் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற பிரயாசப்படுகிற அனைவரையும், தேவனையும் குற்றஞ்சாட்டி, ஆக்கினைக்குட் படுத்த வகைதேடுகிறான்.COLTam 168.1

    தேவன் தமது வல்லமையை தம் மக்களுக்கு வெளிப்படுத்தும் போதெல்லாம், சாத்தானுக்குள் பகை கிளம்புகிறது. அவர்களுக் காக தேவன் கிரியை செய்யும் போதெல்லாம், அவர்களை அழிப்பதற்காக சாத்தான் தன் தூதர்களுடன் புதுத் தீவிரத்தோடு வகை தேடுகிறான். கிறிஸ்துவைத் தங்கள் பெலமாகக் கொண்டிருக்கும் அனைவர்மீதும் பொறாமை கொள்கிறான். பாவத்தைத் தூண்டி விடவேண்டும், அதில் வெற்றிபெற்று விட்டால், சே பாதிக்கப்பட்டவர்கள் மேல் பழி முழுவதையும் போடவேண்டும் என்பதே அவனுடைய நோக்கம். அவர்களுடைய அழுக்கான வஸ்திரங்களையும், தவறான குணங்களையும் சுட்டிக்காட்டுகிறான். தங்கள் மீட்பருக்கு கனவீனத்தைக் கொண்டு வரும் படி அவர்களிடம் காணப்படுகிறபெலவீனத்தையும், புத்தியீனத்தையும், நன்றிகெட்ட தன்மையின் பாவங்களையும், கிறிஸ்துவுக்கு எதிரான தன்மைகளையும் எடுத்துக்கூறுகிறான். அவர்களை அழிக்க தான் விரும்புவதில் தவறில்லை என்பதை நிரூபிப்பதற்காக இந்த வாதங்களை எல்லாம் முன்வைக்கிறான். தங்கள் நிலை நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதென்றும், தங்களுடைய தீட்டின் கறையைக் கழுவவே முடியாதென்றும் நினைத்து, ஆத்துமா வில் நடுக்கங் கொள்ளச் செய்ய பெரிதும் முயல்கிறான். இவ்வாறு அவர்களுடைய விசுவாசத்தை அழித்து, அவர்களை முற்றிலும் தன்னுடைய சோதனைகளில் விழவைக்கவும், தேவனிடம் மெய்ப்பற்றுக்கொள்ளதபடி திருப்பவும் எதிர்பார்க்கிறான்.COLTam 168.2

    சாத்தானின் குற்றச்சாட்டுகளுக்கு கர்த்தருடைய பிள்ளைகள் தாங்களாக பதில் கூற முடியாது. தங்களைத் தாங்களே பார்க்கும் போது நம்பிக்கையிழந்து விடுவார்கள். அவர்கள் தெய்வீக வழக்கறிஞரிடம் முறையிடுகிறார்கள். மீட்பரின் புண்ணியங்களைக் கெஞ்சிக் கேட்கிறார்கள். தேவன் “நீதியுள்ளவரும், இயேசு வினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிற (வருமாய்) இருக்கிறார்.” ரோமர் 3:26. சாத்தானின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அவனுடைய சூழ்ச்சிகளை ஒன்றுமில்லாம லாக்கும்படி தேவபிள்ளைகள் நம்பிக்கையோடு அவரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள். ரோமர் 3:25. “எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும்” என்று ஜெபிக்கிறார்கள். சிலுவையை வைத்து ஆணித்தரமாக வாதாடி, துணிகரமாகக் குற்றஞ்சாட்டுகிறவனுடைய வாயை கிறிஸ்து அடைக்கிறார்.COLTam 169.1

    “அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி : கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்து கொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.” தேவ ஜனங்களை அந்தகாரத்தால் மூடி, அவர்களை அழிக்க சாத்தான் முயலும் போது, கிறிஸ்து குறுக்கிடுகிறார். அவர்கள் பாவம் செய்திருந்தபோதும், அவர்களுடைய பாவங்களுக்கான பலியை கிறிஸ்து தம்மீது சுமத்துகிறார். அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளியைப் போல மனுகுலத்தை அவர் தப்புவித்தார். அவர் தம் மனித சுபாவத்தினால் மனித னோடு இணைக்கப்பட்டுள்ளார், தம் தெய்வீக சுபாவத்தினால் நித்திய தேவனுக்கு சமமானவராக இருக்கிறார். அழிந்தபோகிற ஆத்துமாக்களுக்கு உதவி கைக்கெட்டும் தூரத்தில் தான் உள்ளது. சாத்தான் கடிந்துகொள்ளப்படுகிறான்.COLTam 169.2

    “யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான். அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி : இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக்களைந்து போடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி : பார், நான் உன் அக்கிரமத்தை உன்னி லிருந்து நீ ங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார். அவன் சிரசின் மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின் மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள். பின்னர் சேனைகளின் தேவனாகிய கர்த்தருடைய அதிகாரத்தினால் தேவனுடைய மக்களின் பிரதிநிதியாக இருந்த யோசுவாவிடம் ஒரு பக்திவிநயமான வாக்குறுதி ஒன்றை தூதன் அறிவித்தார். நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல் காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே (தேவசிங்காசனத்தை சு ற்றிலுமிருக்கிற தூதர்களுக்கு மத்தியில்) உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்” என்றார். சகரியா 3:3-7.COLTam 170.1

    கிறிஸ்துவின் அக்கறைக்கு பாத்திரரான தேவபிள்ளைகளி டத்தில் குறைகள் காணப்பட்டாலும், அவர்களை அவர் ஒதுக்குவதில்லை. அவர்க்களுக்கு வேறு வஸ்திரம் கொடுக் கிற வல்லமை அவருக்கு உண்டு. மனந்திரும்பி, விசுவாசிக்கிறவர் களின் அழுக்கான வஸ்திரங்களைக் கழற்றி விட்டு, நீதியாகிய தம்முடைய வஸ்திரத்தை உடுத்துவிக்கிறார்; பரலோகப் புத்த கங்களில் அவர்களுடைய பெயர்களுக்கு நேராக பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று எழுதுகிறார். அவர்கள் தமக்குச் சொந்தமானவர்களென சர்வலோகத்திற்கும் முன்பாக அறிக்கையிடுகிறார். அவர்களுடைய எதிராளியான சாத்தான் குற்றஞ்சாட்டுகிறவனென்றும் வஞ்சிக்கிறவனென்றும் வெளிப் படுகிறது. தாம் தெரிந்து கொண்ட வர்களுக்கு தேவனே நியாயஞ்செய்கிறார்.COLTam 170.2

    “எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யும் ” என்று சாத்தானை மட்டுமல்ல, தேவமக்களை திரித்துக்கூறி, சோதித்து, அழிக்கும்படி அவன் தூண்டிவிடுகிற அவனுடைய ஏதுகரங்களையும் குறிப்பிட்டுத்தான் ஜெபிக்கப்படுகிறது. தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள், பாதாளத்தின் வல்லமையால் கட்டுப்படுத்தப்படுகிற எதிராளிகளும் தங்களுக்கு இருக்கிறார்களெனதங்களுடைய அனுபவத்தின் மூலம் புரிந்துகொள்வார்கள். கிறிஸ்து ஒவ்வோர் அடி எடுத்துவைத்த போதும் அத்தகைய எதிராளிகள் எவ்வளவு தீவிரமாக்கிறிஸ்துவை தொடர்ந்து தாக்கி வந்தார்கள் என்பது எந்த மனிதனுக்கும் தெரியாது. தங்கள் எஜ மானைப்போல கிறிஸ்துவின் சீடர்களும் தொடர் சோதனைக்கு ஆளாவார்கள்.COLTam 170.3

    கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு சற்று முன், உலகம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கும் என்பதை வேதவாக்கியங்கள்COLTam 171.1

    ரிக்கின்றன. பேராசையும், ஒடுக்குதலும் அதிகமாகக் காணப்படுமென்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு தெரிவிக்கிறார்: “ஐசுவரியவான்களே,... கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள். இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப் பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது. பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுக போகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறது போல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள். நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலை செய்தீர்கள்; அவன் உங்களோடே எதிர்த்து நிற்கவில்லை .” யாக் 5:1-6. ஒவ்வொரு வகையிலும் ஒடுக்கி, அநியாயமாக அபகரித்து மக்கள் தங்களுக்கு ஆஸ்திகளைக் குவிக்கிறார்கள்; ஆனால் பட்டினியால் வாடுகிற மக்களுடைய கூக்குரல்கள் தேவ சமூகத்தை எட்டுகின்றன.COLTam 171.2

    “நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற் போகிறது. சாத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்.” ஏசாயா 59:14,15. பூமி யில் இருந்தபோது கிறிஸ்துவின் வாழ்க்கையில் இவ்வாறு நடந்தது. தேவனுடைய கற்பனைகளுக்கு உண்மையுள்ளவராக இருந்தார்; அவற்றிற்கு பதிலாக ஏற்படுத்தப்பட்டிருந்த மனித பாரம்பரியங்களையும் நிபந்தனைகளையும் ஒதுக்கினார். அதனால் தான், அவரை வெறுத்துத் துன்பப்படுத்தினார்கள். இந்த வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. மனிதர்களுடைய சட்டங்களும் பாரம்பரியங்களும் தேவனுடைய கற்பனைகளுக்கு மேலாக உயர்த்தப்படுகின்றன. தேவனுடைய கற்பனைகளுக்கு உண்மையாக நடப்பவர்கள் புறக் கணிப்புக்கும் உபத்திரவத்துக்கும் ஆளாகிறார்கள். கிறிஸ்துவான வர் தேவனுக்கு உண்மையாயிருந்ததால், ஓய்வுநாளை மீறுகிறவ ரென்றும் தேவதூஷணம் செய்கிறவரென்றும் குற்றஞ்சாட்டி னார்கள். அவரைப் பிசாசுப்பிடித்தவன் என்றும் பெயெல் செபூல் என்றும் பழிசொன்னார்கள். இதேபோன்று அவரது பின்னடியார்களும் குற்றஞ்சாட்டப்பட்டு, திரித்துக்கூறப்படுகிறார்கள். இவ் விதமாக, அவர்களை பாவத்திற்குள் வழிநடத்தவும், தேவனுக்கு கனவீனத்தைக் கொண்டுவரவும் சாத்தான் வகைதேடுகிறான்.COLTam 171.3

    அந்த உவமையில் சொல்லப்பட்ட நியாயாதிபதி தேவனுக்குப் பயப்படாத, மனிதனை மதியாத குணமுடையவனாக இருந்தான். அச்சமயத்தில் நியாயம் வழங்கப்பட்ட பிரகாரமே சீக்கிரத்தில் தான் விசாரிக்கப்படும்போதும் காணப்படுமென்று காட்டவே கிறிஸ்து அதைச் சுட்டிக்காட்டினார். இக்கட்டு நாளில் இவ்வுலகின் அதிபதிகளையும், நியாயாதிபதிகளையும் நம்புவதில் பயனில்லை என்பதை எல்லாக் காலங்களிலும் மக்கள் உணர்ந்திருக்க வேண்டு மென்று கிறிஸ்து விரும்புகிறார். தேவன் தெரிந்து கொண்ட வர்களும் பல சமயங்களில் அதிகாரிகளுக்கு முன் நிற்க வேண்டியுள்ளது; அவர்கள் தேவவார்த்தையை தங்கள் வழிகாட்டியாகவும் ஆலோசனையாகவும் கொள்ளாமல், பரிசுத்தமற்ற, ஒழுக்கமற்ற உணர்வுகளின்படி நடப்பவர்களாக இருப்பார்கள்.COLTam 172.1

    நாம் எவ்வாறு நடக்கவேண்டும் என்பதை அநீதியுள்ள நியாயாதிபதியின் உவமையில் கிறிஸ்து காட்டுகிறார். ‘தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர் (களுக்கு) .... நியாயஞ்செய்யாம லிருப்பாரோ?” நம்முடைய முன்மாதிரியான கிறிஸ்து தம்மை விடுவிப்பதற்கு அல்லது தம்மை நல்லவரென்று நிரூபிப்பதற்கு எதுவுமே செய்யவில்லை. தம் காரியத்தை தேவனிடம் ஒப்படைத்து விட்டார். அதுபோல அவரைப் பின்பற்றுகிறவர்களும் தங்களை விடுவிப்பதற்காக குற்றஞ்சாட்டக்கூடாது அல்லது கண்டனம் செய்யக்கூடாது அல்லது பலவந்தத்தைப் பிரயோகிக்கக்கூடாது.COLTam 172.2

    காரணமே இல்லாமல் சோதனைகள் வரும் போது, சமாதானத்தை இழந்து போக நாம் அனுமதிக்கக்கூடாது. எவ்வளவுதான் அநியாயமாக நாம் நடத்தப்பட்டாலும், மட்டு மீறிய உணர்வுகளுக்கு இடமளிக்கவே கூடாது. பதிலடி கொடுக்கிற மனநிலையிலேயே இருந்தால், நமக்குத்தான் பாதிப்பு . தேவன் பேரில் நமக்கிருக்கும் நம்பிக்கை கெடும், பரிசுத்த ஆவியான வரைத் துக்கப்படுத்துவோம். நம்முடைய பக்கத்திலேயே ஒரு சாட்சியானவர், ஒரு பரலோகத் தூதுவர் இருக்கிறார்; சத்துருவுக்கு எதிராக அவர் கொடி ஏற்றுவார். நீதியின் சூரியனுடைய பிரகாசமான ஒளிக்கதிர்களுக்குள் நம்மைப் பாதுகாப் பார். சாத்தானால் இதை ஊடுருவ முடாயது. பரிசுத்த வெளிச்சமாகிய இந்தக் கவசத்தைத் தாண்டி அவன் வரமுடியாது.COLTam 172.3

    உலகத்தில் துன்மார்க்கம் பெருகி வருகிறது; எனவே, எங்களுக்கு பிரச்சனைகளே இல்லை என்று வீண்பெருமையோடு யாரும் பேசக்கூடாது. இந்தப் பிரச்சனைகள் தாம் மகா உன்னதமான வரின் சிங்காசன அறைக்குள் நம்மைக் கொண்டு செல் கின்றன. அளவில்லா ஞானமுள்ளவரிடம் நாம் ஆலோசனை கேட்கலாம்.COLTam 173.1

    ‘ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு” என்று ஆண்டவர் சொல்லுகிறார். சங்கீதம் 50:15. நம்முடைய குழப் பங்களையும் தேவைகளையும், தெய்வீக உதவி நமக்குத் தேவைப்படுவதையும் தம்மிடம் சொல்வதற்கு அவர் நம்மை அழைக்கிறார். எந்த ஒரு விஷயத்திலும், உடனுக்குடன் ஜெபிக்குமாறு அவர் நமக்குக் கட்டளையிடுகிறார். பிரச்சனைகள் உருவான உடனேயே, நம்முடைய மன்றாட்டுகளை உண்மையோடும் ஊக்கத்தோடும் அவரிடம் சொல்லவேண்டும். தேவனிடம் கெஞ்சி மன்றாடும்போது, அவர்மேல் நமக்கு உறுதியான நம்பிக்கை இருப்பதைக் காட்டுகிறோம். நமக்கு உதவி தேவைப்படுவதாக உணரும் போது தான், ஊக்கத்துடன் ஜெபிக்கச்செய்கிறது; நம்முடைய மன்றாட்டுகளால் நம் பர லோகப்பிதா அசைக்கப்படுகிறார்.COLTam 173.2

    தங்களுடைய விசுவாசத்தினிமித்தம் நிந்தையையும், துன்பத் தையும் அனுபவிக்கிறவர்கள், தேவன் தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்க பெரும்பாலும் தூண்டப்படுகின்றனர். தங்களைக் கண்டு கொள்ள யாருமே இல்லையென அவர்கள் நினைக்கலாம். அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை வெற்றிக்கொண்டதாக எல்லா விதத்திலும் தோன்றும். ஆனால் அவர்கள் தங்கள் மனச்சாட்சியை மீறி செயல்படாதிருப்பார்களாக . அவர்களுக்காகப் பாடுபட்டு, அவர்களுடைய துக்கங்களையும் பாடுகளையும் சுமந்தவர், அவர்களைக் கைவிடமாட் டார்.COLTam 173.3

    தேவபிள்ளைகள் தனித்தும் பாதுகாப்பின்றியும் விடப்பட வில்லை. ஜெபமானது சர்வவல்லவரின் புயத்தைச் செயல்பட வைக்கிறது. ஜெபத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினி யின் உக்கிரத்தை அவித்தார்கள். தங்கள் விசுவாசத்தினிமித்தம் இரத்த சாட்சிகளாக மரித்தவர்களின் வாழ்க்கையில் இதன் அர்த்தம் விளங்குகிறது. அதாவது, அந்நியருடைய சேனைகளை முறி யடித்தார்கள். எபிரெயர் 11:33, 34.COLTam 174.1

    நாம் நம்முடைய வாழ்க்கையை அவருடைய சேவைக்கு ஒப்புக்கொடுத்தால், தேவன் ஏற்பாடு செய்திரார் ஒரு நிலையில் நாம் ஒருபோதும் வைக்கப்படமாட்டோம். நம் சூழ் நிலைகள் எதுவானாலும் அவர் நமக்கு வழிகாட்டியாய் இருப்பார்; நம்முடைய குழப்பங்கள் எதுவானாலும் மாறாத ஆலோசனை கராக இருப்பார். நாம் எத்தகைய துக்கத்திலும், இழப்பிலும் அல்லது தனிமையிலும் இருந்தாலும் நமக்காகப் பரிதவிக்கும் நண்பராக இருப்பார். நம் அறியாமையால் நம் கால்கள் இடறினால், கிறிஸ்து நம்மைக் கைவிடமாட்டார். ‘நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று தெளிவான குரலில் அவர் பேசு வதைக் கேட்கலாம். யோவான் 14:6.’‘கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் விடுவிப்பார். சங்கீதம் 72:12.COLTam 174.2

    தம்மிடத்தில் நெருங்கிச் சேர்ந்து தம்முடைய பணியை உண்மையோடு செய்கிறவன் தன்னைக் கனப்படுத்துகிறானென்று ஆண்டவர் கூறுகிறார். “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். ஏசாயா 26:3. நம்மை முன்னோக்கியே தொடர்ந்து நடத்திச்செல்வதற்கு சர்வ வல்லவரின் கரம் நீட்டப்பட்ட வண்ணமாய் உள்ளது. முன்செல்லுங்கள், நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார். என் நாமத்தின் மகிமைக்கென நீங்கள் கேட்கும் போது பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் தோல்வியை எதிர்பார்த் திருக்கிறவர்களுக்கு முன்பாக நான் கனப்படுத்தப்படுகிறேன். என்னுடைய வார்த்தை மகிமை யோடு நிறை வேறுவதைப் பார்ப்பார்கள். “நீங்கள் விசுவாச முள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள். ‘‘ மத்தேயு 21:22.COLTam 174.3

    நெருக்கப்படுகிற, அநியாயமாக நடத்தப்படுகிற அனைவரும் தேவனை நோக்கிக் கதறட்டும். இரும்பு போல் மனம் படைத்தவர் களிடமிருந்து விலகி, உங்களைப் படைத்தவரிடம் விண்ணப்பங்களை ஏறெடுங்கள். நொறுங்குண்ட இதயத்தோடு தம்மிடம் வருகிற ஒருவரையும் அவர் புறக்கணிப்பதே இல்லை. உண்மையான ஜெபம் வீண்போவதே இல்லை. பரலோக பாடற் குழுவினரின் இசைக்கு மத்தியில், பெலவீனமான மனிதர்களுடைய கூக்குரல்களையும் தேவன் கேட்கிறார். தனி அறைகளிலிருந்து நமது இதயத்தின் வாஞ்சைகளை ஊற்றுகிறோம், வழியில் நடந்து செல்லும் போது சிறு ஜெபத்தை ஏறெடுக்கிறோம் நமது ஜெபங்கள் சர்வலோக மன்னருடைய சிங்காசனத்திற்கு முன் சென்றடைகின்றன. மனிதர்களுடைய காதுகளுக்குக் கேட்காமல் இருக்கலாம்; ஆனால் அவை மறைந்து போவதுமில்லை; பற்பல அலுவல்களின் பரபரப்பினால் மறக்கப்படுவதுமில்லை. ஆத்துமாவின் வாஞ்சை யை எதுவும் மூழ்கடிக்க முடியாது. தெருக்களின் இரைச்சலுக்கு மேலாக, திரள் கூட்ட மக்களின் குழப்பங்களுக்கு மேலாக எழும்பி, பரலோக மன்றங்களைச் சென்றடைகின்றன. நாம் தேவனிடத்தில் பேசுகிறோம், நமது ஜெபம் கேட்கப்படுகின்றன.COLTam 175.1

    என்னால் பிரயோஜனமே இல்லையென நினைக்கிறவர், தேவனிடம் தன் வழக்கை ஒப்படைக்க பயப்படக்கூடாது. உலகத்தின் பாவத்திற்காக கிறிஸ்துவுக்குள் தம்மையே அவர் கொடுத்தபோது, ஒவ்வோர் ஆத்துமாவின் வழக்கையும் அவர் ஏற்றுக்கொண்டுவிட்டார். தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்ப தெப்படி? ரோமர் 8:32. நம்மைப் பெலப்படுத்தவும், ஊக்கப் படுத்தவும் அவர் தமது கிருபைபொருந்திய வார்த்தையை நமக்கு நிறைவேற்றாதிருப்பாரா? தமக்குச் சொந்தமானவர்களை சாத்தானுடைய ஆளுகையிலிருந்து மீட்பதைவிட, கிறிஸ்து விரும்புவது வேறு எதுவுமே இல்லை. வெளியே சாத்தானுடைய வல்லமையிலிருந்து விடு தலை செய்யப்படுவதற்கு முன்னர், உள்ளே அவனுடைய வல்லமையிலிருந்து விடுதலையாகவேண்டும். உலக ஆசைகளிலிருந்தும், சுயநலத்திலிருந்தும், கிறிஸ்துவுக்கு எதிரான கடினமான குணங்களிலிருந்தும் நாம் சுத்திகரிக்கப்படும் படி, கர்த்தர் சோதனைகளை அனுமதிக்கிறார். நாம் தேவனையும் அவர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் அறிந்து கொள்ளவும், அசுத்தத்தினின்று சுத்திகரிக்கப்படும்படி இதயத்தில் ஆழ்ந்த ஏக்கங்கொள்ளவும், சே பாதனைகளைத் தாண்டி தூய்மையும் பரிசுத்தமும் சந்தோஷமான வர்களாக வரவும் ஜலப்பிரவாக உபத்திரவங்கள் நம் ஆத்து மாக்கள் மேல் கடந்து செல்ல அவர் அனுமதிக்கிறார். சுயநலத்தால் இருண்டு போன ஆத்துமாக்களோடு தாம் பெரும் பாலும் உபத்திரவமெனும் சூளைகளுக்குள் பிரவேசிக்கிறோம். அந்தக் கொடிய சோதனையிலும் நாம் பொறுமையாக இருந்தால், தெய்வீகக் குணத்தை பிரதிபலிப்பவர்களாக வெளியே வருவோம். உபத்திரவத்தில் அவருடைய நோக்கம் நிறைவேறியதும்,” உன் நீ தியை வெளிச் சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்” சங்கீதம் 37:6.COLTam 175.2

    கர்த்தர் தமது மக்களின் ஜெபங்களைப் புறக்கணிப்பதற்கான ஆபத்தே இல்லை. சோதனை மற்றும் பாடுகளின் போது அவர்கள் அதைரியமடைந்து, இடைவிடாமல் ஜெபிப்பதை நிறுத்துகிற ஆபத்துதான் இருக்கிறது.COLTam 176.1

    சீரோபெனிக்கேயா பெண்ணைக் கண்டதும் இரட்சகர் தெய்வீக மனதுருக்கம் கொண்டார். அவளுடைய துக்கம் அவருடைய உள்ளத்தைத் தொட்டது. அவளுடைய ஜெபம் கேட்கப்பட்ட தென உடனடியாக அவளுக்கு உறுதியளிக்க விரும்பினார்; ஆனால் தம் சீடர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுக்க விரும்பினார். எனவே, வேதனையோடிருந்த அவளது உள்ளத்தைக் கவனியாதவர்போல சற்று நேரம் இருந்தார். ஆனால் அவள் விசுவாசத்தை வெளிப்படுத்தியபோது, அவளைப் பாராட்டிப் பேசினார், அவள் கேட்ட வரத்தையும் அவளுக்குக் கொடுத்தனிப்பினார். சீடர்கள் இந்தப் பாடத்தை மறக்கவே இல்லை. விடாமுயற்சியுடன் ஏறெடுக்கும் ஜெபத்தின் முடிவைக் காட்டுவதற்காக ஆவணத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.COLTam 176.2

    புறக்கணிக்கப்படமுடியாத விடாமுயற்சியை கிறிஸ்துதாமே அந்தத் தாயின் இதயத்தில் வைத்தார். நியாயாதிபதிக்கு முன்பாக மன்றாடின விதவைக்கு கிறிஸ்து தாமே தைரியத்தையும், உறுதியையும் கொடுத்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு யாப்போக்கு ஆற்றங்கரையில் நிகழ்ந்த அந்த விநோதமான போராட்டத்தில், இதே விடாப்பிடியான விசுவாசத்தை கிறிஸ்து தாமே யாக்கோபுக்குக் கொடுத்தார். அவர்தாமே உள்ளத்தில் ஊன்றியிருக்கும் விசுவாசத்திற்கேற்ற பலனைத் தராமல் இருக்க மாட்டார்.COLTam 177.1

    பரலோக பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்கிறவர் நீதியாக நியாயஞ்செய்கிறார். தமது சிங்காசனத்தைச் சுற்றிலுமுள்ள திரளான தூதர்களைக் காட்டிலும், பாவ உலகில் பாவச்சோதனையால் போராடி வரும் தம் பிள்ளைகள் மேல் அவர் அதிக பிரியமாக இருக்கிறார்.COLTam 177.2

    பிரபஞ்சத்தில் சிறுபுள்ளி போன்ற இவ்வுலகத்தை வான மண்டலங்களிலுள்ள சர்வலோகமும் மிகுந்த ஆர்வத்துடன் உற்று நோக்குகிறது; இவ்வுலகின் மக்களுக்காக கிறிஸ்து ஈடு இணையற்ற கிரயத்தைச் செலுத்தியிருப்பதுதான் காரணம். இவ்வுலகத்தை தேவன் அறிவுப்பிணைப்புகளால் பரலோகத்தோடு கட்டியுள்ளார். கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் இங்கு இருப்பதே அதற்கு காரணம். ஆபிரகாமின் நாட்களிலும், மோசேயின் நாட்களிலும் பரலோகத் தூதர்கள் பூமியில் நடந்து, பேசிவந்தது போல இன்றும் பூமிக்கு வந்து போய் இருக்கிறார்கள். நகரங்களின் பிரதான சாலைகளில் மக்கள் கூட்டம்; வியாபாரமும், விளையாட்டும், பொழுதுபோக்கும் தான் வாழ்க்கை என்பது போல வணிகச்சந்தைகளில் மக்கள் கூட்டம்; கண்ணுக்குத் தெரியாத உண்மைகள் பற்றித் தியானிப்பவர்களோ மிகச்சிலர்; நம்முடைய மாநகரங்கள் இவ்வளவு பரபரப்புடன் இருந்தாலும் கூட, பரலோகம் தன் கண்காணிகளையும், பரிசுத்த தூதர்களையும் இங்கே வைத்திருக்கிறது. கண்ணுக்குப் புலப்படாத பரலோக பிரதிநிதிகள் மனிதர்களின் ஒவ்வொரு வார்த்தையையும், செய் கையையும் கவனிக்கிறார்கள். வியாபாரத்திற்காக அல்லது பொழுதுபோக்கிற்காக மக்கள் கூடும் இடங்களில், தொழுகைக் காகக் கூடும் இடங்களில் கண்களால் நாம் காணக்கூடியவர்களை விட அநேகர் நம்மைக் கவனிக்கிறார்கள். இவ்வுலகின் பரபரப்பிலிருந்து நாம் விடுபட்டு, நம் கண்ணில்படாமலேயே நம் செய்கிற அல்லது சொல்கிற ஒவ்வொன்றையும் பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்கும்படிக்கு சில சமயம் பரலோக அறிவு ஜீவிகள் நம் கண்ணுக்குத் தெரியாத உலகத்தை திரைவிலக்கிக் காண்பிப்பதுண்டு.COLTam 177.3

    இந்த உலகத்திற்கு வந்து போகும் தேவதூதர்களின் பணி குறித்து நாம் புரிந்து கொண்டிருப்பதைவிட அதிகமாய் புரிந்து கொள்ள வேண்டும். நமது அனைத்து வேலைகளிலும் பரலோக தூதர்கள் நமக்கு ஒத்துழைப்பும் உதவியும் வழங்குகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது நமக்கு நல்லது. சாந்தமும் மனத்தாழ்மையுமாய் தேவவாக்குத்தத்தங்களை விசுவாசித்துப் பற்றிக்கொள்கிற வர்களுக்கு கண்ணுக்குப் புலப்படாத ஒளியின், வல்லமையின் சேனைகள் உதவி செய்கின்றன. அவரது வலதுபாரிச் த்தில் நிற்கும் கேரூபின்களும், சேராபீன்களும், பராக்கிரமத்தில் ஈடு இணையற்ற ஆயிரமாயிரமான பதினாயிரம் பதினாயிரமான. தூதர்களும், “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும் படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்ள் எபிரெயர் 1:14.COLTam 178.1

    தூதர்களான இந்தத் தூதுவர்கள் மனுபுத்திரரின் செய்கைகளையும், வார்த்தைகளையும் உண்மையாகப் பதிவு செய்கிறார்கள். தேவபிள்ளைகளுக்கு எதிரான ஒவ்வொரு கொடுமையும் அநீதியும், தீயவர்கள் தங்கள் அதிகாரத்தால் அவர்களுக்கு இழைத்த அனைத்து துன்பங்களும் பரலோகத்தில் பதிவு செய்யப்படுகின்றன.COLTam 178.2

    “தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர் களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யா மலிருப்பாரோ? சீக்கிரத்தில் அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.’‘லூக்கா 18:7,8.COLTam 178.3

    “ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் பண்ணார்.” எபிரெயர் 10:35 - 37. “இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடைய வேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப் படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே - யாக்கோபு 5:7,8.COLTam 178.4

    தேவனுடைய நீடிய பொறுமை அதிசயமானது. இரக்கத்தோடு பாவியிடம் வேண்டிக்கொண்டு, நீதி வழங்குவதில் பொறுமை காக்கிறார். ஆனாலும், நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம். சங் 97:2. “கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்பு விக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல் காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது” நாகூம் 1:3.COLTam 179.1

    தேவனுடைய பிரமாணங்களை மீறுவதில் இந்த உலகம் துணிகரங் கொண்டிருக்கிறது. அவர் நீடிய பொறுமையோடு இருப்பதால், மனிதர் அவரது அதிகாரத்தை காலால் மிதிக்கிறார்கள். அவருக்குச் சுதந்தரமானவர்களைக் கொடுமைப்படுத்தி, ஒடுக்கி, ஒருவருக்கொருவர் தங்களைப் பலப்படுத்து கிறார்கள். “தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமான வருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ ?” என்று கேட்கிறார்கள். சங்கீதம் 73:11. ஆனால் ஓர் அளவுக்கு மேல் அவர்கள் செல்லமுடியாது. நிர்ணயிக்கப்பட்ட அளவை அவர்கள் எட்டுகிற காலம் சமீபித் திருக்கிறது. இப்போதுதானே தேவனுடைய நீடிய பொறுமையின் அளவையும், அவருடைய கிருபையின் அளவையும், அவருடைய இரக்கத்தின் அளவையும் அவர்கள் தாண்டி விட்டார்கள். தேவன் தம்முடைய கனத்தை நிலைநாட்டவும், தம் முடைய மக்களை விடுவிக்கவும், அநீதி பெருகுவதைக் கட்டுப்படுத்தவும் தலையிடுவார்.COLTam 179.2

    நோவாவின் நாட்களில், ஜனங்கள் சிருஷ்டிகரை குறித்த நினைவே இல்லாமற்போகுமளவிற்கு அவருடைய கற்பனைகளை அவமதித்தார்கள். அவர்களுடைய அக்கிரமம் மிகவும் அதிகமாக இருந்த்தால், கர்த்தர் பூமியின் மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி, அங்கிருந்த துன்மார்க்கரை அழித்துப் போட்டார். தாம் செயல்படும் விதங்குறித்து ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தேவன் வெளிப்படுத்தியிருக்கிறார். நெருக்கடியான நிலை எழுந்தபோது, தம்மை வெளிப்படுத்தி, சாத்தானின் திட்டங்களை முறியடிக்கத்தக்கதாக குறுக்கிட்டுள்ளார். தேசங்களிலும், குடும்பங் களிலும், தனிநபர்களின் வாழ்விலும், தாம் தலையிடுவதை அவர்கள் தெளிவாகக் காணும்படிக்கு பிரச்சனைகள் நெருக்கடினா யான நிலையை எட்ட அனுமதித்திருக்கிறார். பிறகு, தம்முடைய பிரமாணத்தைப் பாதுகாத்து, தம் மக்களுக்கு நியாயம் செய்கிற தேவன் இஸ்ரவலில் உண்டென்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.COLTam 179.3

    அக்கிரமம் பெருகியிருக்கும் இந்நாட்களில், மாபெரும் நெருக்கடி நிலைக்கு வந்திருக்கிறோம். உலகம் முழுவதிலும் தேவ கற்பனைகள் நிராகரிக்கப்படும் போது, அவருடைய பிள்ளைகளை சக மனிதர்கள் ஒடுக்கி, வேதனைப்படுத்தும்போது, தேவன் தலையிடுவார்.COLTam 180.1

    ‘என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசி த்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக் கொள். இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும் படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும் என்று அவர் சொல்லப் போகும் காலம் சமீபித்திருக்கிறது.” ஏசாயா 26:20,21. கிறிஸ்தவர் களெனச் சொல்பவர்களே அப்போது ஏழைகளை ஏமாற்றி, ஒடுக் கலாம் ; விதவைகளையும் திக்கற்ற பிள்ளைகளையும் கொள்ளை யிடலாம்; தேவபிள்ளைகளின் மனச்சாட்சியைக் கட்டுப்படுத்த முடியாமல், சாத்தானைப்போல அவர்கள் மேல் வெறுப்பிலேயே இருக்கலாம்; ஆனால் இவை எல்லாவற்றிலும் தேவன் அவர்களை நியாயத்தீர்ப்பார். ‘இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்” யாக் 2:13. அவருக்கு சுதந்தரமான வர்களின் ஆத்துமாக்களுக்கும் சரீரங்களுக்கும் அவர்கள் இழைத்த வேதனைகளுக்கெல்லாம் கணக்குக் கொடுக்கும் படி பூமியனைத்திற்கும் நியாயாதிபதியான வருக்கு முன் அவர்கள் நிற்கப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. இப்போது அவர்கள் பொய்யாக்கக் குற்றஞ்சாட்டி வரலாம்; தேவன் தம் பணியில் நியமித்துள்ளவர்களைப் பரிகசிக்கலாம்; அவரை விசு வாசிப்பவர்களைச் சிறையிலடைக் கலாம், சங்கிலிகளால் கட்டலாம், நாடு கடத்தலாம், கொலை செய்யலாம், ஆனால், அந்த மனவியாகுலங்களுக்கும், சிந்தப் பண்ணின கண்ணீருக்கும் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். அவர்களுடைய பாவங்களுக்கு இரட்டிப்பாய் தேவன் பதிலளிப்பார். தேவதுரோக சபைக்கு அடையாளமான பாபிலோனைக்குறித்து, நியாயந்தீர்ப்பில் சம்பந்தப்பட்டுள்ளதம் ஊழியர்களிடம் பின்வருமாறு சொல்கிறார்: “அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார். அவள் உங்களுக்குப் பலனளித்தது போல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்து கொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்து கொடுங்கள். வெளி. 18:5,6.COLTam 180.2

    இந்தியாவிலிருந்தும், ஆப்பிரிக்காவிலிருந்தும், சீனாவிலிருந்தும், சமுத்திரத்தின் தீவுகளிலிருந்தும், ஒடுக்குதல் காணப்படும் ஏராளமான கிறிஸ்தவ நாடுகளிலிருந்தும் ஜனங்களின் கூக்குரல் தேவசமூகத்தை எட்டுகிறது. இந்தக் கூக்குரலுக்குப் பதில் கிடைக்க இன்னும் வெகுகாலம் செல்லாது. பூமியை அதன் ஒழுக்கச் சீர்கேட்டி லிருந்து தேவன் சுத்திகரிப்பார்; நோவாவின் நாட்களில் வந்தது போன்ற ஜலப்பிரளயத்தினால் அல்ல, மனிதனின் எந்தச் சக்தியாலும் அணைக்க இயலாத அக்கினியால் சுத்திகரிப்பார்.COLTam 181.1

    ” யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்கால மட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனை வரும் விடுவிக்கப்படுவார்கள். “தானியேல் 12:1.COLTam 181.2

    உப்பரிகைகளிலிருந்தும் குடிசைகளிலிருந்தும், நிலவறைகளி லிருந்தும், தூக்குமரங்களிலிருந்தும், மலைகளிலிருந்தும், வனாந்தரங்களிலிருந்தும், பூமியின் குகைகளிலிருந்தும், சமுத்திரங்களின் ஆழங்களிலிருந்தும் கிறிஸ்து தமது பிள்ளைகளை தம்மிடமாகக் கூட்டிச் சேர்ப்பார். பூமியில் இவர்கள் தனிமையாக்கப்பட்டு, துன் புறுத்தப்பட்டு, சித்திரவதை அனு பவித்தவர்கள். சாத்தானுடைய வஞ்சக கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்ததால், முற்றிலும் அவமதிப்பட்டு, கல்லறைக்குச் சென்றவர்கள் இலட்சக்கணக்கானோர். தேவனுடைய பிள்ளைகளை கொடுங்குற்றவாளிகளாக மனித நீதி மன்றங்கள் தீர்ப்பு செய்தன. ஆனால் தேவனே நியாயாதிபதியாக இருக்கும் நாள் சமீபமாயிருக்கிறது. சங்கீதம் 50:6. அப்பொழுது பூலோகத்தார் வழங்கிய தீர்ப்புகள் மாற்றப்படும். தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார் ” ஏசாயா 25:8. அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்படும். வெளி 6:11. அவர்களைப் பரிசுத்த ஜனமென்றும், கர்த்தரால் மீட்கப்பட்டவர்களென்றும் சொல்லுவார்கள். ஏசாயா 62:12.COLTam 181.3

    எத்தகைய சிலுவைகளைச் சுமக்கும்படி அவர்கள் அழைக்கப் பட்டிருந்தாலும், எத்தகைய இழப்புகளை அவர்கள் அனுபவித் திருந்தாலும், எத்தகைய இக்கட்டுகளைச் சந்தித்திருந்தாலும், அதனால் இவ்வுலக வாழ்வையே இழந்திருந்தாலும் கூட, தேவ பிள்ளைகள் அதற்கேற்ற பிரதிபலனைப் பெறுவார்கள். அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.” வெளிப்படுத்தல் 22:4.COLTam 182.1