Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கிறிஸ்துவின் உவமைப்பாடங்கள் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    காணாமற்போன வெள்ளிக்காசு!

    காணாமற்போன ஆடு குறித்த உவமையைச் சொன்ன பிறகு, வேறொரு உவமையை கிறிஸ்து சொன்னார்: “அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக் காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற் போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டு பிடிக்கிற வரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?”COLTam 192.1

    கிழக்கத்திய நாடுகளில், ஏழைகளுடைய வீடுகள் பெரும் பாலும் ஓர் அறையுடன், ஜன்னலோ வெளிச்சமோ இல்லாதவைகளாக இருந்தன. எப்போதாவதுதான் அறையைப் பெருக்குவார்கள், எனவே ஏதாவது காசு கீழே விழுந்தால், தூசியும் குப்பையும் உடனே அதை மூடிவிடும். அதைக்கண்டுபிடிக்க வேண்டுமானால், பகல் நேரத்திலும் கூட விளக்கைக் கொளுத்தி, கவனமாக அறையைப் பெருக்கித் தேடவேண்டும்.COLTam 192.2

    அக்காலத்தில் திருமணப்பெண்களின் சீதனம் காசுகள் தாம்; தங்களுக்கு பின் அவற்றை தங்களுடைய மகள்களுக்குக் கொடுப் பதற்காக பெரும் சொத்து போல பாதுகாத்து வைத்திருப்பார்கள். அவற்றில் ஒரு காசு தொலைந்தால் கூட மிகப்பெரிய இழப்பாகக் கருதுவார்கள். தொலைந்த காசு திரும்பக் கிடைக்கும் போது மிக வும் மகிழ்ச்சியடைவார்கள். அதை உடனே அக்கம்பக்கத்திலுள்ள பெண்களோடும் பகிர்ந்துகொள்வார்கள்.COLTam 192.3

    அந்த ஸ்திரீயானவள் அந்தக் காசைக் கண்டுபிடித்த பின்பு, தன் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து : காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டு பிடித்தேன், என்னோடேகூட சந்தோஷப் படுங்கள் என்பாள் அல்லவா? அதுபோல, மனந்திரும்புகிற ஒரே பாவி யினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கிறிஸ்து சொன்னார். லூக்கா 15:10.COLTam 192.4

    முந்தைய உவமையைப் போல இந்த உவமையும், ஒரு பொருள் காணாமற் போவதையும், அதைக் கவனமாகத் தேடினால் அது மீண்டும் கண்டுபிடிக்கப்படுவதையும், அதனால் பெரும் மகிழ்ச்சி உண்டாவதையும் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் அந்த இரண்டு உவமைகளும் வெவ்வேறு வகையான மக்களைப் பற்றிப் பேசுகின்றன. வழிதப்பிப்போன ஆட்டிற்கு தான் தொலைந்து போனது தெரியும். அது மேய்ப்பனையும் மந்தையையும் விட்டு விலகியதால், அதால் திரும்பிச் செல்ல முடியவில்லை. தேவனை விட்டுப்பிரிந்ததால், பெருங் குழப்பத்திலும், நிந்தை யிலும், கடும் பாவச்சோதனையிலும் இருப்பவர்களை இது சுட் டிக்காட்டுகிறது. ஆனால் காணாமல் போன காசானது, அக்கிரமங் களினாலும், பாவங்களாலும் தொலைந்துபோய், தங்கள் நிலை குறித்த உணர்வே இல்லாதவர்களைச் சுட்டிக்காட்டுகிறது. தாங்கள் தேவனை விட்டுப் பிரிந்தும், அதுபற்றி அறியாதிருக்கிறார்கள். அவர்களுடைய ஆத்துமாக்கள் பெரும் ஆபத்தில் இருக்க, அதைக்குறித்த சுயஉணர்வும் அக்கறையும் இல்லாதிருக்கிறார்கள். தேவனுடைய கோரிக்கைகளில் அலட்சியமாக இருப்பவர்கள்கூட, பரிவு நிறைந்த அவருடைய அன்பிற்குப் பாத்திரவான்கள்தாம் என்று இந்த உவமையில் கிறிஸ்து போதிக்கிறார். அவர்களை மீண்டும் தேவனிடத்தில் கொண்டுவருவதற்கு அவர்களைத் தேடிச்செல்ல வேண்டும்.COLTam 193.1

    அந்த ஆடு மந்தையை விட்டு வழிதப்பிச்சென்றது ; வனாந்தரத் திலோ மலைப்பகுதிகளிலோ அது தொலைந்து போனது. வெள்ளிக்காசானது வீட்டில் தொலைந்தது. கைக்கெட்டி தூரத்தில் கிடந்தும் கூட, கவனமாகத் தேடி அதைக் கண்டுபிடிக்க வேண்டி யிருந்தது.COLTam 193.2

    இந்த உவமையில், குடும்பங்களுக்கான ஒரு பாடம் உள்ளது. குடும்பங்களில் பெரும்பாலும், குடும்ப அங்கத்தினர்களின் ஆத்தும் நிலை குறித்து மிகுந்த அக்கறையின்மை காணப்படுகிறது. தேவனை விட்டுப் பிரிந்து சென்ற ஒருவர் அந்தக் குடும்பத்தில் இருக்கலாம்; தேவன் ஈவுகளாகக் கொடுத்திருக்கும் குடும்ப அங்கத்தினர்களில் ஒருவர் தொலைந்து போய் விடக் கூடாதே என்று வேதனைப்படுகிற நிலை எவ்வளவு தூரம் காணப்படுகிறது.COLTam 193.3

    புளிதியிலும் குப்பையிலும் கிடந்தாலும் கூட வெள்ளிக்காசு வெள்ளிக்காசுதான். காசுக்குச் சொந்தக்காரர் அதன் மதிப்பை உணர்ந்து தான் அதைத் தேடுகிறார். அதுபோல, எந்த ஆத்துமா வானாலும், அது பாவத்தால் எவ்வளவுதான் தரம் தாழ்ந்திருந்தாலும், தேவனுடய பார்வையில் விலையேறப்பெற்றதாக இருக்கிறது. அந்தக் காசில் ஆட்சிசின்னமும் எழுத்தும் பொறிக்ப்பட் டிருப்பதுபோல, மனிதனும் தன் சிருஷ்டிப்பின்போது தேவசாய லையும் அடையாளத்தையும் பெற்றிருந்தான். இப்போது அது கெட்டு. பாவத்தின் தாக்கத்தால் மங்கினாலும், அந்த அடையாளத்தின் சுவடுகள் ஒவ்வோர் ஆத்துமாவின் மேலும் உள்ளன. அந்த ஆத்துமாவைக் காப்பாற்றி, நீதியிலும் பரிசுத்தத்திலும் தமது செ ராந்தச் சாயலை மீண்டும் அதில் கொண்டுவர தேவன் விரும்புகிறார்.COLTam 194.1

    உவமையில் சொல்லப்படும் அந்தப் பெண்தொலைந்துபோன அந்தக் காசை கருத்தோடு தேடுகிறாள். விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்குகிறாள். தேடுவதற்கு தடையாகவுள்ள அனைத்தையும் அப்புறப்படுத்துகிறாள். தொலைந்தது ஒரு காசு தான் என்றாலும், அதைக் கண்டுபிடிக்கும் வரை முயற்சி செய்வதை நிறுத்தவில்லை . அது போல குடும்பத்தில், ஒரு நபர் தேவனைவிட்டுப் பிரிந்து சென்றாலும் கூட, அவரைத் தேவனிடத்தில் திருப்புவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும். மற்றவர்களும் தங்கள் பங்கிற்கு தங்களை கருத்தோடும் கவனத்தோடும் சுய பரிசோதனை செய்யவேண்டும். அனுதின வாழ்க்கையை ஆராயவேண்டும். அந்த ஆத்துமா மனந்திரும் பாமல் இருப்பதற்கு ஏதாவது தவறோ பிழையோ, நிர்வாகக் குறையோ காரணமாயிருக்கிறதாவெனப் பார்க்கவேண்டும்.COLTam 194.2

    குடும்பத்தில் ஒரு பிள்ளை தன் பாவநிலை குறித்து சுய உணர்வே இல்லாதிருந்தால், பெற்றோர் ஏதாவது செய்தாக வேண்டும். விளக்கைக் கொளுத்தட்டும். அந்தப் பிள்ளை காணாமல் போன தற்கான காரணத்தைக் கண்டு படிக்க தேவ வார்த்தையை ஆராயட்டும்; அதன் வெளிச்சத்தில் வீட்டிலுள்ள ஒவ்வொன்றையும் கவனமாக ஆராயட்டும். பெற்றோரு தங்கள் இருதயங்களை ஆராய்ந்து, தங்கள் பழக்கவழக்கங்களை பரிசோதிக்கட்டும். பிள்ளைகள் தேவனுடைய சொத்துக்கள்; அவருடைய சொத்தை நிர்வகிப்பதில் நாம் அவருக்குக் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.COLTam 194.3

    ஏதாவது அயல் நாடுகளில் ஊழியம் செய்ய வேண்டுமென அதிகமாக ஏங்குகிற அப்பாக்களும் அம்மாக்களும் இருக்கிறார்கள். வீட்டில் அல்லாமல் வெளியே கிறிஸ்துவின் பணியில் மும்முரமாக இயங்குகிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய பிள்ளைகளோ இரட்சகரையும் அவருடைய அன்பையும் அறியாதவர்களாக இருப்பார்கள். தங்கள் பிள்ளைகள் கிறிஸ்துவை அறிந்து கொள்கிற பொறுப்பை போதகரிடமோ ஓய்வுநாள் பள்ளி ஆசிரியரிடமோ விட்டுவிடு வார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் தேவன் தங்களுக்குக் கொடுத்திருக்கிற பொறுப்பை அலட்சியம் செய்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிக்கொடுப் பதும், அவர்களைக் கிறிஸ்தவர்களாகப்பயிற்றுவிப்பதும் தான் பெற்றோர் தேவனுக்குச் செய்கிற மிகப்பெரிய சேவையாகும். இந்த ஊழியத்தை மிகவும் பொறுமையோடும், வாழ்நாள் முழுதவதும் கருத்தோடும், விடாமுயற்சியோடும் செய்யவேண்டும். இந்தக் கடமையைச் செய்யத் தவறினால், நாம் உண்மையற்ற உக்கிராணக்காரர்களென நிரூபிக்கிறோம். அவ்வாறு அலட்சியம் செய்வதற்கான எந்தச் சாக்குப்போக்கையும் தேவன் ஏற்றுக்கொள்ள மாட்டார்.COLTam 195.1

    இந்தக் கடமையில் தவறிவிட்டோமே என்று குற்றவுணர்வு கொள்கிறவர்கள் நம்பிக்கை இழக்கக்கூடாது. காசைத் தொலைத்த அந்தப் பெண், அதைக் கண்டுபிடிக்கும் வரைக்கும் தேடினாள். அதுபோல பெற்றோர், ‘இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்கிற நிலையை எட்டுகிற வரையிலும் அன்போடும் விசுவாசத்தோடும் ஜெபத்தோடும் தங்களுடைய குடும்பத்தினருக்காகப் பிரயாசப்படவேண்டும்.COLTam 195.2

    இதுதான் மெய்யான குடும்ப ஊழியம். இந்த ஊழியத்தைச் செய்கிறவருக்கும் நன்மை உண்டு; ஊழியத்தால் பயனடைகிற வருக்கும் நன்மை உண்டு. குடும்ப வட்டத்திற்குள் உள்ளவர் களிடம் மெய்யான அக்கறையோடு நாம் ஊழியம் செய்தால், தேவ னுடைய குடும்பத்தாருக்கு ஊழியம் செய்ய நம்மைத் தகுதிப்படுத் துகிறோம்; நாம் கிறிஸ்துவுக்கு உண்மையாக இருந்தால், அவர்களோடு கூட நித்தியகாலமும் நாம் வாழ்வோம். குடும்பத்திற் குள் நாம் ஒருவருக்கு ஒருவர் காட்டுகிற அதே அக்கறையை, கிறிஸ்து வுக்குள் நம்முடைய சகோதர சகோதரிகள் மேலும் நாம் காட்ட வேண்டும்.COLTam 195.3

    இது எல்லாமே மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய நம்மைத் தகுதிப் படுத்தவேண்டும் என்பதே தேவனுடைய திட்டமாகும். நம் பரிவு மனப்பான்மை அதிகரித்து, நம்முடைய அன்பு அதிகரிக்கும் போது, எல்லாப் பக்கங்களிலும் ஊழிய வாய்ப்பு இருப்பதைக் காணலாம். தேவனுடைய மாபெரும் குடும்பத்தில் உலகம் முழுவ திலும் உள்ளவர்கள் அடங்குவார்கள். அந்தக் குடும்பத்தில் ஒரு வரைகூட அலட்சியத்தோடு நாம் கடந்து செல்லக்கூடாது.COLTam 196.1

    நாம் எங்கிருந்தாலும் சரி, காணாமற் போயுள்ள வெள்ளிக் காசை தேடுகிற வேலை இருக்கும். நாம் அதைத் தேடுகிறோமா? பக்தி மார்க்கங்களில் அக்கறையே இல்லாதவர்களை ஒவ்வொரு நாளும் சந்திக்கிறோம். அவர்களிடம் பேசுகிறோம், அவர்களை போய் பார்க்கிறோம்; அவர்களுடை ஆவிக்குரிய நலனில் அக் கறை காட்டுகிறோமா? பாவத்தை மன்னிக்கிற இரட்சகரென கிறிஸ்துவை அவர்களுக்கு அறிமுகம் செய்கிறோமா? கிறிஸ்து வின் அன்பால் வெதுவெதுப்பான இருதயங்களோடு, அந்த அன்பை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோமா? இல்லையன் றால், தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக அவர்களோடு சேர்ந்து நாமும் நிற்கும் போது, தொலைந்து போன, நித்தியமாக தொலைந்துபோன அந்த ஆத்துமாக்களை எவ்வாறு நாம் எதிர் கொள்வோம்?COLTam 196.2

    ஓர் ஆத்துமாவின் மதிப்பை யார் மதிப்பிடக்கூடும்? அதன் மதிப்பை அறிய விரும்பினால், கெத்சமனேக்குச் செல்லுங்கள்; அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாக வருமள விற்கு வியாகுலத்தோடு அவர் கடந்து சென்ற சமயங்களைக் கவனியுங்கள். சிலுவையில் உயர்த்தப்பட்ட இரட்சகரைப் பாருங்கள். “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று நொந்துபோய் அவர் கதறியதைக் கேளுங்கள். மாற்கு 15:34. காயப்பட்ட தலையையும், ஈட்டியால் குத்தப்பட்ட விலாவையும், ஆணிகளால் கடாவப்பட்ட பாதங்களையும் பாருங்கள். இவற்றிற்கெல்லாம் கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்தாரெனச் சிந்தியுங்கள். நம்முடைய மீட்பிற்காக, பரலோகமே பெரும் இடர்பாட்டிற்கு ஆளானது. ஒரு பாவி இருந்திருந்தால் கூட அவனுக்காக கிறிஸ்து மரித்திருப்பார் என்பதை மனதில் கொண்டு சிலுவையினண்டைச் சென்றால், ஓர் ஆத்துமாவின் மதிப்பு எவ்வளவு விலையேறப் பெற்றது என்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம்.COLTam 196.3

    கிறிஸ்துவோடு உங்களுக்கு தொடர்பிருந்தால், ஒவ்வொரு மனி தனையும் அவர் கருதுகிறவண்ணமாகவே கருதுவீர்கள். கிறிஸ்து உங்கள் மேல் காட்டின அதே ஆழமான அன்பை மற்றவர் களிடமும் காட்டுவீர்கள். அப்பொழுது, கிறிஸ்து யாருக்காக மரித்தாரோ அவர்களைத் துரத்தாமல் ஆதாயப்படுத்த முடியும்; புறக்கணியாமல் சேர்த்துக்கொள்ள முடியும். ஒவ்வொருவருக் காவும் தனிப்பட்ட விதத்தில் கிறிஸ்து முயன்றிருக்காவிட்டால், ஒருவரைகூட தேவனிடத்திற்குக் கொண்டு வந்திருக்க முடியாது; அதேபோன்ற தனிப்பட்ட முயற்சியால் தான் ஆத்துமாக்களை நாம் ஆதாயப்படுத்தமுடியும். மரணத்தை நோக்கிச் செல்பவர்களைக் காணும் போது, அவர்களைக் கண்டுகொள்ளாமல், சமாதானமாக நீங்கள் இருக்க முடியாது. அவர்கள் எவ்வளவு அதிகமாக பாவத்திலும், எவ்வளவு ஆழமாக துயரத்திலும் இருக்கிறார்களோ, அவர்களைத்தப்புவிக்கும்படி அவ்வளவு அதிகமாக தீவிரமாகவும் அன்பாகவும் நீங்கள் முயற்சி செய்வீர்கள். பாடு அனுபவிக்கிறவர் களின், தேவனுக்கு எதிராகப் பாவம் செய்பவர்களின், பாவப்பாரத் தால் சிறுமைப்படுபவர்களின் தேவையைப் பகுத்தறிவீர்கள். அவர்கள் மேல் உங்களுக்குப் பரிவு உண்டாகும்; அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். விசுவாசக் கரங்களால் அவர்களைப் பிடித்து, அன்பு செலுத்தி, அவர்களை கிறிஸ்துவிடம் கொண்டுவரு வீர்கள். நீங்கள் அவர்களைக் கண்காணித்து, ஊக்கப்படுத்துவீர்கள்; நீங்கள் காட்டுகிற பரிவும் நம்பிக்கையும் அவர்கள் நிலைதடுமாறா மல் இருப்பதற்கு உதவியாக இருக்கும்.COLTam 197.1

    இந்தப் பணியில் பரலோகத்தூதர்கள் அனைவரும் ஒத்துழைக்க ஆயத்தமாயிருக்கிறார்கள். தொலைந்து போன வர்களைத் தேடிச் செல்கிறவர்கள் கட்டளையிடும் தூரத்தில் தான் பரலோக வளங்கள் இருக்கும். கொஞ்சமும் அக்கறையின்றி, மிகவும் கடினப் பட்டுப்போய் இருப்போரைச் சந்திப்பதற்கு தேவத்தூதர்கள் உதவி செய்வார்கள். ஒரு பாவியை தேவனிடம் கொண்டுவரும் போது, பரலோகம் முழுவதும் சந்தோஷப்படும்; தேவனும், ஆட்டுக்குட்டியானவரும் மனுப்புத்திரர்மேல் காட்டுகிற இரக்கத்திற்காகவும், கனிவான அன்புக்காகவும் அவர்களைப் புகழ்ந்து, கேரூபீன்களும் சேராபீன்களும் தங்களது பொற்சு ரமண்டலங்களைக் கையில் பிடித்து, பாடுவார்கள்.COLTam 197.2