Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    22 - மோசே

    எகிப்தின் ஜனங்கள் பஞ்ச காலத்தில் தங்கள் உணவிற்காக தங்களுடைய ஆடுமாடுகளையும் நிலங்களையம் இராஜாவிற்கு விற்று, முடிவாக நிலையான அடிமைத்தனத்திற்கு தங்களைக் கொடுத்திருந்தனர். அவர்கள் அரசருக்குரிய இடத்தில் குடியிருந்து, இராஜாவிற்குக் கொடுத்திருந்த தங்களுடைய நிலங்களைத் தங்களிடமே வைத்திருக்க அனுமதித்து, தங்களுடைய உழைப்பின் விளைவுகளின் ஐந்தில் ஒரு பங்கை வருடவரியாகச் செலுத்தும் படியான ஞனமான ஏற்பாடுகளை யோசேப்பு செய்திருந்தான்.PPTam 289.1

    ஆனால் இப்படிப்பட்ட நிபந்தனையை உண்டாக்கும் அவசியத்தின் கீழ் யாக்கோபின் பிள்ளைகள் இல்லை. யோசேப்பு எகிப்து தேசத்திற்குச் செய்த சேவையினால் தேசத்தின் ஒரு பகுதி அவர்களுடைய இல்லமாக அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதோடு வரி செலுத்துவதிலிருந்தும் அவர்கள் விலக்கப்பட்டு பஞ்சம் தொடர்ந்த வரையிலும் தாராளமாக உணவு அளிக்கப்பட்டிருந்தனர். யோசேப்பின் தேவன் கிருபையாக தலையிட்டதினிமித்தமே மற்ற நாடுகள் பஞ்சத்தினால் அழிந்து கொண்டிருக்கும் போது, எகிப்து ஏராளத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது என்கிறதை இராஜா அனைவர் முன்பும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தான். யோசேப்பின் நிர்வாகம் இராஜாங்கத்தை அதிக ஐசுவரியமாக்கியது என்பதையும் அவன் கண்டதால், அவனுடைய நன்றி யாக்கோபின் குடும்பத்தை அரச தயவால் சூழ்ந்து கொண்டது.PPTam 289.2

    ஆனால் காலம் கடந்தபோது, எந்த பெரிய மனிதனுக்கு எகிப்து அதிகமாகக் கடமைப்பட்டிருந்ததோ, அவனும் அவனுடைய உழைப்பினால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்த சந்ததியும் கல்லறைக்குட்பட்டன. யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான். அவன் யோசேப்பு நாட்டிற்குச் செய்த சேவையை அறியாதவனாக அல்ல, மாறாக, அவைகளை அங்கீகரிக்க மனதில்லாது, கூடுமானவரை அதை மறந்துவிடவும் விரும்பினான். இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள். அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம் பண்ணி, தேசத்தை விட்டுப் புறப்பட்டுப்போகாதபடிக்கும், நாம் அவர்களைக்குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான்.PPTam 290.1

    இஸ்ரவேலர்கள் ஏற்கனவே மிக அதிக எண்ணிக்கையிலா னார்கள். இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது. யோசேப்பின் பராமரிப்பின் கீழும், அப்போது ஆண்டு கொண்டிருந்த இராஜாவின் தயவிலும் அவர்கள் தேசத்தில் விரைவாக பரவினார்கள். எனினும் எகிப்தியர்களுடைய பழக்கவழக்கங்கள் மற்றும் மதத்தோடு எதையும் பொதுவாக கொண்டிராது தங்களைத் தனித்த இனமாக வைத்திருந்தார்கள். வளர்ந்து கொண்டிருந்த அவர்களது எண்ணிக்கை, யுத்தம் நேரிடுமானால் அவர்கள் எகிப்தின் சத்துருக்களோடு சேர்ந்து கொள்வார்கள் என்ற ஒரு பயத்தை இராஜா மற்றும் மக்களில் எழுப்பியது. எனினும் நாட்டை விட்டு அவர்களை துரத்துவதை கொள்கை தடுத்தது. அவர்களில் அநேகர் திறமையுள்ளவர்களும் ஞானமான தொழிலாளர்களுமாக இருந்து, நாட்டின் செல்வத்திற்கு அதிகம் உழைத்திருந்தனர். இராஜாவிற்கு அவனுடைய மகத்தான அரண்மனைகளையும் கோவில்களையும் கட்டுவதற்கு அப்படிப்பட்ட வேலையாட்கள் தேவைப்பட்டனர். அதன்படி இராஜாங்கத்திற்குத் தங்களுடைய சொத்துக்களைவிற்றுவிட்டிருந்த எகிப்தியர்களோடு அவன் அவர்களை வைத்தான். விரைவாக, அவர்கள் மேல் ஆளோட்டிகள் வைக்கப்பட்டு, அவர்களுடைய அடிமைத்தனம் முழுமையடைந்தது. எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலை வாங்கினார்கள். சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக் கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள். ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள்.PPTam 290.2

    கடுமையான உழைப்பினால் இஸ்ரவேலர்களை கீழ்ப்படுத்தி, அதினால் அவர்களுடைய எண்ணிக்கையை குறைக்கவும் அவர்களுடைய தனித்துவமான ஆவியை நசுக்கிப் போடவும் இராஜாவும் அவனுடைய ஆலோசகர்களும் நம்பியிருந்தனர். தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் தோல்வி யடைந்ததால் இன்னும் அதிக கொடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எபிரெய ஆண் குழந்தைகளை பிறப்பிலேயே அழிக்கும்படியான கட்டளையை செயல்படுத்த எந்த பெண்களுக்கு தொழில் ரீதியான வாய்ப்புகள் இருந்தனவோ அவர்களுக்குக் கட்டளைகள் கொடுக்கப்பட்டன. சாத்தான்தானே இந்தக் காரியத்தைக் கொண்டு வந்தான். இஸ்ரவேலர் நடுவிலிருந்து ஒரு மீட்பர் எழும்புவார் என்பதை அவன் அறிந்திருந்தான். அவர்களுடைய குழந்தைகளை அழிக்க இராஜாவை நடத்துவதின் மூலம் தெய்வீக நோக்கத்தைத் தோற்கடிக்க அவன் நம்பினான். ஆனால் அந்தப்பெண்கள் தேவனுக்குப்பயப்பட்டு, கொடுமையான ஆணையை செயல்படுத்த தைரியமற்றிருந்தனர். ஆண்டவர் அவர்களுடைய செயலை அங்கிகரித்து, அவர்களை செழிப்பாக்கினார். இராஜாதன்னுடைய திட்டம் தோல்வியடைந்ததால் கட்டளையை தீவிரமும், விரிவுமாக்கினான். உதவியற்ற மக்களை வேட்டையாடி படுகொலை செய்வதில் நாடு முழுவதும் ஈடுபட அழைத்தான். அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண் பிள்ளைகளை யெல்லாம் நதியிலே போட்டு விடவும், பெண் பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டான்.PPTam 291.1

    இந்தக் கட்டளை முழுமையாகச் செயல்பட்டிருந்தபோது, லேவி கோத்திரத்திலிருந்த பக்தியுள்ள இஸ்ரவேலர்களான அம்ராமுக்கும் யோசபேத்திற்கும் ஒரு மகன் பிறந்தான். அது அழகுள்ளதாயிருந்தது. இஸ்ரவேலரின் விடுதலைக்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறதென்றும், தேவன் தமது ஜனத்திலிருந்து ஒரு மீட்பரை எழுப்புவார் என்றும் நம்பி, தங்களுடைய குழந்தை பலியாகி விடக்கூடாது என்று பெற்றோர்கள் தீர்மானித்தனர். தேவன் மேலிருந்த விசுவாசம் அவர்களுடைய இருதயங்களை பலப்படுத்த, அவர்கள் ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படவில்லை (எபி 11:23).PPTam 291.2

    அந்தக் குழந்தையை மூன்று மாதங்கள் மறைத்து வைப்பதில் அந்தத் தாய் வெற்றியடைந்தாள். அதன்பின் அதைப் பாதுகாப்பாக வைக்க முடியாது என்பதைக் கண்டு, நாணலினால் ஒரு சிறிய பேழையை ஆயத்தப்படுத்தி நீர்புகாவண்ணம் அதற்கு பிசினும் கீலும் பூசினாள், குழந்தையை அதில் வைத்து, ஆற்றின் கரையோரம் இருந்த நாணலுக்கு நடுவிலே அதை வைத்தாள். தன் குழந்தையின் வாழ்க்கையும் தன்னுடையதும் பறிக்கப்படும் என்பதால், அதைக் காவல் காப்பதற்காக அங்கு தரித்திருக்க அவள் தைரியங்கொள்ள வில்லை . ஆனால் அவனுடைய சகோதரி மிரியாம், தனக்குத் முற்றிலும் தொடர்பில்லாதது போலவும், அதே நேரம் தன்னுடைய சிறிய சகோதரனுக்கு என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்போடு கவனித்தவளாகவும் அருகே தங்கியிருந்தாள். அங்கே மற்ற கண்காணிப்பாளர்களும் இருந்தனர். தாயின் ஊக்கமான ஜெபங்கள் அவளுடைய குழந்தையை தேவனுடைய கவனிப்பிற்குக் கொடுத்திருந்தது. காணக் கூடாத தூதர்கள் தாழ்மையான அவனுடைய இளைப்பாறும் இடத்தின் மேல் தங்கியிருந்தனர். பார்வோனின் குமாரத்தியை தூதர்கள் அங்கே நடத்தினர். அந்த சிறிய பேழையினால் அவளுடைய ஆர்வம் தூண்டப்பட்டது. அதனுள் இருந்த அழகான குழந்தையைப் பார்த்ததும் அதன் கதையை படித்தாள். குழந்தையின் கண்ணீர் அவளுடைய இரக்கத்தை எழுப்பியது. தன்னுடைய விலையுயர்ந்த குழந்தையின் உயிரை காப்பதற்காக இப்படிப்பட்ட முறையை தெரிந்து கொண்ட தான் அறிந்திராத அந்தத் தாயின் மேல் அவளுடைய பரிதாபங்கள் சென்றது. அவன் காப்பாற்றப்பட வேண்டும் என்று அவள் தீர்மானித்தாள். அவனைத்தன்னுடையதாக அவள் ஏற்றுக்கொள்ளுவாள்.PPTam 292.1

    ஒவ்வொரு அசைவையும் மிரியாம் குறித்துக்கொண்டிருந்தாள். குழந்தை மென்மையாக கருதப்பட்டதை கண்டு, பக்கத்தில் செல்லத் துணிந்து, கடைசியில், உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால் கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்று கேட்டாள். அனுமதி கொடுக்கப்பட்டது.PPTam 292.2

    சகோதரி நல்ல செய்தியோடு தன் தாயிடம் விரைந்து, தாமதமின்றி அவளோடு கூட பார்வோனின் மகளிடத்திற்குத் திரும்பினாள். நீ இந்தப் பிள்ளையை எடுத்துக் கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள் அந்த இளவரசி.PPTam 293.1

    தேவன் இந்தத் தாயின் ஜெபங்களைக் கேட்டிருந்தார். அவளுடைய விசுவாசம் பதிலளிக்கப்பட்டது. ஆழ்ந்த நன்றியோடு இப்போது பாதுகாப்பானதும் மகிழ்ச்சியானது மாயிருந்த வேலையில் அவள் நுழைந்தாள். தன்னுடைய குழந்தையை தேவனுக்கென்று பயிற்றுவிக்கும்படி கிடைத்த சந்தர்ப்பத்தை விசுவாசத்தோடு மேம்படுத்தினாள். மாபெரும் வேலைக்காக அவன் பாதுகாக்கப்பட்டான் என்பதில் நம்பிக்கை கொண்டு, தேவனிடமிருந்து அவனை விலக்கக்கூடிய செல்வாக்குகளால் சூழும்படியாக விரைவில் அவளுடைய அரச தாயிடம் அவன் கொடுக்கப்படவேண்டும் என்பதை அவள் அறிந்திருந்தாள். இவை அனைத்தும், தன்னுடைய மற்ற குழந்தைகளுக்குக் கொடுத்ததைக் காட்டிலும் அதிக ஜாக்கிரதையான கவனமான போதனைகளை அவனுக்குக் கொடுக்க அவளை நடத்தியது. தேவனுக்குப் பயப்படுகிற பயத்திலும், நீதியின் மேலும் சத்தியத்தின் மேலும் வைக்கும் அன்பிலும் அவனுடைய மனதை ஊக்கப்படுத்த முயற்சித்து, கெடுக்கிற ஒவ்வொரு செல்வாக்கிலிருந்தும் அவன் பாதுகாக்கப்படும்படி அவள் ஊக்கமாக ஜெபித்தாள். விக்கிரக ஆராதனையின் மடத்தனத்தையும் பாவத்தையும் அவனுக்குக் காண்பித்து, ஒவ்வொரு அவசரத்திலும் அவனுக்குச் செவிகொடுத்து உதவி செய்யக்கூடிய ஒரே ஜீவனுள்ள தேவனுக்கு முன் பணிந்து அவரிடம் ஜெபிக்கவும் ஆரம்பத்திலேயே அவனுக்குக் கற்றுக்கொடுத்தாள்.PPTam 293.2

    தன்னிடம் வைத்துக்கொள்ளும் வரையிலும் அவள் அவனை வைத்திருந்தாள். ஆனால் அவள் பன்னிரண்டு வயதை அடையும் போது கொடுத்துவிட வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தில் இருந்தாள். தன்னுடைய தாழ்மையான கூடாரத்திலிருந்து அவன் அரச அரண்மனைக்கு பார்வோனின் குமாரத்தியினிடம் கொண்டு செல்லப்பட்டு, அவளுக்கு அவன் குமாரனானான். அங்கேயும் தன் குழந்தைப்பருவத்தில் தான் பெற்றுக் கொண்ட எண்ணப்பதிப்புகளை அவன் இழக்கவில்லை. தன் தா அருகிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மறக்கக் கூடாததாயிருந்தது. அரசவையின் ஆடம்பரங்களில் செழித்திருந்த பெருமை, பக்தியின்மை தீமை எல்லாவற்றிலிருந்தும் அவைகள் அவனுக்குக் கேடகமாயிருந்தது.PPTam 293.3

    அந்த ஒரு எபிரெயப் பெண்மணியின், அதுவும் வெளிநாட்டவளும் அடிமையுமாயிருந்தவளுடைய செல்வாக்கின் விளைவுகள் எவ்வளவு தூரம் எட்டின ! மோசேயின் முழு எதிர்கால வாழ்க்கையும், இஸ்ரவேலருக்குத் தலைவனாயிருந்து அவன் நிறைற்றேன் மாபெரும் ஊழியமும், கிறிஸ்தவ தாயினுடைய வேலையின் முக்கியத்துவத்திற்குச் சாட்சி பகருகிறது. இதற்கு இணையான வேறு எந்த வேலையும் இல்லை. தன் குழந்தைகளின் வருங்கால வாழ்வைக் குறித்த காரியத்தை மிக அதிகமான அளவில் தாய் தன் சொந்தக் கரங்களில் வைத்திருக்கிறாள். விருத்தியடையும் மனங்களோடும் குணங்களோடும் அவள் செயல்பட்டு, சில காலத்திற்கு மாத்திரமல்ல, நித்தியத்திற்குமாக அவள் உழைக்கிறாள். முளைத்து எழும்பி நன்மைக்காக அல்லது தீமைக்காக கனிகொடுக்கிற விதைகளை அவள் விதைக்கிறாள். துணியின் மேல் அழகான உருவத்தை வரைவது அல்ல, அல்லது பளிங்கிலிருந்து அதை செதுக்கிக் கொண்டு வருவதோ அல்ல, மனித ஆத்துமாவின் மேல் தெய்வீக சாயலை அவள் பதிக்க வேண்டும். தன்னுடைய குழந்தைகளின் குணங்களை உருவாக்கும் பொறுப்பு விசேஷமாக அதன் ஆரம்ப வருடங்களில் அவள் மேல் தங்கியிருக்கிறது. இந்தக் காலத்தில் வளர்ந்து கொண்டிருக்கிற அவர்களுடைய மனங்களின் மேல் வைக்கப்படும் பதிப்பு, அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களோடு தங்கியிருக்கும்.PPTam 294.1

    அவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதற்காக பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் மிகச் சிறியவர்களாக இருக்கும் போதே தங்களுடைய போதனைகளையும் பயிற்சிகளையும் கொடுக்க வேண்டும். உலக சாம்ராஜ்ய சிங்காசனத்தின் சுதந்தரவாளிகளாக அல்ல, தேவனுக்கு இராஜாக்களாக, முடிவில்லாத காலத்திற்கும் ஆட்சி செய்யப் பயிற்றுவிக்கப்படும்படி அவர்கள் நம்முடைய கவனத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.PPTam 294.2

    தன்னுடைய தருணம் விலையேறப்பெற்றது என்று ஒவ்வொரு தாயும் உணரவேண்டும். கணக்குப் பார்க்கும் பவித்திரமான நாளிலே அவளுடைய வேலை சரிபார்க்கப்படும். அப்போது, ஆண்கள் மற்றும் பெண்களுடைய தோல்விகளும் குற்றங்களும், சரியான பாதையில் அவர்களுடைய சிறு பாதங்களை நடத்த யாரிடம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களுடைய அறியாமை மற்றும் நெகிழ்ச்சியினால் விளைந்தவைகளே என்பது கண்டுபிடிக்கப்படும். அப்போது, இந்த உலகத்தை அறிவினாலும் சத்தியத்தினாலும் பரிசுத்தத்தினாலும் ஒளிப்படுத்தி ஆசீர்வதித்த அநேகர், தங்களுடைய செல்வாக்கிற்கும் வெற்றிக்கும் ஆதாரமாக இருந்த கொள்கைகளுக்கு ஜெபிக்கிற கிறிஸ்தவ தாயைக் காரணங்காட்டுவார்கள்.PPTam 294.3

    பார்வோனின் அவையில் மோசே மிக உயர்ந்த உள்நாட்டு மற்றும் யுத்த பயிற்சிகளைப் பெற்றான். சிம்மாசனத்தில் தனக்கடுத்ததாகதத்தெடுக்கப்பட்ட தன்னுடைய பேரப்பிள்ளையை அமரவைக்க வேண்டுமென்று அந்த அரசன் தீர்மானித்தான். அப்படிப்பட்ட உயர்ந்த பதவிக்கு அந்த வாலிபன் கற்பிக்கப்பட்டான். மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். அப். 7:22. இராணுவத் தலைவனாக அவனுடைய திறமை, எகிப்தின் படைகளுக்கு அவனை பிரியமுள்ளவனாக்கிற்று. குறிப்பிடத்தகுந்த குணம் உடையவனாக பொதுவாக அவன் கருதப்பட்டான். சாத்தான் அவனுடைய நோக்கங்களில் தோற்கடிக்கப்பட்டான். எபிரெயக் குழந்தைகளை கொலை செய்யவேண்டும் என்று கொடுக்கப்பட்ட அதே கட்டளை, தமது ஜனத்தின் எதிர்கால தலைவனுடைய பயிற்சிக்கும் கல்விக்குமாக தேவனால் உபயோகப்படுத்தப்பட்டது.PPTam 295.1

    தங்களுடைய விடுதலையின் நேரம் நெருங்கியிருக்கிறது என்றும், அந்த வேலையை நிறைவேற்ற தேவன் மோசேயை நியமிப்பார் என்றும் இஸ்ரவேலின் மூப்பர்கள் தூதர்களால் போதிக்கப்பட்டனர். தம்முடைய ஜனங்களின் நுகத்தடியை உடைக்க யெகோவா தேவன் மோசேயைத் தெரிந்துகொண்டார் என்று தூதர்கள் மோசேக்கும் கற்பித்தனர்.PPTam 295.2

    படைபலத்தினால் அவர்கள் தங்களுடைய விடுதலையை பெற வேண்டும் என்று நினைத்தவனாக, எபிரெய சேனையை எகிப்தின் படைகளுக்கு எதிராக நடத்த அவன் எதிர்பார்த்திருந்தான். இந்தக் கண்ணோட்டத்தில், தன் வளர்ப்புத்தாயிடமாவது அல்லது பார்வோனிடமாவது காண்பிக்கும் பிரியத்தால் தேவனுடைய சித்தத்தைச் செய்ய சுதந்திரமிருக்காது என்று, அவர்களிடம் காண்பித்த பாசத்தில் அவன் கவனமாயிருந்தான். எகிப்தின் சட்டங்களின்படி பார்வோனின் சிங்காசனத்தில் அமருகிற அனைவரும் ஆசாரிய வகுப்பில் உறுப்பினராயிருக்க வேண்டும். வெளிப்படையான சுதந்தரவாளியான மோசேயும் கண்டிப்பாக தேசத்தினுடைய மதத்தின் இரகசியங்களுக்குள் நுழைக்கப்பட வேண்டும். இந்தக் கடமை ஆசாரியர்களிடம் கொடுக்கப்பட்டது. தீவிரமும் சோர்வுமில்லாத மாணவனாக இருந்த அவனை அதே நேரம் தேவர்களின் ஆராதனையில் பங்கெடுக்கத் தூண்டக்கூடாதிருந்தது. இராஜ முடியை இழந்து போவதைக்குறித்துPPTam 295.3

    அவன் பயமுறுத்தப்பட்டு எபிரெய விசுவாசத்தை பிடித்துக் கொண்டிருப்பதில் தொடருவானானால், இராஜ ஸ்திரீயால் கைவிடப்படுவான் என்றும் எச்சரிக்கப்பட்டான். ஆனால் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின் அந்த ஒரேதெய்வத்திற்குத் தவிர வேறு எவருக்கும் கனம் தராதிருப்பதில் அவன் அசைக்கமுடியாத தீர்மானம் கொண்டவனாக இருந்தான். உணர்வில்லாத பொருட்களை மூடத்தனமாக ஆராதிக்கிற மடத்தனத்தை ஆசாரியர் களுக்கும் ஆராதிக்கிறவர்களுக்கும் காண்பித்து, அவர்களோடு வழக்காடினான். அவனுடைய வாதங்களை ஒன்றுமில்லாததாக் கவோ அல்லது அவனுடைய நோக்கங்களை மாற்றவோ ஒருவ ராலும் முடியவில்லை . எனினும் அவனுடைய உயர்ந்த பதவியினி மித்தமும், இராஜாவிடத்திலும் மக்களிடத்திலும் அவன் பெற்றிருந்த தயவினிமித்தமும் அவனுடைய இந்த உறுதி அப்போதைக்கு சகித் துக்கெள்ளப்பட்டது.PPTam 296.1

    விசுவாசத்தினாலே மோசேதான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்து கொண்டு, இனிவரும் பலன் மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷம்ங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். எபி 11:24-26. பூமியின் மகா பெரியவர்களுக் கிடையே ஒப்புயர்வற்ற இடத்தை எடுத்துக்கொள்ளவும், மிகவும் மகிமை தங்கிய இராஜாங்கத்தின் அரசவைகளில் பிரகாசிக்கவும், அதனுடைய வல்லமையான செங்கோலை அசைக்கவும் மோசே தகுதியுள்ளவனானான்.PPTam 296.2

    அவனுடைய அறிவின் மேன்மை அனைத்து யுகங்களிலுமான மாபெரும் மனிதர்களுக்கு மேலாக அவனைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. சரித்திர ஆசிரியனாக, கவிஞனாக, தத்துவ ஞானியாக, படைத்தலைவனாக, சட்டம் இயற்றுகிறவனாக, எவருக்கும் நிகரின்றி நிற்கிறான். எனினும் உலகம் தன் முன் இருக்க, அதனுடைய செல்வத்தையும் மேன்மையையும் புகழையுங்குறித்த புகழ் சார்ந்த வாய்ப்புகளை மறுக்கும் சன்மார்க்க பலம் அவனிடம் இருந்தது. அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டான்.PPTam 296.3

    தேவனுடைய தாழ்மையான கீழ்ப்படிதலுள்ள ஊழியக்காரர்களுக்குக் கொடுக்கப்படவிருக்கிற முடிவான பலனைக்குறித்து மோசே போதிக்கப் பட்டிருந்தான். அதோடு ஒப்பிட்ட போது உலக ஆதாயம் அதன் சரியான அற்பமான இடத்திற்கு மூழ்கிப்போனது. பார்வோனுடைய மகத்தான அரண்மனைகளும் மன்னனின் சிங்காசனமும் மோசேக்கு தூண்டுதல்களாக காண்பிக்கப்பட்டன. ஆனால் அதனுடைய செருக்கான மன்றங்களில் தேவனை மறக்கச் செய்கிற பாவ இன்பங்கள் அங்கே மனிதனுக்கு இருக்கிறதை அவன் அறிந்தான். ஆடம்பரமான அரண்மனைகளுக்கு அப்பால், அரசனின் கிரீடத்திற்கு அப்பால், பாவத்தால் கறைபடாத இராஜ்யத்தில் உன்னதமானவரின் பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்படப்போகிற உயர்ந்த கனத்தை அவன் பார்த்தான். வெற்றி பெறுகிறவர்களின் சிரசின் மேல் பரலோகத்தின் தேவன் வைக்கப்போகிற அழியாத கிரீடத்தை அவன் விசுவாசத்தினால் கண்டான். இந்த விசுவாசம், பூமியின் செருக்கானவர்களிடமிருந்து திரும்பி, தாழ்மையுள்ள ஏழ்மையான தள்ளப்பட்ட பாவத்திற்கு ஊழியம் செய்வதைக் காட்டிலும் தேவனுக்குக் கீழ்ப்படிவதையே தெரிந்து கொண்ட ஜனத்தோடு சேர்ந்து கொள்ள அவனை நடத்தியது.PPTam 297.1

    மோசே நாற்பது வயதாகும் வரையிலும் அரசவையில் தங்கியிருந்தான். அவனுடைய நினைவுகள் பல வேளைகளில் தனது ஜனத்தினுடைய பரிதாபமான நிலையின் மேல் சென்றது. அவன் அவர்களுடைய அடிமைத்தனத்தில் அவர்களை சந்தித்து, அவர்களுடைய விடுதலைக்காக தேவன் கிரியை செய்வார் என்கிற நிச்சயத்தினால் அவர்களை ஊக்குவித்தான். அநீதியையும் அடக்கு முறையையும் கண்ட போது பல வேளைகளில் ஆத்திரமடைந்து, அவர்களுடைய தவறுகளுக்காக பழிவாங்கவேண்டும் என்று உள்ளம் கொதித்தான். ஒருநாள் இவ்வாறு வெளியில் இருந்தபோது, ஒரு இஸ்ரவேலனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, முன் சென்று எகிப்தியனை கொலை செய்தான். அந்த இஸ்ரவேலனைத்தவிர இந்தPPTam 297.2

    செய்கைக்கு வேறு எந்த சாட்சியும் இருந்திருக்கவில்லை. மோசே உடனடியாக அந்த உடலை மண்ணில் புதைத்தான். தமது மக்களின் காரியத்தை நடப்பிக்க தான் ஆயத்தமாயிருப்பதை அவன் இப்போது காண்பித்துவிட்டான், தங்களுடைய சுதந்தரத்தை மீண்டும் பெற அவர்கள் எழும்புவதைக் காண்பேன் என்று நம்பியிருந்தான். தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான் ; அவர்களோ அதை அறியவில்லை . அப் 725 அவர்கள் சுதந்திரத்திற்கு இன்னமும் ஆயத்தப்படவில்லை. அடுத்த நாளில் இரண்டு எபிரெயர்கள் சண்டையிடுவதைக் கண்டான். அவர்களிலொருவன் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படையாக குற்றம் செய்திருந்தான். மோசே தவறு செய்தவனை கடிந்துகொள்ள, அவன் பதிலாக, தலையிடுவதற்கான உரிமையை அவனுக்கு மறுத்து, அவனுடைய தவறினிமித்தம் அவன் மேல் இழிவாக குற்றஞ்சாட்டி, எங்கள் மேல் அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்? நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றது போல என்னையும் கொன்று போட மனதாயிருக்கிறாயோ என்றான்.PPTam 298.1

    முழு காரியமும் உடனடியாக எகிப்தியர்களுக்கு தெரிவிக் கப்பட்டது. அதிகமாக மிகைப்படுத்தப்பட்டு அது பார்வோனின் காதுகளை விரைவில் சென்றடைந்தது. இந்தச் செய்கையில் அதிக அர்த்தம் இருப்பதாகவும், மோசே தனது மக்களை எகிப்தியருக்கு எதிராக நடத்தி, அரசாங்கத்தை கவிழ்த்து, தன்னை சிங்காச னத்தின் மேல் இருத்த திட்டமிட்டிருப்பதாகவும், அவன் உயிரோடு இருக்கும் போது இராஜ்யத்துக்கு எந்த பாதுகாப்பும் இருக்க முடியாது என்பதாகவும் அது அரசன் முன் எடுத்துக்காட்டப்பட்டது அவன் உடனே சாக வேண்டும் என்று அந்த அரசன் உடனடியாக தீர்மானித்தான். ஆனால் அவனோ தன்னுடைய ஆபத்தைக் குறித்த எச்சரிப்படைந்தவனாக தப்பித்து அரேபியாவை நோக்கி ஓடினான்.PPTam 298.2

    ஆண்டவர் அவனுடைய வழியை நடத்தினார். தேவனை தொழுது கொண்டிருந்தவனும், ஆசாரியனும் மீதியானின் அதிபதியுமாயிருந்த எத்திரோவிடம் அவன் ஒரு இல்லத்தைக் கண்டான். சிலகாலம் கழித்து, மோசே எத்திரோவின் குமாரத்திகளில் ஒருத்தியை மணம் புரிந்தான். இங்கே மந்தைகளை காப்பவனாக தன் மாமனாருக்கு செய்த சேவையில் அவன் நாற்பது வருடங்கள் தங்கியிருந்தான்.PPTam 298.3

    எகிப்தியனைக் கொன்றதில், தாம் செய்வதாக தேவன் வாக்குக் கொடுத்திருந்த வேலையை பலவேளைகளில் தங்களுடைய சொந்தக் கைகளில் எடுத்துக் கொண்ட தன் பிதாக்களைப்போன்று மோசேயும் செய்தான். மோசேநினைத்திருந்ததைப் போல யுத்தத்தினால் அல்ல, மாறாக அவருக்கு மாத்திரமே மகிமை உண்டாகும் படி தமது சொந்த மாபெரும் வல்லமையினால் தமது மக்களை விடுவிக்க தேவன் சித்தங்கொண்டிருந்தார். என்றபோதும் இந்தக் கண்மூடித்தனமான செய்கையும் தமது நோக்கங்களை நிறைவேற்றும்படி தேவனால் மேற்கொள்ளப்பட்டது. தனது மாபெரும் வேலைக்கு மோசே ஆயத்தப்பட்டிருக்கவில்லை. அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதில் மனித பெலத்திலோ அல்லது ஞானத்தையோ சார்ந்திராமல், தேவனுடைய வல்லமையை சார்ந்திருக்க வேண்டும் என்று ஆபிரகாமும் யாக்கோபும் கற்பிக்கப்பட்ட அதே விசுவாசப்பாடத்தை அவன் இன்னும் கற்க வேண்டியவனாயிருந்தான். அதோடு கூட மலைகளின் தனிமையில் மோசே பெற்றுக்கொள்ள வேண்டிய வேறு பாடங்களும் இருந்தன. சுயமறுப்பும் கடினவாழ்க்கையும் கொண்ட பள்ளியில் பொறுமையையும் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதையும் அவன்கற்றுக்கொள்ள வேண்டியிருந்தான். ஞானமாக ஆளுவதற்கு முன்பாக கீழ்ப்படியும் படி அவன் பயிற்றுவிக்கப்படவேண்டும். அவனுடைய சொந்த இருதயம் தேவனோடு முழுவதுமாக இணங்கியிருக்கவேண்டும். அவன் இஸ்ரவேலுக்கு அவருடைய சித்தத்தைக் குறித்த அறிவை போதிப்பதற்கு முன்பாக அவனுடைய சொந்த இருதயம் தேவ னோடு இணங்கியிருக்க வேண்டும். தன் சொந்த அனுபவத்தினால் தன்னுடைய உதவி தேவைப்படுகிற அனைவர் மேலும் ஒரு தகப்பனுடைய கவனிப்பை செலுத்தும்படி அவன் ஆயத்தப் படுத்தப்படவேண்டும்.PPTam 299.1

    கடின உழைப்பும் தெளிவற்ற நிலையுங்கொண்ட அந்த நீண்ட காலத்தை வீணான காலம் என்று நினைத்து மனிதர்கள் விரக்தியடை யலாம். ஆனால் தமது மக்களின் தலைவனாகப் போகிறவனை ஒரு மேய்ப்பனுடைய தாழ்மையான வேலையை நாற்பது வருடங்கள் செய்யும்படி நித்திய ஞானமுள்ளவர் அவனை அழைத்தார். இவ்வாறாக விருத்தியடைந்த காவல் காக்கும் பழக்கமும், தன்னுடைய மந்தைக்காக இளகிய அக்கறையோடு சுயத்தை மறந் திருப்பதும் இஸ்ரவேலின் மனஉருக்கமுள்ள நீடிய சாந்தமுள்ள மேய்ப்பனாவதற்கு அவனை ஆயத்தப்படுத்தும். இந்த அனுபவத் திற்கு மனித பயிற்சிகளும் அல்லது கலாச்சாரம் கொடுக்கக்கூடிய எந்த சாதகங்களும் மாற்றாக இருக்க முடியாதுPPTam 299.2

    மறக்கவேண்டியதிருந்த அநேக காரியங்களை மோசே கற்றுக் கொண்டிருந்தான். அவனுடைய வளர்ப்புத்தாயின் மேலிருந்த அன்பும், அரசனின் பேரனென்ற அவனுடைய உயர்ந்த பதவியும், எங்கும் காணப்பட்ட ஊதாரித்தனங்களும், அதை இன்னும் மேம்படுத்தினதும், தந்திரங்களும், பொய் மதங்களின் பூடகங்களும், விக்கிரகாராதனையின் சிறப்புகளும், கட்டிடங்கள் மற்றும் சிற்பங்களின் பவித்திரமான ஆடம்பரங்களும் மேன்மையான தோற்றங்களுமான எகிப்தில் அவனைச் சூழ்ந்திருந்த செல் வாக்குகள் அனைத்தும் வளர்ந்து கொண்டிருந்த அவனுடைய மனதில் ஆழமான பதிப்புகளை விட்டுவைத்து, குறிப்பிட்ட அளவு அவனுடைய பழக்கங்களையும் குணங்களையும் வார்ப்பித் திருந்தது. காலமும் சூழ்நிலையில் மாற்றமும் தேவனோடுள்ள தொடர்பும் இந்த பதிப்புகளை மாற்ற முடியும். ஜீவனுக்காக தவறுகளை கைவிடுவதும் சாத்தியத்தை ஏற்றுக்கொள்ளுவதும் மோசேக்கு ஒரு போராட்டமாக இருந்திருக்கும். ஆனால் போராட்டம் மனித பெலத்திற்கு மிகக் கடினமாக இருக்கும் போது தேவன் தாமே அவனுடைய உதவியாளராக இருப்பார்.PPTam 300.1

    தேவனுக்கென்று ஒரு வேலையைச் செய்யும் படி தெரிந்து கொள்ளப்பட்ட அனைவரிடமும் மனுஷகம் காணப்படுகிறது. எனினும் அவர்கள் மாறாத பழக்கங்களும் குணங்களும் கொண்ட ஒரே நிலையில் திருப்தியடைந்த மனிதர்கள் அல்ல. தேவனிட மிருந்து ஞானத்தைப் பெற்றுக்கொள்ளவும் அவருக்காக உழைக்க கற்றுக் கொள்ளவும் அவர்கள் ஊக்கமாக விரும்பினார்கள். யாக்கோபு: உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந் தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் (யாக் 1:5) என்று சொல் லுகிறான். ஆனால் மனிதர்கள் இருளில் இருப்பதிலேயே திருப்தி கொள்ளும் போது, தேவன் அவர்களுக்கு தெய்வீக ஒளியைத் தரமாட்டார். தேவனுடைய உதவியை பெற்றுக்கொள்ள மனிதன் தன்னுடைய பெலவீனங்களையும் குறைகளையும் உணர வேண்டும். தன்னிடம் வரவேண்டிய மாபெரும் மாற்றத்தில் அவன் தனது சொந்த மனதை செலுத்தவேண்டும். ஊக்கமான பிடிவாதமான ஜெபத்திற்கும் முயற்சிக்கும் அவன் எழுப்பப்பட வேண்டும். தவறான பழக்கங்களும் வழக்கங்களும் உதறப்பட வேண்டும். இந்த தவறுகளை சரிசெய்யவும் சரியான கொள்கைகளை உறுதிப்படுத்தவும் எடுக்கிற தீர்மானமான முயற்சியிலேயே தான் ஜெயம் கிடைக்கும். தங்களுக்காக தாங்கள் செய்யவேண்டிய வைகளுக்கு அவர் வல்லமை கொடுத்திருக்கும் போது, அவைகளை தேவனே செய்வார் என்று காத்திருப்பதினால் அநேகர் தாங்கள் பெறக்கூடிய தகுதியை ஒருபோதும் பெறுவதில்லை. உபயோகமாயிருக்க பொருத்தப்பட்டிருக்கிற அனைவரும் மன மற்றும் சன்மார்க்க ஒழுங்குகளால் பயிற்றுவிக்கப்பட வேண்டும். மனித முயற்சிகளோடு தெய்வீக வல்லமையை இணைப்பதின் மூலம் தேவன் அவர்களுக்குத் துணை செய்வார்.PPTam 300.2

    மலைகளால் சுற்றிலும் அடைக்கப்பட்ட மோசே தேவனோடு தனிமையில் இருந்தான். அதன்பின் எகிப்தின் மகத்தான கோவில்கள் அவைகளுடைய மூட நம்பிக்கைகளோடும் பொய்களோடும் அவன் மனதில் வரவில்லை . நித்திய குன்றுகளின் பவித்திரமான கம்பீரத்தில் பின் மாட்சிமையை அவன் கண்டு, எகிப்தின் தெய்வங்கள் இதற்கு முரணாக எவ்வளவு வல்லமையற்றும் சிறப்பற்றும் இருக்கின்றன என்று உணர்ந்தான். எல்லா இடங்களிலும் சிருஷ்டிகரின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அவருடைய சமூகத்தில் நிற்பதாகவும், அவருடைய வல்லமையினால் மறைக்கப்பட்டிருப்பதாகவும் மோசேக்குத் தோன்றியது. இங்கே அவனுடைய பெருமையும் தன்னிறைவும் அடித்துச் செல்லப்பட்டன . வனாந்தர வாழ்க்கையின் கடுமையான எளிமையில் எகிப்தினுடைய சௌகரியம் மற்றும் ஆடம்பரத்தின் விளைவுகள் மறைந்து போயின. மோசே பொறுமையும் பயபக்தியும் தாழ்மையுமுள்ளவனானான். மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான். எண் 12:3. அதேநேரம், யாக்கோபின் வல்லமையான தேவன் மேல் கொண்ட விசுவாசத்தில் பலமுள்ளவனானான்.PPTam 301.1

    வருடங்கள் சென்று அவன் தன் மந்தைகளோடு தனிமையான இடங்களில் அலைந்தபோது, தனது ஜனத்தின் ஒடுக்கப்பட்ட நிலையைக் குறித்து சிந்தித்து, தேவன் தன் பிதாக்களுடன் நடந்துகொண்ட விதங்களையும், தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத் திற்கு சுதந்தரமாக இருந்த ஆசீர்வாதங்களையும் நினைவுகூர்ந்தான். இஸ்ரவேலுக்கான அவனுடைய ஜெபங்கள் பகலும் இரவும் மேலெழுந்து கொண்டிருந்தன. பரலோகத் தூதர்கள் அவனைச் சுற்றிலும் வெளிச்சம் வீசினர். இங்கே பரிசுத்த ஆவியானவருடைய ஏவுதலினால் அவன் ஆதியாகம் புத்தகத்தை எழுதினான். வனாந்திர தனிமையில் செலவு செய்யப்பட்ட நீண்ட வருடங்கள் ஆசீர்வாதத்தால் ஐசுவரியமானதாயிருந்து, மோசேக்கும் அவனுடைய மக்களுக்கும் மாத்திரமல்ல, உலகத்தில் பின்வரும் அனைத்து யுகங்களுக்கும் ஆசீர்வாதங்களால் நிரம்பியிருந்தன.PPTam 301.2

    சில காலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந் தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது. தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார் தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை, நினைத்தருளினார். இஸ்ரவேலர்களின் விடுதலைக்கான நேரம் வந்தது. ஆனால் மனித பெருமையின் மேல் அவமதிப்பை ஊற்றும் விதத்தில் தேவனுடைய நோக்கங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். விடுவிக்கிறவன் தன் கையில் கோலை மாத்திரம் எடுத்தவனாக, தாழ்மையான மேய்ப்பனாக முன் செல்லவேண்டும். ஆனால் தேவன் அந்தக் கோலை தமது வல்லமையின் அடையாளமாக்குவார். தன்னுடைய மந்தைகளை ஒருநாள் தேவனுடைய பர்வதமாகிய ஓரேபுக்கு சமீபத்தில் நடத்தின மோசே, ஒரு முட்புதரின் கிளைகளும் இலைகளும் அடிமரமும் அனைத்தும் தீயிலிருந்தும் அது எரிந்து போகாதிருக்கிறதைக் கண்டான். இந்த அதிசயமான காட்சியைக் காண அவன் நெருங்கின் போது, அந்த அக்கினியிலிருந்து ஒரு குரல் அவனை பெயர் சொல்லி அழைத்தது. நடுங்கும் உதடுகளோடு இதோ, அடியேன் என்று அவன் பதில் கொடுத்தான். பயபக்தியின்றி நெருங்காதிருக்கும் படி அவன் எச்சரிக்கப்பட்டான். இங்கே கிட்டிச்சேராயாக, உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி ..... நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்ற அவர், உடன்படிக்கையின் தூதனாக தம்மை முற்காலங்களில் பிதாக் களுக்கு வெளிப்படுத்தினவர்தாமே . மோசே தேவனை நோக்கிப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.PPTam 302.1

    தேவனுடைய சமூகத்திற்கு வரும் அனைவருடைய நடத்தையும் பணிவும் பயபக்தியும் உள்ளதாயிருக்கவேண்டும். இயேசுவின் நாமத்தில் நம்பிக்கையோடு நாம் அவர் முன் வரலாம். ஆனால் அவர் நமக்குச் சமமானவர் என்பதைப் போன்ற துணிகர மான தைரியத்தில் அவரை நாம் நெருங்கக்கூடாது. மகா பெரிய, சர்வவல்லமையுள்ள, யாரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண் ணுகிற பரிசுத்த தேவனை, தங்களுக்கு சமமானவரை அழைப்பது போல் இன்னமும் கீழானவரை அழைப்பதைப்போல குறிப்பிடுகிற வர்கள் இருக்கிறார்கள். உலக அதிகாரியின் பேட்டி அறைகளில் இப்படி நடந்து கொள்ளலாம் என்று நினைத்துக்கூட பார்த்திருக்காத வர்கள் அவ்விதமாக அவருடைய வீட்டில் நடந்து கொள்ளுகிறார்கள். இவர்கள், சேராபீன்கள் போற்றுகின்ற, தூதர்கள் தங்கள் முகங்களை மூடிக்கொள்ளுகிற ஒருவருடைய பார்வையில் இருக்கிறோம் என்கிறதை தங்கள் நினைவில் கொள்ள வேண்டும். தேவன் பயபக்திக்குரியவர். அவருடைய சமூகத்தை யாரெல்லாம் மெய்யாக உணருகிறார்களோ அவர்கள் அவர் முன்பு தாழ்மையோடு பணிவார்கள். தேவனுடைய தரிசனத்தைக் கண்ட யாக்கோபைப்போல் : இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக் கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத் தின் வாசல் என்று கூறுவார்கள்.PPTam 302.2

    மோசே பயபக்தியோடு தேவன் முன்பு காத்திருந்தபோது எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக் கிறேன். அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்த தேசத்திலிருந்து வெளியேற்றி, பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சே ர்க்கவும் இறங்கினேன். இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது, எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்ற வார்த்தைகள் தொடர்ந்தன.PPTam 303.1

    அந்த கட்டளையால் ஆச்சரியமும் திகிலும் அடைந்தவனாக மோசே : பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்து வரவும், நான் எம்மாத்திரம் என்று சொல்லி பின்வாங்கினான். அதற்கு, நான் உன்னோடே இருப்பேன். நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்த பின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள், நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்று பதில் வந்தது.PPTam 303.2

    மோசே தான் சந்திக்கவேண்டியிருந்த தன்னுடைய ஜனங்களின் குருட்டாட்டத்தையும் அறியாமையையும் அவிசுவாசத்தையுங்குறித்த சிரமங்களை நினைத்தான். அவர்களில் அநேகர் ஏறக்குறைய தேவனைக் குறித்த அறிவே அற்றவர்களாக இருந்தனர். நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும் போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.PPTam 304.1

    இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.PPTam 304.2

    இஸ்ரவேலர்களின் மூப்பர்களான, அவர்களில் மிகவும் உன்னதமான நீதியுள்ளவர்களாயிருந்து, தங்களுடைய அடிமைத்தனத்திற்காக நீண்ட காலம் மனம் வருந்தியிருந்தவர்களை முதலாவது கூட்டி, விடுதலையின் வாக்குத்தத்தத்தோடு தேவனிடமிருந்து வந்த செய்தியை அவர்களுக்கு அறிவிக்க மோசேகட்டளை பெற்றான். பின்னர் அந்த மூப்பர்களோடு அவன் இராஜாவின் முன் சென்று அவனிடம் :PPTam 304.3

    எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும் படி போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.PPTam 304.4

    இஸ்ரவேலைப் போகவிட வேண்டும் என்ற மன்றாட்டை பார்வோன் எதிர்ப்பான் என்று மோசே முன்னதாகவே எச்சரிக் கப்பட்டான். எனினும் தேவனுடைய ஊழியக்காரன் தைரியமிழக் கக்கூடாது. ஏனெனில் ஆண்டவர் இதை, எகிப்தியர் முன்பாகவும் தம்முடைய ஜனத்தின் முன்பாகவும் தமது வல்லமையை வெளிப்படுத்தும் தருணமாக்குவார். நான் என் கையை நீட்டி, எகிப்தின் நடுவிலே நான் செய்யும் சகலவித அற்புதங்களாலும் அதைவாதிப்பேன்; அதற்குப்பின் அவன் உங்களைப் போகவிடுவான் என்றார்.PPTam 304.5

    பிரயாணத்திற்காகச் செய்யவேண்டிய ஆயத்தங்களைக்குறித்த நடத்துதலும் கொடுக்கப்பட்டது. நீங்கள் போகும் போது வெறுமையாய்ப் போவதில்லை. ஒவ்வொரு ஸ்திரீயும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தனதன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டு வாங்குவாள் என்று ஆண்டவர் அறிவித்தார். இஸ்ரவேலர்களிடமிருந்து அநியாயமாய் பெறப்பட்ட ஊழியத்தினால் எகிப்தியர்கள் ஐசுவரியவான்களானார்கள். இஸ்ரவேலர்கள் தங்கள் வீடுகளை நோக்கி பிரயாணத்தைத் துவக்கும் போது, வருடங்களாக தாங்கள் உழைத்ததின் பலனை கோருவது அவர்களுடைய உரிமையாக இருந்தது. எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய மதிப்புள்ள பொருட்களை அவர்கள் கேட்கவேண்டும்; தேவன் எகிப்தியர்களின் கண்களில் அவர்களுக்கு தயவு காண்பிப்பார். அவர்களுடைய விடுதலைக்காகச் செய்யப்படும் வல்லமையான அற்புதங்கள் ஒடுக்கினவர்களின் மனங்களை திகிலூட்ட, அடிமைகளின் வேண்டுகோள்களின்படி வழங்கப்படும்.PPTam 304.6

    வெற்றி கொள்ளக் கூடாததாகத் தோன்றிய சிரமங்களை மோசே தன்முன் கண்டான். தேவன்தான் தங்களை அனுப்பினார் என்பதற்கான என்ன ஆதாரத்தை அவன் அவர்களுக்குக் கொடுக்க முடியும்? அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான். அவனுடைய சொந்த உணர்வுகளுக்கேற்ற சான்றுகள் இப்போது கொடுக்கப்பட்டன. அவன் தன்னுடைய கோலை தரையிலே போடும் படி சொல்லப்பட்டான். அப்படிச் செய்தபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான். அதை பிடிக்கும் படியாக அவன் கட்டளை பெற்றான். அவன் கைகளில் அது கோலாயிற்று. அவன் தன் கைகளை தன் மடியில் வைக்கச் சொல்லப்பட்டான். அவன் கீழ்ப்படிந்தான். அதை வெளியே எடுத்தபோது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. மீண்டும் கைகளை மடியில் வைக்கச் சொல்லப்பட்டு, வெளியே எடுத்தபோது, அது மற்ற கையைப்போல் இருந்ததைக் கண்டான். இந்த அடையாளங்களினால் எகிப்தின் இராஜாவைவிடவும் மிக வல்லமையுள்ள ஒருவர் அவர்கள் நடுவே வெளிப்பட்டிருக்கிறார் என்று அவனுடைய சொந்த ஜனங்களும் பார்வோனும் உணர்த்தப்படுவார்கள் என்று ஆண்டவர்தாமே மோசேக்கு உறுதி அளித்தார்.PPTam 305.1

    எனினும் தனக்கு முன்னிருந்த விசித்திரமான வியக்கத்தக்க வேலையைக் குறித்த நினைவினால் தேவனுடைய ஊழியக்காரன் இன்னமும்மூழ்கடிக்கப்பட்டிருந்தான். தன்னுடைய வேதனையிலும் பயத்திலும் தான் திக்குவாயன் என்கிறதை காரணம் காட்டி இப்போது அவன் மன்றாடினான் ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்கு வல்லவன் அல்ல, நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன் என்றான். அவன் அதிக காலம் எகிப்தியரைவிட்டு வெளியே இருந்ததினால், அவர்களுடைய மொழியைக் குறித்த தெளிவான அறிவையும் அதைப் பேசும் திறனையும் அவர்கள் நடுவே இருந்தபோது பெற்றிருந்ததைப்போல அவன் இப்போது பெற்றிருக்கவில்லை.PPTam 305.2

    ஆண்டவர் அவனிடம் மனுஷனுக்குவாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா? என்றார். இதோடுகூட நீ போ, நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்று தெய்வீக துணையைக் குறித்த மற்றொரு நிச்சயமும் சே ர்க்கப்பட்டது. அதிக தகுதியுள்ள ஒரு நபர் தெரிந்தெடுக்கப்படும் படியாக மோசே இன்னமும் மன்றாடினான். இந்தச் சாக்குப் போக்குகள் முதலில் அவனுடைய தாழ்மையிலும் அவநம்பிக்கையிலுமிருந்து வந்திருந்தன. ஆனால் இந்த சிரமங்களையெல்லாம் நீக்குவதையும், முடிவாக வெற்றியை தருவதையுங் குறித்து ஆண்டவர் வாக்குக் கொடுத்த பின்பு முறையிடுவதும் குறை சொல்லுவதும் தேவன் மேலிருக்கும் அவநம்பிக்கையை காண்பித்தது.PPTam 306.1

    அழைத்திருந்த மாபெரும் வேலைக்கு அவனைத் தகுதிப்படுத்த தேவனால் முடியாது என்கிற ஒரு பயத்தைக் காண்பிக்கிறதாக அல்லது, மனிதனை தெரிந்து கொள்ளுவதில் அவர் தவறு செய்துவிட்டார் என்று சுட்டிக்காட்டுவதாக இது இருந்தது.PPTam 306.2

    எகிப்தின் பாஷையை அனுதினமும் உபயோகித்திருந்து, அதை பூரணமாக பேசக்கூடிய அவனுடைய மூத்த சகோதரனாக ஆரோனிடம் மோசே இப்போது நடத்தப்பட்டான். ஆரோன் தன்னைச் சந்திக்க வந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டான். ஆண்டவரிடமிருந்து வந்த அடுத்த வார்த்தைகள் விஸ்தாரமான வைகளாக இருந்தன.PPTam 306.3

    நீ அவனோடே பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு, நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன். அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான், நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய். இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டு போ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார். சாக் குப்போக்கிற்கான அனைத்து காரணங்களும் நீக்கப்பட்டதினால், இதற்குப்பின் எந்த எதிர்ப்பையும் அவன் சொல்ல முடியவில்லை.PPTam 306.4

    தெய்வீக கட்டளை மோசேக்குக் கொடுக்கப்பட்டபோது அவன் சுயநம்பிக்கை இல்லாத, திக்கு நாவுள்ள, பயந்த மனிதனாக இருந்தான். இஸ்ரவேலுக்காக தேவனுடைய வாயாக இருக்கக் கூடாத தன்னுடைய தகுதியின்மையைக் குறித்த உணர்வினால் அவன் மேற்கொள்ளப்பட்டான். ஆனால் வேலையை ஏற்றுக் கொண்டவுடனே ஆண்டவர்மேல் தன் முழு நம்பிக்கையையும் வைத்து, தன் முழு இருதயத்தோடும் அதில் நுழைந்தான். அவனுடைய வேலையின் மேன்மை அவனுடைய மனதின் சிறந்த வல்லமைகளை செயல்படுத்த அவனை அழைத்தது. அவனுடைய ஆயத்தமான கீழ்ப்படிதலை தேவன் ஆசீர்வதித்தார். அவன் தாராளமாக பேசுகிறவனும் நாவன்மையுள்ளவனும் நம்பிக்கையுள்ளவனும் கம்பீரமானவனும் தன்னைக் கட்டுப்படுத்துகிறவனும் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட மாபெரும் வேலைக்கு நன்கு பொருந்தக்கூடியவனுமானான். தேவனை முழுமையாக நம்பி, அவருடைய கட்டளைக்கு தங்களை முற்றிலும் ஒப்புக்கொடுக்கிறவர்களின் குணங்களை பலப்படுத்த தேவன் என்ன செய்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.PPTam 307.1

    தேவன் தன்மேல் வைக்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, தன் முழு ஆத்துமாவோடும் அதைச் சரியாகச் செய்ய தன்னைத் தகுதிப்படுத்த நாடுகிற ஒரு மனிதன் வல்லமையையும் திறமையையும் பெற்றுக்கொள்ளுவான். அவன் தகுதி எவ்வளவு தாழ்மையானதும் அல்லது அவனது திறமை எவ்வளவு குறைவானதுமாயிருந்தாலும் தெய்வீக வல்லமையை நம்பி பற்றோடு தன் வேலையை செய்ய நாடும் மனிதன் மெய்யான மேன்மையைக் கண்டடைவான். மோசே தன்னுடைய சொந்த பலத்தையும் ஞானத்தையும் சார்ந்திருந்து, இந்த மாபெரும் வேலையை ஆர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பானானால், அப்படிப்பட்ட வேலைக்கு தான் முற்றிலும் தகுதியற்றிருப்பதைக் கண்டிருப்பான். மனிதன் தன்னுடைய பெலவீனத்தை உணருகிறான் என்கிற உண்மை, தனக்கு நியமிக்கப்பட்டிருக்கிற வேலையின் ஆழத்தை அவன் உணருகிறான் என்பதற்கும், தேவனை தன்னுடைய ஆலோசகராகவும் பெலனாகவும்PPTam 307.2

    வைப்பான் என்பதற்குமான ஒரு சில சான்றாகவே இருக்கிறது.PPTam 308.1

    மோசே தன் மாமனாரிடம் திரும்பி வந்து, எகிப்திலிருக்கும் தன் சகோதரர்களை சந்திக்கத் தனக்கு இருக்கும் விருப்பத்தைத் தெரிவித்தான். எத்திரோவின் ஒப்புதல் : சுகமாய்ப் போய் வாரும் என்ற ஆசீர்வாதத்தோடு கொடுக்கப்பட்டது. தன்னுடய மனைவியோடும் குழந்தைகளோடும் மோசே பிரயாணப்பட்டான். அவர்கள் தன்னோடு அனுப்பப்படமாட்டார்கள் என்பதினால் தன்னுடைய வேலையின் நோக்கத்தை அறிவிக்க அவன் தைரியமின்றியிருந்தான். எனினும் எகிப்தை அடையுமுன்பாக மீதியானிலிருக்கும் வீட்டுக்கு அவர்களுடைய சொந்தப் பாதுகாப்பிற்காக அவர்களை அனுப்பிவிடுவது சிறந்தது என்று அவன் தானே நினைத்தான்.PPTam 308.2

    நாற்பது வருடங்களுக்கு முன் தனக்கு எதிராக கோபப்பட்டிருந்த பார்வேனையும் எகிப்தியர்களையுங்குறித்த ஒரு இரகசிய பயம் எகிப்திற்குத் திரும்பு வதற்கு மோசேக்கு இன்னமும் தயக்கத்தைக் கொடுத்தது. ஆனால் தெய்வீக கட்டளைக்குக் கீழ்ப் படியும் படி கொடுத்த பின்னர், அவனுடைய சத்துருக்கள் மரித்துப்போனார்கள் என்கிறதை ஆண்டவர் அவனுக்கு வெளிப் படுத்தினார்.PPTam 308.3

    மீதியானிலிருந்து வந்த வழியில் ஆண்டவருடைய அதிருப் தியைக் குறித்த திடுக்கிடச் செய்யும் பயங்கரமான எச்சரிக்கையை மோசேபெற்றான். பயமுறுத்தும் விதத்தில் ஒரு தூதன் அவனுக்குத் தோன்றி, உடனே அவனை அழித்து விடுவதைப் போல காணப்பட்டார். எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. எனினும் தேவனுயை கோரிக்கைகளில் ஒன்றை தான் கருத்தில் கொள்ளாததை மோசே நினைவு கூர்ந்தான். தன்னுடைய மனைவியின் போதனைக்கு இணங்கி, தன் இளைய மகனை விருத்தசேதனம் செய்வதை அவன் நெகிழ்ந்திருந்தான். அவனுடைய குழந்தை, இஸ்ரவேலோடு தேவன் செய்த உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களில் பங்கெடுக்க வேண்டியதிருந்த நிபந்தனைகளோடு இணங்கி நடக்க அவன் தவறியிருந்தான். தெரிந்தெடுக்கப்பட்ட தலைவரிடம் இருந்த அப்படிப்பட்ட நெகிழ்ச்சி, தெய்வீக நியமனங்கள் மக்கள் மேல் கொண்டிருந்த கண்டிப்பைக் குறைத்துவிடக்கூடும். தன் கணவன் கொல்லப்படுவான் என்ற பயத்தில் சிப்போராள்தானே அந்த சடங்கைச் செய்தாள். பின்னர் பிரயாணத்தைத் தொடரும் படி தூதன் மோசேயை அனுமதித்தான். பார்வோனுக்கான இந்த வேலையில் மிகவும் ஆபத்தான் இடத்தில் மோசே வைக்கப்படவேண்டும். பரிசுத்த தூதர்களின் பாதுகாப்பினால் மாத்திரமே அவனுடைய காக்கப்படமுடியும். ஆனால் தெரிந்த கடமையை நெகிழ்ந்து வாழ்வதினால் அவன் தேவனுடைய தூதர்களால் மறைக்கப்பட முடியாது அவன் பாதுகாப்பாயிருக்க முடியாது.PPTam 308.4

    கிறிஸ்துவின் வருகைக்கு சற்று முன்னதான இக்கட்டுக் காலத்தில் நீதிமான்கள் பரலோக தூதர்களின் ஊழியத்தினால் பாதுகாக்கப்படுவார்கள். ஆனால் தேவனுடைய பிரமாணங்களை மீறுகிறவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது. தெய்வீக நியமனங்களில் ஒன்றை கருத்தில் கொள்ளாது இருக்கிறவர்களை தேவதூதர்கள் அப்போது பாதுகாக்க முடியாதுPPTam 309.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents